Published:Updated:

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

பி.ஆண்டனிராஜ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

பி.ஆண்டனிராஜ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி
பிரீமியம் ஸ்டோரி
பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி
பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

திருநெல்வேலி நிறையவே மாறிவிட்டது. அரிவாளும் அல்வாவுமாக இருந்த ஊர், இப்போது நவீன அடையாளங்களுக்குள் புகுந்துவிட்டது. நெல்லை இப்போது எப்படி இருக்கிறது?

கோபுர தரிசனம்!


நெல்லையப்பர் கோயிலின் கோபுரத்தை, அருகில் உள்ள கிராம மக்கள் அங்கு இருந்தே தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இப்போது அப்படியான சூழல் இல்லை. காரணம், நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை மறைக்கும் வகையில் அருகிலேயே கட்டடங்கள் முளைத்துவிட்டன. அனுமதியின்றியும் விதிமுறையை மீறியும் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களை இடிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டும் இப்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

கூட்டம் இல்லாத ரத வீதிகள்

ரத வீதியில் மட்டுமே முன்னர் எல்லாம் துணிக்கடைகள் இருக்கும். அங்கு இருந்த முக்கியமான ஒரு துணிக்கடை இடம் மாறி பாளையங்கோட்டைக்குச் சென்றுவிட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் வரையிலும் கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துகூட துணி வாங்குவதற்கு மக்கள் வருவார்கள். இப்போது நெல்லையின் பிரபலமான துணிக்கடைகள் திருவனந்த புரத்திலேயே கிளைகளைத் திறந்துவிட்டன.

இலக்கியம் வளர்ப்போம்

சங்ககாலம் தொடங்கி பின்நவீனத்துவக் காலம் வரை தமிழ் இலக்கியத்துக்கு நெல்லை அளித்த பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. பாடல்கள் மட்டுமே எழுத்து வடிவில் இருந்த நிலையில், உரைநடை இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதே, நெல்லையில் தங்கியிருந்த வீரமாமுனிவர்தான். தமிழின் முதல் அகராதியை அவரே உருவாக்கினார். ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி,

கி.ராஜநாராயணன், மீ.ப.சோமு, டி.செல்வராஜ், சு.சமுத்திரம், ஜோ.டி.குரூஸ் என சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளிகளின் பட்டியல் நீளமானது. புதுமைப்பித்தன் பிறந்ததும் நெல்லையில்தான். சமகால இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களாக வலம்வரும் வண்ணதாசன், விக்கிரமாதித்யன், கலாப்ரியா போன்றோரும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. வரலாற்று ஆய்வாளர்களான தொ.பரமசிவன், திவான், நவீன இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளான டி.தர்மராஜ், நாறும்பூநாதன், சுகா, தளவாய் சுந்தரம், ஷங்கர்ராமசுப்ரமணியன், எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றோர் நெல்லைக்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள்.

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

நடக்காத நாடகங்கள்

நாடகத் துறைக்கும் நெல்லை பெரும் பங்காற்றி இருக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகள் நெல்லைக் காரர்தான். இப்போது நாடகம் என்பதே இங்கு இல்லை. கிராமக் கோயில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் முன்னர் அரங்கேறிய நாடகங்கள், திரைப்படங்களின் வருகைக்குப் பிறகு மறைந்துவிட்டன.

சீரழியும் பொதிகை மலை

பொதிகை மலையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசையின்போது, வருடத்தில் 10 நாட்கள் விழா நடக்கும். இதில்  கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கு வருவதால் அந்த மலையும் அதன் அருகில் செல்லும் தாமிரபரணி ஆறும் சீரழிகின்றன. பாபநாசத்தில் முன்னோருக்கு திதி செய்யும்போது, புதிய உடைகளை வாங்கிவந்து ஆற்றுக்குள் வீசுகிறார்கள். இதனால் துணிகளால் அந்தப் பகுதியே நிறைந்து கிடக்கிறது. 

கந்துவட்டி

நெல்லையின் மிகப்பெரிய சமூகச் சீர்கேடாக மாறியிருப்பது கந்துவட்டி. இந்தப் பிரச்னையால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்த சோகமும் நடந்தது. இந்த வருடத்தில் மட்டும் கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்டம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் நடந்துள்ளன.

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

கல்வி

நெல்லை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நூற்றாண்டுகளைக் கடந்த பள்ளிகள் பத்துக்கும் மேல் இருக்கின்றன. காது கேளாதோருக்கும் மனநலம் குன்றியோருக்கும் பார்வைத் திறனற்றோருக்குமான பள்ளிகள், 100 வருடங்களுக்கு முன்னரே பாளையங் கோட்டையில் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கல்வியில் நெல்லைக்கு முக்கியமான இடம் இருந்தது. 10 மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது, எல்லாம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு முக்கிய இடங்கள் கிடைத்துவந்தன. ஆனால், இப்போது அப்படி இல்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உருவானதுடன் கல்வி வணிகமயமான பிறகு, தேர்வுக்கான பயிற்சிகள் கொடுப்பதில் இங்கு உள்ள பள்ளிகள் பின்தங்கியே இருக்கின்றன.

