Published:Updated:

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

அதிஷாபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார், டி.அசோக்குமார்

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

அதிஷாபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார், டி.அசோக்குமார்

Published:Updated:
யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?
யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

`சிலவற்றை அடைய, சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும்' - கடந்த சில நாட்களாக மீண்டும் மீண்டும் நம் காதுகளை வந்தடையும் சொற்கள் இவை. பிரதமர் மோடியின் ‘பணமதிப்பு நீக்க’ (Demonetisation) நடவடிக்கைக்குப் பிறகு தங்களை தேசபக்தர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இதையே தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். ‘எல்லையில் ராணுவத்தினர் நிற்கவில்லையா... வரிசையில் நில்லுங்கள் குடிமுழுகிப்போய்விடாது’ என்கிறார்கள். ஆனால், வங்கிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் எளிய மனிதர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் மிச்சம் இருக்கிறது. ‘யார், எதை அடைவதற்காக, நான் இன்று... இங்கே காத்திருக்கிறேன்?’

பிரதமர் மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) ஒன்றை ஒரு நள்ளிரவில் நடத்துகிறார். இதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையோடு, வங்கிகளில் வரிசையில் நின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நடவடிக்கை, எக்கச்சக்கமான எதிர்விளைவுகளை உருவாக்கியது. அறுவடைக்காலத்தில் விளைச்சலை விற்கவும் முடியாமல், சேமிக்கவும் முடியாமல் விவசாயிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர். வியாபாரிகள், தொழிலை இழந்து தவிக்கின்றனர். தினக்கூலிகள் வேலையின்றி நகரங்களில் இருந்து கொத்துக்கொத்தாக ஊர் திரும்புகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றோர், வீடு அற்றவர்கள் என எல்லோருக்கும் சிறியதும் பெரியதுமாகப் பாதிப்புகள்!

இயல்புநிலை எப்போது?

‘அடுத்து வர இருக்கும் நாட்களிலும் வெகுஜன மக்களின் திண்டாட்டம் இன்னும் அதிகரிக்கும். சகஜநிலை திரும்ப, இன்னும் நான்கு மாதங்களாவது ஆகும்’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் கடைசி வார நிலவரப்படி, இந்தியாவில் 17.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவ்வளவு தொகையையும் மறுபடியும் அச்சடித்து விநியோகிக்க வேண்டும் என்றால், குறைந்தது 120 நாட்களாவது ஆகும். எனவே, இன்னும் நான்கு மாதங்களுக்காவது இந்த நிலை நீடிக்கும்.

இத்தனை நீண்டகாலச் சிக்கல் எத்தகைய நிரந்தரப் பாதிப்புக்களையும் வடுக்களையும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளில் விட்டுச்செல்லும் என, அரசு யோசிக்கவே இல்லையா? இந்த நடவடிக்கையால் தன் தொழிலை இழந்தவர்கள், கூலியை இழந்தவர்கள், உயிரை இழந்தவர்களுக்குக் கிடைக்கப்போகும் இழப்பீடு என்ன?

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

ஏன் இந்தப் பதற்றம்?

முதலில் 86 சதவிகிதம் அளவுக்கு சுழற்சியில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து என்ன செய்வது என மக்கள் திக்குமுக்காடினர். மூன்றாவது நாளிலேயே வந்திருக்கவேண்டிய புதிய 500 ரூபாய் நோட்டுக்கள், ஒரு வாரம் கழித்தும்கூட புழக்கத்துக்கு வரவில்லை.

ஏ.டி.எம்-கள் இயங்கவில்லை. வங்கிகளில் பணம் எடுக்க நீண்ட வரிசைகள். எல்லோர் கைகளிலும் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் தரப்பட்டன. எங்கும் சில்லறைத் தட்டுப்பாடு, கையில் இருந்த 2,000 ரூபாயையும் கிட்டத்தட்ட செல்லாத பணமாகக் கருதவேண்டியதாக இருந்தது. எங்கும் குழப்பம், சோகம், கலவர மனநிலை. இப்போது கையில் இருக்கும் 100 ரூபாய் தாள்களைப் பொக்கிஷமாகத் தக்கவைத்துக்கொள்ளும் மனநிலையில்தான் ஒவ்வொருவருமே இருக்கிறோம். எதையும் வாங்குவதற்கு முன்னர் பல முறை யோசிக்கிறோம்... ஏ.டி.எம்-களைப் பரிதவிப்போடு கடக்கிறோம்.

