Published:Updated:

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

ஆசை - அவரை முதல் அல்வா வரை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசை - அவரை முதல் அல்வா வரை!

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: எல்.ராஜேந்திரன்

`நான் சோம.அழகு. பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் ஆய்வு மாணவி. படித்து முடித்ததும், நிச்சயம் கணிதத் துறையில்தான் பணியில் இருப்பேன். எனினும், குடும்பத்துக்காக தமது கனவுகளைக் காவுகொடுத்துவிட்டுப் பணிக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்க்க ஆசை' - திருநெல்வேலியில் இருந்து தகவல் வந்ததும், அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டோம். `‘சூப்பர் மார்க்கெட்டில் பில்போடுவது, பங்க்கில் பெட்ரோல் போடுவது, சர்வராக உணவு அளிப்பது என, பல வேலைகளை ஒரு நாளில் செய்து வாழ்ந்துபார்க்க ஆசை'’ என்றார் அழகு.

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

அப்பா சோமசுந்தரம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர். அம்மா தங்கம், இயற்பியல் பேராசிரியை. தங்கை சோம.ஆனந்தி, இளங்கலை கணித மாணவி. வீட்டின் வரவேற்பறை, புத்தகங்களால் நிரம்பியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அழகுவை அழைத்துக்கொண்டு முதலில் சென்றது, சில்லறை விற்பனையில் மிகப்பெரிய சந்தையான பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மார்க்கெட்டுக்கு. உள்ளே நுழைந்து, கொஞ்சம் பெரிய கடையைத் தேர்ந்தெடுத்தோம். விஷயத்தைச் சொன்னதும், கடையின் உரிமையாளர் விஜய்  உற்சாகமாகச் சம்மதித்தார். பலகைகளில் சுற்றிலும் காய்கறிக் கூடைகள் அடுக்கப்பட்டிருக்க, ‘`உள்ளே போய் நின்னுக்கம்மா. நீயே சேல்ஸ் பண்ணு’' என்று விஜய் சொன்னதுதான் தாமதம், கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு பலகையில் ஏறி உள்ளே குதித்தார் அழகு.

இரண்டு நிமிடங்கள் நின்று கவனித்தவர், அடுத்த நொடி ‘‘பாலாண்ணா... பீன்ஸ், கேரட், பீட்ரூட் விலை எல்லாம் சொல்லுங்கண்ணா'’ என்று அருகில் இருந்த பாலமுருகனிடம் கேட்க, ‘`நீ எடை மட்டும் போட்டுக் குடும்மா. அதெல்லாம் பில்லிங்ல பார்த்துப்பாங்க’' என்றார் பாலா. தராசில் ‘ஜீரோ’ செட் செய்வதை மட்டும் சொல்லிக்கொடுத்துவிட்டு அவர் தனது வேலையைப் பார்க்க, கடைக்கு வந்த ஒரு பெண்மணியிடம் வியாபாரத்தை ஆரம்பித்தார் அழகு.

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

`எத்தனை கத்திரிக்காய் வெச்சாலும் கரெக்ட்டா 500 கிராம் வரலையே’ என வடிவேலு கணக்காக இவர் சிந்தித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த பாலா, ‘`அச்சச்சோ! அவ்ளோ கரெக்ட்டா எல்லாம் வராதும்மா'’ என்று இரண்டு காய்களைச் சேர்த்துப் போட்டு கூடையில் கொட்டினார். பிறகு, அங்கு இருந்த இரண்டு மணி நேரமும் மளமளவென எடைபோட்டு, கடைக்காரர்களையே அசத்தினார் அழகு.

நெக்ஸ்ட் ஸ்டாப்பிங், தச்சநல்லூர் பெட்ரோல் பங்க். உரிமையாளர் சௌந்தர்ராஜன், அழகுவை அழைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். கொஞ்ச நேரத்தில் சீருடை, தொப்பி, தற்காலிக அடையாள அட்டை தயாராக, களமாடத் தயாரானார் அழகு. காயத்ரி என்கிற ஊழியர், வாகனத்தை எப்படி நிறுத்துவது, மீட்டர் ஜீரோவில் இருப்பதை வாடிக்கையாளருக்கு எப்படி உறுதிப்படுத்துவது போன்றவற்றைச் சொல்லி டெமோ காண்பித்தார்.

