Published:Updated:

உயிர் கேட்குமா நிலம்?

உயிர் கேட்குமா நிலம்?
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் கேட்குமா நிலம்?

இரா.கலைச்செல்வன் - படங்கள்: ஸ்ரீனிவாசன்

உயிர் கேட்குமா நிலம்?

ந்த அட்டைப்பூச்சியை எறும்புகள் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. அதில் இருந்து தப்ப, அட்டைப் பூச்சி தன் உடலை நெளித்து வளைத்து மெதுவாக ஊர்ந்து சென்றது. எறும்புகள் விடவில்லை. ஒருகட்டத்தில் அட்டைப்பூச்சி உயிர்விட்டது. எறும்புகள் அதைச் சுவைத்து உண்ண ஆரம்பித்தன. இதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கூடலூர் வனப்பகுதியில் இருக்கும் செம்பாக்கொல்லி மலைக் கிராமத்துக்குள் செல்ல அனுமதி கிடைத்ததாக, நம்முடன் வந்த பழங்குடியின இளைஞர் சுரேஷ் சொன்னார். வனக் கதவுகள் திறக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வனப்பகுதியில் பனியர், பெட்ட குரும்பர், காட்டு நாயக்கர், முள்ளு குரும்பர், இருளர் என ஐந்து பழங்குடி இனங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து​வருகிறார்கள். காடும் கானுயிர்களும் பெட்ட குரும்பர்களின் உயிர் உணர்வோடு கலந்தவை. யானைகளோடு பேசும் அளவுக்கு அதோடு நெருக்கம்கொண்டவர்கள். இன்றும் முதுமலைக் காடுகளில் இருக்கும் யானைகளின் பாகன்கள் பெரும்பாலும் பெட்ட குரும்பர்களே. வேட்டைத் தொழிலைப் பிரதானமாகக்கொண்டு, காட்டு வாழ்க்கையின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர்கள் முள்ளு குரும்பர்கள். தேன் எடுப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள் காட்டு நாயக்கர்கள். விவசாயப் பின்புலம் கொண்டவர்கள் பனியர்கள்... என ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு வரலாறு, கலாசாரம் இருக்கிறது. ஆனால், இன்று இந்த இனங்கள் சிலந்திவலையில் சிக்கிய பூச்சிகளாகப் பரிதவிக்கின்றன.

உயிர் கேட்குமா நிலம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த மேட்டுப் பகுதியைக் கடப்பது சிரமமாக இருந்தது. காடுகள் சூழ்ந்த அந்தப் பகுதியின் ஒற்றையடிப் பாதையில் நடந்துகொண்டே, சில வரலாற்றுப் பிழைகளைச் சொன்னார் கூடலூர் பழங்குடியின மக்களின் நில உரிமைகளுக்காகப் போராடும் அக்கார்டு ( ACCORD ) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டான்.

``அந்தக் காலத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 80 ஆயிரம் ஏக்கர் காடுகள் நீலம்பூர் கோவிலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்களிடம் இருந்து அந்தக் காடுகளை, 99 வருடக் குத்தகைக்கு எடுத்தனர் 12 டீ எஸ்டேட்கள். அவர்களுக்கான குத்தகைப் பட்டயமும் வழங்கப்பட்டது. இந்தக் குத்தகைத்தாரர்கள் ஜென்மீக்கள் என்றும், இந்த ஜென்ம நிலங்கள் இந்திய அரசாங்கத்தின் நிலப்பிரிவின் செக்‌ஷன் 17 நிலங்கள் எனவும் வரையறுக்கப்பட்டன.  1969-ம் ஆண்டு ஜென்ம ஒழிப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 1974-ல் அமல்படுத்தப்​பட்டது.

உயிர் கேட்குமா நிலம்?

இதன்படி, சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நில உரிமைகளுக்கான அத்தாட்சிகளைக் கொடுத்து பட்டா வாங்கிக்கொள்ளலாம் எனவும், அது இல்லாதவர்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து எஸ்டேட்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. `வழக்கு முடியும் வரை நிலங்களை உபயோகிப்பவர்களுக்கான உரிமை தொடரும்’ எனக் கூறியது உச்ச நீதிமன்றம். 99 வருடக் குத்தகை எப்போதோ முடிந்துவிட்டது. 33 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு, `ஒன்பது நீதிபதிகளைக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மாநில அரசாங்கம் இந்த நிலப்பகிர்வு மற்றும் பட்டா வழங்குதல் குறித்த முடிவை எடுக்க வேண்டும்' எனத் தீர்ப்பு அளித்தது. ஆனால், தமிழக அரசு இன்று வரை இதில் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

ஒரு பக்கம் உரிமையற்ற பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை எஸ்டேட்கள் அனுபவிக்கின்றன. மறுபுறம், இந்த நிலப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியினர் நில உரிமையற்றுப் பரிதவிக்கின்றனர்'' எனப் பிரச்னையின் அடித்தளத்தைச் சொன்னார் ஸ்டான்.

