Published:Updated:

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி
பிரீமியம் ஸ்டோரி
இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

சி.ய.ஆனந்தகுமார் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

சி.ய.ஆனந்தகுமார் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்

Published:Updated:
இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி
பிரீமியம் ஸ்டோரி
இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

பாயும் காவிரி ஒருபக்கம், உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டை மறுபக்கம். எல்லா திசைகளிலும் யாரையும் எப்போதும் இன்முகம் காட்டி வரவேற்கும் இனிமையான மக்கள்... இவைதான் திருச்சியின் அடையாளங்கள். கல்லணையில் தொடங்கி வெவ்வேறு வரலாற்றுச் சுவடுகளைச் சுமந்து நின்றாலும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை எப்போதும் மாற்றிக்கொண்டுவரும் உற்சாக நகரம் திருச்சி. இப்போது எப்படி இருக்கிறது?

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

களைக்கட்டும் திருவிழாக்கள்

சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளி அம்மன் கோயில், குணசீலம் பெருமாள் கோயில், பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் என, சிறப்புவாய்ந்த கோயில்கள் திருச்சியில் இருப்பதால் பக்திமயமான நகரமாக உள்ளது. இதனால் வருடத்தில் பல மாதங்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலத்துடன் காணப்படும். ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி விழாக்களில் கொலு கண்காட்சி, பக்தர்கள் காணிக்கை செலுத்த இ-சேவை என அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை, ஊர்வலம் என நேர்த்திக்கடன்கள் செய்ய மக்கள் அதிகமாக வருகிறார்கள்.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சிஜாலியாக ஒரு ஷாப்பிங் ட்ரிப்

திருச்சி மட்டும் அல்லாமல், தஞ்சை, அரியலூர் பெரம்பலூர், புதுக்கோட்டை எனப் பல மாவட்ட மக்களுக்கும் ஷாப்பிங் ஸ்பாட் என்றால் திருச்சிதான். திருச்சி மெயின்கார்டு  கேட்டில் தொடங்கி காந்தி மார்க்கெட் வரை ஒரு ரவுண்டு அடித்தால், வீட்டுக்குத் தேவையான அனைத்தும் பர்ச்சேஸ் செய்துவிடலாம். பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்களில் திருச்சி பெரிய கடைவீதி, என்.எஸ்.பி ரோடு மலைக்கோட்டை கடைவீதி, W.B ரோடு, தெப்பக்குளம் பர்மாபஜார், சத்திரம் பெரியசாமி டவர் எனப் பல பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதை உணர்ந்த முன்னணி ஜவுளி, நகைக்கடை நிறுவனங்கள் திருச்சியில் கடை திறக்க ஆரம்பித்துள்ளன.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

குடியேறும் விருந்தினர்கள்

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் திருச்சி மாநகரில், சில வருடங்களாக ரயில்வே பணிகளுக்கும், வியாபாரத்துக்காவும் கர்நாடகா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பலரும் குடியேறுகின்றனர். ஜாபர்ஷா தெரு, காஜாப்பேட்டை, பொன்மலை முதலான பகுதிகளில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கிறார்கள்.

மலைக்கோட்டையைக் கவனிங்க

பழைமை வாய்ந்த மலைக்கோட்டைப் பகுதியில் பிரமாண்டமான கட்டடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தொல்லியல் துறைக்குச் சொந்தமான இடங்களில் 100 மீட்டர் தூரத்தில், எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பது விதி. ஆனால், மலைக்கோட்டையில் அந்த விதிகள் காற்றில் பறக்கின்றன. மலைக்கோட்டை மலைச்சரிவில் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்களைக் காண பக்தர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், அந்த ஓவியங்களின் தொகுப்பு முன்னர் மலைக்கோட்டை வாசலில் இருந்தது. இப்போது எதையும் காணவில்லை!

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

ஓ... பட்டர்ஃப்ளை!

திருச்சி முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, பச்சைமலை, புளியஞ்சோலை அருவி உள்ளிட்டவை வெளியூர் வாசிகளுக்குப் பிடித்த சுற்றுலாத் தலங்கள். இவற்றில் இன்னும் கூடுதல் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது, பல வருடக் கோரிக்கையாகவே உள்ளது. ஸ்ரீரங்கம் மேலூரில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கான பாதைகள் சரியாக இல்லை என்பதும், ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையமே இல்லை என்பதும் வேதனை!

தொழில்கள் முடங்குதே!

