Published:Updated:

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

மொத்தப் பரிசு ரூ 1,00,000வீ.கே.ரமேஷ், செ.சல்மான், ஆர்.மோகன் - படங்கள்: உ.பாண்டி, எம்.விஜயகுமார், வீ.சதீஷ்குமார்

2016-ம்  ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பல `முதல்முறை' சம்பவங்களைச் சந்தித்தத் தேர்தல்.

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

1989-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவரும் நிலையில், இந்த முறையும் `ஆட்சி மாற்றம் வரும்’ என்றே, பலரும் கணித்திருந்தனர். ஆனால், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அ.தி.மு.க.

பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் தள்ளிவைக்கப் பட்டதால், `விகடன் வாசகர் மெகா தேர்தல் போட்டி-2016' முடிவுகளை அப்போதே அறிவிக்க முடியவில்லை. இப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று, முடிவு தெரிந்திருக்கும் நிலையில் போட்டி முடிவுகளை அறிவிக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

வாசகர்களிடம் இருந்து வந்த `விகடன் வாசகர் மெகா தேர்தல் போட்டி’ கூப்பன்களின் மொத்த எண்ணிக்கை 21,013. இதில் பெரும்பாலானோர் `கருணாநிதி முதலமைச்சர் ஆவார்’ என்றும், `தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றும்’ என்றும் கணித்திருந்தார்கள். `தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.க கூட்டணி மிகக் குறைவான இடங்களைப் பிடிக்கும்’ என்றும், அதில் `விஜயகாந்த், தொல்.திருமாவளவன் வெற்றிபெறுவார்கள்’ என்றும் 90 சதவிகிதம் பேர் கணித்திருந்தனர். `பா.ம.க சார்பில் அன்புமணி வெற்றிபெறுவார்’ என்ற கணிப்பை பலரின் கூப்பன்களில் காண முடிந்தது.

`புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைப் பிடிக்கும்’ என்பது, அதிக வாசகர்களின் கணிப்பாக இருந்தது.

ஆனால், பெரும்பான்மையானோரின் கணிப்புகளைப் பொய்யாக்கி, தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றிபெற்றனர். கணிப்பதற்குப் பெரும் சவாலான இந்தத் தேர்தல் முடிவுகளை, கிட்டத்தட்ட சரியாகக் கணித்த வாசகர்களுக்கு விகடனின் வாழ்த்துகள்.

- ஆசிரியர்

``கொங்கு மண்டலத்தை தி.மு.க சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை!''

தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வெற்றி-தோல்வி நிலவரங்களைக் கிட்டத்தட்ட சரியாகக் கணித்து,  50,000 ரூபாய் முதல் பரிசு வென்றிருப்பவர் ஆர்.மோகன். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

முதல் பரிசு

``நான் எம்.எஸ்ஸி படித்திருக்கும் விவசாயி. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். 1991-ல் இருந்து விகடன் வாசகன். ஏற்கெனவே விகடனின் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கணிப்புப் போட்டியில், இரண்டாம் பரிசு வென்றிருக்கிறேன். 2016-ம் ஆண்டு தேர்தல் கணிப்புப் போட்டியிலும் நிச்சயம் வெற்றிபெறுவேன் என நம்பினேன்.

அது உண்மையாகிவிட்டது. தேர்தல் முடிவுகள் வந்ததும் வெற்றிபெற்ற வேட்பாளர்களைப் போல நானும் சந்தோஷப்பட்டேன். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சார்'' என நெகிழ்கிறார் மோகன்.

``கருத்துக்கணிப்பு நிறுவனங்களே தடுமாறும்​போது நீங்கள் எப்படிச் சரியான முடிவுகளைக் கணிக்கிறீர்கள்?''


``தேர்தல் நேரங்களில் மின்னணு ஊடகங்​களையும் அச்சு ஊடகங்களையும் தொடர்ந்து கவனிப்பேன். தவிரவும் டீ கடை, ஹோட்டல்களுக்குச் சென்றால், மற்றவர்கள் தேர்தல் சம்மந்தமாக என்ன பேசுகிறார்கள் என உள்வாங்கிக்கொள்வேன். பிறகு, நண்பர்களுக்கு போன் செய்து அந்தந்த ஏரியாவின் தொகுதி களநிலவரங்களையும் கேட்பேன். இதன் அடிப்படையில்தான் தேர்தல் முடிவுகளைக் கணிக்கிறேன்.''

``மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆவார் என எப்படிக் கணித்தீர்கள்?''

``2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகளால் மக்கள் பல சிரமங்களுக்கு ஆளானார்கள். அதனால் அந்தக் கட்சி மீது எதிர்ப்பு அலை இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க கீழ்மட்ட நிர்வாகிகள் மீது மக்களிடம் எந்த ஓர் எதிர்ப்பு அலையும் இல்லை. அ.தி.மு.க தலைமை எவ்வளவு பெரிய தவறுகள் செய்தாலும், அது நேரடியாக மக்களைப் பாதிக்கவில்லை.

தி.மு.க-வுக்குக் கொங்குமண்டலத்தில் வாக்குவங்கி என்பது குறைவு. இந்தப் பகுதியில் வலுவான கூட்டணி அமைத்திருக்க வேண்டும். ஆனால், அதை தி.மு.க செய்யவில்லை. அதனால் அங்கே அ.தி.மு.க சுலபமாக வெல்லும் எனக் கணித்தேன்.''

