Published:Updated:

“நான் இப்போ டான்ஸர்!”

“நான் இப்போ டான்ஸர்!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் இப்போ டான்ஸர்!”

வெ.நீலகண்டன் - படங்கள்: ப.சரவணகுமார்

“நான் இப்போ டான்ஸர்!”

வெ.நீலகண்டன் - படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
“நான் இப்போ டான்ஸர்!”
பிரீமியம் ஸ்டோரி
“நான் இப்போ டான்ஸர்!”
“நான் இப்போ டான்ஸர்!”

“போன மாசம்தான் அமெரிக்காவுக்குப் போயிட்டு வந்தேன். இப்போ குவைத்ல இருந்து கூப்பிட்டிருக்காங்க. அதுக்காகத்தான் ரிகர்சல் பார்த்துக்கிட்டிருக்கேன்'' - வியர்வையைத் துடைத்தபடி உற்சாகமாகப் பேசுகிறார் டான்ஸர் பிரபுதாஸ்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை ஒட்டியிருக்கும் கசவநல்லாத்தூர் கிராமத்தில் இருக்கிறது பிரபுதாஸின் வீடு. கண்படும் இடம் எல்லாம் விருதுகளும் கேடயங்களும் நிறைந்திருக்கின்றன. பிரபுதாஸின் ஒன்பது மாத மகன் பிரவீன்ராஜ், வீட்டுக்குள் தத்தித் தத்தி நடைபயில்கிறான்.

பிரபுதாஸ், ஒரு விபத்தில் இடதுகாலை இழந்தவர். காய்கறிச் சந்தையில் மூட்டைத் தூக்கிக்கொண்டிருந்த அவரை டான்ஸர் ஆக்கியது அந்த விபத்துதான். நட்சத்திர விடுதிகள், பிரமாண்ட மேடைகள், இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் ஆடுகிறார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என உலகம் சுற்றுகிறார். சினிமாக்களிலும் அவரைப் பார்க்கலாம். நடனம் மட்டுமன்றி, ஸ்கிப்பிங், வீலிங், ஜக்ளிங், ஃபயரிங் என மேடையையே அதிரவைக்கிறார்.

பிரபுதாஸின் அப்பா சுப்பிரமணியன், ரயில்வே ஊழியர். அம்மா ராஜேஸ்வரி, கடந்த ஆண்டு இறந்துவிட்டார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த பிரபுதாஸுக்கு, மூட்டைகளை ஏற்றி இறக்குவதுதான் அப்போதைய தொழில்.

“அப்போ எனக்கு 18 வயசு. ரொம்பத் துள்ளலா திரிவேன். எங்கே விசேஷம் நடந்தாலும் `டான்ஸ் ஆட வாடா'னு பசங்க கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க. டான்ஸ் மேல அவ்வளவு ஆர்வம். புதுசா எந்தப் படம் வந்தாலும் முதல் ஷோ போய்ப் பார்த்துடுவேன். அதுல வர்ற டான்ஸை அப்படியே ஆடிப் பழகுவேன். என் கால்கள், அஞ்சு நிமிஷம் அமைதியா நிக்காது. ஏதாவது ஒரு ஸ்டெப் போட்டுக்கிட்டே இருப்பேன். இதோ இந்தத் தெருவுல விநாயகர் சதுர்த்தி விழா நடக்கும். அதுல நம்ம டான்ஸ்தான். கவலை தெரியாம வாழ்ந்த காலம் அது.

“நான் இப்போ டான்ஸர்!”

ஒருநாள், `புத்தூர்ல பெயின்ட் அடிக்கிற வேலை இருக்கு'னு ஒரு நண்பன் கூப்பிட்டான். போய் வேலையை முடிச்சுட்டு, ரயில்ல திரும்பிக்கிட்டிருந்தோம். கூட்டம் அதிகம் இருந்ததால் கதவுகிட்ட நின்னுக்கிட்டிருந்தேன். என்ன நடந்ததுன்னு யோசிக்கக்கூட முடியலை. லேசா மயக்கம் வர்ற மாதிரி இருந்தது. திடீர்னு கீழே விழுந்துட்டேன். ரயிலின் ஸ்பிரிங் செட்டப் அப்படியே ஒரு அழுத்து அழுத்தித் தூக்கிப்போட்டுச்சு. தலையில் நல்ல அடி. `சரி எழுந்து நடக்கலாம்'னு முயற்சிசெஞ்சேன். துளி அளவு தோல்ல, தொடைக்குக் கீழே முழுக்காலும் தொங்கிக்கிட்டிருக்கு. நான் அசைஞ்சதுல அதுவும் பிஞ்சு தனியா விழுந்துடுச்சு. அப்போ மயங்கி விழுந்தவன்தான். நாலைஞ்சு நாள் கழிச்சுத்தான் சுயநினைவே வந்தது. கண் திறந்து பார்த்தப்போ, இடதுகால் இல்லை. எல்லா வெளிச்சங்களும் திடீர்னு அணைஞ்சுபோன மாதிரி ஆகிடுச்சு. கால் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனைகூட செய்ய முடியலை.

படுக்கையில் இருந்து எழுந்து உட்காரணும்னாக்கூட யாராவது தோள் கொடுக்கணும். `இனிமே உயிர்வாழ வேணாம்'னு அரளிவிதையை அரைச்சுக் குடிச்சுட்டேன். திரும்பவும் மருத்துவமனை. உயிர் மீண்டு வந்த பிறகு, `உனக்கு என்ன தேவையோ, அதை நீயே செய்யப் பழகு. அப்போதான் நம்பிக்கை வரும்'னு சொல்லி, என்னைத் தனியா விட்டுட்டாங்க அம்மா. விழுந்து விழுந்து எழுந்தேன். இன்னைக்கு இந்த ஒரு ஸ்டிக்ல நம்பிக்கையோடு நடக்குறேன்னா அதுக்கு முழுக்காரணம் அம்மாதான்.''

