Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

ளிமையான வாழ்க்கையை வாழ்வோரும், இயற்கையான வழிகளில் வாழ விரும்பு வோரும் எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய நிலைமை இப்போது உருவாகியுள்ளது. `மருத்துவமனைக்கே செல்லாமல் வாழவேண்டும்' என்ற விருப்பம் மிக இயல்பானது; இயற்கை வழியிலானது. `எனக்கு மருந்துகள் இல்லா வாழ்க்கை வேண்டும்’ என விரும்புவது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமை. இந்த உரிமையை, எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுப்பது ஆபத்தானது. எவரேனும் ஒருவர் இந்த அடிப்படை உரிமையை மதித்து வாழத் தொடங்கினால், அவர் சந்திக்கும் அவமானங்களும் அச்சுறுத்தல்களும் அருவருக்கத் தக்கவையாக உள்ளன.

‘மருந்துகள் இல்லாமல் நோய் குணமாகாது. மருத்துவம் இல்லாமல் வாழ முடியாது. மருத்துவமனைக்கே செல்லாமல் வாழ விரும்புவது, பிற்போக்குத்தனமான சிந்தனை’ ஆகிய நம்பிக்கைகளை நவீன மருத்துவத் துறை வளர்த்துப் பாதுகாக்கிறது. இந்த நம்பிக்கைகளை மனதில் பதித்துக்கொண்ட மக்கள், மரபுவழிப் பட்ட வாழ்வியலைக் கண்டு அஞ்சுகிறார்கள். மருந்துகளின் பிடியில் இருந்து விடுபட எண்ணுவோரை, மேற்கண்ட நம்பிக்கைகள் மோசமாக மிரட்டுகின்றன.

`மருந்து இல்லாத மரபுவழி வாழ்க்கை என்பது வெற்று மூடநம்பிக்கை’ என்ற புரிதல், கடந்த 50 ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சாத்தான். நவீன மருத்துவத்துக்கு எதிராகப் பேசுவோரை மிரட்டி ஒடுக்கிவைப்பதுதான் இந்தச் சாத்தானின் முழு நேரப் பணி. ஆனால், உண்மைக்கு சாத்தான்கள் மீது அச்சம் இல்லை. உண்மையின் ஒளிதான் இறை ஆற்றலின் வடிவம். அச்சுறுத்தல்களையும் அவமானங் களையும் கண்டு ஒதுங்கிவிடாமல், நமது உடல்நலம் குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்துவது என் கடமை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம் (Indian Drugs and Cosmetics Act)' என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதுதான் நம் அனைவருக்குமான `மருத்துவப் பாதுகாப்பு’ ஆயுதம். இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அட்டவணைகளில் மிகவும் முக்கியமானது ‘அட்டவணை J’ (Schedule J). இதில் உள்ள வாசகங்களை அப்படியே தமிழில் தருகிறேன்.


`இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டத்தின் விதி எண் 106-ன் கீழ், அட்டவணை J பிரிவின்படி பின்வரும் நோய்கள், உடல் தொல்லைகள் எந்த மருந்துகளாலும் தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாதவை.’

இந்த வாசகத்தின் கீழ் உள்ள நோய்கள் / உடல் தொல்லைகளின் எண்ணிக்கை 51. அதாவது 51 வகையான நோய்கள் மற்றும் தொல்லைகளை மருந்துகளால் தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாது என அந்தச் சட்டம் வரையறுத்துள்ளது. அந்த நோய்களின் பட்டியலை நீங்கள் படிக்க வேண்டும். அவற்றில் இருந்து சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கருப்பைச் சீர்கேடுகள் மற்றும் கருப்பை நோய்கள், குடல் இறக்கம், விரைவீக்கம், மனநோய், மஞ்சள்காமாலையின் பல்வேறு வகைகளும் கல்லீரல் நோய்களும் (Jaundice, Hepatitis and Liver Disorders), பல்வேறு இதய நோய்களும், இதயத்தில் உருவாகும் தொல்லைகளும், ஆஸ்துமா, புற்றுநோய், உடல் பருமன், பித்தப்பை கல், சிறுநீரகக் கல், பக்கவாதம், உடலுறவுச் செயல்பாட்டை அதிகரித்தல், வலிப்புநோய், நரம்பு வீக்கம் (Vericose Vein).’

