Published:Updated:

நிலம்... நீர்... நீதி

நிலம்... நீர்... நீதி
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம்... நீர்... நீதி

ஒன்றிணைந்தோம்... சீரமைத்தோம்... பாதுகாப்போம்!விகடன் டீம், படங்கள்: ப.சரவணகுமார், தே.அசோக்குமார்

ஓர் ஆண்டு முடிந்துவிட்டது. கடந்த ஆண்டைப்போல இல்லை இந்த ஆண்டு. சென்ற ஆண்டின் இதே நாட்களில் ஒரு மாமழை தந்த பதற்றம், இப்போதும் நம் ஒவ்வொருவர் மனதிலும் மிச்சம் இருக்கிறது. மழை விட்டுச் சென்ற வடுக்களும் நினைவுகளும் அத்தகையவை. ஆனால், அந்த மழை மிக அதிகமான நீரை மட்டும் அல்ல, நமக்கான படிப்பினைகளையும் சேர்த்தே வழங்கியது.

நிலம்... நீர்... நீதி

நாம் இழந்துகொண்டிருக்கும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதும் பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த மழைக்குப் பிறகு வந்த நாட்களில் கற்றுக்கொண்டோம். இந்த நோக்கத்தில் விகடனும் தன்னை இணைத்துக்​கொண்டு வாசர்களோடு கரம்கோத்து களத்தில் இறங்கினான். `நிலம்... நீர்... நீதி’ திட்டம் பிறந்தது.

இந்தத் திட்டத்தின் மூலமாக சென்னையைச் சுற்றி உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைகள் சிலவற்றை கையில் எடுத்து, கடந்த ஆறு மாதங்களாகச் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்ட அரசுத் துறை அதிகாரிகள், பாலாறு வடிநிலப் பகுதி பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் என ஒவ்வொருவரும் முழு ஒத்துழைப்பு நல்க, இந்தப் பணிகள் அடுத்தடுத்தக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிலம்... நீர்... நீதி

குட்டையைச் சுற்றி வேலி

வண்டலூர்-ஒரகடம் சாலையில் மண்ணிவாக்கம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் 20 ஆண்டுகளாகப் பராமரிப்பற்ற நிலையில் இருந்து வந்தது ‘கருமக்குட்டை. ஊரின் முகப்பில் பாம்பு, புழு, பூச்சிகள் என்று அடர்ந்திருந்த இந்தக் குட்டை, தற்போது தூர்வாரப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றிலும் வேலி எழுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணிகளைக் கண்டு உற்சாகத்தில் ஆழ்ந்துள்ள மக்கள், குட்டையின் பராமரிப்பைத் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

நிலம்... நீர்... நீதி

90 சதவிகிதம் நிறைவடைந்த நரியம்பாக்கம் ஏரி

படப்பை அருகே உள்ள நரியம்பாக்கம் கிராமத்தின் விவசாயத்துக்கு முக்கிய நீர் ஆதாரம் நரியம்பாக்கம் ஏரி. 40 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்து வந்த இந்த ஏரி, இன்று புத்துயிர் பெற்றுள்ளது. கரைகள் எழுப்பப்பட்டு ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதை, பகுதி மக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர். இடையிடையே மழை குறுக்கிட்டாலும், பணிகள் தொய்வின்றி நடைபெற்றன. ஆக்கிரமிப்பில் இருந்த 37 சென்ட் ஏரியின் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மதகு, கலங்கல் சரிசெய்யும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ஏரிக்குள் கூடுதலாக தண்ணீர் தேங்கும் வகையில் ஆங்காங்கே நீர்ப் பள்ளங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலம்... நீர்... நீதி

சாலமங்கலம் ஏரியில் முடிவடைந்த சீரமைப்புப் பணிகள்

வண்டலூர்-ஒரகடம் பிரதான சாலையில் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது சாலமங்கலம் ஏரி. 103 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த ஏரிக்குள் இருந்த வேலிக்காத்தான் மரங்கள், செடி-கொடிகள் முழுவதும் அகற்றப்பட்டன. மழையால் பல இடங்களில் பாதிக்கப்பட்டிருந்த கரை சரிசெய்யப்பட்டுள்ளது. எதிர் கால்வாயும் புதிதாக எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஏரியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். தற்போது 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சிறுமாத்தூர் ஏரி

