Published:Updated:

மக்கள் நலனே முக்கியம்!

மக்கள் நலனே முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் நலனே முக்கியம்!

மக்கள் நலனே முக்கியம்!

மக்கள் நலனே முக்கியம்!

மக்கள் நலனே முக்கியம்!

Published:Updated:
மக்கள் நலனே முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் நலனே முக்கியம்!

`மூன்றே நாட்களில் தீர்ந்துவிடும்' என்ற பிரச்னை, இரண்டு வாரங்களாகியும் தீரவில்லை. `இந்தப் பிரச்னை தீர, 50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்' என வேண்டுகோள் வைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், அரசு இயந்திரம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரமோ, `இப்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 14 லட்சம் கோடி ரூபாய் பணத்துக்கு ஈடாக புதிய நோட்டுக்களை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவதற்கு, நிச்சயம் ஆறு மாதங்களுக்கு மேலாகும்' என்கிறார். `சிதம்பரம் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை' என, அரசுத் தரப்பில் இருந்து எவரேனும் மறுத்துச் சொல்வார்கள் என ஏக்கத்தோடு பார்த்தால், அந்தப் பக்கம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

மக்கள் நலனே முக்கியம்!

ஏரியில் இருக்கும் முதலைகளைப் பிடிப்பதற்காகத் தண்ணீரை வெளியேற்றியதில், அதில் இருந்த சின்னஞ்சிறு மீன்கள் எல்லாம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், `முதலைகள் எல்லாம் கரையேறி தப்பிச் சென்றுவிட்டனவோ!' என்ற சந்தேகம், மக்களுக்கு இப்போது முன்பைவிட அதிகமாக எழுகிறது. ஆம், கறுப்புப் பணம் எங்கே ஊற்றெடுக்கிறது என்று அரசுக்குத் தெரியாதா? பணம் பறிக்கும் கல்வித் தந்தைகள், ரியல்எஸ்டேட் ஜித்தர்கள், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள், அழுகுனி ஆட்டம் ஆடும் பங்குச்சந்தை சூதாடிகள், கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு ஆட்டம் காட்டும் பெருமுதலாளிகள் ஆகியோரை எல்லாம் விட்டுவிட்டு, தினக்கூலிகளையும் அன்றாடம் காய்ச்சிகளையும் மாதச் சம்பளக்காரர்களையும் பணம் இருக்கும் வங்கிகளைத் தேடித் தெருத்தெருவாக அலையவிடுவது ஏன்?

செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த நோட்டுத் தட்டுப்பாட்டால், மூலப்பொருள் வாங்கவும் வழி இல்லாமல், வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுக்கவும் வழி தெரியாமல் திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகள் தொடங்கி சிறு, குறு நடுத்தரத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். `அதிகாலையில் காய்கறிகளைக் கடனுக்கு வாங்கி, அதைத் தள்ளுவண்டியில் வைத்து வீதி வீதியாக விற்பனை செய்துவிட்டு, வாங்கிய காய்கறிகளுக்கான கடனை மாலையில் பைசல் செய்யும் வியாபாரிகளை திடீர் என `டிஜிட்டல் வேலட் வைத்துக்கொள்', `இன்டர்நெட் பேங்க்கிங் செய்'. `கிரெடிட் கார்டில் ஸ்வைப் பண்ணுங்க' என யோசனை சொன்னால், அதெல்லாம் உடனடி சாத்தியமா என்று, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எளிய மக்களின் வேதனைக் குரலை, இந்த அரசு புரிந்துதான் இத்தகைய திட்டத்தை அமல்படுத்தியதா?' என்ற கேள்வி பலமாக எழுகிறது.

தீர்வுகளைத் தரவேண்டிய அரசோ மௌனம் சாதிக்க, வாட்ஸ்அப் வழி வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் புதிய தேசபக்தர்கள்.

`இந்தப் பிரச்னையை இப்படியே நீடிக்கவிட்டால் வீதிகளில் கலவரம் நடக்கும் அபாயம் இருக்கிறது' என்ற உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையில் உண்மை இல்லாமல் இல்லை. கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்திருக்கிறவர்கள் எதிர்பார்ப்பதும் இதுபோன்ற ஒரு சூழலையே. மக்களின் மத்தியில் கனன்றுகொண்டிருக்கும் இந்தப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆகவே, பணத்தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுப்பதோடு, மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுத்தாக வேண்டும்!