உயிருக்கு என்ன மதிப்பு?

இந்த நடவடிக்கையால் இதுவரை நிகழ்ந்திருக்கும் மரணங்கள் 47. இவர்களில் பலரும் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள். பஞ்சாப்பைச் சேர்ந்த சுக்தேவ் சிங் என்பவர், தன் மகளுடைய திருமணத்துக்கு நான்கு நாட்களே இருந்த நிலையில், கையில் திருமணச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் மனஅழுத்தம் அதிகமாகி, மாரடைப்பால் மாண்டுபோனார். ஒடிசாவில் சிகிச்சைக்கு அழைத்து செல்லவேண்டிய குழந்தை ஒன்று, `500 ரூபாய்க்கு சில்லறை இல்லை' என ஆட்டோ டிரைவர் மறுத்ததால் (தாமதத்தினால்), உயிர் இழந்திருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த கோபால ஷெட்டி, பீகாரைச் சேர்ந்த சுரேந்திர ஷர்மா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஸாரி மற்றும் ரகுநாத் வர்மா ஆகிய நால்வரும் வங்கிகளில் வரிசையில் நின்றபோது இறந்துபோனவர்கள்.

நான்கு குழந்தைகள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிகிச்சை மறுக்கப்பட்டும், மருத்துவமனைகளில் சேர்க்க முடியாமலும், வாகனங்கள் கிடைக்காமலும் இறந்துவிட்டனர். இந்த எண்ணிக்கையில் வங்கி ஊழியர்களும் உண்டு. மிதமிஞ்சிய வேலைப்பளுவால் தாங்கிக்கொள்ள முடியாத மனஅழுத்தம் உண்டாகி, ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்கிற வங்கி மேலாளர் இறந்தார்.

‘`ரயில்வே தண்டவாளங்களில் 3,500 பேர் சாகிறார்கள். ஐந்து லட்சம் மக்கள், சாலை விபத்தில் சாகிறார்கள். இதைப் பற்றி எல்லாம் எவரும் பேசுவது இல்லை'’ - பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இறந்துபோனவர்கள் குறித்த கேள்விக்கு  பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் இப்படிப் பதில் சொன்னார்.

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

முன்னேற்பாடுகள் இல்லை

இந்தியாவில் படிப்பறிவு அற்ற மக்கள், இன்னமும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களில் பாதிப் பேருக்கு வங்கிகளுக்குச் சென்று ஒரு படிவத்தைப் பூர்த்திசெய்யக்கூடத் தெரியாது. இந்தியாவில் 70 சதவிகித மக்கள் வசிப்பது கிராமங்களில்தான். அங்கு எல்லாம் ஏ.டி.எம் வசதியும் கார்டு ஸ்வைப் செய்யும் வசதியும் முழுமையாகச் சென்றடையவில்லை. அவர்கள் எல்லாம் இந்த நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வார்கள்? மொபைல் ஏ.டி.எம்-களையாவது அதிகமாக்கி, கிராமங்களுக்குக் கொண்டுசென்றிருக்க வேண்டாமா? கிராமங்களைப் பற்றியும் விளிம்புநிலை மக்களைப் பற்றியும் சிந்திக்காத அரசும் அறிவுஜீவிகளும்தான் `டெபிட் கார்டு பயன்படுத்துங்கள். டிஜிட்டல் வாலட் உபயோகியுங்கள். ஏ.டி.எம் கரோ... பே.டி.எம் கரோ...' என, சமூக வலைதளங்களில் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றனர்.

முதலிலேயே தெளிவான முடிவுகளை எடுத்து, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்து அதற்கேற்ப மக்களுக்குத் தொந்தரவுகள் வராத வகையில் திட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு அப்படித் திட்டமிடவில்லை. அதனால்தான் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகளை தினம் தினம் வெளியிட்டபடி இருக்கிறார்கள்.

