Published:Updated:

வெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்!

வெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்!

மருதன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்!

கியூபாவுடனான அரசியல் உறவை முறித்துக்கொண்ட ஐசனோவர் தொடங்கி, அந்த உறவைப் புதுப்பித்துக்கொள்ள முயன்ற பராக் ஒபாமா வரை 11 அமெரிக்க அதிபர்களை தன் வாழ்நாளில் கண்டவர், அவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக எதிர்த்தவர், இந்த நூற்றாண்டின் மகத்தான ஆளுமையாகத் திரண்டு நிற்கும் அதே சமயம், அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு ‘சர்வாதிகாரி'... ஃபிடல் அலெக்ஸாண்ட்ரோ காஸ்ட்ரோ!

90 வயதில் நிகழ்ந்த ஃபிடலின் மரணம், அவரை நேசித்தவர்களுக்கு மட்டும் அல்ல... வெறுத்தவர்களுக்கும்கூட ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஓர் உன்னதமான தலைவர் போராடுவதை நிறுத்திக்கொண்டிருக்கிறார்.’

எதையும் முறைப்படி செய்து பழக்கப்பட்ட காஸ்ட்ரோ, ஏப்ரல் 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது கியூப கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், தன் மக்களிடம் இருந்தும் கட்சியினரிடம் இருந்தும், தான் உருவாக்கிய புரட்சிகர தேசத்திடம் இருந்தும் விடைபெற்றுக்கொண்டார். நீல நிற டிராக் சூட் அணிந்திருந்த அந்த மெலிந்த முதியவரின் விரல்கள், அப்போது நடுங்கிக்கொண்டிருந்தன. பேசத் தொடங்கியபோது அவர் குரலும் தேய்ந்துபோய் இருந்தது. ‘விரைவில் நான் மற்ற எல்லோரையும்போல ஆகிவிடுவேன். எல்லோரும் அவரவர் முடிவைச் சந்திக்கத்தான் வேண்டும்’ என்றார். உரையை முடித்துக்கொள்வதற்கு முன்னால் அழுத்தமாக அறிவித்தார்... ‘கியூப கம்யூனிஸம், எனக்குப் பிறகும் வாழும்.’

கியூபாவில் புரட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அன்று தன் மக்களை முதன்முதலாகச் சந்தித்தார் காஸ்ட்ரோ. அப்போது அவருக்கு வயது 32. அமெரிக்காவின் ஆசியோடு கியூபாவை ஆண்டுவந்த புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்த்ததன் மூலம், நீண்டகாலமாக நிலவிவந்த அந்நிய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார் காஸ்ட்ரோ. ஒரு புரட்சிகர அரசுக்கான அடித்தளத்தை அமைக்கும் பொருட்டு, காஸ்ட்ரோ நீண்ட ஓர் உரையை அன்று நிகழ்த்தினார். உற்சாகமும் நம்பிக்கையும் ஊற்றெடுக்க நள்ளிரவு கடந்தும் உரையாற்றிக் கொண்டிருந்த காஸ்ட்ரோவை, தொலைவில் இருந்தவர்களால் பார்க்க முடியாமல் போனது. ஆகையால், அவர் மீது மக்கள் ஒளியைப் பாய்ச்சினார்கள். உரை முடிந்ததும் கியூபாவில் அமைதி திரும்பப்போவதை உணர்த்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. படபடவென பறந்து சென்ற புறாக்களில் ஒன்று காஸ்ட்ரோவின் தோளில் மென்மையாக வந்து அமர்ந்தபோது, உணர்ச்சிக் கொந்தளிப்போடு பலர், ‘ஃபிடல்... ஃபிடல்...’ எனக் குரலெழுப்பத் தொடங்கினர்.

50 ஆண்டுகள் கழிந்த பிறகும், அவரைக் காணும் ஒவ்வொரு முறையும் அதே உற்சாகத்துடன் குரலெழுப்பி ஆர்ப்பரித்தார்கள் கியூபர்கள். தன் மீது அன்று மக்கள் பாய்ச்சிய ஒளியைத் திரட்டியெடுத்து அதைப் பல மடங்கு பிரகாசமாக்கி மக்கள் மீதே அவர் திரும்பவும் பாய்ச்சியபோது, கியூபா இருளில் இருந்து திடமான வெளிச்சத்துக்கு மாறியது.