திருச்சியில் அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலை, பெல் நிறுவனம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி என மத்திய அரசின் நிறுவனங்கள்தான் திருச்சியின் பலம். சமீபகாலமாக திருச்சி பெல் தொழிற்சாலையை நம்பி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடுவிழா கண்டுள்ளன. மின்தடையில் ஆரம்பித்த பிரச்னையால் தொடர்ந்து ஆர்டர்கள் குறையவே, திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் இயங்கிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டேபோகின்றன. இதனால் குடும்பங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன.

உயிர்வாங்கும் சாலைகள்

திருச்சி, தமிழகத்தில் மற்ற நகரங்களைவிட சின்ன நகரம். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிக்க ஊர். இதைச் சமாளிக்க சரியான திட்டம் இல்லை. திருச்சி ஒருங்கிணைந்த மத்தியப் பேருந்து நிலையம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதேபோல் ஜங்ஷனில் மேம்பாலமும், ஸ்ரீரங்கம் - திருவானைக்கோவில் பாலப்பணிகளும் ஜவ்வாக இழுக்கின்றன. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள சாலைகளில் நடக்கும் விபத்துக்களில் உயிர்ப்பலி எண்ணிக்கை டிக்கொண்டேபோகிறது.

தமிழும் திருச்சியும்

திராவிட இயக்க வரலாற்றில் திருச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனாலேயே தமிழ் சார்ந்த நிகழ்வுகள், சமூகம் சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் திருச்சி முழுக்க இப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன. வயல், திருச்சி நகைச்சுவை மன்றம், மணற்கேணி வாசகர் மன்றம், திருச்சி தூய வளனார் கல்லூரி முதலான அமைப்புகள் அடிக்கடி வெளியில் இருந்து சிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்களை அழைத்துவந்து சமூகம் சார்ந்த உரையாடல், விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

அரசியலும் திருச்சியும்

வார இறுதி நாட்களில் பொலிட்டிக்கல் ஃபீவர் திருச்சியில் அதிகமாகவே இருக்கும். சனி அல்லது ஞாயிறு நாட்களில் ஒரு கட்சி நிகழ்ச்சி, தலைவர் வருகை நிச்சயம் இருக்கும். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் அடிக்கடி மாநாடு நடப்பதால் பல அரசியல் அதிரடிகள் திருச்சியில் இருந்தே தொடங்கும். திருச்சி என்றால் திருப்புமுனை ஆச்சே!

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

சாதாரண பொறுப்புகளில் இருந்து அமைச்சராகி உள்ள வெல்லமண்டி நடராஜன், `தமிழக முதலமைச்சர் குணமடையும் வரை தாடியை எடுக்க மாட்டேன்' என முழு தாடியுடன் அரசியல் நிகழ்ச்சிகளில் வலம்வருகிறார். எப்போதும் அரசியல் அதிரடிகளுக்குச் சொந்தக்காரர் கே.என்.நேரு. ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அவரை அமைச்சராகவே பார்க்கும் தொண்டர்கள் இருப்பது அவரின் பலம். எம்.எல்.ஏ மகேஷ், தந்தை அன்பில் பொய்யாமொழியின் இடத்தை நிரப்பும் அளவுக்கு ஸ்டாலினின் நிழலாக வலம்வருகிறார்.

படிக்க... ஆள் பிடிக்கிறாங்க!

தமிழகத்தில் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியேயும் புனித வளனார் கல்லூரி, பிஷப் ஹீபர், காவேரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி, ஈ.வே.ரா பெரியார் என, கல்லூரிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தக் கல்லூரிகளால் பல முதல் தலைமுறையினர் கல்வி பெறுகிறார்கள் என்பது திருச்சியின் பெருமை. ஆனால், நிறைய தரமான கல்வி நிறுவனங்கள் இருந்தும்கூட பள்ளிக் கல்வி தேர்ச்சிவிகிதத்தில் திருச்சி டாப் 10-ல் இல்லை. ஊர் எங்கும் நிறைந்துகிடக்கும் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்க ஆள் இல்லை. பல பொறியியல் கல்லூரிகள், பேராசியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறுகின்றன. ஊருக்கு ஊர் முகவர்களை உண்டாக்கி, கமிஷன் கொடுத்து மாணவர்களை பொறியியல் படிப்புகளுக்குச் சேர்ப்பதும் நடக்கிறது.

