Published:Updated:

சரிகமபதநி டைரி - 2016

சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
News
சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், மீ.நிவேதன்

ல்லாவரத்தை அடுத்த பம்மல் ஏரியாவுக்குள் நுழைந்து, ஜிபிஎஸ் உதவியுடன் தேடினால் முத்தமிழ் நகரில் பலராமன் தெரு, முதல் இலக்க வீடு. சற்றே குறுகலான படிகள் ஏறி முதல் மாடி வீட்டு வரவேற்பு அறையில் நாகஸ்வர வித்வான் மாம்பலம் எம்.கே.எஸ்.சிவா.

சரிகமபதநி டைரி - 2016

எம்.கே.எஸ்.சிவா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆடம்பரம் எதுவும் இல்லாத அறையில் சுவர் ஓரமாக நீளமான சோபா. எதிரில் பிளாஸ்டிக் நாற்காலி போட்டு அமர்ந்தார் சிவா. போட்டோகிராஃபர் கேமரா எடுத்து அட்ஜெஸ்ட் செய்வதைப் பார்த்ததும், விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார். செயினை உருவி எடுத்து கழுத்தில் அணிந்து​கொண்டார். பூனை ஒன்று ஓரக்கண்ணால் பார்த்தபடியே குறுக்கே நடந்து சென்றது. குடிக்க தண்ணீரும் சுவையான டீயும் கொடுத்தார் உதவியாளர்.

``நான் டாக்டர் பட்டம் வாங்கியதைக்கூட எந்தப் பத்திரிகையும் செய்தியா போடலை'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் ஆரம்பித்தார் எம்.கே.எஸ்.சிவா.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், சத்யபாமா பல்கலைக்​கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கடந்த அக்டோபரில் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கர் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றார்
எம்.கே.எஸ்.சிவா. அதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இவரது கச்சேரியும் நடந்திருக்கிறது. கடந்த 23 வருடங்களாக, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் ஆஸ்தான வித்வான்.

எட்டு வயதில் நாகஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தாராம் இவர். அதற்கு சாட்சியாக சுவரில் மாட்டியிருக்கும் தனது இளம் வயது போட்டோவைக் காட்டினார்.

தொடக்கத்தில் அப்பாவிடம் நேரடியாக சங்கீதம் பயிலவில்லை சிவா. தந்தை வாசிப்பதை நிறையக் கேட்டு கிடைக்கப்பெற்ற ஞானத்தால், இவரும் நாகஸ்வரம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். மேடையில் தந்தை வாசிக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து இசை நுணுக்கங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்.

``குரு இல்லாம சிஷ்யன் இருக்கக் கூடாதுன்னு ஒரு வழக்கம் உண்டு. அதனால, என் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே என் அப்பா-அம்மாவுக்கு வேஷ்டி- புடவை எல்லாம் வாங்கிக் கொடுத்து குரு பூஜை செய்ய வெச்சாங்க.''

சரிகமபதநி டைரி - 2016

டி.என்.ராஜரத்தினம் மீது மரியாதை கலந்த பக்தி வைத்திருக்கிறார் சிவா. ``டி.என்.ஆர் தனக்குன்னு ஒரு பாணி வெச்சுட்டார். அது ஆண்டவன் அவருக்குக் கொடுத்த வரம். ராக ஆலாபனைகள்ல அவர் ராஜா. காருகுறிச்சி அண்ணனும் வேதாரண்யம் அண்ணனும் சுகமான வாசிப்பால் பிரபலம் ஆனாங்க. வாசிப்புல சங்கீதச் சண்டை போட மாட்டாங்க. ஏ.கே.சி.நடராஜன், இன்று வரை க்ளாரினட்ல கர்னாடக சங்கீதம் வாசிப்பதுல ஈடுஇணை இல்லாதவரா இருந்துட்டு வர்றார்'' என்கிற சிவா, காளக்காடு ராம​நாராயணனிடம் (வாய்ப்பாட்டுக் கலைஞர்) உருப்படிகள் கற்றுத் தெளிந்திருக்கிறார்.

சென்னை டிசம்பர் சீஸனில் பெரும்பாலான சபாக்கள் தொடக்க நாள் அன்று மங்கல இசைக்கு மட்டும் நாகஸ்வரம் - தவிலுக்கு நேரம் ஒதுக்குவதில், மற்ற பலரையும்போல் சிவாவுக்கும் உடன்பாடு இல்லை.