செம்பக்கொல்லி கிராமம் வந்துவிட்டது. நீளமான ஒரு குடிசை காலியாக இருந்தது. அது `அம்பாலி'. அவர்களின் கோயில்.  சிலைகள் எதுவும் இல்லை. காடுதான் கடவுள். அதை ஒருமுறை வணங்கிவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்  ஊர் பெரியவர் மூப்பன்.

உயிர் கேட்குமா நிலம்?

``எங்கள் வரலாற எழுத உங்க புத்தகத்துல இடம் இருக்காது. ஆனால், இந்த இனம் இன்னிக்கு அப்படியா இருக்கு? காட்டு வாழ்க்கையை வாழவே முடியாத ஒரு நிலை. எங்களோட பாரம்பர்ய வாழ்க்கையை வாழ காட்டில் அனுமதி இல்லை. நில உரிமை இன்னும் முழுசா கொடுக்கப்படலை. எங்கள் இடத்தைத் தாண்டி இருக்கிற எஸ்டேட்டுக்கு கரன்ட் வசதி இருக்கு. எங்களுக்கு இல்லை. எங்களோட வாழ்க்கையையும் வாழாம, பொதுச் சமூக வாழ்க்கையும் புரிபடாம, எங்க புள்ளைங்க ரொம்பச் சிரமப்படுதுங்க. வன உரிமை அங்கீகாரச்  சட்டம் (2006), எங்​களுக்கு அத்தனை உரிமை​களைக் கொடுக்குது. ஆனால், அதை இன்னும் முறையா, முழுமையா அமல்படுத்தலை. சும்மா கணக்குக்கு ஏதோ செஞ்​சுட்டு யாரை ஏமாத்தப்போறாங்க?''  என்று கோபம் கொந்தளிக்க, தன் கைத்தடியை ஊன்றியபடியே அங்கு இருந்து நகர்ந்தார் மூப்பன்.

பனியர்கள் அதிகம் வசிக்கும் ஓடக்கொல்லி கிராமத்தை நோக்கிக் கிளம்பினோம். நம்முடன் வழிகாட்டியாக வந்தார் பெட்ட குரும்பர் இனத்தைச் சேர்ந்த சுரேஷ்.

``இந்த உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு சிறந்த சட்டம், வன உரிமை அங்கீகாரச் சட்டம் (2006). அதுல எங்களுக்கான நில உரிமை, காட்டுக்குள் எங்களுக்குத் தேவையான பொருட்களைச் சேகரிப்பது, சாலை-மின் வசதி உள்பட எங்கள் வாழ்வை மேம்படுத்தும் பல உரிமைகள் இருக்கு. தமிழகம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இது பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்திருச்சு. ஆனால், இங்கதான் அதற்கு எதிரா வழக்கு போட்டாங்க. அதுலகூட உயர் நீதிமன்ற ஆலோசனைப்படி செய்யணும்னுதான் சொல்லியிருந்தாங்க. ஆனா, நீதிமன்றம் சட்டத்துக்கே தடை விதிச்ச மாதிரி சொல்லி, இதுவரை அதை அமல்படுத்தவே இல்லை.

உயிர் கேட்குமா நிலம்?

கடந்த பிப்ரவரி மாசம் மீண்டும் நீதிமன்றம் இதை முழுவீச்சில் அமல்படுத்தணும்னு சொல்லி யிருக்காங்க. இந்தச் சட்டத்தின் கீழ் நில உரிமை கேட்டு, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் இருந்து மட்டும் 1,700 விண்ணப்பங்கள் போட்டிருக்கோம். ஆனால், இதுவரைக்கும் ஒருத்தருக்குக் கூட பட்டா கிடைக்கலை. எங்களுக்கு இருக்கிற பல பிரச்னைகளுக்கான முதல் தீர்வே நில உரிமை வழங்குறதுதான்'' என்று அவர் வேதனைப்பட்டபோது, தார் சாலை நிறைய மது பாட்டில்களும் பீடி துண்டுகளும் கிடந்தன. ஒரு விரக்திப் புன்னகையோடு அந்த மண் சாலையில் நடக்க ஆரம்பிக்கிறார்.

பனியர்கள் பல விஷயங்களில் இன்னும் பழமை மாறாமல் இருக்​கின்றனர். அந்தப் பெண்களின் உடைகள் வித்தியாசமாக இருக்கின்றன. சமையலுக்கு அவர்கள் உபயோகிக்கும் உபகரணங்களிலும் புதுமை நுழைய​வில்லை.

``பண்டைக் காலத்துல நெல் மட்டும்தான். அதுவும் செட்டிமாருங்க கொஞ்சம்தான் தருவாங்க. இன்னிக்கு 35 கிலோ அரிசி என்ன, சர்க்கரை என்ன, டீ தண்ணி தூள் என்ன... எல்லாம் இருக்கு. ஆனா, நிம்மதி மட்டும் இல்லாமப்போயிடுச்சு. எங்க கலாசாரத்துல குடி கிடையவே கிடையாது.  ஆனா, கவர்மென்ட் எப்ப பக்கத்து கிராமத்துல இந்தக் கடையை ஆரம்பிச்சதோ... அன்னிலேருந்து ஆம்பளைங்க, பொம்பளைங்க, சின்னச் சின்னப் பசங்ககூட குடிக்குதுங்க. இதை நான் யாருகிட்ட சொல்ல?'' எனக் குரல் கம்மக் கேள்வி கேட்டு, கண்கள் சுருங்க எங்கேயோ வெறித்துப் பார்க்கிறார் குள்ளி பாட்டி.

