Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

ம.செந்தமிழன் - படம்: வி.பால் கிரேகோரி - ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

ருத்துவம், நம் சமூகத்தில் வாழ்வியல் முறையாகவே இருந்தது. அதை முழுநேரத் தொழிலாக மாற்றியது, நவீன மருத்துவம்தான். மருத்துவம் வழியே கோடிகளைக் குவிப்பதை, அறம் மீறிய ஒரு செயலாகவே கருதினர். ஆனால் இப்போது, அதிகாரங்களும் செல்வமும் கொட்டிக்கிடக்கும் துறையாகிவிட்டது மருத்துவம். வாழ்வியல் நெறிகளைக் கற்றுத்தருவதுதான் ஒரு மருத்துவரின் கடமை. மருந்துகளைப் பரிந்துரைக்கும் நிலைமையே வராதவண்ணம், தம்மிடம் வரும் மனிதர்களை வழிநடத்துபவர்தான் சிறந்த மருத்துவர்.

உடல் நலம் என்பது, வாழ்வியல்முறையின் விளைவுதானே தவிர, ஏதோ ஒரு மருத்துவர் அளிக்கும் வரம் அல்ல. வாழ்வியல் நெறிகளை மட்டும் முறைப்படுத்திக்கொண்டால், எந்த நோய்க்கும் ஆட்படாமல் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். நமது மரபின் வழிநின்று நோயில்லா வாழ்வு வாழும் வழிமுறைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பசி, ஓய்வு, உழைப்பு, உடலுறவு - இந்த நான்கையும் மதித்து நடக்கும் எவருக்கும் நோய் குறித்த அச்சம் தேவை இல்லை. இந்த நான்கும் மனிதர்களுக்கு மட்டும் அல்ல... எல்லா உயிரினங்களுக்குமான இயல்பான உணர்வுகள். இவற்றின் அழைப்பை ஏற்றுக்கொள்வோருக்கு, நோய்களின் அழைப்பு இல்லை.

`ஏன் மனிதர்களுக்கு மட்டும் நோய்கள் வருகின்றன? மான்களுக்கும் சிறுத்தைகளுக்கும் மருத்துவர்கள் தேவைப்படுவது இல்லையே?' என உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

அமைதியாக அமர்ந்து, இந்தப் பூமியில் உள்ள ஒவ்வோர் உயிரினத்தையும் மனதில் கொண்டுவாருங்கள். பெருங்கடல்களில் துள்ளும் சிறுமீன் கூட்டங்கள், அவற்றின் ஆழத்தில் விரையும் சுறாக்கள், திமிங்கிலங்கள், இன்னும் ஆழத்தில் நகரும் எட்டுக்காலிகள் (ஆக்டோபஸ்), நண்டுகள், ஆமைகள் ஆகியவற்றின் துடிப்பும் வேகமும் உங்களுக்குள் பரவசத்தை ஊட்டட்டும்.

மலைபோல உயர்ந்த மரங்கள், அவற்றின் உச்சியில் கூடுகட்டி வாழும் பறவைகள், கிளைகளில் தொங்கும் வெளவால்கள், கூடு கட்டியுள்ள தேனீக்கள், ஏறி இறங்கி விளையாடும் மந்திகள், மரங்களின் கீழே நடமாடும் காட்டு எருமைகள், மான்கள், வேங்கைகள், யானைகள், காண்டாமிருகங்கள் இவற்றை எல்லாம் உங்கள் மனம் உள்வாங்கட்டும். இன்னும் ஆழமான அமைதியை உணருங்கள். பாலைவனத்துப் பாம்புகள், பாறைகளில் தாவி ஓடும் மலை ஆடுகள், ஆறுகளுக்குள் மறைந்து கிடக்கும் முதலைகள், அவற்றின் பிடியில் இருந்து தப்பும் வல்லமைவாய்ந்த வரிக்குதிரைகள், புல்வெளிகளில் புரண்டு வெயிலில் காயும் சிங்கங்கள், மரத்துக்கு மரம் தாவும் காட்டு அணில்கள் இன்னும் பல உயிரினங்கள் உங்கள் சிந்தையில் வந்து நிலைக்கட்டும்.