பிரபுதாஸ் டான்ஸரானது, இன்னொரு நம்பிக்கை எபிசோடு. அவருக்கு ஆதர்சமாக இருந்தது மறைந்த நடிகர் குட்டி.

“நான் அந்த அண்ணனை நேர்ல பார்த்தது இல்லை. அது `டான்ஸர்' படம் வெளிவந்த சமயம். ஒருநாள் டி.வி-யில் குட்டி அண்ணா ஆடின `சொன்னது...' பாட்டைப் பார்த்தேன். என் வாழ்க்கையை மாத்தினது அந்த நிமிஷம்தான்.  `இது ஏன் நமக்கு சாத்தியமாகாது?'ங்கிற கேள்வி, என்னை உலுக்குச்சு. ஸ்டிக்கே இல்லாம எழுந்து நின்னேன். ஒரு கால்ல தத்தித் தத்தி தெருவுல நடந்து திரிஞ்சேன். டி.வி முன்னாடி தவம் கிடந்து, எப்ப எல்லாம் அந்தப் பாட்டைப் போடுறாங்களோ, அப்ப எல்லாம் பார்த்து அவர் மாதிரியே ஆடவும் செஞ்சேன்.

“நான் இப்போ டான்ஸர்!”

அந்த நேரத்துலதான் எங்க தெருவுல பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நானே போய், `டான்ஸ் ஆடுறேன்'னு நின்னேன்.  `டான்ஸர்' படத்துல குட்டி அண்ணா ஆடின அதே பாட்டுக்குத்தான் ஆடினேன். ஆடி முடிச்சதும் ஊரே கைதட்டுச்சு. பசங்க எல்லாம் என்னைத் தலைக்கு மேல தூக்கிக் கொண்டாடினாங்க. அதைப் பார்த்த அம்மா, `இனிமே டான்ஸ்தான் உன்னோட எதிர்காலம். போய் நல்லா கத்துக்கோ'னு சொல்லி அனுப்பிவெச்சாங்க. நேரா, வடபழநியில் இருந்த ஜெயசீலன் மாஸ்டர்கிட்ட போனேன். `எனக்கு டான்ஸ் கத்துக்கொடுங்க'னு கேட்டேன். `உன்னால ஆட முடியுமா?'னு கேட்டார். ஸ்டிக்கைத் தூக்கிப் போட்டுட்டு ஆடிக் காட்டினேன். கட்டி அணைச்சுக்கிட்டார். நிறையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல ஆடி, சாம்பியன் பட்டம் வாங்கியிருக்கேன். லாரன்ஸ் மாஸ்டரோட டான்ஸ் குரூப்ல ஆடியிருக்கேன். கல்யாணமேடை, பிறந்தநாள் மேடைனு ஆரம்பிச்சு, இன்னிக்கு பிரமாண்டமான ஸ்டேஜ் புரோகிராம், ஸ்டார் ஹோட்டல் டான்ஸ், சர்வதேச நிகழ்ச்சிகள்னு அடுத்தடுத்த படிகள்ல இந்த ஒத்தக்காலோடு ஏறிக்கிட்டிருக்கேன்'' - எனர்ஜி குறையாமல் பேசுகிறார் பிரபுதாஸ்.

இவரின் மனைவி கலாவதி. ஆந்திராவில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர். அன்பு, காதலாகிக் கசிந்துருகி திருமணத்தில் முடிந்திருக்கிறது.

“முதல்முறை இவரைப் பார்த்தவுடனே ஏதோ ஒரு ஈர்ப்பு. வீட்டுல சொன்னேன், அதிர்ச்சியாகிட்டாங்க. இவரோட பலவீனங்களை எல்லாம் சுட்டிக்காட்டி என் மனசை மாத்த முயற்சிசெஞ்சாங்க. `நான் அவருக்கு பலமா இருப்பேன்'னு உறுதியா நின்னேன். வேற வழி இல்லாம திருமணம் பண்ணிவெச்சாங்க. இப்போ எனக்கே இவர்தான் நம்பிக்கையா இருக்கார்.இவரோட வேகமும் தன்னம்பிக்கையும் இவர் மேல இன்னும் அதிகமான காதலை உருவாக்குது'' என்கிறார் கலாவதி.

“அந்த விபத்து நடக்கலைன்னா இன்னமும் நான் கடம்பத்தூர் மார்க்கெட்ல மூட்டை தூக்கிட்டுத்தான் திரிஞ்சிருப்பேன். ஒரே மாசத்துல ஆறு முறை இலங்கை போய்த் திரும்புற வாய்ப்பும், அமெரிக்காவுல பல ஆயிரம் மக்கள் கூடியிருந்த மேடையில் டான்ஸ் ஆடுற வாய்ப்பும் எனக்குக் கிடைச்சிருக்காது.  எல்லாமே முடிஞ்சதுனு நான்  நினைச்ச ரயில் விபத்தைத்தான் ஆண்டவன் என் வாழ்க்கையின் ஆரம்பமா வெச்சிருக்கான்'' - நெகிழ்வும் பெருமிதமும் ததும்பி வழிகின்றன பிரபுதாஸின் வார்த்தைகளில்!