உயிர் கேட்குமா நிலம்?

அடுத்து, கொடமுலா என்ற கிராமத்துக்குப் போகும் வழியில் உள்ள மண்வயல் டாஸ்மாக் கடையைப் பார்த்தோம். காடுகளில் வாழ்க்கை சரிவர அமையாத​தால், பெரும்பாலான பழங்குடியினர் கூலி வேலைக்குச் செல்கின்றனர். தினம் வரும் வருமானத்தை வீட்டுக்குக் கொண்டு​செல்வதற்கு முன்னரே, டாஸ்மாக் அதைப் பிடுங்கிக்கொள்கிறது. சில நூறுகளுக்காக தங்கள் ரேஷன் கார்டுகளை அடமானம் வைத்து குடிக்கும் கொடூர நிலை இங்கு நிலவுகிறது. காட்டில் யானைகளோடு பேசி விளையாடிய இனம்,  இன்று போதையில் குப்பிகளோடு பேசிக்கொண்டிருக்கிறது.

பட்டச்சி என்கிற குழந்தையின் வலது கைவிரல்கள், நெருப்புப் பட்டதால் உருகி ஒட்டியிருந்தன. அந்தக் குழந்தையை தன் மடியில் வைத்திருந்த கீதா பாட்டி, ``இந்த எஸ்டேட்டை உருவாக்கியதே நாங்களும் எங்களோட மூதாதையர்​களும்​தான். எங்களை அவ்வளவு கொடுமைப்படுத்தி வேலைவாங்கி இன்னிக்கு சக்கையா தூக்கிப் போட்டுட்டாங்க. இப்ப நாங்க இருக்கிற இடத்திலேருந்தும் நீக்க முயற்சி பண்றாங்க. ஆனா, நாங்க போக மாட்டோம். எங்களை வெட்டிக் கூறுபோட்டாலும் இந்த நிலத்தை விட்டுப் போக மாட்டோம். எங்க பாட்டன், முப்பாட்டன்கள் எலும்புகள்தான் இந்த மண்ணுக்கு உரமாகியிருக்கு. அதுலதான் இவங்க எஸ்டேட் போட்டிருக்காங்க. என்ன நடந்தாலும் எங்களோட இந்த மண்ணை விட்டுப் போக மாட்டோம்'' என்கிறார் உக்கிரமாக.


நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு அந்தப் பழங்குடிப் பெண்கள் தங்கள் மூதாதையப் பாடலைப் பாடத் தொடங்கினர். அந்த மொழி புரியவில்லை. ஆனால், அதில் இருந்த வலி புரிந்தது!

``செக்‌ஷன் -17 நிலத்தைப் பொறுத்தவரை... அது ஓர் இடியாப்பச் சிக்கல் மாதிரி. அரசாங்கம் கொள்கை

உயிர் கேட்குமா நிலம்?

முடிவு எடுக்காத வரை, அதை ஒன்றும்செய்ய முடியாது. ஆனால், வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறோம். பழங்குடியினரின் சில நிலங்கள் செக்‌ஷன் 17-ல் வருகிறது. அதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியாது. மற்ற இடங்களில் சர்வே எடுப்பது, பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற வேலைகளில் இருக்கிறோம். மொத்த நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 82 விண்ணப்பங்களை அங்கீகரித்து, அரசின் பார்வைக்கு அனுப்பி​யுள்ளோம். அவர்கள் அனுமதி கொடுத்தால், பட்டா வழங்கப்படும். சர்வேயர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணி கொஞ்சம் தாமதப்படுவது உண்மைதான்'' என்கிறார் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர்.

``கூடலூர் ரொம்பச் சிக்கலான பகுதி. செக்‌ஷன் 17 நிலம், எஸ்டேட்கள், பழங்குடி இனப் பிரச்னை, மனிதர்கள்

உயிர் கேட்குமா நிலம்?

- வனவிலங்கு​களுக்கு இடையே​யான முரண்பாடு என ஒன்றோடு ஒன்று தொடர்பு​கொண்ட வையாக இருக்கின்றன. வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால், இந்தப் பகுதியில் வனம் எங்கு இருக்கிறது என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. சுதந்திரக் காலத்தில் ஒரு லட்சம் ஏக்கர் காடு இருந்த இடத்தில், இன்று வெறும் 10,000 ஏக்கர் காடு மட்டுமே இருக்கிறது. மேலும், நான் இங்கு பதவி ஏற்று இரண்டு மாத காலம்தான் ஆகிறது. அதனால், பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண கொஞ்சம் கால அவகாசம் பிடிக்கும்'' என்கிறார் கூடலூர் மாவட்ட வன அலுவலர் பி.கே. திலீப்.