``நாங்க வாசிக்க ஆரம்பிக்கும்போது பத்து, இருபது பேர்தான் இருப்பாங்க. ஒரு மணி நேரத்துல கொஞ்சம் கொஞ்சமா இருநூறு பேருக்கும் மேல கூட்டம் பெருகும். ஆனா, நாங்க வாசிக்​கிறதை நிறுத்திக்கணும். விழா ஆரம்பிக்கணுமே! அது மட்டும் இல்லை, ஒருசில சபாக்கள்ல சீஃப் கெஸ்ட் உள்ளே நுழையும்போது நாங்க மேடையில் இருந்து இறங்கி வாசலுக்குப் போய் அவங்களை வரவேற்கும்விதமா வாசிக்கணும். அதுவும் எனக்குப் பிடிக்கலை.''

``ப்ரைம் ஸ்லாட்ல நாகஸ்வரக் கச்சேரிகளுக்கு கூட்டம் வர்றதில்லைன்னு சொல்றாங்களே.''

``அப்படிப்பார்த்தா, மற்ற பாட்டுக்காரங்களுக்கு கூட்டம் நிரம்பி வழிஞ்சுடுதா என்ன? பொதுவாவே கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு இன்னும் கூட்டம் ஈர்க்க என்ன செய்யணும்னு சபாக்காரங்க யோசிக்கணும்.''

திறமையான நாகஸ்வர வித்வான்களை, திருமணங்களுக்கு வாசிக்க அழைப்பது குறைந்துவருவதிலும் சிவாவுக்கு ஆதங்கம் உண்டு.

``இப்ப எல்லாம் கல்யாணத்துக்கு கான்ட்ராக்ட் எடுத்து செய்யறவங்களே நாகஸ்வரம் வாசிக்கவும் ஆட்களை அழைச்சுட்டு வந்துடுறாங்க. கான்ட்ராக்டர் சொல்பேச்சு கேட்டு வளைஞ்சு​கொடுக்க, நாகஸ்வரக் கலைஞர்கள் சிலர் தயாரா இருக்காங்க. நாங்க சீனியர் வித்வான்கள் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்கிறார் சிவா.

இந்த ஃபீல்டில் இன்னொன்றும் நடக்கிறது. வாசிப்பிலும் பிரபலத்திலும் மிக உச்சத்தில் இருப்பதாகக் கருதப்படும் ஓரிரு சீனியர் தவில் வித்வான்கள், தங்களுக்கு இசைவாக இருக்கும் நாகஸ்வரக் கலைஞர்களுக்கு மட்டுமே தவில் வாசிக்கிறார்கள். அதாவது, எந்த உருப்படிகளை வாசிக்க வேண்டும், எந்தத் தாளத்தில் வாசிக்க வேண்டும், `தனி'க்கு எப்போது சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் தவில் வாசிப்பவர்தான் தீர்மானிப்பார். நாகஸ்வரம், கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரி ஆகிவிடும்!

``நீங்க சொல்ற அந்த ஒண்ணு, ரெண்டு பேர், எனக்கும் தவில் வாசிச்சிருக்காங்க. இப்போ என் கச்சேரிகளுக்கு அவங்களை நான் போட்டுக்கிறது இல்லை'' - தீர்மானமாகச் சொன்னார் மாம்பலம் எம்.கே.எஸ்.சிவா.

மேடையில் பிரமாண்ட சைஸில் ஆறு மணிகளும் குத்துவிளக்குகளும் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. ஏழாவது ஸ்வரம் மாதிரியாக மேடையின் ஓரத்தில் மல்லிகைச்சரம் சுற்றப்பட்டு எரியும் குத்துவிளக்கு. பாரதிய வித்யா பவனில் `பவன்ஸ் கலை விழா 2016' ஆரம்பம். டிசம்பர் 13-ம் தேதி வரை இங்கே கூட்டம் அலைமோதும். காரணம், இலவச அனுமதி!

சரிகமபதநி டைரி - 2016

சர்க்கர நாற்காலியிலும் கைத்தாங்கலாகவும் மேடைக்கு அழைத்துவரக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கே `வாழ்நாள் சாதனையாளர் விருது' கொடுப்பது வழக்கம். மறைந்த பாலமுரளிகிருஷ்ணாவுக்குக்கூட, 2010-ம் ஆண்டில் அவரது 80-வது வயதில்தான் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது விருதுக்கு வயது தடை அல்ல. 30, 40+ வயது நிரம்பியவர்களும் வாழ்நாள் சாதனையாளர்களாகிவிடுகிறார்கள்.

