Published:Updated:

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

றவைகள்கூட ரகசியம் பேசுகிற சாலையில் இருக்கிறது மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகம்.
 
`இது சென்னைதானா?' என்று சந்தேகம் வருகிறது. அத்தனை அழகு அந்தக் கட்டடம், கண்ணாடி ஜன்னல்கள், வசீகரமான ஓவியங்கள், பால்கனியில் புல்வெளி... சடாரென ஏதோ மலைப்பிரதேசத்துப் பண்ணை வீட்டுக்குள் புகுந்ததுபோலிருக்கிறது.

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

‘`நல்லாயிருக்கீங்களா!”

- சிநேகம் சொல்லும் சின்னப் புன்னகையுடன் வரவேற்கிறார் மணிரத்னம். தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய அடையாளங்களில் ஒருவர்.

ஏராளமான இளமை ததும்பும் ‘ஆய்த எழுத்து’ படத்தை முடித்து, ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த நண்பகல் சந்திப்பிலிருந்து...

‘`அதென்ன அது ‘ஆய்த எழுத்து'?!”


‘`படம் பார்த்தீங்கன்னா தெளிவா புரியும்னு நினைக்கிறேன். இது, மூன்று இளைஞர்களின் கதை. மூன்று பேரும் மூன்று உலகங்கள்!

‘உலகம் எனக்கு எதுவும் செய்யலை. அதனால உலகத்துக்கு நான் எதுவும் செய்யத் தேவையில்லை’னு நினைக்கிற ஒருவன்... ‘இந்த உலகத்துக்கு நான் ஏதாவது செய்யணும். ஒவ்வொருத்தரும் தங்களோட பங்கைச் செய்யணும். Each one can make difference’னு நம்புகிற ஒருவன். ‘நான் என்னைப் பார்த்துக்கிறேன். உலகம் தன்னைப் பார்த்துக்கும்’னு எப்பவும் சந்தோஷமா வேலை, பணம், பொண்ணுங்கனு திரியும் ஒருவன்னு மொத்தம் மூன்று ஆசாமிகள். அவங்களோட பார்வை, லைஃப்ஸ்டைல், ஸ்டேட்டஸ், பயணம் எல்லாமே வேறு வேறு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்அப்படி மூன்று இளைஞர்கள் சந்திக்கிறபோது என்ன நேர்கிறது என்பதுதான் படம். ‘ஃ’ங்கிற ஆய்த எழுத்து... சார்பெழுத்து. ஒண்ணை ஒண்ணு சார்ந்திருந்தால்தானே அதுக்கு அர்த்தம், அடையாளம் எல்லாமே. இந்த இளைஞர்களும் அப்படியாகிறதுதான் படம்.”

‘`இந்த ஹீரோக்கள் மூணு பேருமே உங்க தயாரிப்பு. மாதவனை அறிமுகப்படுத்தியதே நீங்கதான். மெட்ராஸ் டாக்கீஸ்தான் சூர்யாவை ஹீரோவாக்கியது. உங்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். இந்த மூணு பேரும் இதில் ஹீரோக்களானது எப்படி... தற்செயலாக நடந்ததா?”


‘`மிக மிகத் தற்செயல்! இந்தக் கதைக்கு மூணு பேர் தேவைப்பட்டாங்க. எப்பவுமே ஒரு படத்தில் நடிகர்கள் யார்... யார்னு casting சரியா முடிவுபண்ணிட்டா, டைரக்டரோட ஐம்பது சதவிகித வேலை சுலபமாகிடும். அப்படி யோசிச்சப்போ அமைஞ்ச காம்பினேஷன் இது.

மாதவனுக்கு இது என்னோடு மூணாவது படம். முதல் படத்தில் செம ஜாலியான பையன். இரண்டாவது படத்தில் மூணு குழந்தைகளுக்கு அப்பா. இப்போ இதில் சம்பந்தமே இல்லாமல் கம்ப்ளீட்டா ரொம்பப் புதுசான ஒரு முகம். எனக்கு மாதவனிடம் பிடிச்சது... எதிலும் தன்னைப் பொருத்திக்கிற அந்தக் குணம். ஒரே ஆர்ட்டிஸ்டோட தொடர்ந்து வேலை பார்க்கும்போது ஒவ்வொண்ணும் புதுசா இருக்கணும். இதில் அது இருக்கு.