மருத்துவ நகரம்

திருச்சி அரசு மருத்துவமனை, திருச்சி மட்டும் அல்லாமல் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல மாவட்ட மக்களின் நம்பிக்கையாக விளங்குகிறது. அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் உள்ளன. சமீபகாலமாக தைராய்டு, செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனை பல சாதனைகளைப் புரிந்துவருகிறது. ஆனால், மருத்துவமனைக்காக விலை உயர்ந்த கருவிகள் வாங்கப்பட்டு, இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது தொடர்ச்சியான குற்றச்​சாட்டாக இருக்கிறது.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

மெடிக்கல் டூரிஸம் திருச்சியில் அதிகரித்து​வருகிறது. எஸ்.ஆர்.எம்., அப்போலோ போன்ற பெரிய தனியார் மருத்துவமனைகள் திருச்சியில் கிளை பரப்பியுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள்

கோரையாறு, அரியாறு, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு என ஆறுகள், 30-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக, உய்யங்​கொண்டான் வாய்க்கால் ஒருகாலத்தில் 32 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசனம் கொடுக்கும் வாய்க்காலாக இருந்தது. ஆனால், உய்யங்கொண்டான் வாய்க்கால் இப்போது நகரத்துக்குள் மட்டும் ஓடும் கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது. இதைச் சீரமைக்க, 11 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடக்கின்றன... நடக்கின்றன... நடந்துகொண்டே இருக்கின்றன.

பெரிய பூந்தி தெரியுமா?

மதுரையில் பெயர்போன ஜிகர்தண்டா இப்போது திருச்சி கடைவீதிகளிலும் மலிந்து கிடைக்கிறது. கூடவே பாரம்பர்யமிக்க மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம், ஆதிகுடி காபி கிளப் ரவா தோசை, மயில் மார்க் பூந்தி, மணப்பாறை முறுக்கு என அத்தனையும் அவசியம் வெளியூர்க்காரர்கள் முயற்சிசெய்து பார்க்க​வேண்டியவை. திருச்சி பெரிய கடைவீதி ராவ் பிரியாணி, ஹக்கிம் பிரியாணியின் சுவைக்கு திருச்சிவாசிகள் சிக்கிக்கிடக்கிறார்கள்.


மணப்பாறை மாடும் மணச்சநல்லூர் அரிசியும்

மணப்பாறை மாட்டுச்சந்தை வாராவாரம் ஆரவாரமாகப் புதன்கிழமைகளில் நடக்கும். மாட்டுச்சந்தையில் உழவு மாடுகள், கறவை மாடுகள் என வியாபாரம் பல கோடி ரூபாய்க்கு நடக்கும். மணச்சநல்லூர் பொன்னிக்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. ஆனால், தண்ணீர்ப் பிரச்னையால் விவசாயம் முழுமை​யாக இல்லாததால், கர்நாடகா பொன்னி திருச்சி முழுக்க நிறைந்திருக்கிறது.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

தூய்மை நகரம்

இந்தியாவின் தூய்மையான நகரம் என இந்திய அளவில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களைத் தக்கவைத்துள்ளது திருச்சி. கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில், இந்தியாவிலேயே 2-வது இடம் பிடித்துள்ளது. கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து இந்தப் பட்டியல் வெளியிட்டதாகச் சொல்லப்​படுகிறது. ஆனால், இதை திருச்சிவாசிகளாலேயே நம்ப முடிய​வில்லை. குப்பைகளைத் தரம் பிரித்து அதை மறுசுழற்சி செய்யும் மையங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் திருச்சியில் தொடங்கப்பட்டது. அதற்குள் எப்படி விருது கொடுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
 
சினிமா நெருக்கம்

சினிமாவுக்கும் திருச்சிக்கும் மிக முக்கிய நெருக்கம் உண்டு. தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, நடிகர் சிவாஜி வாழ்ந்தது திருச்சியில்தான். அர்விந்த் சுவாமி, சிவகார்த்திகேயன், விமல், விஜய் ஆன்டனி உள்ளிட்டோருக்கும் திருச்சி மிக நெருக்கம். மாதம் ஒரு முறையாவது அம்மாவைப் பார்க்க திருச்சிக்கு விசிட் அடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

கழிப்பறை வைங்க சார்!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், 157 வருடங்கள் பழமையானது. இந்த ரயில் நிலையத்துக்கு, தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து போகிறார்கள். திருச்சி ஜங்ஷனில் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபைக்காக ஊர் மக்கள் பலரும் ஜங்ஷன் வாசலில் அதிகமாகக் கூடுகிறார்கள். ஆனால், அங்கு வந்து போகும் பயணிகளுக்குப் போதுமான அளவு கழிவறை வசதி இதுவரை செய்யப்​படவில்லை.

