Published:Updated:

இது கொக்கரக்கோ கேம்

இது கொக்கரக்கோ கேம்
பிரீமியம் ஸ்டோரி
News
இது கொக்கரக்கோ கேம்

வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

இது கொக்கரக்கோ கேம்

“புவனேஸ்வரி... ஜாவாவுக்கு பாதாம் மாவை அள்ளிப் போடு. நவீனா... சீதாவுக்கு தண்ணியும் கொள்ளும் வை. பிரவீணா... வளவி குளிரடிச்சுக்கிடக்கு பாரு. சுடுதண்ணி வெச்சு எடுத்துட்டு வா... ஒத்தடம் கொடுக்கணும்'' - தட்சணாமூர்த்தியிடம் இருந்து உத்தரவுகள் பறக்கின்றன. அவரின் குரலைக் கேட்டதும், தாயைக் கண்ட குழந்தைகளைப்போல ஜாவாவும் சீதாவும் வளவியும் கதவு இடுக்கில் மூக்கை நுழைத்துக் கொக்கரிக்கின்றன.

“எனக்கு மொத்தம் எட்டு பிள்ளைங்க. பெத்தது ரெண்டு. இதெல்லாம் என் வளர்ப்புப் பிள்ளைங்க''  - ஒட்டி உறவாடி நிற்கும் சேவல்களை மார்போடு அணைத்துக் கொள்கிறார், சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி.

அனைத்தும் சண்டைச் சேவல்கள். கனத்த கால்களில் ஈட்டிகளாக முளைத்து நிற்கின்றன விரல்கள். `முள்' எனப்படும் கத்தி போன்ற ஒற்றை விரலுக்கு, நெயில்பாலீஷ் போட்டுத் துணி சுற்றி வைத்திருக்கிறார். அதுதான் சேவலின் பிரதான ஆயுதம். பிடறி முடி சிலிர்த்தபடி கழுத்தை உயர்த்திப் பார்க்கும் விதமே நம்மை அச்சமூட்டுகிறது. ஒரு மல்யுத்த வீரனின் வேகத்தோடு உடல் அசைத்து நடக்கும் சேவல்கள், தட்சிணாமூர்த்தியின் விரல் அசைவுக்கு தலை கவிழ்த்து முடங்குகின்றன.

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் இப்போது சேவல் சண்டை நடப்பது இல்லை. ஆனால், அதற்காக பராமரிப்பிலோ, உபசரிப்பிலோ எந்தக் குறையும் வைப்பது இல்லை இவர்கள். சென்னை பல்லாவரம், பிராட்வே சந்தைகளில் சண்டைச் சேவல்களுக்கு என்றே பிரத்தியேகமான பகுதிகள் உண்டு. சென்னையின் சண்டைச் சேவல் வளர்ப்பாளர்கள் அனைவரும் அங்கே கூடுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இது கொக்கரக்கோ கேம்

பொங்கல் காலம்தான் சேவல் சண்டையின் காலம். ஜல்லிக்கட்டுபோல கோழிச் சண்டைக்கும் பிரபலமான கிராமங்கள் உண்டு. குறிப்பாக, பூலான்வலசு. இங்கே ஆயிரக்கணக்கான சேவல்களை சண்டைக்கு விடுகிறார்கள். ஜல்லிக்கட்டைக் காண வருவதைப்போல இந்தச் சேவல் சண்டையைப் பார்க்க வெளிநாட்டில் இருந்து எல்லாம் பயணிகள் வருகிறார்கள். பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மன்னார்குடி, சேலம், மதுரை, ஆர்.கே.பேட்டை போன்ற பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடக்கும். அத்தனைப் பேட்டைக்காரர்களும் குட்டி யானை வண்டிகளில் சேவல்களை அள்ளிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

“இதோ இந்த ரெண்டு சேவல்களையும் ஒண்ணா திறந்துவிட்டேன்னு வெச்சுக்கோங்க, ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். இது சேவல்களோட இயற்கையான குணம். கிராமத்துத் தெருக்கள்ல நடந்திங்கன்னா, சர்வசாதாரணமா சேவல்கள் சண்டை போட்டுக்கும். இங்கே நாங்க, நிதானமா பயிற்சி கொடுத்து ஒரு போர்வீரனைப் போல உருவாக்குறோம்.

சங்க காலத்துல இருந்தே பொழுதுபோக்குக் கலையாவும் வீரக்கலையாவும் இருக்கிற சேவல் சண்டை, நம்ம வாழ்க்கையோட ஒரு அங்கம். வரலாறு நெடுக இதுக்கான பதிவுகள் இருக்கு. நம்மோட அடையாளங்களை எல்லாம் அழிச்சு, மலட்டு மனுஷங்களாக்குற நோக்கத்துலதான் இந்தக் கலையை எதிர்க்கிறாங்க. இந்தோனேஷியா, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா, பிரேசில், மெக்ஸிகோ, பெருனு எங்கே எல்லாம் தமிழன் பாதம் பதிச்சானோ, அங்கே எல்லாம் சேவல் சண்டை நடக்குது. ஆனா, இந்தக் கலை தோன்றின தமிழ்நாட்டுல மட்டும் இதுக்குத் தடை.