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

சூர்யாவை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. படத்துக்குப் படம் அவரோட வளர்ச்சியைப் பார்க்க முடியுது. அவரோட ஆர்வம், உழைப்பு, அக்கறை ஒவ்வொரு ஷாட்லேயும் உணர முடியுது. இப்ப என்ன பண்ணிட்டிருக்காரோ... இதைவிட பெரிய உயரங்களுக்குப் போகவேண்டிய தகுதியுடைய பையன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அவரோட வளர்ச்சி.

சித்தார்த்தைப் பொறுத்தவரை அவன் என் அசிஸ்டன்ட். நாளைக்கு அவன் ஒரு டைரக்டரா வரணும்கிற ஒரே விஷயத்தில் மட்டும் என் கவனம் இருந்தது. அவனை நடிகனா யோசிச்சது மிஸ்டர் ஷங்கர். ‘பாய்ஸ்’ பார்த்தபோதுதான் புரிஞ்சுது. ஸோ... கிரெடிட் அத்தனையும் ஷங்கருக்குத்தான். சித்தார்த்துக்கு இது இரண்டாவது படம். அதை மனசில் வெச்சுப்பார்த்தா He is very good!”

‘`இந்தப் படத்தில் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறாராமே... அவரை ஒரு நடிகராக எப்படி யோசித்தீர்கள்?”

‘`இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு. அதைப் பண்றதில் ஒரு யதார்த்தம் வேணும். அதுக்கு ஒரு பெர்சனாலிட்டி தேவைப்பட்டது. பளிச்சுனு பாரதிராஜா சார் என் நினைவுக்கு வந்தார். கேட்டால் நடிப்பாரானு தெரியாது. ஆனா, முடிவுபண்ணிட்டேன். ஏன்னா... அவர் ரொம்ப வசீகரமான பெர்சனாலிட்டி. ஆயிரம் பேருக்கு அட்ரஸ் பண்ற மேடையில் மைக் பிடிச்சாலும் சரி... எதிரே தனியா நம்மோட ரகசியம் பேசினாலும் சரி... ஏதோ ஒரு தனித்தன்மை அவரிடம் பளிச்னு ஈர்க்கும். அவரோட கரகரத்த குரல், அந்த பாடிலாங்குவேஜ் தனியா தெரியும். ‘சார் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கு. பண்றீங்களா... ஆட்டத்துக்கு ரெடியா?’னு நான் கேட்டபோது, முதலில் ‘சரி’னு சொல்லிட்டு, அப்புறம் காணாமப்போயிட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்தவரைத் தேடிப் பிடிச்சு இழுத்து வந்து நடிக்கவெச்சோம். அவர் பெரிய கிரியேட்டர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்குள்ளே அழகான ஒரு நடிகனும் இருக்கிறான் என்பது ‘ஆய்த எழுத்து’ பார்த்தால் உங்களுக்குப் புரியும்!”

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

‘` `ஆய்த எழுத்து’ ஒரே நேரத்தில் இந்தியிலும் ‘யுவா’வாகத் தயாராகிறதே... இது ஏன்?”

‘`ஒரே காரணம்தான். நாம எடுத்த படத்தை வேறு மொழிகளில் ‘டப்’ பண்ணும்போது அதனுடைய ஒரிஜினல் வசீகரம் கொஞ்சம் காணாமப்போயிடும். உதாரணத்துக்கு, ‘ரோஜா!’ கிராமத்துப் பொண்ணு... கம்ப்யூட்டர் இன்ஜினீயரைக் கல்யாணம் பண்ணிட்டு அவனோட காஷ்மீர் போறா. அங்கே அவளுக்கு இந்தி தெரியலைன்னு கதை பண்ணியாச்சு. ஆனா, அதையே இந்தியில் டப் பண்ணும்போது மாட்டிக்கிட்டோம். ‘இந்திப் பொண்ணு. காஷ்மீர் போறா. அவளுக்கு இந்தி தெரியலை’னு சொல்ல முடியாதே. அங்கே ஏதாவது மழுப்பவேண்டியிருக்கும். இது பெரிய சிரமமான வேலை. தமிழ்ப்படத்தில் திடீர்னு வேற மாநிலமோ... நாடோ காட்டும்போது அங்கேயும் தமிழ் பேசற கேரக்டர்களைக் கொண்டுவந்தாத்தான் படம் நகரும்... செம காமெடி அது. இந்தச் சமாதானங்களைத் தவிர்க்கலாமேனுதான் இதை ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். இங்கே சூர்யா, மாதவன், சித்தார்த் மாதிரி அங்கே அஜய்தேவ்கன், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன் மூணு பேரும் பண்ணியிருக்காங்க.