இவை தவிர, வேறு சில போலி வாக்குறுதி களையும் இந்தச் சட்டம் தடைசெய்துள்ளது.

‘தலைமுடியின் வண்ணம் மாற்றுதல், வழுக்கையில் முடி வளரச் செய்தல், மார்புகளின் வடிவத்தை/தோற்றத்தை மாற்றுதல், சிவப்பழகு உருவாக்குதல், மூளைச் செயல்பாடுகளை மேம்படுத்துதல், நினைவாற்றலை அதிகரிக்கச் செய்தல், உயரமாக வளரச் செய்தல், ஆண்/பெண் குறிகளின் அளவை/வடிவத்தை அதிகரித்தல், உடலுறவு நேரத்தை நீட்டித்தல், பற்களின் வலிமையை அதிகரித்தல், பார்வைத்திறனை அதிகரித்தல்.’

சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு, இப்படி ஒரு சட்டம் இருப்பதே தெரியாது. மேற்கண்ட நோய்களுக்கும்/குறைபாடுகளுக்கும் எவ்வளவு மருந்துகள் விற்கப்படுகின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இவ்வாறு விற்கப்படும் மருந்துகளின் `செயல்பாடுகளை’ இப்போது அறிந்துகொள்ளுங்கள். `இந்த நோய்களையும் குறைபாடுகளையும் மருந்துகளால் தீர்க்கவோ, தடுக்கவோ முடியாது’ என்பது சட்டம். ஆனால், ‘இந்த மருந்துகளை மக்களுக்கு அளிக்கக் கூடாது’ என்று சட்டம் இல்லை. மாறாக, ‘இந்த மருந்துகள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் சம்மதித்தால் மட்டுமே அந்த மருந்துகளை அளிக்க வேண்டும்’ என்கிறது சட்டம்.

நோய்களின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து, அதை சரிசெய்தல்தான் மருத்துவத்தின் அடிப்படையான கருத்து. மாறாக, நோய்களின் அறிகுறிகளை மட்டும் கவனித்து அவற்றை மட்டுப்படுத்தும் வகையிலான மருந்துகளை அளித்தால், நோயின் தீவிரம் அதிகரிக்கும். மருந்துகளின் தீயவிளைவுகளால் உடலின் முக்கிய உறுப்புகள் சீரழியும். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இந்திய மருந்து மற்றும் அழகுப்பொருட்கள் சட்டம் வரையப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மருந்தும் தடுக்கும் மருந்தும் இல்லை என்பது சட்டம். ஏனெனில், சர்க்கரை என்பது ஓர் அறிகுறி மட்டும்தான்; நோய் அல்ல. `கணையத்தின் செயல்பாடுகளில் சீர்கேடு உருவானதால், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கிறது' என்று நவீன மருத்துவம் கூறுகிறது. ஆனால், கணையத்தின் செயல்பாடு ஏன் சீர்கெட்டது எனக் கண்டறிந்தால் தான், அதை முற்றிலும் சீர்செய்ய முடியும். மூலக்காரணம் என்ன என்பதைக் கண்டறியாமல் சர்க்கரையின் அளவை நேரடியாகக் குறைப்ப தற்காக மருந்துகள் தரப்பட்டால், இரண்டு தீய விளைவுகள் உருவாகின்றன.

