Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

#MakeNewBondsலிவிங் ஸ்மைல் வித்யா - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

#MakeNewBondsலிவிங் ஸ்மைல் வித்யா - படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 12
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

அப்போது நான்

முழுக்கைச் சட்டையும் கால் சராயும்

அணிவது வழக்கம்

அப்போது நான்

மாதம் ஒருமுறையென

சீராக முடிதிருத்தி வந்தேன்

அப்போது நான்

ஆண்களுடன் Boys School-ல்தான் படித்தேன்
 
இருந்தாலும் அவர்கள் கிண்டல் செய்தார்கள்
 
`நான் ஆணில்லை’ என

இப்போது நான்

புடவை கட்டி, ஒத்த சடை பின்னி, பூ முடிந்து

பாந்தமாக வளைய வந்தாலும்

அவர்கள் என்னவோ கண்டுபிடித்துவிட்டார்களாம்

`நான் பெண்ணில்லை’யென்று.


னித நாகரிகம் உருவான காலம் தொடங்கி, வெவ்வேறு விதமான கருத்தாக்கங்கள் உருவாகி யிருக்கின்றன. அவற்றில் இரண்டைத்தான் மிகவும் சிக்கலானவை எனக் கருதுகிறேன். முதலாவது மதம்; மற்றொன்று பாலினம். பெண்ணை பூமாதாவாக, கங்கையாக, காவிரித் தாயாக ஒருபுறம் சித்தரித்து, பூஜித்து வணங்குவோம். இன்னொரு பக்கம் குற்றவுணர்ச்சிகள் இன்றி அதே பெண்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்வோம். பெண்களைப் போலத்தான் திருநங்கைகள் வாழ்வும். அதே கடவுள் சித்தரிப்பு, அதே சித்ரவதைகள், கூடுதலாக... அவர்களைப் பிச்சை எடுக்கவும் வைத்திருக்கிறோம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

`ஆம்பளப் பிள்ளைதான் வேணும்’ என்ற சிந்தனை மூளை முழுவதும் கிருமியாக இச்சித்துக் கொண்டிருந்த எளிய பெற்றோரின் ஐந்து ஏமாற்றங்களுக்குப் பிறகு அரிதாகப் பிறந்தவள் நான். பிறப்பால் ஆணாகப் பார்க்கப்பட்ட, வறுமைக்கு மத்தியிலும் கொண்டாடப்பட்ட குழந்தை.

அதிகாலை நான்கு மணிக்கே, துப்புரவுப் பணிசெய்ய வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவார் அம்மா. மூத்த அக்கா  ராதா எழுந்து குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் 30 குடங்கள் தண்ணீர் பிடித்து வருவாள். சின்ன அக்கா மஞ்சு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து டீயும் ஸ்வீட் அப்பமும் வாங்கிவந்து என்னை எழுப்புவாள். என்னை டீ குடிக்கவைத்து, பிறகு படிக்கவைக்க வேண்டும் என்பது அவளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அன்றாடக் கடமை. அக்காக்களின் வேலைகளுக்கு நடுவில் நான் செய்த வேலைகள் எல்லாம்... டீ குடிப்பது, படிப்பது, சாப்பிடுவது, பள்ளிக்குச் செல்வது மட்டும்தான். எத்தனை சுகமானது; எளிதானது. அதே நேரத்தில் அதர்மமானது?

வேலைக்குப் போவதும், தனது சொந்த மகிழ்ச்சிக்காகக் குடிப்பதும், பிறகு அம்மாவையும் அக்காள்களை அடிப்பதும்தான் அப்பா பார்த்த வேலை. ஆனால், நிதர்சனத்தில் குடும்பச் செலவுக்கு அதிகம் பங்களித்ததும், குடும்பத்தை வழிநடத்திச் சென்றதும் அம்மாதான். அதிகாலைகளில் துப்புரவுத் தொழிலாளியாக ஊரைத் தூய்மையாக்கும் அம்மா. 10 மணிக்கு மேல் வெவ்வேறு கிழமைகளில், வெவ்வேறு வீடுகளில் வீட்டுவேலைகள் பார்ப்பார். அதுவும் போதாது என்று, வரும் வழிகளில் பிளாஸ்டிக் குப்பைகள், பேப்பர்களைப் பொறுக்கிக்கொண்டு அவற்றை எடைக்குப் போட்டும் காசு சேர்ப்பார். ஆனால், அதன் பெரும் பங்கு அப்பாவின் குவார்ட்டர் பாட்டில்களுக்கே சென்றன.