``இந்த விருதை, இனி நாங்கள் சாதிக்கப்போவதற்குக் கொடுக்கப்படும் ஒன்றாகவே கருதுகிறோம்'' என்று பெறுபவர்களும் சமாளித்துவிடுகிறார்கள்.

பவன்ஸில், ஹரிகதை புகழ் விசாகா ஹரியும் பிரபல பாடகி காயத்ரி வெங்கட்ராகவனும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றனர். இருவருக்கும் சால்வை அணிவித்து விருது வழங்கினார் இன்ஃபோசிஸ் சேர்மன் ஆர்.சேஷசாயி. பதக்கங்களை விசாகாவுக்கு காயத்ரி அணிவிக்க, பின்னர் காயத்ரிக்கு விசாகா அணிவித்தது க்யூட்!

ஏற்புரையை வடமொழி சுலோகத்துடன் ஆரம்பித்து, `குரு மகிமை' மற்றும் `பெற்றோர் பெருமை' பற்றி மினி ஹரிகதை நிகழ்த்தினார் விசாகா ஹரி. தனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்த மாமிகள்-மாமாக்களுக்கு தனது ஏற்புரையில் நன்றி தெரிவித்தார் காயத்ரி வெங்கட்ராகவன். மேடம், `சார்...' என்றே குருமார்களை விளித்திருக்கலாம்; `ஆத்து பாஷை'யையும் தவிர்த்திருக்கலாம்!

ந்த சீஸனில் கலக்கப்போவது யாரு?

அநேகமாக, ஜென் நெக்ஸ்ட் பாடகரான குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவாகத்தான் இருக்கும். கடந்த புதன் அன்று, மதுரத்வனிக்காக ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடந்த இவரின் கச்சேரியே அதற்கான சான்று. அக்கரை சுப்புலட்சுமியின் அதிமதுரமான வயலின் வாசிப்பு அசுரபலமாக துணைக்கு வர, எடுத்த எடுப்பில் ஜகன்மோகினி ராக `சோபில்லு...'வை புல்லட் வேகத்தில் ஆரம்பித்து பிரமிக்கவைத்தார் பாலமுரளி.

மேடையில் வெளிப்பட்ட இவரது பாடிலாங்வேஜை, மற்ற இளம் பாடகர்கள் பார்த்துப் பழக வேண்டும். பேதிமாத்திரை விழுங்கியதுபோல் முகத்தை வைத்துக்கொள்ளாமல், அனுபவித்துப் பாடுகிறார்; சங்கதிகளை சந்தோஷமாக எடுத்துவிடுகிறார். வயலின் சுப்புலட்சுமி அவற்றைத் திருப்பி வாசிக்கும்போது அகம் மகிழ்ந்து பாராட்டுகிறார்.

மெயினாக சுபபந்துவராளி. சுமார் 90 மணித்துளிகளுக்கு ராகத்தின் சோக ரசத்தைப் பிழிந்து சாறாகக் கொடுத்தார்கள் பாலமுரளி - சுப்புலட்சுமி காம்போ! அந்தச் சோகம் நெஞ்சை உலுக்கியது. முத்துஸ்வாமி தீட்சிதரின் `சத்ய நாராயணம் உபாஸ்மகே...' பாடலில், `மத்ஸய, கூர்ம' எனப் போகும் தசாவதார வரிகளை பாலமுரளி மூன்று காலங்களில் நிரவல் செய்த நேர்த்தியும், ஸ்வரங்களைப் புரட்டி எடுத்த பாங்கும்... தன் வயதுக்காரர்கள் மட்டுமின்றி, சீனியர்களையும் சவாலுக்கு அழைக்கும் பாட்டு. இப்போதைக்கு இதுபோதும்.

ஒரு சமயம், நிரம்பிய சபையில் தியாகராஜர் பாடியபோது, முன் வரிசையில் உட்கார்ந்திருந்த அவருடைய `குரு ஸொண்டி வெங்கடரமணய்யா...' ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைத்ததை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.

பாலமுரளி பாடியதை அவருடைய குருநாதர் பி.எஸ்.நாராயணசாமி நேரில் வந்து கேட்டு, கைதட்டிப் பாராட்டி மகிழ்ந்ததைக் கண்டபோது, பழைய பதிவு நினைவுக்கு வந்தது!

- டைரி புரளும்...