Published:Updated:

சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!

சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!
பிரீமியம் ஸ்டோரி
சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!

ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: ரா.ராம்குமார்

சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!

ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!
பிரீமியம் ஸ்டோரி
சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!
சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!

“ராக்கெட் தொழில்நுட்பத்தை, நாம் சுயமாக உருவாக்க ஆரம்பித்து, 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. சூரியனுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்பத் தயாராகிட்டோம்'' - உற்சாகமாகப் பேசுகிறார் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் கே.சிவன். நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் வல்லங்குமாரவிளை என்னும் சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, சென்னை எம்.ஐ.டி-யில் படித்து, இன்றைய இந்திய விண்வெளித் துறையின் தவிர்க்க முடியாத மனிதராக உயர்ந்து நிற்கும் தமிழர் கே.சிவன்.

கேரளாவில், திருவனந்தபுரம் அருகில் தும்பா கிராமம்தான், இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளம். அங்கே `மார்க் 3’ செயற்கைக்கோள் வேலைகளில் மும்முரமாக இருந்த கே.சிவனைச் சந்தித்தேன்.

``மார்க் 3-ல் என்ன சிறப்பு?''

“இஸ்ரோ தயார்செய்து வைத்திருக்கும் மிகப்பெரிய ராக்கெட் வாகனம் `மார்க் 3’. குறைந்த செலவில் பெரிய அளவில் செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான தொடர் ஆராய்ச்சியின் பலன் `மார்க் 3’. இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தில், நான்கு டன் எடைகொண்ட தொலைத்தொடர்பு வசதிக்கான செயற்கைக்கோள் பயணிக்க முடியும். இஸ்ரோ, தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிவருகிறது. `மார்க் 3’ வெற்றிக்குப் பிறகு இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்; நம் நாட்டுக்கு அதிக வருமானமும் கிடைக்கும்.”

``விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் எப்போது சாத்தியமாகும்?''

“ `மார்க் 3’ விண்வெளி ஓடத்தின் மூலமே, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திறனைப் பெற்றுவிட்டோம் என்றாலும், இப்போது மக்களின் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்களை அனுப்புவதில் அதிகக் கவனம் செலுத்திவருகிறோம். இதற்கு இடையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் பேசிவருகிறோம். விரைவில் முடிவெடுப்போம்.''

``பல 100 கோடி ரூபாய் செலவுசெய்து அனுப்பப்படும் செயற்கைக்கோள்களினால் பொதுமக்களுக்கு என்ன பயன்?''


“1970-களிலும் 1980-களிலும் ஏராளமான தொலைக்காட்சி மற்றும் தொலைபேசித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தை நிறுவி 30-க்கும் மேற்பட்ட ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள்களையும், இன்சாட் வரையில் ஏராளமான தொலைத்தொடர்பு மற்றும் வானிலை தகவல்களுக்கான செயற்கைக்கோள்களையும் அனுப்பியிருக்கிறோம். இதனுடன் அறிவியல் ஆராய்ச்சிக்காக `சந்திராயன்’, `மங்கள்யான்’ போன்றவற்றையும் அனுப்பியிருக்கிறோம்.

ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள்கள் மூலம் பேரிடர் மேலாண்மை, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், புவியில் ஏற்படும் நிகழ்வுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த காலங்களில் பெரும்புயலால் ஏகப்பட்ட உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. ஆனால், தற்போது முன்னெச்சரிக்கைத் தகவல்களால் உயிர்ச் சேதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. மீனவர்களுக்கு மீன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களின் தகவல்கள் வழங்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் அதிகரித்துவருகிறோம்.

விவசாயிகளுக்கு அவர்கள் பகுதி சார்ந்த காலநிலை ஆலோனைகள் வழங்கப்படுகின்றன. ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள்களில் பூச்சிகளின் படையெடுப்பு போன்றவை குறித்து அறிந்து, அதை வேளாண்மைத் துறைக்குத் தெரிவித்திருக்கிறோம். இதன் மூலம் பயிர் சேதத்தையும் தடுத்திருக்கிறோம்.

தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடர்பு வசதிகள் பெரும்அளவில் மேம்படுத்தி வருகிறோம். `சந்திராயன்’, `மங்கள்யான்’, `ஆதித்யா’ போன்ற வற்றின் மூலம் எதிர்காலத்தில் மக்களுக்குப் பலவிதமான பயன்கள் கிடைக்கும்.”

சந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா!

`` `சந்திராயன்-II’, `மங்கள்யான்-II’ எந்த நிலையில் இருக்கின்றன?

“`சந்திராயன்-II’ செயற்கைக் கோளை 2017-ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்ப திட்ட மிட்டுள்ளோம். `சந்திராயன்-I’ சந்திரனை மட்டுமே சுற்றிவந்தது. `சந்திராயன்-II’ சந்திரனில் இறங்கி அதில் உள்ள ரோவர், நிலவில் ஒவ்வோர் இடத்துக்கும் பயணம் செய்யும். அங்கு உள்ள தாதுப்பொருட்களையும் இதர பொருட்களையும் குடைந்து எடுத்து, அங்கே என்ன தாதுப்பொருட்கள் இருக்கின்றன என்பதை ஆய்வுசெய்து, முடிவுகளை பூமிக்கு அனுப்பிவைக்கும். இதன்மூலம் பல புதிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

`மங்கள்யான்-I’ என்பது, ஒரு வருடம் இயங்கும் வகையில்தான் அனுப்பப்பட்டது. ஆனால், அது இன்னமும் சிறந்த முறையில் இயங்கி, செவ்வாய்க் கோளை வலம்வந்து, தொடர்ந்து பல படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. தற்போது `மங்கள்யான்-2’ அனுப்புவதற்கான விவாதம் நடந்துவருகிறது.

இதைத் தவிர, சூரியன் பற்றி ஆராய்வதற்கு `ஆதித்யா’ செயற்கைக்கோள் தயாராகிவருகிறது. சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்பும்போது, அந்தச் செயற்கைக் கோள் எரிந்துவிடும் என மக்கள் நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் நடக்காது. இது சூரியனுக்கு அருகில் செல்லாமல், பூமியை ஒட்டியே சுழலும். அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இணையாக சூரியனைச் சுற்றிவரும்.

வளிமண்டல ஆராய்ச்சியில் சூரியன் இன்னும் மிகப்பெரிய புதையலாக இருக்கிறது. உதாரணத்துக்கு, சூரியனின் வெப்பநிலை 5,600 செல்சியஸ் மட்டுமே. ஆனால், சூரியனில் இருந்து வெளியே வரும் கதிர்கள் எப்படி ஓர் இடத்தில் சேர்ந்து மிகப்பெரிய வெப்பநிலையாக மாறுகிறது, இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை எல்லாம் ஆதித்யா கண்டறியும்.

ஒவ்வொரு 11 வருடங்களுக்கு ஒருமுறையும் சூரிய ஒளிக்கதிர் விழும் புள்ளிகள் மாறுகின்றன. இதன் மூலம் எப்படி ஒவ்வொரு 11 வருடங்களும் மழையும் தட்பவெப்பநிலையும் மாறிவருகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். இதை எல்லாம் அறிந்து எதிர்காலச் சந்ததியினர் ஆபத்துக் காலங்களில் சரியான முடிவுகளை எடுக்கவும், எதிர்காலத்தில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதற்கும் உதவியாக இருக்கும்.”

சீக்கிரம் ஆரம்பிங்க... ஆதித்யா’வுக்காக ஆர்வமா காத்திருக்கோம்!