Published:Updated:

அறப்போர் தொடரட்டும்!

அறப்போர் தொடரட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அறப்போர் தொடரட்டும்!

அறப்போர் தொடரட்டும்!

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்திருக்கிறது மத்திய அரசு.

இந்தியப் பொருளாதாரம் என்னும் வளமான வயலில் வளர்ந்த, களைகளான கறுப்புப் பணத்தை அழிக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த ஓர் உறுதியான முற்போக்கு நடவடிக்கையும், அவ்வப்போது சில வலிகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் விளைவிப்பதைப்போலவே, மத்திய அரசின் இந்த நடவடிக்கையும் மக்கள் மத்தியில் சில நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 `எந்த ஏ.டி.எம்-மில் பணம் இருக்கிறது, எந்த வங்கியில் 100 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறார்கள்?’ என பொதுமக்கள் தங்கள் வேலைகளை எல்லாம் மறந்துவிட்டு, திசைகள் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். காய்கறிகள் வாங்கக்கூட செல்லுபடியாகும் ரூபாய் நோட்டு இல்லை. வியாபாரிகள், விவசாயிகள், ஹோட்டல் நடத்துபவர்கள், மளிகைக் கடைக்காரர்கள் எல்லோரின்  வியாபாரமும் முடங்கிப்போய்விட்டது. வாரக்கூலி கிடைக்காத தொழிலாளர்கள், மீன்பிடிப் படகுக்கு டீசல் வாங்க முடியாமல் தவிக்கும் மீனவர்கள், வெளிமாநிலங்களில் நடுவீதியில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள், சமையல்காரருக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் திண்டாடும் திருமண வீட்டுக்காரர்கள், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகள், வெளியூரில் இருந்து வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்... என அனைவருமே போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட அப்பாவிகளாகத் தவிக்கிறார்கள்.

அறப்போர் தொடரட்டும்!ஆம்... நடப்பது நிச்சயம் போர்தான். கடந்த 70 ஆண்டுகளாக அதாவது சுமார் மூன்று தலைமுறைகளாக, நம்மையும் நம் குடும்பத்தையும் சிதைத்துவரும் கறுப்புப் பணத்துக்கு எதிரான போர் இது என்பதை, இந்தக் களேபரத்தில் நாம் மறந்துவிடக் கூடாது.

சுயநல அரசியல்வாதிகள், பேராசைகொண்ட ரியல்எஸ்டேட் முதலாளிகள், போலி கல்வித் தந்தைகள், இயற்கை வளத்தைச் சூறையாடும் கனிவமவளத் தொழில் அதிபர்கள்... போன்றோரை அரசின் இந்த நடவடிக்கை சுற்றிவளைத்திருக்கிறது. இவர்களிடம் இருக்கும் கணக்கில் வராத பணம் கணிசமான அளவு வங்கிகளுக்கு வந்து, வரி வசூல் அதிகமாக வாய்ப்பு உள்ளது என அரசு நம்புகிறது.

`கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்' என தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியதற்கு ஏற்ப, பதவியேற்ற உடன் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது, `அனைவருக்கும் வங்கிக்கணக்கு’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்து 22 கோடியே 60 லட்சம் பேருக்குப் புதிதாக வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டது, `தாமாக முன்வந்து கறுப்புப் பணத்துக்கு வரி கட்டலாம்’ என்ற அறிவிப்பைக் கொண்டுவந்தது... என  மோடி அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்துவிட்டுத்தான், `500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது’ என்ற நடவடிக்கையைக் கடைசியாக எடுத்திருக்கிறது. இருந்தபோதும், போதுமான அளவுக்குப் புதிய ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடாமல் திடுதிப்பென அறிவித்ததால்தான், பொதுமக்கள் இந்த அளவுக்குச் சிரமங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உணர வேண்டும்.

இந்தியாவில் பெரும் பணம் பதுக்கிவைத்திருப்பவர்கள் எல்லாம், அரசின் அங்கமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் அதிகாரமும் குவிந்திருக்கிறது. எனவே, கறுப்பை எப்படி வெள்ளையாக மாற்ற வேண்டும் என்ற வித்தையை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். ஆகையால், கறுப்புப் பணத்தின் வேர்களில் வேலைசெய்ய வேண்டும். வேர்களைச் செல்லரிக்க விட்டுவிட்டு, கிளைகளில், இலைகளில் மட்டும் மருந்து தெளிப்பது எந்தப் பலனையும் நிச்சயம் தராது. ஊழல் பணம் மற்றும் லஞ்சப் பணம் ஆகியவைதான் கறுப்புப் பணமாகப் பதுக்கப்படுகிறது. இவற்றை ஒழிக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், எப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும்?' என்ற விமர்சனத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

`இந்தியாவில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவைவிட்டுச் சென்றிருந்தாலும், அதைக் கண்டுபிடித்து இந்தியாவுக்குள் கொண்டுவர வேண்டியது எங்கள் கடமை. ஊழல்வாதிகள் சட்டவிரோதமாகச் சேர்த்துவைக்கும் சொத்துக்களைப் பறிமுதல்செய்வோம். அடுத்த கட்டமாக பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்’ என உறுதியளித்திருக்கிறார் பிரதமர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அது மட்டும் போதாது.  தங்கம், பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட்... என கற்பனைக்கு எட்டாத பல வடிவங்களிலும் கறுப்புப் பணத்தை மறைத்துவைக்க முயற்சிகள் நடக்கும் என்பதால், அரசு இயந்திரத்தில் இருக்கும் அனைத்து ஓட்டைகளையும் மோடியின் அரசு அடைத்தாக வேண்டும்.

மோடி கூறியிருப்பதைப்போல பொதுமக்கள் படும் சிரமங்கள் எல்லாம் 50 நாட்களில் தீர்ந்துபோகலாம். ஆனால், கறுப்புப் பணத்துக்கு எதிராக இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் யுத்தம், தொய்வின்றி தொடர்ச்சியாக நடத்தப்பட்டாக வேண்டிய யுத்தம். புழக்கத்தில் இருக்கும் கறுப்புப் பணத்தை ஒழிப்பது மட்டும், அரசின் நோக்கமாக இருக்க முடியாது. கறுப்புப் பணம் புதிதாக முளைக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அதைவிட அவசியம். உடன்பிறந்தே கொல்லும் வியாதியைப்போல ஆட்சியில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு நயவஞ்சக வேலைகளில் சிலர் ஈடுபடக்கூடும். இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவைத்தால்தான், இந்த யுத்தத்தில் கறுப்புப் பணத்தை அரசால் வெல்ல முடியும்.

`கறுப்புப் பணத்தின் முக்கியமான ஊற்றுக்கண்ணாக இருப்பதில் அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதனால் கறுப்புப் பணத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்றால், அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே மருந்து ‘ஜன் லோக்பால்’ ’ என கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மோடி, தன் கம்பீரமான குரலில் சொன்னார். ஆகையால், இந்தச் சட்டத்தையும் மோடி விரைந்து அமல்படுத்த வேண்டும்.

கறுப்புப் பண முதலைகளுக்கு எதிராக, நாடு தொடுத்திருக்கும் இந்த யுத்தத்தை முழுமையாக ஆதரிப்போம். அதுவே இந்தக் கணத்தின் அவசரம்... அவசியம்!