எரிபொருள் நிரப்பத் தயாரானார் அழகு. பைக் ஒன்று வந்து நிற்க, ‘`எவ்ளோவுக்குண்ணா?'’ என்று கேட்டு தேர்ந்த ஊழியர்போல எரிபொருள் நிரப்பினார். பார்த்துக்கொண்டு நின்ற சகஊழியர்கள், அந்த வண்டி போனதும், ‘`பரவாயில்லையே! டக்னு பம்பை எடுத்துடுவீங்கன்னு நினைச்சோம். கரெக்ட்டா டிராப் ஆகுறவரை விட்டு எடுக்குறீங்க'’ எனப் பாராட்டுப் பத்திரம் வாசித்தனர். ‘`ப்ரோ, வண்டியில் பெட்ரோல் அடிக்கிறப்ப நான் எத்தனை தடவை கவனிச்சிருக்கேன்!'’ என்று பெருமைப் பட்டுக்கொண்டார் அழகு.

பங்கில் இருந்து அடுத்த இலக்கு, ஹோட்டல். உரிமையாளர் ராம்குமார், விகடன் வாசகர். விஷயத்தைச் சொன்னதும் உற்சாகமாகிவிட்டார். மேலாளரையும் சூப்பர்வைஸரையும் அழைத்து அழகுக்கு ட்ரெய்னிங் கொடுக்கச் சொன்னார்.

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

``வாடிக்கையாளர்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், சர்வர் புன்சிரிப்புடன்தான் அணுக வேண்டும்'' என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னார் மேலாளர். சீருடையை அணிந்துகொண்டு ஹோட்டலுக்கு வந்தார் `சர்வர் அழகு'.

வந்ததும் இலைகளை எடுத்துக்கொண்டு பணிக்குத் தயாரானார். டோக்கன் வாங்கிக்கொண்டு வாடிக்கை யாளர் வர, அவரிடம் சென்று அமரச் சொல்லிவிட்டு இலையைப் போட்டார். ‘`கூட்டு வைம்மா'’ என்று மற்றொரு சர்வர் சொல்ல, ‘`மொதல்ல உப்புண்ணே'’ என்று சொல்லிவிட்டு உப்பை வைத்தார். ``அட!'' என்று ஆச்சர்யப்பட்டு மற்றவர்கள் விலகிவிட, கூட்டு, பொரியல் என ஒவ்வொன்றாகப் பரிமாற ஆரம்பித்தார். அழகுவின் உபசரிப்பில் வாடிக்கையாளர் முகத்தில் நிறையவே மகிழ்ச்சி.

ஹோட்டலில் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, சூப்பர் மார்க்கெட்டுக்கு விரைந்தோம்.

‘`நீங்களே போய் பெர்மிஷன் கேளுங்க’' என்று விளையாட்டாகச் சொன்னோம். அழகு, சிறிதும் தயங்காமல் உள்ளே சென்றார். அங்கு இருந்த ஊழியர் சலாலுதீனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வந்தார்.

வரும் வாடிக்கையாளர்களை அழகு இருக்கும் கவுன்ட்டருக்குத் திருப்பிவிட, முதலில் தடுமாறி பிறகு ஏதோ சொல்லிச் சமாளித்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் அவுட் ஆஃப் ஸ்டாக் அயிட்டங்களைப் பற்றி தெரியாமல் தடுமாற, அழகுக்கு பில்லிங் வேலை தரப்பட்டது. அங்கே கொஞ்ச நேரம் நின்று சிலருக்கு பில் போட்டுக் கொடுத்தார். கூடவே அங்கே வேலை பார்க்கும் பெண்களிடம் செம அரட்டை!