வற்றாத ஜீவநதி


தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் அனைத்துக்குமே பக்கத்து மாநிலத்துடன் ‘தாவா’ இருந்துவருகிறது. ஆனால், நெல்லையில் ஓடும் தாமிரபரணி மட்டுமே நமது எல்லைக்கு உள்ளேயே உற்பத்தியாகி, நமது எல்லையிலேயே கடலில் கலக்கிறது. அதனால் இந்த நதிக்கு எந்த வில்லங்கமும் ஏற்படவில்லை. அத்துடன், வருடம் முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுவது கூடுதல் சிறப்பு. இப்போது இந்த ஆற்றில் மாசுக்கள் கலப்பது பெரும் பிரச்னையாகி வருகிறது. ஆற்றில் நடந்த மணல்கொள்ளையால் ஆற்றுநீரும் மாசுபட்டுவிட்டதாகச் சூழலியல் ஆர்வலர்கள் வருந்துகிறார்கள். மூன்று மாவட்ட மக்களின் தாகத்தைத் தணிக்கும் இந்த ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்குத் தாராளமாக தண்ணீர் கொடுப்பது சர்ச்சையாகி வருகிறது.

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

வாகனப் பெருக்கம்

நெல்லையில் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கார்களைப் பார்ப்பதற்காகவே ஒருகாலத்தில் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு நெல்லைக்கு வருவார்களாம். இப்போது வாகன நெரிசலால் சாலைகள் திணறுகின்றன. அதற்கு முக்கியக் காரணம், நெல்லை நகரில் முக்கியமான சாலை என ஒன்று மட்டுமே இருக்கிறது. கூடுதல் சாலைகள், மாற்றுப் பாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதற்கான பணிகள் துரிதப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

மாற்றும் அமைப்புகள்

அன்னை தெரசா சமூகநல அமைப்பு, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம், ஏ ட்ரீ போன்ற அமைப்புகள் கல்வி, சுற்றுச்சூழல் பணிகளில் ஆர்வம் காட்டிவருகின்றன. மாற்றுத் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் பணியில் `காஞ்சனை’ திரைப்பட இயக்கம் முக்கியப் பங்காற்றிவருகிறது. ஓவியர் சந்ரு நடத்தும் `அவ்வை முளரி' மற்றும் `விரல்கள்', `சித்திரமும் கைப்பழக்கம்' போன்ற அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்துவருகின்றன.

வேண்டும் விமான நிலையம்

நெல்லையின் தொழில் வளர்ச்சி மந்தத்துக்கு அதன் போக்குவரத்து வசதி பின்தங்கியிருப்பதே முக்கியக் காரணம். நெல்லை வருவதற்கு மதுரை, தூத்துக்குடி அல்லது திருவனந்தபுரம் விமான நிலையங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அங்கு இருந்து நெல்லைக்கு காரில் வருவதற்குள் மன அழுத்தம் உண்டாகிவிடும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல்.  ரயில் போக்குவரத்தும் போதுமான அளவுக்கு இல்லை. இரட்டை ரயில் பாதைக்கான திட்டம் ஆமை வேகத்தில் நடப்பதால் இருக்கின்ற ரயில்களும் சிக்னலுக்காக ஆங்காங்கே காத்துக் கிடக்கும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே, நெல்லையின் தொழில் வளர்ச்சி மேம்படும்; மக்களின் வாழ்க்கைத்் தரம் உயரும்.

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

சாதி ரசிகர்கள்

தமிழகத்தின் வேறு எங்கும் இல்லாத வகையில், சாதி பின்புலத்துடன் திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்கும் கலாசாரம் (ஒருசில ரசிகர்கள் விதிவிலக்கு), சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி போன்றோருக்கு மட்டும் அல்லாமல் கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், விஜயகாந்த், பிரசாந்த் என பலருக்கும் அப்படிப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர்களுக்குள் நடக்கும் சிறு சிறு மோதல்கள்கூட சாதிய மோதலாகிவிடும் அபாயம் இருந்தது. ஆனால், சமீபத்தில் சினிமாவுக்குள் கதாநாயகர்களாக வந்துள்ள புதிய இளைஞர்களால், இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது சற்றே ஆறுதலானது. 

வேண்டும் வேலைகள்

இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்பு இன்மையே வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம். சங்கர் சிமென்ட் நிறுவனம் மட்டுமே அதிக வேலை வாய்ப்பு அளித்துவருகிறது. கங்கைகொண்டானில் மென்பொருள் வளாகமும், நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலமும் அமைக்கப்பட்டன. ஆனால், அதில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் நகர மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

பொலிவிழந்த தசரா

பாளையங்கோட்டை தசரா விழா மிகப் பிரசித்தம். பல லட்சம் மக்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். சில வருடங்களுக்கு முன்பு இந்த விழாவில் நடந்த கலவரமும் வன்முறையும் மக்களை உலுக்கி எடுத்தன. அதைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு தசரா நடத்த தடை விதிக்கப்பட்டது. பின்னர் இப்போது வரையிலும் அந்த விழாவுக்குக் கூடும் மக்களின் எண்ணிக்கை சில ஆயிரமாகக் குறைந்துவிட்டது.

பத்திரிகை பலம்

பத்திரிகைத் துறையில் கோலோச்சிய முதலாளிகள் பலரும் நெல்லைக்குச் சொந்தக்காரர்களே! `தினத்தந்தி'யைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார், `தினமலர்' ராமசுப்பையர் ஆகியோர் நெல்லையைச் சேர்ந்தவர்கள். நெல்லையில் தொடங்கப்படும் பத்திரிகைகள், தமிழ்நாடு முழுவதும் பலமாகக் காலூன்ற முடியும் என்ற சென்ட்டிமென்ட் ஒன்று இருந்தது. `கதிரவன்' என்ற நாளிதழ், நெல்லையில் இருந்து தொடங்கப்பட்டது. `தினகரன்' பத்திரிகையைக்கூட, அதன் நிறுவனர் கே.பி.கந்தசாமி நெல்லையில்தான் முதலில் தொடங்கினார்.

அல்வா ஆயிரம்

இருட்டுக்கடை அல்வா இல்லாமல் நெல்லையா? திருநெல்வேலியில் நூற்றுக்கும் அதிகமான இருட்டுக்கடை அல்வா கடைகள் இருந்தாலும், ஒரிஜினல் கடை இருப்பது நெல்லையப்பர் கோயிலின் முன்பு மட்டும்தான். 100 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தானில் இருந்து வந்த பிஜிலி சிங் என்பவர் அறிமுகப்படுத்திய அல்வா தொழிலில், அவரது வாரிசுகள் இப்போதும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். சில மணி நேரம் மட்டுமே திறந்து இருக்கும் இருட்டுக்கடை அல்வாவின் விற்பனை பல லட்சங்களைத் தாண்டும்.

பொதிகை... தாமிரபரணி... அல்வா! - திருநெல்வேலி

இரவு முழுவதும் இட்லி

தளவாய் முதலியார் சாலையில் இரவில் மின்கம்பத்தின் வெளிச்சத்தில் வரிசையாக பல கடைகளில், இரவு முழுவதும் சூடான இட்லிகள் விற்பனை செய்யப்பட்டன. எந்த நேரத்தில் சென்றாலும் அங்கு சாப்பிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது மலையேறிவிட்டது. சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் காரணமாக இரவில் 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்குகின்றன.

பட்டிமன்றம்...


நெல்லையின் அடையாளங்களில் ஒன்று பட்டிமன்றம். `கண்ணகி செய்தது சரியா... தவறா?' என்பதில் தொடங்கி, விதவிதமான தலைப்புகளில் பட்டிமன்றம் நடக்கும். இளைஞர்களின் மாலைநேரப் பொழுதுபோக்காக பட்டிமன்றங்களே இருந்தன. நட்சத்திரப் பேச்சாளர்களாக நெல்லைகண்ணன், பொ.ம.ராசமணி, கிரஹோரி, புத்தநேரி கோ.செல்லப்பா எனப் பலர் இருந்தனர். இவர்களுக்கு தனித்தனியே ரசிகர் மன்றங்கள்கூட அமைக்கும் அளவுக்கு கிராமங்களில் செல்வாக்கு பெற்றிருந்தனர். இப்போது எல்லாம் எப்போதாவது ஒன்றிரண்டு பட்டிமன்றங்கள்தான் நடக்கின்றன.

தவறவிடக் கூடாத சொதி

நெல்லையில் சைவப்பிள்ளை சமூகத்தினரின் திருமண விழாக்கள் நடக்கும்போது திருமணத்துக்கு மறுநாள், சொதி விருந்து பறிமாறப்படும். இப்போது, இந்த உணவு நெல்லையின் முக்கிய உணவாக மாறிவிட்டது. சாதாரண கடைகள் முதல் மெஸ் வரை எல்லா இடங்களிலும் சொதி பறிமாறப்படுகிறது. சொதி என்பது, சாதத்தில் பருப்பு, சாம்பார் போன்று பரிமாறப்படும் ஒருவிதமான குழம்பு. இது, தேங்காயில் இருந்து பால் எடுத்து நிறையக் காய்கறிகளைச் சேர்த்துச்செய்கிறார்கள். இது பற்றி நெல்லைகண்ணனிடம் பேசும்போது, ``திருமண வீட்டில் மீதமாகும் தேங்காயையும் காய்கறிகளையும் பயன்படுத்தவே சொதிக் குழம்பு தயாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதிகமாக இருக்கும் சொதிக்குழம்புக்காக மறுநாள் நெருங்கிய உறவினர்களை அழைத்து ‘சொதி விருந்து' வைத்தார்கள். இப்போது அது ஒரு கட்டாயமாக்கப்பட்டுவிட்டது'' எனக் குறிப்பிட்டார்.