தெருவில் சின்னப் பிரச்னைக்கும் பயரங்கரமாகச் சண்டை போட்டு, ஆண்களையும் விடாமல் விரட்டி விரட்டி அடித்தவர் அம்மா. அம்மாவின்  வீரத்தினால் வந்த பட்டப்பேர்தானோ `வீரம்மாள்’ என்று சிறுவயதில் நினைத்திருந்தேன். ஆனால், வீரம்மாளின் வீரமோ, `எவ்ளோ நேரம் கூப்பிட்டுக்கிட்டிருக்கேன்...’ என்ற உப்புச்சப்பில்லாத காரணத்துக்காக அப்பா அடிக்கும்போது வாய்பொத்தி, கைகட்டி நிற்கும். அம்மாவின் இந்த இரட்டை வேடத்தை மலங்க மலங்க வேடிக்கை பார்த்த எனக்கு, அன்று எந்தப் பெண்ணியமும் புரிந்திருக்கவில்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

ஓர் அதிகாலையில், வேலைக்குப் போன அம்மா `தீரன் சின்னமலை பஸ் மோதி இறந்துபோனாள்’ என்ற செய்தி வந்தது. என் அக்காக்களின் வாழ்க்கை இன்னும் மோசமானது. இப்போது, அம்மா இடத்தில் ராதா அக்கா… ராதா அக்கா இடத்தில் மஞ்சு அக்கா. என் இடத்தில் நானேதான். படிப்பதைத் தவிர  எனக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. அக்காள்களைப் பொறுத்தவரையில், பெண் என்பதால் இந்தத் துயரம். ஆனால், எனக்கோ வேறு வகைத் துயரம். அதை நான் யாரிடமும் பகிர முடியாது.

`ஏன் எனக்கு மட்டும் நான் விரும்பாத, எனக்கு மகிழ்ச்சி தராத ஆம்பளைச் சுதந்திரம்? அக்காக்களைப் போல வேலைசெய்ய வேண்டியது இல்லை என்றாலும், நான் நானாக இருக்க வாய்ப்பு எனக்கு இல்லையே. `எப்போதும் பையன் மாதிரி பேசு, பையன் மாதிரி நிமிந்து உட்கார், பையன் மாதிரி நட’ என ஒவ்வொருவரும் சொல்கிற ஆயிரம் `பையன் மாதிரி’களை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதனால் உண்டாகும் தீவிர மன அழுத்தம் வாட்டி எடுத்தது. இதற்கு நடுவில்தான் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் ஏதோ ஒன்று உந்தித்தள்ள, ராதா அக்காவின் ஃப்ராக், அல்லது பாவாடையை அணிந்து திருட்டுத்தனமாக ஆடி மகிழ ஆரம்பித்திருந்தேன். யாருமற்ற வீட்டில் எப்போதும் ராணியாக, தேவதையாக என்னை உயிர்ப்பித்துக்கொள்வேன். அந்த உணர்வுக்குப் பெயர்தான் சுதந்திரம். மற்ற நேரங்களில் உயிர் என்பது உடல் என்னும் சுவருக்குள்  சிறைபட்ட பாலினக் கைதியாக இருக்கும். 

என் தனித்த நாடகங்களில் அம்மா, அக்காவின் பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். எந்நேரமும் அடிவாங்கும் மனைவியாக, திட்டுவாங்கும் சிறுமியாகவே என் கனவு வாழ்க்கைகளில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ஆனால், நாள்பட நாள்பட அக்காக்கள் மீதான பரிதாபமும், அப்பா மீதான கோபமும் என்னை நிறையவே மாற்றியது. பெரியார், பாரதி, ஜெயகாந்தன் முதலானவர்களின் அறிமுகம் எனக்குள் கனன்றுகொண்டிருந்த பெண் என்னும் தீப்பந்தத்துக்கு சுவாசம் அளித்தது. அம்மா, சித்தி, ராதா அக்கா, மஞ்சு அக்கா மாதிரி அடிவாங்கும் பெண்களாக மட்டும் இருக்கவே கூடாது. பொல்லாயி அக்காவைப்போல குடும்பப் பாரத்தைத் தனியாகச் சுமக்கும் பெண்ணாக, நிச்சயம் இருக்க மாட்டேன். படித்து முடித்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்க வேண்டும். பரந்த சிந்தனைகொண்டவனைத் தேடி திருமணம் செய்துகொண்டு, ஓர் உதாரணமாக வாழ வேண்டும் என, மிகத் தீவிரமாக எனது டைரிகளில் எழுதிய இரவுகள் உண்டு.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