 பழைய சம்பவங்கள்

‘`பணமதிப்பைக் கொஞ்ச கொஞ்சமாக நீக்கம்செய்து, குடிமக்களுக்குத் தேவையான கால அவகாசம் கொடுத்து, அவர்களிடம் இருக்கும் பணத்தை மாற்றிக்கொள்ள வழிசெய்வதுதான் பல ஆண்டுகளாக உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் வழிமுறை.

15 ஆண்டுகளுக்கு முன்னர் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டபோது இப்படித்தான் ஐரோப்பாவில் தேசிய கரன்சிகள் நீக்கப்பட்டன. ஆனால், இவ்வளவு ஜனத்தொகை மிகுந்த இந்தியாவில் வெறும் 50 நாட்கள்தான் வழங்கப்பட்டுள்ளன. இதனால்தான் இவ்வளவு பதற்றத்தையும் சமாளிக்க முடியாத அளவுக்குக் குழப்பங்கள் உருவாகக் காரணம். இதை மிகுந்த திட்டமிடலுக்குப் பிறகுதான் செய்திருக்க வேண்டும்'’ என்கிறார் பொருளியல் நிபுணரான கென்னத்.

வெளிநாடுகளுக்குப் போக வேண்டாம், இதற்கு முன்னர் இதே நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். கடைசியாக, 1978-ம் ஆண்டில் `ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என அறிவிக்கப்பட்டது. 1,000 ரூபாய் நோட்டுக்கள், வெறும் 1.3 சதவிகிதம்தான் புழக்கத்தில் இருந்தன. அதோடு அந்தக் காலகட்டத்தில் பணக்காரர்கள் தவிர மிடில்கிளாஸில்கூட 1,000 ரூபாயைப் பார்த்தவர்கள் குறைவு. ஆனால், 500, 1,000 ரூபாய்களும் 86 சதவிகிதம் சுழற்சியில் இருக்கும் நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டால், என்ன மாதிரியான விளைவுகள் உண்டாகும்  என்பதை முந்தைய வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டாமா?

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

ஏ.டி.எம் குளறுபடிகள்

புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதாக முடிவெடுத்துவிட்டீர்கள்... சரி. நோட்டுக்களின் அளவை ஏன் மாற்ற வேண்டும்? அப்படியே மாற்றினாலும் அதற்கேற்ப இந்தியா முழுவதும் இருக்கும் 2.2 லட்சம் ஏ.டி.எம் மையங்களில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்களிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையான சிக்கலைப் பற்றி யோசித்திருக்க வேண்டாமா? டிசைனையும் கலரையும் மட்டும் மாற்றிவிட்டு நோட்டின் அளவை அப்படியே வைத்திருந்தால், இப்போதைய ஏ.டி.எம் குழப்பங்களை பெரிய அளவுக்குத் தடுத்திருக்கலாம்.

 பொருளாதாரச் சிக்கல்கள்

‘`நம் நாட்டின் ஒட்டுமொத்த மனிதவளம் என்பது உத்தேசமாக 64 கோடி. அதில் 90 சதவிகிதம் பேர் அமைப்புசாரா தொழில் துறைகளைச் சார்ந்தவர்களே! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதம் இவர்களுடைய பங்குதான். இந்த 50-ல் பாதி, விவசாய உற்பத்தியில் இருந்தே கிடைக்கிறது. இதில் 30 சதவிகிதம் கட்டுமானத் தொழிலாளர்களின் வழியும் கிடைக்கிறது. இதனால்தான் இந்த அமைப்புசாரா தொழில் துறைகளின் பாதிப்புகள் நேரடியாக இந்தியப் பொருளியல் துறையைப் பாதிக்கும்’’ என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 25 சதவிகித அளவில், இந்த நடவடிக்கைக்குப் பிறகு சிறு மற்றும் குறு தொழில்கள் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு (Confederation of All India Traders) தெரிவித்துள்ளது. வியாபாரிகளின் பாதிப்பு முதலில் பரவுவது, அவர்களிடம் வேலை பார்க்கிறவர்களிடம் தான். இத்தகைய சூழலில் கூலிகளின் நிலைமை பரிதாபகரமானது.