ஒரு நேரம் ஒரு படம் என்பதே டஃப் ஜாப். இப்போ ரெண்டு படங்கள்! ஆனா, நிறைவா முடிச்சிருக்கோம் என்பதில் சந்தோஷம்!”

‘`இதுதான் கதைனு நீங்க ஒரு விஷயத்தை முடிவுபண்றது எப்படி, அந்த கெமிஸ்ட்ரியைச் சொல்லுங்களேன்?”

‘`அது வந்து... தலைமுடியைப் பிச்சுக்கிற மாதிரி ஒரு விஷயம். திடீர்னு ஒரு விஷயம் பிடிக்கும். அப்படியே யோசிக்கிறப்போ ரொம்ப ஆர்வம் வந்துடும். ஆனா, அது சினிமாவாகிறப்போ கவனம் வேணும்.

ஏன்னா... இந்த நிமிஷத்தில் நமக்குப் பிடிக்கிற ஒரு விஷயம்... இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பொட்டி ரெடியாகித் தியேட்டருக்குப் போற வரை பிடிச்சிருக்கணும். அதே ஆர்வம்... அதே காதல்... அதன் மீது இருக்கணும். நடுவுல விட்டுப்போச்சுன்னா... இல்லே கொஞ்சம் குறைஞ்சாக்கூட அது தாங்காது!

அது எல்லோருக்கும் பிடிச்சதா இருக்கணும் அல்லது பிடிக்கும்படியா செய்ய முடியணும். அது நாம் முதலில் பண்ணின படத்தில் இருந்து விலகி வேற ஒரு புது விஷயமாகவும் இருக்கணும். அப்பதான் பெர்சனலா வளர்ச்சி பார்க்க முடியும்.

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

சில விஷயங்கள் பளிச்னு தோணும். அப்படியே கிடுகிடுனு வளர்ந்து தூக்கிட்டுப் போயிடும். சில விஷயங்கள் மனசுலேயே கிடக்கும். ‘நாயகன்’ டைம்ல யோசிச்சது ‘அஞ்சலி’. மூணு, நாலு வருஷம் கழிச்சும் அந்த விதை அப்படியே வீரியமா இருந்ததுன்னா, தைரியமாப் பண்ணலாம்.

‘அலைபாயுதே’வும் அப்படித்தான். ஏதோ எல்லாம் சரியா அமையணும்னு தோணிட்டே இருந்தது. அப்படி அமைஞ்ச பிறகுதான் அலைபாய்ந்தது!”

“சிவாஜி மரணப்படுக்கையில் இருந்தபோது அதே மருத்துவமனையில் பக்கத்து அறை ஒன்றில் ஹார்ட் அட்டாக் வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தீர்கள். ‘டேய்... உங்கப்பன்கிட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் குடுடா’னு சிவாஜி, உங்க பையன் நந்தாவிடம் ஜாலியாகக் கேட்டிருக்கிறார். மறுநாள் அவர் இல்லை...”

“இப்ப நினைச்சாலும் அது துக்கமா இருக்கு. ஏன்னா... எனக்கு சினிமா மேல ஆசை வந்ததுக்கு மிக முக்கியமான காரணம், சிவாஜி சார் படங்கள்தான்.