ஒன்று, நாளடைவில் சர்க்கரை நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, குறையாது. தொடக்கத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதோ அதைக் காட்டிலும் மிக அதிகமான சர்க்கரை அளவுதான் சில காலம் கழித்து இருக்கும். மருந்து களின் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்குமே தவிர, சர்க்கரையின் தீவிரம் குறையாது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

இரண்டு, சர்க்கரைக்கு எனத் தரப்படும் மருந்துகளால் உடலின் முக்கிய உறுப்புகள் சீரழிகின்றன. சர்க்கரை நோய்க்கு என மருந்து உட்கொள்வோர் காலப்போக்கில் சிறுநீரகச் சீர்கேடுகள், உடல் பருமன், கொழுப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, கல்லீரல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கும் மருந்துகள் உட்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம் அல்லவா! இதுதான் மிகக் கொடுமையான விளைவு.

இந்த இருவகையான சிக்கல்களையும் கருத்தில் கொண்டுதான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நோயின் மூலக்காரணத்தைக் கண்டறியும் திறனும் அறிவும் இருந்தால்தான் மருத்துவம் செய்ய முடியும். இல்லையெனில், மருந்துகளைத்தான் விற்க முடியும். நவீன மருத்துவத்தின் நோய் அறியும் ஆய்வகங்கள், கருவிகளைக் காணும் மக்களுக்கு அவற்றின் மீது மயக்கம் வருவது இயல்பானதுதான். பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் துறையாக வளர்ந்துள்ள நவீன மருத்துவம், ‘இதுதான் இந்த நோய்க்கான மூலக்காரணம்’ எனச் சட்டத்தின் பட்டியலில் உள்ள எந்த நோயைப் பற்றியும் இன்று வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அவ்வாறு கண்டறிந்தால், மிக எளிதாக அந்த நோயைக் குணப்படுத்திவிடலாம்; தடுத்துவிடலாம். பிறகு, சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துவிடலாம். 1940-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில், `குணப்படுத்த முடியாத’ நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

ரத்த அழுத்தம் என்பது, உடல் மற்றும் மனச்செயல்பாடுகளின் வெளிப்பாடுதான்; அது ஏதோ ஓர் உறுப்பில் தோன்றும் நோய் அல்ல. ரத்த அழுத்தம் இல்லாமல் வாழவேண்டுமானால், மனம் மற்றும் உடல் செயல்பாடுகளில் உள்ள தவறுகளைப் புரிந்துகொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். மாறாக, மாத்திரைகளை மட்டுமே ஆண்டுக்கணக்கில் உட்கொண்டால், உடலின் உள்ளுறுப்புகள் சீரழியும். உங்களுக்கு வழங்கப்படும் ஒரே ஒரு மருந்துகூட, ‘தீய விளைவுகள்’ இல்லாத மருந்து இல்லை. இதுதான் உலகம் எங்கும் உள்ள சுகாதார அமைப்புகள் கூறும் உண்மை.

நம் சமூகத்தில் ஒரு வளர்ச்சிப் போக்கை நீங்கள் கவனித்துப் பாருங்கள். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர், காய்ச்சல் மற்றும் சளிக்காக மட்டுமே நவீன மருந்துகளை உட்கொள்ளும் பழக்கம் தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில், மூச்சிரைப்பும் காசநோயும் அதிகரித்தன. மக்கள் அவற்றுக்கான மருந்துகளை உட்கொண்டனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவை அதிகரித்தன.  இவற்றுக்கான மருந்துகளை மக்கள் கேள்வி கேட்காமல் உட்கொண்டனர். கல்லீரல் கேடுகள், மனநோய், தூக்கமின்மை, சிறுநீரகச் சிக்கல்கள் அதிகரித்தன. இவற்றையும் கேள்வி கேட்காமல் கடந்து செல்லும் போக்கு மக்களிடம் வளர்ந்தது. அடுத்த கட்டமாக, சிறுநீரகச் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகிய இறுதிநிலை உருவானது.