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல கோடி பணியாளர்களும், இந்த நடவடிக்கைக்குத் தப்பவில்லை. `சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டுமே ஐந்து லட்சம் பேர் வேலைபார்க்கிறார்கள்' என்கிறது கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான CREDAI. இத்தனை பேரும் கடந்த 10 நாட்களாக பிழைப்பு இன்றி தவிக்கிறார்கள். கூலி கொடுக்க ரொக்கமாகப் பணம் இன்றி வேலைகள் முடங்கிக் கிடக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் மனிதவளம் வீணாவதால் உண்டாகும் பாதிப்பு மிகப் பெரியது. ‘இந்தியாவில் 1,34,000 வங்கிக் கிளைகள் உள்ளன. இதோடு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்-கள் உள்ளன. ஒரு நாளில் ஒவ்வொரு கிளையிலும் 500 பேர் ஒரு மணி நேரம் வரிசையில் நிற்கிறார்கள் என எடுத்துக்கொண்டால், எவ்வளவு மனிதவளம் வீணாகும்? இது தேசத்தின் உற்பத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும்?’ என்று கேள்வி எழுப்புகிறார் ப.சிதம்பரம். 

 நாங்க ரொம்ப பிஸி!

ஒரு பக்கம் எளிய மனிதர்கள் வரிசைகளில் காத்திருக்க, கறுப்புப் பணப் பேர்வழிகளோ புதுப்புது வழிகளில் பணத்தை மாற்றத் தொடங்கி இருக்கிறார்கள். தரகர்களை நியமித்து 15-20 சதவிகித கமிஷன் அடிப்படையில் செல்லும் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். போலி வங்கிக்கணக்குகள் மூலமாக வங்கி அதிகாரிகள் உதவியுடன் பல பரிவர்த்தனைகள் நடக்கின்றன. மோடி அரசின் ஜன்தன் யோஜனா திட்டத்தால் திறக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு எல்லாம் உயிர் வந்திருக்கிறது. மாபெரும் பணக்காரர்களின் பணமோ, வெளிநாட்டு வங்கிகளில் (பனாமாகேட், சுவிஸ் முதலானவை) பத்திரமாக இருக்கின்றன. அந்தப் பணம் மொரீஷியஸ், சிங்கப்பூர் மாதிரியான நாடுகளின் வழியே இதே நாட்டுக்குள் அந்நிய முதலீடாக வந்து நல்ல பணமாக மாறிவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

 பணம் என்னாகும்?


‘`ஒட்டுமொத்தமாகப் புழங்கிக்கொண்டிருந்த 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1,000 கரன்சியில், 5 லட்சம் கோடி இப்போது வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக மோடி அறிவித்துள்ளார். `இந்தப் பணத்தை மறுமுதலீடு செய்வோம்' என அறிவிக்கிறார். இப்போது வங்கிகளுக்கு வந்திருக்கும் பணத்தில் எவ்வளவு கறுப்புப் பணம் என்பது தெரியாதபோது, எப்படி அந்தப் பணத்தை மறுமுதலீடு செய்ய முடியும்? இப்போது வங்கிகளுக்கு வந்திருக்கும் பணம், ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்களின் சேமிப்பு. இந்தத் தொகை இன்னும் சில நாட்களில் அல்லது வாரங்களில் திரும்பவும் எடுத்துக்கொள்ளத்தக்க பணம் என்பதை அரசு மறந்துவிட்டதா?'’ என்கிறார் ஃப்ரன்ட் லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர்.

இப்படி வங்கிகளில் திடீரென அதிக  பணம் சேர்வதால் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்? ``இது குறுகிய காலத்துக்கு பெரிய அளவில் பொருளாதாரத் தேக்கத்தை உருவாக்கியுள்ளது. அம்பிட் கேபிட்டல் நிறுவனத்தின் ஆய்வு, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பெரிய அளவில் சரிவைச் சந்திக்கும் எனச் சொல்லியிருக்கிறது’' என்கிறார் பொருளாதார வல்லுநரான வெங்கடேஷ் ஆத்ரேயா.