சுமார் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் சிறுமாத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்​கின்றன. ஆக்கிரமிப்பு நிலங்களைச் சம்பந்தப்பட்ட சிலர் தாங்களாகவே விட்டுக்கொடுக்கத் தயாராகியுள்ளனர். ஏரிக்குள் இருந்த செடி-கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 1,000 மீட்டர் நீளத்துக்குக் கரையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. கரையின் நீளமும் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும்வகையில் எதிர் கால்வாய்களும் உருவாக்கப்படுகின்றன. கூடுதலாக நீர் தேங்கும் வகையில் நீர்ப் பள்ளங்களும் அமைக்கப் படுகின்றன. இதில் ஆக்கிரமிப்பு செய்திருப் பவர்கள் நிலத்தை ஒப்படைக்கும் பொருட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சார்ஆட்சியருக்கு குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் எழுதியுள்ளார்.

அம்மன் குளம்

சாலமங்கலத்தில் உள்ள அம்மன் குளம் பழைமை வாய்ந்தது. கோயிலுக்குப் பாத்தியமான இந்தக் குளம், ஊர்மக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், நவம்பர் 7, 8 தேதிகளில் சீரமைக்கப்பட்டது. குளத்தைச் சுற்றி வேலிக்காத்தான் மரங்கள், புதர்கள் அகற்றப்பட்டு பழையபடி மக்களிடம் குளம் ஒப்படைக்கப்​பட்டுள்ளது.

ஏரிகளைப் பொறுத்தவரை கரைகள்தான் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை உணர்ந்து ஒவ்வொரு கரையையும் பலப்படுத்தி, தண்ணீரை வீணாக்காமல் சேமித்துவைக்க ஏதுவாகப் பணிகள் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ‘நிலம்... நீர்... நீதி’ திட்டப் பணிகள் குறித்து விகடன் குழும இதழ்கள் மூலமாகவும் இணையதளத்தின் மூலமாகவும் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம். அதுவரை கரம்கோத்துப் பயணிப்போம்.

``குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படும்.''

நிலம்... நீர்... நீதி

சாலமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் பேசியபோது, “நான் பிறந்து வளர்ந்தது இந்த ஊருதான். பக்கத்துல இருக்கிற எல்லா ஏரிகளைவிட சாலமங்கலம் ஏரி பெரியது. இதில் இருந்து கிடைக்கும் தண்ணியைத்தான் குடிக்​கிறதுக்கும் விவசாயத்துக்கும் மட்டும் அல்லாமல் மீன் வளர்க்​கிறதுக்கும் பயன்படுத்திக்கிறோம். இப்போ ஏரியின் கரையைச் சரிசெஞ்சதால, சாலமங்கலம்-நரியம்பாக்கம் ரெண்டு கிராம மக்கள் மூணு கி.மீ சுத்திட்டுப் போறதைவிட, இந்த வழியா சீக்கிரமா மெயின் ரோட்டுக்குப் போக முடியும். ஏற்கெனவே நரியம் பாக்கம் ஏரியை விகடன் மூலமா சரிசெஞ்சு கொடுத்​திருக்காங்க. இப்போ சாலமங்கலம் ஏரியையும் சரிசெஞ்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்''
என்றார்.

சிறுமாத்தூரைச் சேர்ந்த ஜெயபாலன் பேசும்போது, “எனக்கு சிறுமாத்தூர் கிராமம்தான் பூர்வீகம். இந்த ஏரித் தண்ணி மூலமா சுமார் 70 ஏக்கர் விவசாய நிலத்துக்குப் பாசனம் நடக்குது. 1889-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்துல இந்த ஏரிக்கு மதகு, கலங்கல், தண்ணி வெளியேறுற கால்வாய் எல்லாம் அமைச்சாங்க. அதுக்குப் பிறகு எந்தப் பராமரிப்பும் இல்லாம புதர்கள், முள் செடிகள்னு காடு மாதிரி அடர்ந்து இருந்தது. இப்போ அதை எல்லாம் அகற்றி கரையை அமைச்சுட்டு வர்றாங்க. ரொம்பக் காலம் பராமரிப்பு இல்லாம இருந்த ஏரியை கையில் எடுத்து சரிசெஞ்சு கொடுக்கிற விகடனுக்கு, எங்க கிராம மக்கள் சார்பா நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்” என்றார்.