இனி அந்த நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படாது; பசியோ வேலையில்லாத் திண்டாட்டமோ இராது; சிசுக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறக்க மாட்டார்கள்; கல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள்; சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் காண முடியாது; போதை மருந்துக்கு அடிமையானவர்களைப் பார்க்க முடியாது; இனவெறியைக் காண முடியாது... இவை எல்லாம் ஃபிடலால்தான் சாத்தியமானது என்பதை கியூபர்கள் உணர்ந்திருந்தனர்.

`காஸ்ட்ரோ வந்தார்... அதற்குப் பிறகு எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்' என எழுதி முடிக்க, இது தேவதைக் கதை அல்ல. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் இந்தப் புரட்சிகர மாற்றங்களை ஃபிடலால் ஏற்படுத்த முடிந்தது. புரட்சியால் பலவீனமடைந்தவர்களும் ஆத்திரம்கொண்டவர்களும் புரட்சியின் பலனாளிகளை எதிர்க்கத் தொடங்கினர். வர்க்கப்போராட்டம் கூர்மையடைந்தது. கியூபாவை உறிஞ்சிக்கொண்டிருந்த அந்நிய நாட்டு அட்டைகளைப் பொட்டலம் கட்டி தூக்கியடித்தார் காஸ்ட்ரோ.

`அதிகாரத்தை மிக அதிக ஆண்டுகள் கையில் வைத்திருந்த ஒருவரை, `சர்வாதிகாரி' என்றுதானே அழைக்க முடியும்?’ - இந்தக் கேள்வியை காஸ்ட்ரோவே எதிர்கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘என்னை `சர்வாதிகாரி' என்றும், ஜார்ஜ் புஷ்ஷை `ஜனநாயகவாதி' என்றும் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. நான் தன்னிச்சையாக எந்த முடிவுவையும் எடுப்பது இல்லை. சட்டத்துக்கு மேலாக என்னை உயர்த்திக்கொண்டது இல்லை. ஆனால்,

ஜார்ஜ் புஷ் ஒருவரையும் கேட்காமல் மோசமான முடிவுகளை எடுத்துள்ளார். நினைத்த நேரத்தில் புஷ் போன்றோர் போர் தொடுக்கிறார்கள். என்னால் அப்படி எல்லாம் செய்ய முடியாது. நாங்கள் எல்லா பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கிறோம்; ஆராய்கிறோம்; கூட்டாக முடிவு எடுக்கிறோம்; ஆரம்பநிலை அரசு ஊழியர்களையும்கூட நான் நியமிப்பது இல்லை. நானா சர்வாதிகாரி?’

காஸ்ட்ரோவின் வாசிப்புப் பழக்கத்தை நேரில் கண்ட தோழர்களின் குறிப்புகள் ஆச்சர்யம் அளிக்கக்கூடியவை. ‘இவருக்கு எது முக்கியம், எது முக்கியம் அல்ல எனத் தீர்மானிப்பது மிகவும் சிரமம்!’ என அவர்கள் சலித்துக்கொள்கிறார்கள்.

வெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்!

கோழி வளர்ப்பு பற்றிய நீண்ட புத்தகம் இவருக்கு நிச்சயம் தேவை இருக்காது என தோழர்கள் நினைப்பார்கள். ஆனால், எங்கேயாவது ஓர் அறிக்கையில் கோழி வளர்ப்புப் பற்றிய விவாதம் எழுப்பப்படும்போது, அந்தப் புத்தகத்தை உடனடியாகக் கொண்டுவரச் சொல்லிக் கேட்பார். வெப்பமண்டல விவசாயம் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, கிட்டத்தட்ட 100 புத்தகங்களைப் படித்து முடித்திருக்கிறார்.

தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவை உதறித்தள்ளிவிட்டு, தொலைவில் எங்கோ உள்ள சோவியத் யூனியனையும் சோஷலிசத்தையும் காஸ்ட்ரோ அணைத்துக்கொண்டதற்கு அவருடைய தீவிர வாசிப்பும் ஒரு காரணம். சோஷலிசத்தை அப்படியே அள்ளியெடுத்து வந்து கியூபாவில் படரவிடாமல், லத்தீன் அமெரிக்கச் சூழலுக்கு ஏற்ற ஒரு பிரத்தியேக வடிவத்துக்கு அதைக் கொண்டுவந்த பிறகு, படிப்படியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். மார்க்ஸ் முதல் மாவோ வரை கற்றிருந்தாலும், கியூபப் புரட்சியும் கியூப சோஷலிசமும் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருந்தமைக்குக் காரணம் காஸ்ட்ரோ.