கண்களை சுகமாக மூடிக்கொண்டு, இந்தப் பூமியில் நம்மோடு வாழும் சக உயிரினங்களை மனதில் நிறுத்துங்கள். அவற்றின் அழகும் துள்ளலும் உங்கள் மனதுக்கு வலிமை ஊட்டும் வல்லமைகொண்டவை. ஆம், எந்தக் காட்சியை உங்கள் மனம் அதிகமாக உள்வாங்குகிறதோ, அந்தக் காட்சியின் குணத்தைத்தான் உங்கள் உடல் வளர்க்கும். நோய்கள், நோயாளிகள், மரணங்கள் ஆகியவைதான் உங்கள் மனதில் பதிக்கப்படுகின்றன என்றால், உங்கள் உடல் அவற்றை நோக்கித்தான் உங்கள் உயிரை அழைத்துச் செல்லும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனம்தான் உடலாகிறது; உடல்நலன்தான் உயிரை உறுதிசெய்கிறது. நோயற்ற வாழ்வை நோக்கிய பயணத்தை, மனிதர்களிடம் இருந்து தொடங்காதீர்கள். பூமியின் சக உயிரினங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு தொடங்குங்கள். ஏனெனில், உண்மையான உடல்நலன் அவற்றிடம் மட்டுமே இருக்கிறது.

தெருவில் அலையும் நாய்களின் உடல்நலன், மனிதர்களின் உடல்நலனைவிட சிறப்பானதாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து நோய்களைக் கற்றுக்கொள்ளலாம்; மற்ற உயிரினங்களிடம் இருந்து நலத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

நோய்களில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் மனதின் தனிமையை நீங்கள் உணர்ந்தே தீர வேண்டும். மாடுகளையும் ஆடுகளையும் பாருங்கள். இரை தேடி முடித்ததும், அவை தமக்கான தனிமையை அனுபவிக்கின்றன. மேய்ச்சல் காடுகளில் ஓயாமல் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் ஆடு - மாடுகள், மேய்ச்சல் முடிந்ததும் அமைதியில் ஆழ்வதைப் பாருங்கள். சிட்டுக்குருவிகள், வெளவால்கள், பருந்துகள் உள்ளிட்ட பறவைகள் யாவும் அடையும் வரை குரல் எழுப்புவதையும், அடைந்த பிறகு அமைதியடைவதையும் புரிந்துகொள்ளுங்கள். கண்ணுறங்கும் இறுதிக் கணம் வரை ஏதேனும் ஓர் இரைச்சலுக்குச் செவிசாய்க்கும் கெடு குணம், நவீன மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது.

மனதின் தனிமையையும் அமைதியையும் உணரவேண்டியது ஒவ்வோர் உயிருக்குமான இறைக் கட்டளை. எல்லா பரபரப்புகளில் இருந்தும் விடுபட்டு, அமைதியை நாடும் வழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். மாலை முதல் காலை வரை அமைதியில் மூழ்கிக்கிடக்கும் மனம், அதிகாலையில் புத்தெழுச்சியுடன் புறப்படும். பறவைகளும் பிற உயிரினங்களும் அதே நேரத்தில் ஓயா ஓசையுடன் எழும்புவதைப் பாருங்கள்.

இவ்வளவு தெளிவாக அமைதி அடையும் மனிதர்களின் மனதில் பசி, ஓய்வு, உழைப்பு, உடலுறவு ஆகிய நான்கு இயல்பான உணர்வுகளும் குடிகொள்ளும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

பசியை அறிந்துகொள்வது, இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நீண்ட பயணத்தின் குறுக்கு வழி. எவர் ஒருவர் ஒவ்வொரு வேளை உணவையும் பசியை உணர்ந்து உட்கொள்கிறாரோ, அவரது உடல் எந்தச் சூழலிலும் வலுப்பெறும் தகுதிகொண்டதாக இருக்கும். நமது உடல், உணர்வுகளால் இயங்கும் அற்புதப் படைப்பு; அறிவால் கட்டப்பட்ட கணிப்பொறி அல்ல. உடலின் ஒவ்வோர் அசைவுக்கும் உணர்வுதான் உத்தரவிட வேண்டும். அறிவு, அந்த உத்தரவுகளைச் செயலாற்றுவதற்கு உதவிசெய்ய வேண்டும். பசி என்பது உணர்வு. அந்த உணர்வின் கட்டளைக்கு ஏற்ப உடலில் செரிமானச்சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. பசிக்கும்போது உணவு உட்கொள்வோருக்கு, செரிமானம் சுமுகமாகவும் ஆற்றல் மிகுந்ததாகவும் உள்ளது. ஏனெனில், அவர்கள் தங்கள் உணர்வை மதிக்கிறார்கள்.

மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் நேரம் பார்த்துச் சாப்பிட வேண்டும் என்ற அறிவின் அறிவுரையைக் கடைப்பிடிப்போர், உடல்நலனை இழக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் உணர்வை இழந்து அறிவை அரவணைத்துக் கொள்கிறார்கள். பசிக்காமல் உணவு உட்கொள்வது என்பது, தேவை இல்லாத நேரத்தில் வயிற்றுக்குள் உணவைத் திணிப்பதாகும். உடல் கேட்காமல் உள்ளே திணிக்கப்படும் அமுதமும் நஞ்சாகத்தான் மாறும்.

செரிமானத்துக்காகவே உள்ள அமிலச் சுரப்பிகள் செயல்படும் முறைக்கும் உணவுக்கும் உறவு உண்டு. உங்களுக்கு பசி எனும் உணர்வு உருவாகும்போது, செரிமானச் சுரப்பிகள் தயாராகின்றன. உணவை நீங்கள் காணும்போதும், உணவைப் பிசையும்போதும், வாயில் மெல்லும்போதும் அந்தச் சுரப்பிகளின் அளவும் குணமும் மாறுபடும். ஒருவர் இட்லி உண்கிறார். மற்றவர் இறைச்சி உண்கிறார். இருவருக்கும் ஒரே அளவில் குணத்தில் சுரப்பிகள் சுரந்தால் நிலைமை என்னாகும்? ஒன்று, இட்லி உண்பவரின் வயிறு புண்ணாகும் அல்லது இறைச்சி உண்பவரின் உணவு செரிக்காமல் அப்படியே இருக்கும். இயற்கையில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவது இல்லை. நீங்கள் என்ன உணவை உண்கிறீர்களோ, அதற்கு ஏற்பதான் சுரப்பிகள் செயலாற்றும்.

கடிகார நேரத்தைப் பார்த்து, `இதுதான் செரிமானத்துக்கான நேரம்’ என முடிவுசெய்துவிட்டு, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட அளவிலும் அடர்த்தியிலும் சுரந்து காத்திருக்கும் செயற்கை அறிவு அல்ல நம் உடலின் சுரப்புகள். அவை யாவும் படைப்பின் மெய்யறிவுகள். அந்த மெய்யறிவுக்குத் தேவை, பசி எனும் உணர்வுதானே தவிர காலக்கணக்கு அல்ல. பசியின்மை அல்லது பசிக்குறைவு ஆகியவை உடல்நலம் குன்றியுள்ளதைக் காட்டும் அறிகுறிகள். ஒருவருக்கு பசியில் குறைபாடு இருக்கிறது என்றால், அவரது செரிமான மண்டலத்தில் சீர்க்கேடு உள்ளது எனப் பொருள். பசியை உணரும் பக்குவம் இருந்தால்தானே, செரிமானம் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்தக் காலத்து நோயாளிகளுக்கு விரிக்கப்பட்ட முதல் வலை, ‘நேரம் பார்த்துச் சாப்பிடுங்கள்’ என்ற அறிவுரைதான். இந்த வலையில் சிக்கினால்போதும், அனைத்து வகையான நோய்களும் உடலுக்குள் படையெடுத்துவிடும். ஏனெனில், பெரும்பாலான நோய்கள் செரிமானச் சீர்க்கேட்டால் உருவாகின்றன; பசிக்காமல் திணிக்கப்படும் உணவு, செரிமான மண்டலத்தைக் கெடுக்கின்றன.