`அடுத்த மாதம் சம்பளம் வந்தால் அதை ஏ.டி.எம்-களில் இருந்து எடுப்பதோ அல்லது வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்வதோ அத்தனை எளிதாக இருக்காது. அதற்கு ஏதாவது மாற்றுத் திட்டங்கள் வைத்திருக்கிறதா அரசு அல்லது இப்போது நடப்பதைப்போலவே அப்போதும் பெரிய குழப்பங்களை உருவாக்கிவிட்டு, அதற்குப் பிறகு சாவகாசமாக அறிவிப்புகளை வெளியிடுமா?' என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வி.

யாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்?

எங்கே போயின எதிர்க்கட்சிகள்?

மக்கள் எல்லாம் கொதிப்பில் இருக்கும்போது அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டிய கடமை எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால், இங்கே அதற்கான சுவடுகளே இல்லை. அதற்கு, காரணங்கள் இருக்கின்றன. பிரதான கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளில் சமர்ப்பித்த வருமான வரி கணக்குகளைக்கொண்டு சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் ஒவ்வொரு கட்சியிலும் ‘Unknown Source’களின் வழியே பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு தெரியுமா? 3,323 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்று முதல் இடத்தில் இருப்பது எதிர்க்கட்சியான காங்கிரஸ். 2,125 கோடிகளைப் பெற்று ஆளும் பா.ஜ.க இரண்டாம் இடத்தில் உள்ளது.

 காத்திருக்கச் சொல்கிறார் மோடி

1958-ம் ஆண்டில் சீனாவில் நடந்த ‘தி கிரேட் ஸ்பேரோ கேம்பெயின்’ பற்றி சொல்லியாக வேண்டும். `இனி நாட்டில் குருவிகள், எலிகள், கொசுக்கள் மற்றும் ஈக்கள் இருக்கக் கூடாது' என, ஒரே இரவில் அறிவித்தார் மாவோ. `விவசாயிகளுக்கு, இந்த நான்கு உயிரினங்களும் தொந்தரவாக இருக்கின்றன' என்று இந்த அறிவிப்பைக் கொடுத்தார் மாவோ. குருவிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன. குருவிகளின் அழிவுச் சூழலியல் மாற்றத்தை உண்டாக்கியது. அது சீனாவின் விவசாயத்தையே அழித்தொழித்தது. பஞ்சம் உருவாகி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 4.5 கோடி மக்கள் பலியாகினர். மாவோ ஒவ்வொரு முறையும் `இதெல்லாம் தற்காலிகமானது. எல்லாமே சரியாகிவிடும்' எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், இயற்கையை அவரால் வெல்ல முடியவில்லை.

மக்களை நேரடியாகப் பாதிக்கும் எதையுமே திட்டமிட்டுச் செய்யவேண்டும் என்பதற்கான உதாரணங்கள் நம் வரலாறு நெடுகிலும் ஏராளமாக உண்டு. அரசு இந்த நடவடிக்கையை இன்னும் சிரத்தையோடு எளிய மக்களை மனதில் வைத்துத் திட்டமிட்டிருக்க வேண்டும்.

வர்க்க வேறுபாடுகள் மிக வேகமாக அதிகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி `இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்தில் பாதி, மக்கள்தொகையில் வெறும்  ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கும் பணக்காரர்களிடம் இருக்கிறது. அதிலும் முதல் 10 இடங்களில் இருக்கிறவர்கள்தான் 74 சதவிகிதச் சொத்துக் களையும் வைத்திருக்கிறார்கள்' என்கிறது அதே ஆய்வு. இந்தியாவின் 30 சதவிகிதம் ஏழைகளிடம் இருப்பதோ, வெறும் 1.4 சதவிகிதச் சொத்துக்கள் மட்டும்தான். இப்போது மத்திய அரசு, வரிசையில் நிறுத்தியிருப்பது இந்த ஏழைகளைத்தான்!