சிவாஜியை வைத்து படம் பண்ணணும் என்பதில் எல்லா டைரக்டர்களுக்கும் ஆசை இருக்கும். அது ஒரு கனவு மாதிரி! ஆனா, அவ்ளோ பெரிய கலைஞனுக்குத் தீனி போடுற மாதிரி கதையோ, கேரக்டரோ அப்போ என்னிடம் இல்லை. இது இல்லைன்னா அடுத்த படம்னு நம்பிட்டிருந்தேன். சிவாஜி சார் இன்னும் ரொம்ப காலம் நம்மோட இருப்பார்னு நம்பினேன். அந்த முற்றுப்புள்ளியை நான் எதிர்பார்க்கலை!”

“ `மணிரத்னத்துக்கு இரண்டாவது ஹார்ட் அட்டாக்'னு நியூஸ் படிச்சப்போ ஷாக்கா இருந்தது... அப்படியென்ன டென்ஷன் உங்களுக்கு?”

“அது வாழ்க்கை எனக்குத் தந்த அலாரம் பெல்!” - சிரித்தபடி நிமிர்கிறார் மணிரத்னம்.

``யெஸ். ரெண்டு தடவை கேட்டாச்சு அந்தச் சத்தம். ஒரு ஹார்ட் அட்டாக் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. ஜெனடிக்கல், பயாலஜிக்கல் எது வேணுமானாலும் காரணமா இருக்கலாம். மன அழுத்தம் மாதிரியும் வரலாம். சினிமா டென்ஷன் மட்டுமே இதுக்குக் காரணம் இல்லை. அதுசரி... டென்ஷன் இல்லைன்னா, அப்புறம் அதென்ன சினிமா!

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

என்ன... இப்போ இன்னும் கவனமா இருக்கேன். உடம்பு, மனசு ரெண்டையும் இன்னும் பத்திரமாப் பார்த்துக்கிறேன். இட்ஸ் ஆல் இன் தி கேம்!”

“சினிமா அவ்வளவு டென்ஷனான வேலையா?”


“நிச்சயமா... எதில்தான் பிரஷர் இல்லை? ஒரு கிரியேட்டரோட டென்ஷன் எப்பவும் ஒரே மாதிரிதான். அது ஒரு பெரிய கலவரக் காட்சியா இருந்தாலும் சரி... ரெண்டு மனிதர்கள் மட்டுமே பேசுகிற மிக மென்மையான ஒரு விஷயத்தைப் பதிவுபண்றதா இருந்தாலும் சரி. சுற்றியிருக்கிற விஷயங்கள்தான் மாறுமே தவிர, அந்த டென்ஷன் ஒரே மாதிரிதான். பேப்பரில் இருக்கிற விஷயம் ஃபிலிமாகும்போது அது இன்னமும் வளரணும் மிளிரணும் ஜொலிக்கணும். அதான் முக்கியம்!

சினிமாவில் நேரம் முக்கியம். அவ்வளவு பணம் புழங்கிற இடம். தயாரிப்பாளர் நெருக்கடி இருக்கலாம். கேட்ட பொருட்கள் கிடைச்சிருக்காது. சில நேரங்களில் நடிகர்களிடம் இருந்து நாம் எதிர்பார்த்த விஷயம் கொண்டுவரத் தாமதமாகலாம். அது எதுவா வேணா இருக்கட்டும். ஆனா, அதுக்கு நடுவில் நாம எடுக்கிற அந்த விஷயத்தில் சம்திங் ஸ்பெஷல் கொண்டுவரணும். அதுக்கு ஒரு ஜீவன் தரணும்னு துடிக்கும்போது... டென்ஷன் தவிர்க்க முடியாதது. ஐ லவ் பிரஷர்!”

‘`நாயகனுக்குப் பிறகு ‘கமல் - மணி’ காம்பினேஷனின் அடுத்த படம் எப்போ?”


“பேசிட்டேயிருக்கோம். சரியான விஷயம் அமையணும். ஏன்னா... ரஜினியோ, கமலோ இன்னொரு படம் பண்ணணும்னு மட்டுமே நினைச்சா, அவங்களுக்கு வசதியா நிறைய டைரக்டர்ஸ் இருப்பாங்க.