உண்மையில் கியூபாவில் மாற்றங்களை ஏற்படுத்துவது அல்ல அவர் திட்டம். கியூபா என்பது, ஒரு சாக்கு. லத்தீன் அமெரிக்காவும்கூட அல்ல அவருடைய இலக்கு. தன் தோழர் சே குவேராவைப்போல் உலகம் முழுவதற்கும் சேர்த்து கனவுகண்டவர் காஸ்ட்ரோ. நெல்சன் மண்டேலா, நேரு, ஹோ சி மின், பாட்ரிஸ் லுமும்பா, அமில்கார் கப்ரால், அலெண்டே எனத் தொடங்கி தங்களுக்கே உரித்தான வழியில் சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றுக்காகப் போராடிய தலைவர்களோடும், அவர்களுடைய போராட்டங்களோடும் தன்னை காஸ்ட்ரோ இணைத்துக்கொண்டதற்கு அவருடைய கனவே அடிப்படைக் காரணம். ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் எங்கே தோன்றினாலும் அதற்கு எதிரான கம்பீரமான குரல் காஸ்ட்ரோவிடம் இருந்து தோன்றியது. காகிதத்தில் உள்ள கனவுச் சித்தாந்தம் அல்ல சோஷலிசம்; நடைமுறை சாத்தியம்கொண்ட மகத்தான செயல்திட்டம் அது என்பதை சொல், செயல் இரண்டின் மூலமும் உணர்த்தினார் காஸ்ட்ரோ.

அதனாலேயே அமெரிக்காவின் முதன்மையான எதிரியாகவும் மாறிப்போனார். லத்தீன் அமெரிக்கா மீதான தனது ஆதிக்கத்தைக் கைவிடவேண்டிய நெருக்கடியை கியூபப் புரட்சி அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது. ஆலமரங்களை வெட்டிச் சாய்த்த அமெரிக்காவால் ஒரு சிறு முள்ளை உடைக்க முடியாதா என்ன? ஐ.நா-வின் எதிர்ப்பையும் மீறி 1960-ம் ஆண்டு தொடங்கி கியூபா மீது தொடர்ச்சியாகப் பொருளாதார யுத்தம் தொடுத்தது அமெரிக்கா. காஸ்ட்ரோவைக் கொல்ல 600 முறைக்கு மேல் முயன்றனர்.

பல மில்லியன் டாலரை அவருடைய ஆட்சிக் கவிழ்ப்புக்காகக் கொட்டினார்கள். கியூபாவில் சி.ஐ.ஏ-வைக் கொண்டு குறைந்தபட்சம் ஒரு சிவில் யுத்தத்தையாவது மூட்டிவிட முடியுமா என முட்டிமோதினார்கள். `காஸ்ட்ரோவுக்குப் பயங்கர வியாதி. அவர் எப்போது வேண்டுமானாலும் இறந்துவிடுவார்' என ஆரூடம் சொன்னார்கள். பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை அவர் இறந்துவிட்டதாகக் கதை கட்டினார்கள்.

இதற்கு எல்லாம் காஸ்ட்ரோ புரிந்த எதிர்வினைகள், ஏன் அவர் மரணத்தால் அழியக்கூடியவர் அல்லர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. கியூபாவில் அமெரிக்க எதிர்ப்பு வன்முறைக் குழுக்கள் உருவாவதை அவர் இறுதி வரை அனுமதிக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான சக்திகளுடன் கரம்கோத்து அமெரிக்காவை வன்முறையால் வீழ்த்தும் திட்டங்கள் எதையும் அவர் தீட்டவில்லை. `செப்டம்பர் 11' தாக்குதலின்போது, அமெரிக்க மக்களோடு கரம்கோத்து அமெரிக்க மக்களுக்காக வருந்தினார். அதேசமயம், ஜார்ஜ் புஷ்ஷின் அநீதியான போரைக் கடுமையாகச் சாடினார். காத்ரீனா சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியபோது, அதற்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகளில் முதன்மையானது கியூபா. ‘எனக்கு அமெரிக்க அரசுடன் மட்டும்தான் முரண்பாடு; அமெரிக்க மக்களுடன் அல்ல’ என்னும் தெளிவு காஸ்ட்ரோவுக்கு இருந்தது. அதனால்தான் புதிய கியூபா சாத்தியம் ஆனது.

ஃபிடல் காஸ்ட்ரோ இல்லாத ஓர் உலகில் நாம் அடியெடுத்துவைத்திருக்கிறோம். துயரத்தை விழுங்கிவிட்டு நம்பிக்கையையும் போராட்டக் குணத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. ஃபிடல் நம்மிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்ப்பார். ஃபிடலின் தோளில் இருந்து பறந்துசென்றுவிட்ட புறாவை, நாம் அழைத்தாக வேண்டும்!