 விமானநிலையம் வளரட்டுமே!

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த பெரிய விமானநிலையம் திருச்சியில்தான் உள்ளது. பன்னாட்டு விமானநிலையமாக அறிவிக்கப்பட்ட பிறகு, விமானநிலைய விரிவாக்கத்துக்காக 3,000 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்டது. அந்த நிலத்தை மாநில அரசாங்கம் வழங்குவதில் இழுபறி நீடிப்பதால், விமானநிலைய வேலைகள் இன்னும் முடிவடையாமல் தேங்கிக் கிடக்கின்றன.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

திருச்சி டீம் எங்கப்பா?

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட ஆரோக்கியராஜு, ஐ.எஸ்.எல் வீரரான ராவணன் ஆகியோர் திருச்சியின் விளையாட்டு முகங்கள். திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் அடிக்கடி நடக்கும் மாநில அளவிலான போட்டிகள் பல வீரர்களை உருவாக்கிவருகிறது. பிரிட்டிஷ் காலத்திலேயே திருச்சியில் கிரிக்கெட் கிளப்கள் பிரபலம். நட்சத்திர கிரிக்கெட்டை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது திருச்சிதான். ஆனால், இப்போது கிரிக்கெட் கிளப்புகள் குறைந்துவிட்டன. சமீபத்தில் நடந்த  டி.என்.பி.எல் போட்டிகளில்கூட தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்களில் அணிகள் இருந்தன. ஆனால், திருச்சி பெயரில் அணி இல்லை.

போஸ்டருக்குப் போட்டி

எப்போதுமே திருச்சியில் கமல்-ரஜினி ரசிகர்கள் மத்தியில் தங்கள் தலைவரை வாழ்த்தி போஸ்டர் ஒட்டுவதில் பலத்த போட்டி இருக்கும். அது இப்போது விஜய், அஜித் ரசிகர்களாக மாற்றம் அடைந்திருக்கிறது. பட ரிலீஸ்போது எல்லாம் பட்டையைக் கிளப்பும் வாசகங்கள் அதிரவைக்கின்றன. திருச்சியில் மிகப் பழைமையான தியேட்டர்கள் என்றால் கலை​யரங்கமும் சிப்பி தியேட்டரும்தான். கலையரங்கம் தியாகராஜ பாகவதர் மன்றமாக இருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் நாட்டிய நிகழ்ச்சி நிதியில் கட்டப்பட்டது. இப்போது இந்தக் கலையரங்கம் மூடிக்கிடக்கிறது. மிகப்பெரிய தியேட்டரான சிப்பி, மூடப்​பட்டுவிட்டது.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

மாற்றும் அமைப்புகள்

தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் உயிரோடு இருந்த காலத்தில், திருச்சி மக்களுக்காக உதவிகள் செய்ய திருச்சி மாவட்ட நலப் பணிகள் குழு ஆரம்பித்தார். அந்த அமைப்பு இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பெரியார் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இப்போதும் அதே பாதையில் பயணிக்கின்றன. அன்பாலயம், விடிவெள்ளி, விழி இழந்தோர் பள்ளி உள்ளிட்ட பல அமைப்புகள் மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வழிகளைச் செய்துவருகின்றன.

இல்லாமல்போன குதிரை வண்டி

திருச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சாரட் குதிரை வண்டிகள் பிரபலம். எம்.ஜி.ஆர் படங்களுக்கு திருச்சி குதிரை வண்டிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால், இப்போது திருச்சியில் குதிரை வண்டிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

இது மகிழ்ச்சி கோட்டை! - திருச்சி

காவிரியைக் கவனிங்க!

காவிரியில் தண்ணீர் குறைந்துவிட்டது. ஆனால், மணல்குவாரிகள் அதிகரித்துவிட்டன. மணல் கொள்ளையால் காவிரி காணாமல்போகும் அளவுக்கு உள்ளது. இதைத் தடுத்திட, ஏராளமான போராட்டங்கள் நடந்தாலும் அதை எந்த அரசும் கண்டுகொள்ளாமல், அலட்சியப்போக்கையே கடைப்பிடிக்கிறது. இப்படியே போனால், `காவிரி' என்ற பெயர்ப்பலகை மட்டும்தான் இருக்கும் என எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!