அப்போதாவது மருந்துகளின் மீது கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், கல்லீரல் மாற்றுதல், சிறுநீரகம் மாற்றுதல், செயற்கை சுவாசம் ஆகிய துன்பமான நடவடிக்கைகளை ‘மருத்துவம்’ என்ற பெயரில் மக்கள் போற்றி வளர்த்தனர். இந்தக் காலகட்டத்தில்தான், சமூகத்தின் பெரும்பகுதியான மக்கள் நோயாளிகளாக மாற்றப்பட்டிருந்தனர். சாலை ஓரங்களில் குடைக்குக் கீழே நின்றவாறு சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ‘இலவசமாக’ப் பரிசோதனை செய்து, கூட்டம் கூட்டமாக நோயாளிகளை ‘உருவாக்கும்’ இழிநிலை நம் சமூகத்தில் வளர்ந்தது. இந்த நிலை குறித்தும் எந்தக் கேள்விகளை எழுப்பாமல், ‘மருத்துவம் வளர்ந்துவிட்டது’ என மார்தட்டியது அறிவுச் சமூகம்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24

விளைவு, வீட்டுக்கு வீடு நோயாளிகள் என்ற அளவில் நோயாளிச் சமூகம் உருவாகிவிட்டது. சர்க்கரை நோய் காரணமாக சில ஆண்டுகளாக மருந்துகள் உட்கொண்ட ஒருவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகளும் அதற்கான காரணம்தான் என்ற தகவல் பெரும்பகுதி மக்களுக்குத் தெரிவது இல்லை. `சர்க்கரையால் சிறுநீரகம் செயலிழந்ததா... மருந்துகளால் செயலிழந்ததா?’ என்ற கேள்விக்கு உரிய விடை அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்தக் கேள்வியைக் கேட்டால்தானே, பதில் சொல்லவேண்டிய தேவை அந்தத் துறையினருக்கு உருவாகும். ஆனால், இங்கே எவருமே கேள்வி கேட்பது இல்லையே!

எல்லா மருந்துகளின் இணைப்புச் சீட்டிலும் அந்த மருந்துகளின் தீயவிளைவுகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மக்கள் படிப்பதே இல்லை. மக்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்களையும் எவரும் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், நோய் அறியும் பரிசோதனை களின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ‘இனி நீங்கள் ஒரு நோயாளி’ என அறிவிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையும் கூடுகிறது. ‘இந்த நோய்களுக்கு எல்லாம் மருந்து இல்லை’ என்ற உண்மை அறியாமல் மருந்துகளை உட்கொண்டு, அடுத்தடுத்த ஆபத்து நிலைகளுக்குச் செல்வோர் பெருகுகிறார்கள்.

எந்த வகையான உடல் தொல்லையாக/நோயாக இருந்தாலும், அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகள் நம் வாழ்வியலில்தான் உள்ளன.

பசிக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளும் முறைக்கு மீண்டும் திரும்புங்கள். கடிகாரத்துக்கும் நம் உடல் பசிக்கும் தொடர்பு இல்லை. `உண்ட உணவு செரித்து, தேவையற்றவை வெளியேறிய பிறகு மறு உணவு உண்போருக்கு எந்த மருந்தும் தேவை இல்லை’ என்றார் ஆசான் திருவள்ளுவர். நமது மரபுவழிப்பட்ட உணவுப் பழக்கங்களை மீட்டெடுத்தல் ஒன்றுதான், நோயற்ற வாழ்வுக்கான வழி. நமது உணவுகளே மருந்துகள்தான்.

கடந்த சில ஆண்டுகளாக, தீமைகளைப் பற்றிய அறிவை நாம் அதிகம் வளர்த்துக்கொண்டோம். எதை அதிகம் அறிந்துகொள்கிறோமோ, அதற்கு ஆட்படுவோம். இனி, நன்மைகளை அறிந்துகொள்வோம்!

- திரும்புவோம்...