நான் ஆண்பாலா... பெண்பாலா... என்று அறியாத நாட்களில், அவ்வாறு தீர்க்கமாக எதிர்காலத்தைத் தீர்மானித்து வைத்திருந்தேன். ஆனால், 22 வயதில் ஸ்பஷ்டமாக நான் பெண்தான் எனத் தீர்க்கமாகத் தெரிந்த பின், அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்தேன். இங்கே திருநங்கைகளுக்கும் பெண்களுக்குமான வாழ்வு கிட்டத்தட்ட  ஒன்றுபோலவேதான். ஒருவேளை என் மனம் ஏங்குவதைப்போல,  நான் ஒரு பிறவிப் பெண்ணாகவே பிறந்திருந்தால் எனது நிலை என்னவாகி இருக்கும்? எனது பால்யம் படிப்பதற்குப் பதிலாக, தண்ணீர் பிடிக்கவும் பாத்திரம் துலக்கவும் திருமணம் முடிந்து உழைக்கவும் ஓடாகத் தேயவும், கணவனின் காலடிச் செருப்பாகவும், ஒரு பலிகடாவாகவே குறுகிப்போயிருக்குமோ?

வீட்டின் எதிர்ப்புகளைக் கடந்து என் உணர்வுகளுக்கு நேர்மையாக வீதியில் இறங்கினேன். வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு என பல போராட்டங்களைக் கடக்க வேண்டியதாக இருந்தது. பொதுவாக திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரைக்கொம்பு. சமீபத்தில் பெங்களூருவில் வசிக்கும் என் `திருநம்பி' சகோதரன் மிக நெருக்கடியான சூழ்நிலையில் பி.பி.ஓ வேலை ஒன்றுக்காக நேர்காணலுக்குச் சென்றான். இரண்டாவது சுற்றில் அவனது கல்விச் சான்றிதழ்களில் இருந்த பெயர் மற்றும் பாலின வேறுபாட்டால் வேலை மறுக்கப்பட்டான். `இது ஒன்றும் முதல்முறை இல்லைதானே?' என்று கேட்டேன்.
 
`எனது பட்டப்படிப்பு தொடர்பான பணியில் இந்தச் சிக்கல் வழக்கமானது. எனவே ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், பி.பி.ஓ-வில் ஆங்கிலம் மட்டுமே போதுமானது. டிகிரி முடிக்காத ஆண்-பெண்களுக்கு வேலை கிடைக்கும் ஒரு சூழலில் மாஸ்டர்ஸ் இருந்தும், அந்த வெளிநாட்டு நிறுவனத்தில் ஜெண்டர் டாலரன்ஸ் பாலிசி இருந்தும், நான் நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை' என அவன் வருந்தியபோது, என்னால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது.

திருநங்கைகளுக்காவது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் செய்வது என வாய்ப்புகள் உள்ளது. ஆனால், திருநம்பிகளுக்கு அதுவும் கிடையாது. பிச்சை எடுப்பதும் கூட அத்தனை எளிது அல்ல. பிச்சையெடுக்கும் திருநங்கைகளைப் பார்த்து அனைவரும் அஞ்சி நடுங்குவதாக பொதுப்புத்தியில் ஒரு பிம்பம் உண்டு. அவர்கள் மற்றவர்களை மிரட்டி, பணம் பறிப்பதாகச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், அது மட்டுமே நிஜம் அல்ல.

புனே ரயில்களில் பிச்சை எடுத்த மூன்று மாதங்களில் பலமுறை நேரடியாக வன்முறைகளைச் சந்தித்திருக்கிறேன். பாலியல் சீண்டல்கள் முதல் நான்கு ஆண்கள் சேர்ந்து அடித்து நொறுக்கி, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு மோசமாகக் காயமாகிப் படுக்கையில் கிடந்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு நாளும் ரயில்களில் இருந்து தூக்கி எறியப்படும் திருநங்கைகளைப் பற்றி யாருக்கும் கவலைகள் இருப்பது இல்லை.