‘நாயகன்’, ‘தளபதி’யெல்லாம் தாண்டணும்னா, அதுக்கு இன்னும் பெரிய களம் வேணும். கமல்தான் ஹீரோனு முடிவுபண்ணிட்டா நம்ம வேலை ஈஸி. எவ்ளோ பெரிய சுமையானாலும் அவர் தோளில் ஏத்தி வைக்கலாம். அப்படி சரியான தீனி வேணும். இப்போதைக்குச் சொல்ல முடிகிற விஷயம் இதுதான்... பேசிட்டேயிருக்கோம்!”

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

‘`இப்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கு... இளம் இயக்குநர்களின் பங்களிப்பு திருப்தியா இருக்கா?”

“நிச்சயமா... அஞ்சு ஆறு பேர் அப்படி நம்பிக்கை தர்றாங்க. ஆனா, ஒரு படம் பளிச்னு பண்ணிட்டு அடுத்த படத்தில் அந்த ஃப்ரெஷ்னஸ் இல்லாமப் போயிடக் கூடாது. இப்போ பாலா பண்றார்ல... அது மாதிரி கன்சிஸ்டென்சி வேணும். இதோ, இப்போ சேரன் பண்ணியிருக்கார் பாருங்க. ஆனா, இப்படி ஒண்ணு, ரெண்டு படங்கள் மட்டும் சொன்னா போதாது. அப்படியே பத்துப் பதினைஞ்சுனு முளைச்சு வரணும்... வருவாங்க!”

“ `அலைபாயுதே’ மாதிரி ஒரு படம் ரெண்டு மனிதர்களின் மனப்போராட்டம்தான் கதை... ‘ரோஜா’ மாதிரி படம் இந்தத் தேசத்தின் பிரச்னை... எப்படி இரண்டு வெவ்வேறு விதமான தளங்களிலும் இயங்க முடியுது?”


“இப்போ நீங்க இருக்கீங்க... வீடு, மனைவி, குடும்பம்னு ஒரு வாழ்க்கை இருக்கும். அதோட சுகதுக்கங்கள் இருக்கு. ஆனா, நியூஸ்பேப்பர் திறந்து பார்த்தால்... டி.வி நியூஸ் பார்த்தால்... வேற ஒரு உலகம் உங்க மனசுக்குள்ளேயே வந்திருதே. அப்ப ரெண்டுமே நிஜம்தானே? இந்த எலெக்‌ஷன்ல யாரு ஜெயிப்பா... பின்லேடனைப் பிடிப்பாங்களானு நாமளும் யோசிக்கிறோமே... இந்தப் பதினைஞ்சு வருஷத்துல காஷ்மீர் பற்றி நம்ம எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கே.

‘ரோஜா’ படம் பார்த்தீங்கன்னா அதோட form நம்ம புராணம். சத்தியவான் - சாவித்ரி கதைதான் அது. ‘புருஷனை மீட்க கடைசி வரை போராடுகிற மனைவியின் கதை. அதை இன்னிக்கு உலகத்தோட பிரச்னையின் பின்னணியில் பண்றோம். அதில் லவ் இருக்கு... வேல்யூஸ் இருக்கு... தேசப்பற்று இருக்கு. இது எப்பவும் யாருக்கும் இருக்க வேண்டிய விஷயம்தானே!”

‘` `பம்பாய்’ படத்தில் வர்ற ‘உயிரே’... பாட்டு படமாக்கப்பட்ட சூழலும் விதமும் பிரமாதமா இருக்கும். அதன் பிறகு எத்தனையோ படங்களில் அதே லொகேஷன் பார்த்தாலும் ‘உயிரே’ படம் போல கடலும் காற்றும் வேறு எதிலும் பேசவே இல்லை. லொகேஷன் மாதிரி விஷயங்களுக்கு அவ்வளவு மெனக்கெடவேண்டியிருக்குமா?”


“சில சமயம் அதிர்ஷ்டமா அமைஞ்சுடும். ‘இல்லே... ரொம்ப கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சோம்’னு சொல்லிக்கலாம். இட்ஸ் ஜோக்!