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

``சரி, பில்லிங் போதும். பொருட்களை அடுக்கலாம் வாங்க’' என்று ஒரு பெண் அழைத்துக்கொண்டு போய் வேலைகள் கொடுத்தார். அங்கும் தொடர்ந்தது அரட்டை. விடைபெறும்போது அத்தனை பெண்களும் ஒன்றுகூடி வழியனுப்ப, நெகிழ்ந்துபோனார் அழகு. ‘`பார்ட் டைம் ஜாப் மாதிரியாவது கேட்டுட்டு இங்கே வரணும்ணே... இவங்களுக்காக!’' என்றார் நெகிழ்ச்சியாக.

`‘நான் மூணு இடங்கள்தான் கேட்டேன். நான்கு இடங்களுக்கு என்னை அழைத்து வந்த விகடனுக்கு...'’ என்று நன்றி நவிலத் தொடங்கியவரைத் தடுத்து நிறுத்தினோம். “அவசரப்படாதீங்க. இன்னொரு சர்ப்ரைஸ் வேலை இருக்கு. அதையும் செஞ்சுடுங்க” என்று சஸ்பென்ஸ் வைத்தபடி அவரை அழைத்துச் சென்றோம். ``எங்கே... எங்கே..?'' என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

நாம் அழகுவை அழைத்துச்சென்றது, உலகப் பிரசித்திபெற்ற ஒரு கடைக்கு. ஆம், இருட்டுக்கடை அல்வா கடை. கடையில் பெயர்ப்பலகைகூட இல்லை. ஆனால், குண்டூசி நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். உரிமையாளர் ஹரி சிங்கிடம் விஷயத்தைச் சொன்னோம். ``வாங்க உள்ளே'' என அழகுவை அழைத்தார். தட்டுத்தடுமாறி அழகு உள்ளே நுழைந்ததும், ஓர் இலையில் அல்வாவை வைத்து அவர் கையில் திணித்து, ‘`எவ்ளோ சாப்பிட்டாலும் திகட்டாது. அந்த ஸ்டூல்ல உட்கார்ந்துச் சாப்பிடு'’ என்று சொல்லிவிட்டு, வேலையில் மும்முரமாகிவிட்டார்.

அவசரமாக அல்வாவை விழுங்கிவிட்டு, உள்ளே இருந்து கொடுத்த அல்வா பாக்கெட்டுகளை வாடிக்கையாளருக்கு அழகு எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். சில நொடிகளிலேயே வாடிக்கையாளர்கள் அழகுவிடம் பணத்தை நீட்டி ‘`ரெண்டு அரைக் கிலோ, மூணு ஒரு கிலோ'’ என மொய்க்க ஆரம்பித்தனர். அவரும் `கிடைத்த வாய்ப்பை விடக் கூடாது' என வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார்.

ஆசை - அவரை முதல் அல்வா வரை!

ஒரு மணி நேரம் அங்கு இருந்துவிட்டு வரும்போது, அழகுவின் முகம் முழுக்க ஆச்சர்யம் நிரம்பி வழிந்தது. `‘இது நிஜமான சர்ப்ரைஸ் சார். வாடிக்கையாளர்கள் எல்லாருமே என்னையும் கடையில் ஒரு ஆளா நினைச்சுட்டாங்க” என்று சின்னதாகச் சிரித்துக்கொண்டார்.

“எழுதிப்போட்டதும் தேர்வாகும்னு ஒரு நம்பிக்கை இருந்தது உண்மை. ஆனா, எனக்காக `ஆசை' டீம் இவ்ளோ தூரம் வரும்னு எதிர்பார்க்கவே இல்லை.


ஒவ்வோர் இடத்துலயும் நான் ரொம்ப ஜாலியா வேலை பார்த்தேன். ஆனா, குடும்பப் பாரத்துக்காக என் வயதுப் பெண்கள் இந்த வேலைகள் செய்ய எவ்வளவு சிரமப்படுறாங்கனு ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடிஞ்சது. இப்படி ஓர் அனுபவம் தந்த விகடன் என்னும் என் உயிர் தோழனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்” - உணர்வுபூர்வமாகப் பேசி முடித்தார், அழகு!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...
ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com