மிகச் சமீபத்தில் அதிகாலை 4:30 மணிக்கு காவல் நிலைய வாசலில் தன்னை எரித்துக்கொண்டு சாம்பலான `திருநங்கை தாரா'வைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாராவைப் பற்றி இங்கே எத்தனை ஊடகங்கள் கண்டுகொண்டன, எத்தனை விவாத மேடைகள் உரக்கப் பேசின? இங்கே ஓர் ஆண் அல்லது பெண் கொல்லப் படும்போது எழுகிற எதிர்ப்புக் குரல்களில் ஒரு சதவிகிதம்கூட, ஒரு `திருநங்கை' எரிக்கப்பட்டபோது ஏன் எழுவில்லை? இங்கே எரிக்கப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் அதை எதிர்த்துக் குரல்கள் ஒலிக்க, இறந்தவர் பெண்ணாகவோ அல்லது  ஆணாகவோதான் இருக்க வேண்டியிருக்கிறது. 

சமீபத்தில் திரைத் துறையில் இருக்கும் சகோதரன் ஒருவன், தனது திரைக்கதை தொடர்பாக என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டான். விவாதத்தின்போது `பொதுவா, ஒரு திருநங்கை வளர்ந்து அறுவைசிகிச்சை கொண்டாலும்கூட, ஏதாவது ஒரு நொடியில்  `என்ன இருந்தாலும் நான் ஆண்தானே?’ என்ற எண்ணம்  வரும்தானேக்கா’ என்றான். இந்தக் கேள்வி ஒரு துப்பாக்கியின் தோட்டாவாக என்னை நோக்கி எய்யப்படவில்லை. எனினும், என்னை ஊடுருவிச் சென்றது.

இளம்வயதில் முதன்முறையாக ஒரு தீபாவளிக்கு எனக்கான உடையை நானே தேர்வுசெய்யும் வாய்ப்பு வந்தது. பாலினம் குறிந்த சிந்தனை ஏதுமற்ற காலம். திருச்சி சிங்காரத்தோப்பில் நெரிசல்களுக்கு இடையே தயங்கித் தயங்கிப் பதற்றத்தோடு உடை வாங்கியது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. அது ஆண்-பெண் இருவரும் அணியக்கூடிய குர்தா. ஆனால், அன்று எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. கடையின் நடுவில் தொங்கிக்கொண்டிருந்த அந்த உடையைப் பார்த்தவுடன் அதை  மனதால்  உடுத்திக்கொண்டேன். மேட்சிங்காக கறுப்பு நிற ஜீன்ஸ். கூடவே சில உள்ளாடைகள் என, என் முதல் ஷாப்பிங் வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பினேன்.

என் உடையைப் பார்த்து எல்லோரும் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்... `அய்ய இது பொம்பளப் பிள்ளைங்க போடுற மாடர்ன் டிரெஸ். இதென்னடா ஜட்டி வாங்காம லேடீஸ் போடுற பேன்டீஸ் வாங்கியிருக்க…’ எனச் சிரித்தனர். ஆனால், நண்பன் கேட்ட கேள்வியில் இருக்கும் அறியாமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அரங்கக் கலைஞராக, எழுதக்கூடிய நபராக நான் அறியப்பட்டிருந்தாலும், உள்ளூர `திருநங்கை’ அரங்கக் கலைஞர், `திருநங்கை’ எழுத்தாளர் என `திருநங்கை’ அடையாளம்தான் நிதர்சனமாக எப்போதும் என்னைத் தொடர்கிறது. திருநங்கை என்னும் இந்த அடையாளம், `என்ன இருந்தாலும் ஏதோ ஒருவிதத்தில் இவள் `ஆண்’தான்’ என்ற பொதுச்சிந்தனையோடு தொடர்புடையதே.