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

``தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி- த.மா.கா கூட்டணி ஓர் இடத்தில்கூட ஜெயிக்காது என்று சொன்னது எப்படி?''

``மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு கிளை, வார்டு என கீழ் மட்ட அளவில் அமைப்புகள் இல்லை. மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.க-வைத்தான் நம்பினார்கள். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள் கட்சி வியதாலும், அதன் தலைமை மீது இமேஜ் குறைந்ததாலும் அவர்களால் வெல்ல முடியாது எனத் தீர்மானித்தேன். நான் நினைத்ததே நடந்தது'' என்கிறார் மோகன்.

``என் எண்ணமே மக்கள் எண்ணமாக இருக்கும் என நம்பினேன்!''

இரண்டாம் பரிசாக 30,000 ரூபாயை வென்றவர், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த எஸ்.இங்கர்சால்.

``தொடர்ந்து பல வருடங்களாக விகடன் தேர்தல் கணிப்புப் போட்டிக்கு எழுதி அனுப்பு​வேன். என்றாவது ஒருநாள் என் கணிப்பு சரியாகி, ஆனந்த விகடனில் என் பெயர் வரும் என்ற நம்பினேன். அது வீண்போகவில்லை'' என்கிற இங்கர்சாலுக்கு  முகம் எல்லாம் மகிழ்ச்சி.

``நான் ஓய்வுபெற்ற சிவில் இன்ஜினீயர். என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியர். எங்களுக்கு கல்லூரியில் படிக்கிற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

இரண்டாம் பரிசு

1980-ம் ஆண்டில் இருந்தே நான் விகடன் வாசகன். என் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே விகடன் குழுமத்தில் இருந்து வரும் அனைத்து இதழ்களையும் படித்துவிடுவோம். எங்களை விகடன் வாசகக் குடும்பம்னு சொன்னா, ரொம்பப் பொருந்தும்'' என்கிறார் இங்கர்சால்.

``தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் கட்சிகளைவிட எங்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி. வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்ததும், எல்லோரும் ஹாலில் ஒன்றாக உட்கார்ந்து `யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்?’ எனக் கணிக்க ஆரம்பிப்போம்’’ என்கிறார் இங்கர்சாலின் மனைவி ஜெயராணி.

``நான் எந்தக் கட்சி அனுதாபியும் இல்லை. ஆனால், மீண்டும் அ.தி.மு.க-தான் ஆட்சியைப் பிடிக்கும்னு என் மனசுக்குத் தோன்றியது.  மக்களின் மனநிலையும் இப்படியே இருக்கும் என என்னால் உணர முடிந்தது. நான் ஆனந்த  விகடனையும், ஜூ.வி-யையும் தொடர்ந்து வாசிப்பதால் சமூகத்தையும் பல மாவட்ட அரசியலையும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, தேர்தல் முடிவுகளைச் சரியாகக் கணித்தேன்'' என்கிறார் இங்கர்சால்.

 ``கடைசி நாளில் கணித்தேன்!''

 மூன்றாம் பரிசாக ரூபாய் 20,000 வென்றவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்.மணிகண்டன்.  இவர் கணிப்பொறி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் பொறியியல் பட்டதாரி.

``எங்களுடையது பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பம். எனக்கு இயல்பிலேயே அரசியல் ஆர்வம் அதிகம். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது விகடன் நடத்திய தேர்தல் கணிப்புப் போட்டியில் பங்கேற்றேன். ஆனால், வெற்றி பெறவில்லை. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் போட்டியில் பங்கேற்க, கடைசி நாளில்தான் என் கணிப்பை ஆன்லைன் மூலம் பதிவுசெய்தேன்.

வாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்

மூன்றாம் பரிசு

அ.தி.மு.க-வின் நிரந்தர வாக்குவங்கியும் தொண்டர் பலமும் அந்தக் கட்சி மீண்டும்  ஆட்சியைத் தக்கவைக்க உதவும் என நினைச்சேன். தேர்தலுக்கு முன்பாக வெளியான ஜூ.வி கருத்துக் கணிப்புகளும் உதவின. தலைவர்களின் வெற்றி குறித்த கேள்விக்கு அன்புமணியைத் தவிர எல்லாவற்றையும் சரியாகவே கணித்திருந்தேன். பா.ம.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்பட்டதாலும், அவர் போட்டியிட்ட தொகுதியில் அவரது சமூகத்தினர் வாக்குகள் அதிகம் என்பதாலும், அவர் நிச்சயம் வெற்றிபெறுவார் என நினைத்தேன். ஆனால், அதில் என் கணிப்புப் பொய்யாகிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி செல்வாக்கு உண்டு. அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களின் சொந்த பலமும் சேர்ந்து, பத்து இடங்களைப் பிடிக்கும் என நினைத்தேன். அதில் இரண்டு இடங்கள் குறைந்துவிட்டன. ஆனால், மக்கள் நலக் கூட்டணிக்கு, ஓர் இடமும் கிடைக்காது என்ற என் கணிப்பு, 100 சதவிகிதம் உண்மையாகிவிட்டது'' என்கிறார் மணிகண்டன்.