“சிறகோட வண்ணம், காலோட உறுதி, வாலோட தன்மை, கண்ணோட கூர்மை, கொண்டையோட வடிவம்னு தரமான சண்டைச் சேவலுக்கு பல தகுதிகள் இருக்கு. சாம்ப வளவி, பொட்டமாரி, பட்டிடா, மத்துக் கொண்டை, கிளிக்கொண்டை, பெரிய கட்டா, ஜாவா, கதர், தூமர், கால்பஸ்ரானு நிறையப் பெயர்களும் உண்டு. அது மட்டும் இல்லாம, நாங்களும் பிள்ளைக்குப் பெயர் வைக்கிற மாதிரி டைசன், கில்லர், டெர்மினேட்டர், புல்லட், ராக்கெட், மின்னல்னு எல்லாம் செல்லப் பெயர் வெச்சுக் கூப்பிடுவோம்.

தினமும் காலையில ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் இதுங் களோட இருந்தாகணும். இல்லைன்னா கொக்கரிச்சு ஊரையே கூட்டிடுங்க'' - தன் அப்ரூஸ் சேவலின் பிடரியை வருடியபடி பேசுகிறார் போரூரைச் சேர்ந்த முரளி. இவரிடம் 10 சேவல்கள் இருக்கின்றன.

இது கொக்கரக்கோ கேம்

சண்டைச் சேவல் வளர்க்கும் பேட்டைக்காரரர்களுக்குப் பெரும்பாலும் எந்தக் கெட்ட பழக்கமும் இருக்காது என்பது ஆச்சர்யம். மது அருந்தியவர் களிடமும் புகை பிடிப்பவர்களிடமும் சேவல் அண்டாதாம். சேவலுக்காக மதுப்பழக்கத்தை விட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால் பல குடும்பங்களில் சண்டைச் சேவல் வளர்ப்பதை ஊக்குவிக்கிறார்கள்.

“சண்டைச் சேவல் வளர்க்கிறது கமிட்மென்ட்டான வாழ்க்கை. காலையில எழுந்தவுடனே, சேவல் கூண்டைத் திறந்து சுத்தம் பண்ணணும். பிறகு, சுடுதண்ணி போட்டு சேவலுக்கு ஒத்தடம் கொடுத்து, சூடு போக்கணும். கால், இறகு எல்லாம் நீவி விடணும். கால்ல இருக்கிற முள்ளை (கூர்மையான விரல்) சீவணும். ஒரு இறகைப் பறிச்சு வாய்க்குள்ள விட்டு கோழை எடுக்கணும். அதுக்கு அப்புறம் காலாற கொஞ்ச நேரம் நடக்கவிட்டுட்டு, தீனி போட்டு கூண்டுல அடைக்கணும். அதே மாதிரி சாயங்காலமும் செய்வோம்'' என்கிறார் அம்பத்தூரைச் சேர்ந்த ரமேஷ். இவர் 25 சேவல்கள் வளர்க்கிறார்.

பெரும்பாலும் அனுபவம் உள்ள வாத்தியார்கள் யாரும் சேவலை விலை கொடுத்து வாங்குவது இல்லை. தாங்களே தகுந்த இனம் பார்த்து உருவாக்குகிறார்கள்.

“சண்டைச் சேவலோட மதிப்பே, அது எந்தப் பரம்பரையில் இருந்து வந்ததுங்கிறதைப் பொறுத்துதான். மூணு தலைமுறைக்குக் கணக்கு வெச்சிருப்போம். அதே மாதிரி பெட்டைக்கோழிக்கும் தலைமுறைக் கணக்கு இருக்கு. திடகாத்திரமா இருக்கணும். தாய்-தகப்பன், தாத்தா எல்லாம் உக்கிரமா இருந்திருக்கணும். இப்படி ஒரு பெட்டைக்கோழியைத் தேர்வுசெய்து உறுதியான சண்டைச் சேவலோடு இணை சேர்த்து, முட்டையிடவைப்போம். இந்த மாதிரி கோழிகள் பொறுமையா உட்கார்ந்து முட்டையை அடைகாக்காது. ஏறி மிதிச்சு உடைச்சுடும். அதனால, அந்த முட்டைகளை எல்லாம் எடுத்து சாதுவான நாட்டுக் கோழியில் வெச்சுப் பொறிக்க வைப்போம். வளர, வளர சேவல்களோட செயல்பாட்டைக் கவனிச்சுக்கிட்டே இருப்போம். சரியா எட்டாவது மாசம் கூவத் தொடங்கின உடனே, திடகாத் திரமான சேவலை தனியாப் பிரிச்சு பயிற்சி கொடுக்கத் தொடங்கிடுவோம்'' என்று நுட்பம் விவரிக்கிறார் போரூர் கார்த்திக்.

கார்த்திக் எம்.பி.ஏ படிக்கிறார். எட்டு சேவல்களை வளர்க்கிறார். நண்பர்கள் மூலம் ஒட்டிக்கொண்ட சேவல் வளர்ப்பு, இப்போது வாழ்க்கையில் முக்கிய அங்கமாகி விட்டது. சேவலே உலகம் எனக் கிடந்த பையனைப் பார்த்து முதலில் மிரண்டுபோன பெற்றோர், பிறகு அந்த அன்பைப் புரிந்துகொண்டு ஆதரவளிக்கி றார்கள்.

``சண்டைச் சேவலைப் பழக்குவது, ஒரு குத்துச்சண்டை வீரனை உருவாக்குவதற்கு சமமான வேலை'' என்கிறார்கள். குருகுலக் கல்வியின் முக்கிய அங்கம் இந்தப் பயிற்சிதான். முதலில் நீச்சல் பயிற்சி. நீர்நிலை களில் தூக்கிப் போட்டு நீந்தவிடுவார்கள். பிறகு, பேடா...அதாவது வாக்கிங். இடைவிடாது நடக்கவைப்பது. பிறகு, பறக்கவிடுவது. தினமும் காலை, மாலை இளஞ்சூட்டு நீரில் ஒத்தடம்.

இது கொக்கரக்கோ கேம்

“சண்டைச் சேவல்களுக்கு நாம சாப்பிடுற சாப்பாட்டை எல்லாம் வைக்க முடியாது. அதுக்குன்னு ஸ்பெஷல் தீனி இருக்கு. பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட், வெள்ளரி விதை, பேரீச்சை எல்லாத்தையும் நல்லா இடிச்சு மாவாக்கி வெச்சுக்குவோம். தினமும் காலையில சின்னதா ரெண்டு உருண்டை உருட்டி கொடுப்போம். மதியம் ஆட்டோட மண்ணீரல், கல்லீரல். சாயங்காலம் ரெடிமேட் மாவு. கம்பு, கேழ்வரகு, பச்சைப் பருப்பு, முழு உளுந்து எல்லாத்தையும் அரைச்சு, ரொட்டி மாதிரி சுட்டு உருட்டிக் கொடுப்போம். வாரத்துக்கு ஒரு தடவை, கஸ்தூரி மஞ்சள், சித்தரத்தை, நிலவேம்பு எல்லாத்தையும் சேர்த்து உருட்டிக் குடுத்திடுவோம். இது நோய் தடுப்பு மருந்து. ஒரு சேவலுக்கு மாசம் குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது செலவாகும். 

சில நேரங்கள்ல மண்டை சளி, அம்மை, ராணிக்கட்டு, பெராலிசிஸ், கழிசல்னு சில நோய்களும் வரும். மனுஷனுக்குக் கொடுக்கிற மருந்துகளையே வாங்கிக் கொடுப்போம். வீட்டுல சேவல் சுணங்கி நின்னா, எல்லாருமே தவிச்சுப் போயிடுவோம்'' என்கிறார் தட்சிணாமூர்த்தி.


“ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை எல்லாம் தடை விதிக்கப்பட்டதுக்குப் பின்னாடி பெரிய அரசியல் இருக்குங்க. இண்டு இடுக்கு இல்லாம எல்லா ஊர்கள்லயும் பிராய்லர் கோழி பிசினஸ் நுழைஞ்சிடுச்சு. அதனாலதான் நோய்கள் உருவாகுது. நாட்டுக்கோழி இனங்கள் இன்னமும் மிஞ்சியிருக்கக் காரணம், இந்த மாதிரி வீரியம் உள்ள சேவலுங்கதான். சேவல் சண்டையை நிறுத்திட்டா, யாரும் சேவல் வளர்க்க மாட்டாங்க. மொத்த நாட்டுக்கோழி இனமும் அழிஞ்சுடும். அப்புறம் மொத்த தமிழ்நாடும் பிராய்லர் கோழியைத்தான் தின்னாகணும். அரசாங்கம் மனசு வெச்சு, இந்தப் பொங்கலுக்காவது சேவல் சண்டையை அனுமதிக்கணும்'' என்று கோரிக்கை எழுப்புகிறார் தட்சிணாமூர்த்தி.

ஜாவாவும் சீதாவும் களமாடக் காத்திருக்கிறார்கள்.