என் நட்பு வட்டத்தில் இருக்கும் பலரிடம் இதை உணர்ந்திருக்கிறேன். ஒருமுறை எனது சுயசரிதை புத்தகத்தை வாசித்த நண்பர் ஒருவர், `சின்ன வயசுல அக்காங்க படுற கஷ்டத்தைப் பார்த்தும் ஏன் பெண்ணா மாறணும்னு ஆசைபட்டீங்க?” என்றார். அதுவரை நானே அவ்வாறு சிந்தித்தது இல்லை. ஒருவேளை அதுதான் அவர் ஆண் என்பதற்கும், நான் ஆணே அல்ல என்பதற்கான விடையாக இருக்கும்.   நாங்கள் பெண்ணாக மாறுபவர்களும் அல்ல; அது ஓர் ஆசையும் அல்ல. அக மனதால் பெண்ணான எங்களை, புறத்தோற்றத்திலும் பெண்ணாக மாற்றிக்கொள்ளும் தேவை. ஆனால், அதுதான் பல ஆண்டுகள் நாடகத் துறையில், நடிப்புத் துறையில் இருந்தபோதும், அதுவும் 90 சதவிகிதம் பிறவிப் பெண் பாத்திரத்தில் நடித்திருந்தபோதும், திரையில் பெண் கதாபாத்திரம் என்னால் பண்ண முடியும் என வாய்ப்பு கேட்கும்போது, நண்பர்களிடம்கூட எழும் அடர்த்தியான மௌனத்துக்கும் காரணம்.

`பருத்தி வீரன்’ திரைப்படம் வெளிவந்த சமயம். வசூல்சாதனை படைத்த அந்தப் படப் பாடல்கள் எல்லாம் பிரபலம்தான். இதை வாசிக்கும்போதே `ஊரோரம் புளியமரம்’ பாடல் நினைவுக்கு வருகிறதுதானே? அதே பாடலைப் பாடித்தான், தெருவில் பலரும் பார்க்க ஒரு பதின்ம வயது சிறுவன், எச்சில் வாட்டர் பாக்கெட்டை என் மீது வீசி எறிந்தான். அந்தச் சிறுவனுக்குள் அந்த எண்ணத்தை வளர்த்தெடுத்தது யார்?

இன்று வரை முறையான குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் தாய்நாட்டு அகதிகளாக, அடையாளம் இன்றி வாழும் மனிதர்களான திருநர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பைவிட பிரதான சவால், வாடகைக்கு வீடு கிடைப்பதே. திருநங்கைகள் குறித்து திரைப்படங்களும் ஊடகங்களும் உருவாக்கிவைத்திருக்கும் தவறான பிம்பங்களால், புறநகர் ரயில்களில் பிச்சை எடுப்பவர்களாக மட்டுமே கண்டுள்ள முன்அனுபவத்தினால், திருநங்கைகள் என்றாலே அறுவெறுத்து ஒதுக்க வேண்டிய இழிபிறவியினர்-மூன்றாம் தரக் குடிமக்கள் என்ற எண்ணமே பொதுப்புத்தியில் தங்கிவிட்டது. அதில் ஆண்பாலோ, பெண்பாலோ, முதியவரோ, இளைஞரோ, சிறுவரோ, சாதிமத வர்க்கமோ, எந்தப் பேதங்களும் இருப்பது இல்லை!

வீடு இல்லாமல் அலைந்துகொண்டிருந்த நாட்களில் எனக்கு அடைக்கலம் கொடுத்தவர் விஜயா ஆன்ட்டி. என்னை மகளைப்போல அன்போடு அரவணைத்துக்கொண்ட சில பெண்களில் ஒருவர். முதல் சம்பளம் வாங்கிய பெருமிதத்தோடு அவரை அழைத்துக்கொண்டு `வேட்டையாடு விளையாடு’ படம் காண சென்று இருந்தேன்.

படத்தில் வரும் ஒரு காட்சியில், கதைப்படி அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஒரு திருநங்கை வாரம்தோறும் தன் காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள வருவார். இதில் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கும் பங்கு உண்டு. அதன்படி அந்த வாரமும் வருகிறார். அவரைக் கண்டதும் அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்கப்பில் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களை வித்தியாசமான முறையில் தண்டிப்பதற்காக, இவரை அவர்களது அறைக்குள் அடைக்கிறார். இளைஞர்கள் இருவரும் திருநங்கையைக் கண்டு அலற அவரோ, `அய்ய்... இந்தப் பக்கம் சிவப்பு; இந்தப் பக்கம் கறுப்பு’   எனக் குதூகலிப்பார். அந்தக் காட்சியை இளைஞர்களின் அலறலோடு முத்தாய்ப்பாக முடித்திருப்பார் இயக்குநர்.
 
தொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி (கமல்) கைதிகள் குறித்து எந்தக் குறிப்பும் ஏன் எடுக்கவில்லை என்று மட்டுமே கடிந்துகொள்கிறார். திருநங்கையைக் கூட்டி வந்து நடந்த அந்தக் கசமுசா பற்றி எல்லாம், மூச்! வேறு ஒரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட (?!) கைதிகளில் ஒருவர், `அந்த அலியை மொதல்ல கொல்லணும்னு நினைச்சேன்...’ என்பதாக ஒரு வசனம் பேசுவார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 12

இந்தக் காட்சிகளின்போது நான் நெளிந்ததைவிட, விஜயா ஆன்ட்டி தர்மசங்கடத்தோடு அதிகம் நெளிந்தார். இதுபோன்ற வக்கிரக் காட்சிகளைக் காண நேரும் ஒவ்வொரு திருநங்கைக் குடும்பம் எவ்வளவு நெளிந்திருக்கும்? இந்தக் காட்சிகள் எதையும் அறியாத சிறுவர், சிறுமிகளின் மனங்களில் திருநங்கைகளின் மீதான காழ்ப்புஉணர்வை எவ்வளவு வளர்த்திருக்கும்? அது எவ்வளவு திருநங்கைகளைப் பாதிக்கக்கூடும்? அதன் விளைவுதான்... அந்தச் சிறுவன் என் மீது வீசிய எச்சில் தண்ணீர் பாக்கெட். அவனது செயலைக் கண்டிக்காமல் கூடிச் சிரித்த சமூகம், தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்த முற்படுவது எதை அல்லது என்ன?

ஆனால், இவர்கள் மட்டுமே அல்ல இந்தச் சமூகம். வீட்டைவிட்டு ஏராளமான மனக் குழப்பங்களோடு வெளியேறியபோது என்னைக் காத்ததும் வளர்த்ததும் என் நண்பர்களே. அந்த நண்பர்களுக்குப் பாலின பேதங்கள் இருக்கவே இல்லை.
 
என் உடலில் நிகழ்ந்த மாற்றங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு இல்லாத நேரத்தில், அதைப் புரிந்துகொண்டு எனக்கு முழுமையான நம்பிக்கை தந்த ஒரே நண்பன் திருச்சியைச் சேர்ந்த நேரு. சென்னை குறித்த மருட்சியோடு இருந்த எனக்கு, அதை ஆற அமர அறிமுகப்படுத்தி வைத்தவன். எந்த விசாரணையும் ஜட்ஜ்மென்ட்களும் இன்றி எனக்குத் துணையாக நின்ற குமரன் ஓர் ஆண்தான். பெண்ணாக மீண்டுவந்து புதுவாழ்க்கை தொடங்க வேண்டும் எனக் கேட்டபோது, எப்படி உதவுவது என விடையற்ற நிலையிலும், உதவியவர் அண்ணனும் நாடகக் கலைஞருமான முருகபூபதி. ஊரே வெறுத்து ஒதுக்குகிற ஒருத்தியை தனது நிகழ்வுக்கு விளக்கு ஏற்றி, தொடங்கிவைக்க என்னை அழைத்த தோழன் `குக்கூ’ சிவராஜ் ஓர் ஆண்தான். `உனக்கு தமிழ் தெரியும்ல? தமிழ் டைப் பண்ண வரும்ல? அப்போ நிறைய எழுது' என முதல் சந்திப்பிலேயே உடன்பிறந்த சகோதரன்போல உரிமையாக வழிநடத்தியவர் சித்தப்பு பாலபாரதி.
 
மதுரை வீதிகளில் எங்கு தங்குவது என அழைந்த நாட்களில், பெற்றோர் வெளியூர் சென்றிருந்த பத்து நாட்களில், தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் தங்கவைத்து, உணவும் அளித்த தோழன் கண்ணனை நன்றியோடு நினைக்கிறேன். வேலை தேடி அலைந்த நாட்களில் எனக்காக அலைந்துதிரிந்த ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன், இதே சமூகத்தில் வாழும் இன்னோர் ஆண்தான்.  நடிகையாக வேண்டும் என்ற என் தேடலுக்குக் கதவு திறக்காத சமயத்தில், திரைத்துறையில் பணியாற்ற வாய்ப்பு அளித்த தோழி ஈஸ்வரி, திருநங்கைகளாக ப்ரியா அக்கா, ஏஞ்சல் கிளாடி, பானு போன்றோர் எப்போதும் எனக்கான இறுதி நம்பிக்கைகள்.