ஒரு சினிமாவுக்கு சில கருவிகள் வேணும். ஒரு கதை, அதைச் சொல்ல கேமரா, அதை நிகழ்த்த நடிகர்கள் இது மூணும்தான் முதல் கருவிகள் அப்புறம் ஒவ்வொண்ணா சேரும். ஒரு ரூமுக்குள்ள சொல்ற காதலை மழைச்சாலையிலோ, கடற்கரையிலோ காட்டும்போது, அது கூடுதல் அழகாகிடும். பின்னணியில் ஒரு ஒற்றை வயலின் சேர்ந்தா அதுவே கவிதையாகிடும். சில சமயம் அப்போ என்ன டிரெஸ் பண்ணியிருந்தாங்கங்கிறது ரொம்ப முக்கியம். இப்படி இடம், பொருள் சூழல்னு எல்லா கருவிகளும் சேர்ந்தால்தான், அது சினிமா.

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

இது ரசனை சம்பந்தப்பட்ட விஷயம். கதையோ, கவிதையோ எழுதுவது வேற. ஆனா, சினிமா கிட்டத்தட்ட நிஜம். அந்த மனிதனைத் தொட மட்டும்தான் முடியாது. மற்றபடி அவன் சிரிப்பு, கண்ணீர், கோபம், பயம்னு எல்லாமே கண் முன்னே உணர முடியுற நிஜம். சினிமாவோட மேஜிக் அது!''

``இவ்ளோ சிரமத்துக்கு இடையில் பண்ணின படத்தை விமர்சனங்கள் காலி பண்ணும்போது, திடீர்னு நிராகரிக்கும்போது அது உண்டாக்குகிற பாதிப்பு எப்படியிருக்கும்?''

``வலிக்கும்... பாதிக்கும்... கோபம் வரும். `சரி, அவங்களுக்குப் பிடிக்கலைப்பா'ங்கிறதை மனது ஏத்துக்காம வர்ற முதல் ரியாக்‌ஷன் அது. மார்க்கெல்லாம் கம்மியாப் போட்டு, தலையில் குட்டி, `கிளாஸுக்கு வெளியில நில்லு'னு சொன்னா வர்ற கோபம் அது. ஆனால், `இதே மீடியா, இதே ஜனங்கதானே நம்மோட மற்ற படங்களைக் கொண்டாடினாங்க!'னு யோசிச்சா, இதில் நம்ம தப்பு எங்கேனு யோசிக்கத் தோணும்.

சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமப் போகலாம். ஆனா, அதை எடுத்தவன் என்ற முறையில் எனக்கு அது பிடிக்கணும். அப்புறம்தான் மற்றதெல்லாம்!

சிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்

சிலநேரம் படத்திலேயே தவறு இருக்கலாம். ஒண்ணு, ரெண்டு மிஸ்டேக்ஸ், சரிபண்ணக்கூடிய தவறுகள். மாறுதலா ஏதாவது செய்ய முயற்சி பண்ணியிருப்போம். அது ஓவர்டோஸாகிப் போய் தப்பாகியிருக்கும்.

ஓ.கே! அந்த முயற்சி சரியா வரலை... அவ்வளவுதான! அதுக்காக முயற்சியே பண்ணாமல் இருக்கக் கூடாது. கமல் எவ்வளவு முயற்சிகள் பண்றார். ஒண்ணு, ரெண்டு க்ளிக் ஆகாமல் போனால்கூட, எந்த நிமிடமும் அவர் தன் முயற்சிகளைக் கைவிடுவதே இல்லை. அதுதான் அவரோட வெற்றி. எந்தவொரு கிரியேட்டருக்கும் அந்த நம்பிக்கை வேணும்!''
 
``இத்தனை வருஷ சினிமா உங்களுக்குத் தந்தது என்ன?''


``சந்தோஷம்!

ஒரு ஷாட் நினைச்சபடி முடிஞ்சா... சந்தோஷம். ஒரு படம் எதிர்பார்த்ததுபோலவே வந்துட்டா... சந்தோஷம். இதோ, இப்போ `ஆய்த எழுத்து' முடிஞ்சு நிக்கிறப்போ... என் மனசெல்லாம் சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்தைத்தான் பகிர்ந்துக்க வர்றேன். யோசிச்சுப் பார்த்தா... நாம் எல்லாருமே ஆய்த எழுத்துக்கள்தானே!''

- ரா.கண்ணன்

படங்கள்: கே.ராஜசேகரன்

(21.3.2004 - 28.3.2004 இதழ்களில் இருந்து...)