தொப்பை அல்லது பெருவயிறு என்பது, பல நோய்களின் வெளிப்பாடு. நலம் மிகுந்த உடலில் பெருவயிறு இருக்கக் கூடாது. இயல்பாகவே வயிறு சற்று பெரிதாக இருப்பதை நான் குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வயிறு பெருத்துக்கொண்டேபோவதைக் குறிப்பிடுகிறேன்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25

பெருவயிறு விழுவதற்கான முதல் காரணம், பசிக்காமல் உண்பது. பசி எனும் அழைப்பு இல்லாதபோது உள்ளே தள்ளப்படும் உணவு முழுமையாகச் செரிப்பது இல்லை. குடலிலும் இரைப்பையிலும் நீண்ட நேரம் தேங்கியிருக்கும் உணவில் இருந்து காற்று உருவாகிறது. இதுதான் பெருவயிற்றின் முதல் அடி. பசியின்றி உண்டவர்களின் உடலில் காற்று மிகுவதை அவர்களாலேயே உணர முடியும். அடுத்த வேளை உணவையாவது பசிக்கும் வரை தள்ளிவைத்தால், உள்ளே உருவான காற்று ஏப்பமாகவும் ஆசனவாய் வழியாகவும் வெளியேறி வயிறு தூய்மையாகும். பின்னர் பசிக்கும்போது உணவு கொண்டால், செரிமானம் எளிதாகும்; காற்றுத் தேக்கத்துக்கும் வாய்ப்பு இல்லை.

இப்போது நம் சமூகத்தில் உருவாகியுள்ள பெருவயிற்றுத் தொல்லையை, கடந்த காலத்தில் எவரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது. பெரும்பாலோர் பெருவயிற்றுடன் இருக்கிறார்கள். நமது வயிற்றில் உள்ள குடலும் இரைப்பையும் விரிந்துகொடுக்கும் தன்மைகொண்டவை. மிகையான உணவு உள்ளே வந்தாலும் அவற்றை உள்ளே வைத்துக்கொள்ளும்படியான படைப்புகள் அவை. பசிக்காமல் தொடர்ந்து உணவு உள்ளே தள்ளப்பட்டால், இரைப்பையும் குடலும் புடைத்துக்கொண்டே இருக்கும்.

உணவு செரித்துவிட்டால், வயிறு சுருங்கி சுகமான உணர்வு உடல் முழுவதும் நிறைந்திருக்கும்; உடல் எடை இழந்ததுபோல இருக்கும்; எந்தச் செயலையும் விரைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இந்த நிலையுடன் பணிகளில் ஈடுபடும்போது, பசி உருவாகும். அந்தப் பசியும் சுகமான உணர்வாக இருக்கும். இந்த நிலையில்தான் அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும். இந்த இரு வேளைகளுக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் என்பதைக் கணக்கிடாதீர்கள்.

பசித்தால் மட்டுமே சாப்பிடுவோருக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பசி உருவாகும். அதுதான் அவர்களுக்கான உணவு நேரம். பசிக்காமல் சாப்பிடும் வழக்கத்தில் இருந்து, பசித்துச் சாப்பிடும் இயல்புக்கு மாறும்போது தொடக்கத்தில் கால இடைவெளியில் சீரற்ற தன்மைகள் இருக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்படாமல், பசிக்காகக் காத்திருந்து சாப்பிடுங்கள்.

அலுவலகப் பணிகள் காரணமாக, பசிக்கும்போது உணவுக்குச் செல்ல இயலாதவர்கள், எப்போதும் கஞ்சி அல்லது கூழ் வகைகளை வைத்துக்கொள்ளலாம். பசி தொடங்கும்போது இவற்றைப் பருகினால், சிறிது நேரத்துக்குப் பசி தணியும்.

தேநீர், பலகாரங்கள், ரொட்டிகள், பானங்கள் போன்றவற்றை பசிக்கும்போது உட்கொள்வதை நிறுத்திவிட்டு, கஞ்சி /கூழ் வழக்கத்துக்கு மாறுங்கள். உடல் நலம் என்பது, நோய்களில் இருந்து விடுபடுவது அல்ல; கேடு செய்யும் வாழ்க்கைமுறைகளில் இருந்து விடுபடுவது.

`பசி என்றால் எப்படி இருக்கும்?’ என்ற கேள்வியை, பலர் என்னிடம் கேட்பது உண்டு. இறைக்காட்சி கிடைக்கும் வரை காத்திருப்பதுதான் தவம். பசியை உணரும் வரைக்கும் உண்ணாது இருப்பதுதான் பசியை உணரும் வழி. அதுதான் நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் பாதை!

- திரும்புவோம்...