இப்படி ஆண்களும் பெண்களும் திருநர்களும்தான் என்னை வார்த்தனர். தேவதைகளாக எனக்கான பாதுகாப்பு உணர்வை அள்ளித் தருகின்றனர். இருந்தாலும் இன்னமும் ஓர் அச்சம் என்னைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை முழுக்கத் தொடரும் இனம்புரியாத ஒரு பதற்றம் துர்சொப்பனம்போல பின்தொடர்ந்து வருவதைத் தவிர்க்கமுடிவது இல்லை. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும், எவராலும் வீசப்படும் சிறிய ஒரு கேலி சொல்கூட, பெரிய மன உலைச்சலைத் தரவே செய்கிறது.  பணியிடங்களில் பாலின அடையாளப் புறக்கணிப்புகள், சமூகப் பாதுகாப்பின்மை, எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத தனிமை, வாழ்க்கைத் துணையற்ற, இயல்பற்ற ஒரு வாழ்க்கை என, எல்லாவற்றுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தப் பாலின அடையாளம்தான் சூத்திரதாரி.

சமீபத்தில் எனக்கு விருது கொடுத்து கௌரவித்தது கர்நாடகா அரசு. இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் வாழ்வின் மீதும் மனிதர்களின் மீதும் நம்பிக்கையின் அளவு மிக உயர்ந்திருக்கும். அப்படி ஒரு நாளில்தான் தோழி தாரா தன்னையே எரித்துச் சாம்பலானாள். அவளை எரித்தது யார், எது, அந்த உயிருக்கான மதிப்பு என்ன?

அன்பால் உருவான குழந்தையை ஆண்பால், பெண்பால், மூன்றாம்பால் என ஏன் பகுத்துப் பார்க்கப் பழகினோம். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த ஒரு குழந்தை திடீரென ஒருநாள் கண்பார்வையோ, கேட்கும் திறனோ, கை, கால் ஏதோ ஒன்றை இழக்கும்போது வலித்தாலும் காலப்போக்கில் அதை ஏற்றுக்கொள்ளும் நம்மால், ஏன் பாலின மாறுபாட்டை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஏன் ஆண்பால், பெண்பால் என்ற பாலினப் பாகுபாடும், அதன் மீதான வன்திணிப்பும். பாலினம் சார்ந்து நமக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்புகளும் இவ்வளவு ஏமாற்றங்களும்?

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

விர பெண்கள் பிள்ளைகள் பெறுவதை நிறுத்திவிட்டால், `உலகம் விருத்தியாகாது. மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்மம் நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால், பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிடவர்க்கம் பெருகாவிட்டால், பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?

- தந்தை பெரியார். `பெண் ஏன் அடிமையானாள்’ நூலில் இருந்து...

ன ஏற்றத்தாழ்வும் பாலின ஏற்றத்தாழ்வும் இந்து சமூகத்தைப் பீடித்துள்ள பெரும்பிணியாகும். இதை அப்படியே விட்டுவிட்டு பொருளாதாரப் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட சட்டங்களை இயற்றிக்கொண்டேபோவது, நமது அரசியல் சாசனத்தைக் கேலிக்கூத்தாக்குவதாகும்; சாணிக் குவியலின் மீது அரண்மனையைக் கட்டுவதுபோலாகும்!

- டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி...

ருநாள் இரவு இரண்டு மணி இருக்கும். சுலோ தற்செயலாகக் கண் விழித்தாள். கீழே கோமதி செட்டியாரின் அறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. “ஏன்?” என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. மெதுவாக இறங்கி வந்தாள். பார்த்தாள். கோமதியைக் காணோம். உள்ளே ஒரு பெண் மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. திகிலும் ஆச்சர்யமாகவும் இருந்தது. எதிரேயுள்ள ஜன்னல் வழியாக இப்பொழுது நன்றாகப் பார்க்க முடிந்தது சுலோவால், அடையாளம் கண்டுகொண்டாள். சேலையுடுத்திக்கொண்டிருந்த அது வேறு யாருமில்லை... கோமதிதான்!

- கி.ராஜநாராயணன். `கோமதி’ சிறுகதையில் இருந்து...