Published:Updated:

நம் வேர்களுக்கு நீர் வேண்டும்

நம் வேர்களுக்கு நீர் வேண்டும்
பிரீமியம் ஸ்டோரி
News
நம் வேர்களுக்கு நீர் வேண்டும்

நம் வேர்களுக்கு நீர் வேண்டும்

ச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துகிடக்கின்றன தமிழ்நாட்டுக் கிராமங்கள். ஏற்கெனவே அடுக்கடுக்கான துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் அல்லலும் இன்னலும் இன்னும் அதிகரித்துவருகின்றன.

தண்ணீர் பற்றாக்குறையால் முறையாக நாற்று விட்டு நடவுசெய்ய முடியாமல், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா பயிரிட்ட விவசாயிகள், இப்போது பயிரையும் காப்பாற்ற வழி தெரியாமல் துயரத்தில் மூழ்கியிருக்கிறார்கள். காவிரிப் படுகையில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் கொடுமை ஒருபுறம், ஈரோட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் பயிர்கள் வாடிக்கொண்டிருப்பது இன்னொரு புறம். நிலத்தடி நீரோ, கற்பனைக்கும் எட்டாத பாதாளம் வரை காய்ந்துவிட்டது. `திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் தற்கொலை', `சூரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் மாரடைப்பால் மரணம்...' என விவசாயிகள் குறித்த துயரச் செய்திகளுடனே ஒவ்வொரு நாளும் விடிகிறது.

20,000 ரூபாய் செலவு செய்து, ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விதைத்து, ஐந்து  மாதங்கள் உழைத்தால் 5,000 முதல் 8,000 ரூபாய் வரை லாபமாகக் கிடைக்கும். இந்தச் சொற்பப் பணத்துக்காகத்தான் விவசாயிகள் காலம் முழுவதும் பாடுபடுகிறார்கள். இப்போது அதுவும் இல்லை என்றாகிப்போனதால், கடன் சுமை, மகசூல் பாதிப்பு என இரட்டை மனவேதனையில் தத்தளிக்கிறார்கள்.

நம் வேர்களுக்கு நீர் வேண்டும்


இந்த ஆண்டு தண்ணீர்ப் பிரச்னை, விவசாயத்தைத் தாண்டி வீட்டில் இருக்கும் தண்ணீர்ப் பானை வரை நீண்டுவிட்டது. அடைமழை பெய்யவேண்டிய ஐப்பசி, மழையைக் கண்களில் காட்டாமலேயே கடந்துவிட்டது; கார்த்திகையும் கரைந்துகொண்டிருக்கிறது. `மழையே பெய்யாமல் மழைக்காலம் முடிந்துவிடுமோ!' என்ற எண்ணம் எல்லோரையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. சென்னைக்குக் குடிநீர் அளிக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் அடி ஆழத்துக்குப் போய்விட்டது. கையிருப்பில் உள்ள நீரும் எத்தனை நாட்களுக்கு எஞ்சும் என அதிகாரிகள் விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இதுதான் நிலை. ஆகையால், மரங்களுக்காக இயற்கை படைத்த நிலத்தடி நீரை அசுர சக்திகொண்ட மோட்டார் பம்பு செட்கள் மூலம் உறிஞ்சவேண்டிய கட்டாயத்துக்கு குடிநீர் வாரியம் தள்ளப்பட்டிருக்கிறது. இப்படி ஈவுஇரக்கமே இல்லாமல் இயற்கையைத் தொடர்ந்து சுரண்டிக்கொண்டே இருந்தால், அதன் பக்கவிளைவுகளை நாம்தான் அனுபவித்தாக வேண்டும்.

தண்ணீர் சிக்கனம் பற்றி மக்களுக்குப் பாடம் எடுக்கும் அரசுதானே, அதற்கு முன்னுதாரணமாக பல காரியங்களை முன்னின்று செய்ய வேண்டும்; நீர்நிலைகளையும் அவற்றின் பாதைகளையும் பராமரித்துக் காப்பது, மரங்களின் அவசியம் உணர்வது, தனியார் சுரண்டலைத் தடுப்பது என உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு நீர் மேலாண்மையை நவீனப்படுத்துவதும் அவசியம். இவை அனைத்தையும், மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவோடு செயல்படுத்த வேண்டும்.

சென்ற ஆண்டு இதே நாட்களில் பயிர்களும் உயிர்களும் தண்ணீரால் அவதியுற்றன. இந்த ஆண்டு தண்ணீர் இன்றி வாடித் தவிக்கின்றன. இது யாருடைய பிழை?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz