Published:Updated:

மக்க கலங்குதப்பா!

மக்க கலங்குதப்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
மக்க கலங்குதப்பா!

ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான்

மக்க கலங்குதப்பா!

`நாளை முதல் எவரும் பேன்ட் அணியக் கூடாது' என்பது அரசாங்கத்தின் உத்தரவு, கீழ்ப்படியத் தயார். ‘கட்டிக்கொள்ள வேட்டி எங்கே?’ என்ற அடுத்த கேள்வி பிறந்ததும், ‘50 நாட்கள் பொறுத்திருங்கள். வேட்டி தயாராகிவிடும்’ என்பது உத்தரவாதம். அப்படியானால், 50 நாட்கள் நிர்வாணமாக நிற்க வேண்டியதுதானே நிதர்சனம். படிக்கும்போது கோபம் வந்தாலும், இதுதான் இந்தியாவின் இன்றைய யதார்த்தம்!

‘நான் ஒரு சி.எம் என்றைக்குமே நான் ஒரு சி.எம் ஆகத்தான் இருப்பேன். என்னைப் பொறுத்தவரை சி.எம் என்றால் காமன் மேன்’ - என்று 2008-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக வெற்றி பெற்றபோது நரேந்திர மோடி சொன்னார். பன்ச் டயலாக் அடிப்பதில் அவர் ஒரு ரஜினி பட இயக்குநர். இவர் பி.எம் ஆனதும் சி.எம்-ஐ பற்றி கவலையேபடவில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்தியா முழுக்க நாம் பார்க்கும் காட்சிகள்.

சென்னை பெசன்ட் நகர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த புருஷோத்தமன், தனது மகள் திருமணத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் எடுப்பதற்கு 25 விதமான அத்தாட்சிப் பத்திரங்களுடன் அலைகிறார்.

ஆனால், பத்து வைகுண்டராஜனும் பத்து பி.ஆர்.பி-யும் பத்து ஆறுமுகச்சாமியும் இணைந்து சேர்த்த கலவையான பாரதிய ஜனதாவின் செல்லப்பிள்ளை கர்நாடக ஜனார்த்தன ரெட்டி, சுமார் 650 கோடி செலவில் திருமணம் நடத்துகிறார். மந்தைவெளியில் ஒருவர் 4,500 ரூபாய் மாற்றுவதற்கு 100-வது ஆளாக நிற்கிறார். ஆனால், தஞ்சாவூரில் கட்சிக் கரை வேட்டி கட்டிய ஒருவர் 2,000 ரூபாய் தாளை பெட்டியில் வைத்து பட்டுவாடா செய்கிறார். ஏ.டி.எம்-மில் 2,000 ரூபாய் எடுக்க, ஒருவர் இரண்டு மணி நேரம் நிற்கிறார். சிலருக்கு ஒரே வரிசை உள்ள கட்டுகளாகக் கிடைக்கிறது. இதுதான் கறுப்புப் பணம் ஒழிப்பா?

ஒரு லட்சம் ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால், 80 ஆயிரம் ரூபாய் புது நோட்டு. ஒரு கோடி ரூபாய் பழைய நோட்டு கொடுத்தால், 78 லட்சம் ரூபாய் புது நோட்டு. தங்கத்தில் கேட்டால், கிராம் 4,000 ரூபாய். இதுதான் 8-ம் தேதியில் இருந்து நடக்கும் வர்த்தகம் என்றால், நடந்தது சர்ஜிக்கல் அட்டாக்கா... கறுப்புப் பணத்துக்குப் பட்டவர்த்தனமாக வெட்டிவிட்ட கால்வாயா?

இந்தியாவில் யாரிடம் கறுப்புப் பணம் இருக்கிறது என, நரேந்திர மோடிக்கும் தெரியும்; குருமூர்த்திக்கும் தெரியும். அவர்கள் மனதில் வைத்துள்ள யாராவது வரிசையில் நின்றார்களா? அவர்கள் வருத்தப்பட்டு இருப்பார்களா? ஹார்ட் அட்டாக் வந்திருக்குமா? வராது. ஏனென்றால், கரன்சி வரவர, அவர்கள் அதை வெள்ளை ஆக்கிக்கொண்டே இருப்பவர்கள்.

பண்டிகைக் காலங்களில் மட்டும் பெரிய துணிக்கடை, நகைக்கடை முதலாளிகளிடம் வருமானவரித் துறையினர் ரெய்டு போவார்கள். ஏனென்றால், அப்போதுதான் அவர்களிடம் கரன்சி குவிந்திருக்கும். அடுத்த மாதம் பதுக்கப்பட்டுவிடும். மே, ஜூன் மாதங்களில் கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடக்கும். அடுத்த மாதம் மறைக்கப்பட்டுவிடும். நகையாக, நிலமாக, டாலராக மாறிவிடும்; வெளிநாடு பறந்துவிடும்; ஹவாலாவாகப் பரிணாமம் பெற்றுவிடும். தெலுங்குப் படத்தில் ரெய்டு வரும்போது கட்டில் மெத்தைக்குள் மொத்தமாகப் பணம் வைப்பது மாதிரி, இப்போது யாரும் வைப்பது இல்லை. அதெல்லாம் ‘பாலாஜி’ காலத்துப் பழைய ஸ்டைல். சினிமா இயக்குநர்களைவிட சில ஆடிட்டர்களுக்குக் கற்பனைவளம் அதிகம். அவர்கள்தான் பதுக்கலுக்கு பால பாடம் எடுப்பவர்கள். எனவேதான் கறுப்பு முதலைகள் கவலைப்படவில்லை.

ஒரு குடும்பம், தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் ஒரு தனியார் வங்கியிடம் கொடுத்து, அவர்களிடம் இருந்ததை பண்டமாற்றாக மாற்றிக்கொண்டுவிட்டது. ஒருவர், தனக்குத் தெரிந்த பைனான்ஷியர்களை வரவைத்து, பெட்டிப் பெட்டியாகத் தாரைவார்த்துவிட்டார். ஒருவர், தனக்குத் தெரிந்த தொழிலதிபர்கள் அனைவருக்கும் 50 லட்சம் வீதம் பிரித்துக் கொடுத்துவிட்டார். ‘எவ்வளவு வேண்டுமானாலும் என்னிடம் கொடுங்கள்’ என்று ஒருவர் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். பவர் புரோக்கர்களும், பான் புரோக்கர்களும், பைனான்ஷியல் புரோக்கர்களும், கந்து வட்டிக்காரர்களும் கைகோத்து நிற்கும் காட்சிதான் ஏக இந்தியாவில் எங்கும் இருக்கிறது.

சிறுகச்சிறுகச் சேமித்துவைத்தவர்கள், குடி மற்றும் ஊதாரிக் கணவனிடம் இருந்து மறைத்துவைத்தவர்கள், வங்கி மற்றும் ஏ.டி.எம் விவரம் தெரியாதவர்கள், வங்கிகள் புகாத கிராமத்தான்கள் ஆகியோர், கை பிசைந்து நிற்கும் காட்சிதான் ஏக இந்தியாவில் எங்கும் பார்க்க முடிகிறது. மோடி காட்ட நினைத்த, மாற்ற நினைத்த இந்தியா என்பது இதுதானா?

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என மோடி நினைத்தால், 100-க்கு 110 மடங்கு ஆதரிக்கத்தான் வேண்டும். ஏனென்றால், இன்றைய அரசியல், இன்றைய தேர்தல், இன்றைய கட்சிகள் எதில் இயங்குகின்றன என்றால், கறுப்புப் பணத்தில்தான். அந்தப் புதைகுழியில் இருந்துவரும் ஒருவர், `இதை ஒழிக்கப்போகிறேன்' என அரசியல் உள்நோக்கத்துடன் அட்டென்ஷனைத் தன் பக்கம் திருப்புவதற்காக (ஹீரோ ஆவதற்காகவே) சொன்னாலும் ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகள் சரியான முன்னேற்பாட்டுடன்தான் நடந்தனவா? 120 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 14 லட்சம் கோடி ரூபாய் பணத்தை ‘இதோ இந்த நிமிடத்தில் இருந்து செல்லாது’ எனச் சொல்வதற்கு முன் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டனவா என்பதே கேள்வி.

`நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 86 சதவிகித ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' எனச் சொல்வதற்கு முன், அதே மதிப்பிலான மற்ற ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வைக்க முடியாது. ஆனால், 40 சதவிகித நோட்டுக்களை அச்சடித்திருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காதே! 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்கள் தாராளமாகப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். பழைய 500 ரூபாய் செல்லாது என்றபோது, புதிய 500 ரூபாய் அச்சடித்து வைத்திருக்க வேண்டும்; 2,000 ரூபாய் நோட்டுக்கள் தேவையான அளவு இருந்திருக்க வேண்டும். இதை ஏன் செய்யவில்லை எனக் கேட்டால், ‘கேட்பவர்கள் எல்லாம் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்’ என்று சொல்பவர் பிரதமரா? நரேந்திரமோடிக்கும் ஹெச்.ராஜாவுக்கும் வித்தியாசம் வேண்டாமா? ‘கறுப்புப் பணம் உள்ளவர்கள்தான் விமர்சிக்கின்றனர்’ எனச் சொல்கிறார் மோடி. ஏ.டி.எம் வரிசைகளில், வங்கி வாசல்களில் நிற்பவர்கள் எல்லாம் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்றால், இந்தியரில் எவருமே ‘வெள்ளை’ மனிதர் இல்லையா?‘பரத கண்டமே’ கறுப்புக் கண்டமா?

‘ஊழலுக்கு எதிராகவும் கறுப்புப் பணத்துக்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டத்தை நாடு முன்னெடுத்துவருகிறது. இந்த யுத்தத்தில் சாமானிய மக்கள்தான் போர் வீரர்கள்’ என மோடி பேசி இருக்கிறார். கறுப்புப் பணம் மட்டும் அல்ல, ஊழல், எதேச்சதிகாரம், மதவாதம், சாதிவாதம் ஆகிய அனைத்துக்கு எதிரான போராட்டத்திலும் மக்கள்தான் மகத்தான போர்வீரர்கள். ஆனால், அந்த மக்கள் இப்போது ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிறார்கள் என்பது சி.எம்-முக்கு ஏன் தெரியவில்லை? ஒரு நோட்டைத் தடைசெய்திருக்கும்போது, மாற்று ரூபாய் நோட்டுக்கள் தயாராகக் கிடைத்தால், மோடியின் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அவர் எதிர்பார்க்கும் மக்கள் நிச்சயம் வந்திருப்பார்கள். தான் பதவியில் இருந்த காலத்தில் மக்களைப் பற்றியே கவலைப்படாமல் ஆட்சி நடத்திய மன்மோகன் சிங், இன்று மகாயோக்கியர்போல பேசுவதைப் பார்த்து மக்கள் நிச்சயம் சிரித்திருப்பார்கள். ‘2ஜி புகழ்’, ‘ஏர்செல் மேக்ஸிஸ் புகழ்’ தி.மு.க மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்துவது பற்றிக் கடுப்பாகி இருப்பார்கள். மக்களின் கோபம் கறுப்புப் பண முதலைகள் பக்கம் போகாமல் மத்திய அரசாங்கத்தின் பக்கம் திசை மாறியதற்குக் காரணம் என்ன?

தான் நினைத்தது நடக்க வேண்டும், தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும், தான் நினைத்ததே சரி எனச் சொல்ல வேண்டும், தான் நினைத்ததையே செயல்படுத்திக் காட்ட வேண்டும் என நரேந்திர மோடி நினைப்பதுதான் எதேச்சதிகாரம், சர்வாதிகாரம். தான் நினைத்ததை மட்டும் செய்ய, எதற்கு அமைச்சரவை? எதற்கு நாடாளுமன்றம்?

நாடாளுமன்றம் கொந்தளிக்கிறது. ‘இங்கே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கே முன்கூட்டி இந்த விஷயம் தெரியுமா? தெரிந்திருந்தால் அவர் இதற்கு எதிராக ஆலோசனை கூறியிருப்பார்' என்று சரத் யாதவ் சொல்ல, அருண் ஜெட்லி பதிலே சொல்லவில்லை. சிரித்தபடி அமர்ந்திருந்தார் ஜெட்லி. ‘இது மத்திய அரசின் முடிவு. எங்களது கூட்டு முடிவு’ என ஜெட்லி சொல்லியிருக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமைச்சரவை ஆறு மணிக்குக் கூடியதாகவும், அதில் பிரதமர் இதை அறிவித்ததாகவும், அவர்களை அதே அறையில் இருக்கவைத்துவிட்டு பிரதமர் தூர்தர்ஷனில் பேசியதாகவும் டெல்லி தகவல்கள் சொல்கின்றன. தூர்தர்ஷனில் நேரம் ஒதுக்கவைத்துவிட்டுத்தான் மத்திய அமைச்சரவை கூடி இருக்கிறது என்றால், மத்திய அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும் அறிவிப்பு செய்யத் தயாராகவே மோடி இருந்திருப்பார். நீங்கள் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்துகள். உலகமயம், தாராளமயம், வளர்ச்சி, நாட்டுப் பாதுகாப்பு, வல்லரசு... எல்லா சொல்லாடல்களும் யாருக்காக? மக்களுக்காகத்தானே! அவர்களைப் பற்றிய புரிதலே இல்லாமல் அவர்களைப் பற்றிய சிரமம் அறியாமல் ‘தன்னை மட்டுமே நம்பி’ ஒரு முடிவை மோடி எடுத்துள்ளார். இந்தியா எதிர்பார்க்கும் புதிய இரும்பு மனிதர் இப்படித்தான் இருக்க வேண்டுமா?

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற முகமாக அத்வானி இருப்பதால் புதுமுகம் காட்ட நினைத்தவர்களுக்கு மோடி பயன்பட்டார். மோடிக்கு அதனால் பயன் விளைந்தது. ஆனால், வந்ததும் அத்வானி, ஜோஷி போன்ற பெருந்தலைகள் காலி செய்யப்பட்டார்கள். ராஜ்நாத்சிங்கிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சுஷ்மா சுவராஜ் உடல்நலம் இல்லாமல் ஆகிவிட்டார். அருண் ஜெட்லிக்கு அவர் துறையில் நடப்பதே தெரியவில்லை.  பாரதிய ஜனதாவின் பெருந்தலைகள் வீழ்த்தப்பட்டு ‘OM’ ஆக (ஒன் மேன்) நிற்கிறார் மோடி.

சரி... நாடாளுமன்றத்துக்கு வருகிறாரா என்றால் வரவில்லை. பேசுகிறாரா? பேசவில்லை. கோவாவிலும் பஞ்சாபிலும் சொல்லும் கர்ஜனைகளை நாடாளுமன்றத்தில் பேச மோடிக்கு என்ன தயக்கம்? அசுரபலத்தில் இருக்கிறது பாரதிய ஜனதா. யார் அவருடைய ஆட்சியைக் கலைத்துவிட முடியும்? எதிர்க்கட்சிகளின் கோரிக்கையே, ‘பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்பதுதான். மோடிக்குப் பேசத் தெரியாதா? நன்றாகவே பேசுவார். அதற்கான உடல் மொழியும் குரல் மொழியும் உண்டு. ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருக்கும் மதிப்பின்மையையே இது காட்டுகிறது.

பொதுவாக, நாடாளுமன்றம் நடக்கும்போது பிரதமரோ, சட்டமன்றம் நடக்கும்போது முதலமைச்சரோ வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள்; அரசு சார்பு அறிவிப்புகளை வெளியே சொல்ல மாட்டார்கள். சபையில்தான் செய்வார்கள். இது மரபு. நாடாளுமன்றம் நடக்கும்போது மோடி வெளி நிகழ்ச்சியில் பேசுவார். ஏன், வெளிநாடே போய்விடுவார். வெளிநாடு போனால், யாரும் தங்கள் நாட்டைப் பற்றி தங்கள் நாட்டு உள்ளூர் அரசியலைப் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் மோடி, இந்திய அரசியல் பற்றி பேசினார். அதைவிட மோசமாக சமீபத்தில் ஜப்பான் சென்ற மோடி, ‘இந்தியாவில் இப்போது கல்யாணம் நடப்பதே கஷ்டமாகிவிட்டது. கறுப்புப் பணத்தை அந்த அளவுக்குக் கட்டுப்படுத்திவிட்டோம்’ எனச் சொல்லிச் சிரித்திருக்கிறார். சொந்த உழைப்பில் சம்பாதித்தவன் வீட்டில் கல்யாணம் நடப்பதுதான் கஷ்டமே தவிர, கர்நாடக ரெட்டி சகோதரர்களுக்கு இல்லையே மோடி?

என்ன நினைக்கிறார் அவர்? வங்கியில் இல்லாமல் வீட்டில் இருப்பது எல்லாம் கறுப்புப் பணமா அல்லது வங்கியில் இருப்பது எல்லாம் நல்ல பணமா? கணக்குக் காட்ட முடியாத பணத்துக்கு 50 சதவிகிதம் வரி என்றால், 50 சதவிகிதக் கறுப்புப் பணத்தை அரசாங்கமே அங்கீகரிக்கிறது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால், அவர்கள் செய்வது கறுப்புப் பண ஒழிப்பா... அங்கீகாரமா?

கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடுங்கள். ‘500 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் பட்டியலைக் கொடுங்கள்’ என உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அதைக் கொடுங்கள். ‘லோக்பால் அமைப்புக்கு இன்னமும் நீதிபதி நியமிக்கப்படவில்லை. ஏன் நியமிக்கவில்லை?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா கொண்டுவாருங்கள். இவை அனைத்தையும் மோடியால் ஒரே நாளில் செய்ய முடியும். ஏன் செய்யவில்லை?

‘தினந்தோறும் தீபாவளிபோல மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குவோம்’ என மோடி சொன்னார். ஏழை, மத்தியதர வர்க்கத்தின் வயிற்றில் இப்போது வெடி வெடிக்கிறது. இதைப் பார்த்து நரகாசுரர்கள் சிரிக்கிறார்களே நரேந்திரமோடி!