Published:Updated:

சரிகமபதநி டைரி - 2016

சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி, படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார்

சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி, படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார்

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016

சகிக்க முடியாத சித்ரவதை!

டந்த வியாழன் அன்று மாலை அந்திமழை பொழிந்துகொண்டிருக்க, ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு முகம் தெரிய, அதில் ஒரு முகம் இசைஞானி இளையராஜா!

சரிகமபதநி டைரி - 2016

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 42-வது கலை விழாவைத் தொடக்கிவைத்து, வைஷ்ணவி சாய்நாத்துக்கு ‘நடனமாமணி’ விருது வழங்கினார் ராஜா. இளம் பாடகி கே.காயத்ரிக்கு ‘இசைப் பேரொளி’ விருது வழங்கியவர் டாக்டர் பப்பு வேணுகோபால ராவ். மியூஸிக் அகாடமி செயலர். பட்டம் பெற்ற இருவரும் டாக்டர் பட்டம் (பிஹெச்.டி.,) பெறும் முனைப்பில் இருப்பவர்கள். வைஷ்ணவிக்கு நடனம் தவிர, எவரெஸ்ட் ஏறி இறங்கிய அனுபவமும் உண்டு.

‘`இது மாதிரியான விழாக்களுக்கு, பெரும்பாலும் நான் வருவது இல்லை. எனக்கு எதிரி​லேயே மற்றவர்கள் என்னைப் பாராட்டிப் பேசுவதைக் கேட்பது, சகிக்க முடியாத சித்ரவதை” என்றார் இளையராஜா. அவர் இவ்வளவு சொன்ன பிறகும் தொகுப்பாளர் கட்டைக்குரலில், ‘ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்லை...’ எனப் பாடியது இன்னொரு வகை சித்ரவதை!

சரிகமபதநி டைரி - 2016

காபி வித் நித்யஸ்ரீ

நடுவில் ஓரிரு வருடங்கள் கச்சேரி மேடைகளில் சற்றே ‘மவுஸ்’ குறைந்துவிட்ட மாதிரி காணப்பட்ட நித்யஸ்ரீ, இப்போது பழைய ‘Form’க்குத் திரும்பி சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார்.

பவன்ஸ் கலை விழாவில் இவர் பாடிய தினம், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா மறைந்த நாள். தொடக்கமாக பாபநாசம் சிவனின் ‘தத்வமரிய தரமா...’வை ரீதிகௌள ராகத்தில் பாடிவிட்டு, அந்தப் பிதாமருக்கு சுருக்கமாக, அழகாக, தெளிவாக நான்கு வார்த்தைகள் பேசி மரியாதை செலுத்தினார். குழுமி இருந்தவர்களை ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். நாங்களும் அமர்ந்த நிலையிலேயே செலுத்தினோம்.

சரிகமபதநி டைரி - 2016

‘தேவாதி தேவ...’வை (மைசூர் வாசுதேவாச்சாரின் சுநாதவினோதினி ராகப் பாடல்) ஒருமுறை பாலமுரளி பாடக் கேட்டாராம் நித்யஸ்ரீ. அப்படியே ஈர்க்கப்பட்டு, அந்தப் பாடலைக் கற்றுக்கொண்டிருக்கிறார். நிறையப் பயிற்சியும்​செய்து, அவ்வப்போது கச்சேரிகளில் பாடிவரு​கிறாராம். பவன்ஸில் இந்தத் தகவல் பரிமாற்றம் செய்துவிட்டு, ஆலாபனை - நிரவல் - ஸ்வரங்களுடன் ‘தேவாதி...’ பாடலைப் பாடினார். ‘நீ ஜேசின பூஜா பலமு நா பூர்வாஜுல புண்ணிய பலமு...’ என்று நித்யஸ்ரீ செய்த நிரவல் வரிகள் அர்த்தம் பொதிந்தவை.

பிரதானமாக காபி. மந்த்ர ஸ்தாயியில் ‘திக்’ ஆக ஆரம்பித்தார். மோடி ராஜ்ய ஏ.டி.எம் க்யூ மாதிரி சங்கதிகள் வரிசையில் காத்திருக்க, ஒவ்வொன்றாக கிளியர் செய்தபடியே மேல் ஸ்தாயி வரை சென்று சட்டெனக் கீழே இறங்கி, அதே ஜோரில் மேலேறிச் சென்று நித்யஸ்ரீ காபி ராகத்தை மணம் கமழ சுவையாக ஆலாபனை செய்தார். தியாகராஜரின் ‘இந்த ஸௌக்யமநி நே ஜெப்ப ஜால...’ கீர்த்தனை. ‘இத்தனை இன்பம் இது என்பதை வர்ணிக்க என்னால் இயலுமா?’ என்பது பொழிப்புரை!

டெலிவிஷனில் வம்சம் தழைக்கச்செய்யவும், ப்ரிய​மானவளுக்கு ‘ஹாய்’ சொல்லவும் அன்று சீக்கிரம் புறப்​பட்டுச் சென்றவர்கள், நித்யஸ்யின் ‘காபி’யை மிஸ் செய்துவிட்டவர்கள். வேற என்னத்தைச் சொல்ல?

தப்புக்கணக்கு!

சின்னத் திருத்தம். பவன்ஸ் மேடையில் மொத்தம் ஆறு பெரிய சைஸ் மணிகளும் விளக்குகளும் தொங்கிக்கொண்டிருப்பதாக சென்ற வார டைரியில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாவது முறை சென்றிருந்தபோது, செய்த ரீ-கவுன்ட்டில் 6 + 6 என்பது தெரிந்தது! சீக்கிரமே கண் பரிசோதனைக்குப் போக வேண்டும் என்பதும் புரிந்தது.

சரிகமபதநி டைரி - 2016

கங்கிராட்ஸ் கஞ்சிரா!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் (மறுபடியும் கணக்கு!) கர்னாடக இசைத் துறையில் அரங்கில் கேட்க வருபவர்களைவிட, மேடையில் பாட வருபவர்களில் இளைஞர்களும் இளைஞிகளும் அதிகம் இருக்கிறார்கள். பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தி, வயலின் சந்தீப் ராமசந்திரன், மிருதங்கம் என்.சி.பரத்வாஜ், கஞ்சிரா அனிருத் ஆத்ரேயா என யூத் பட்டாளம் மேடையில் (பவன்ஸ் கலைவிழா). தம்புராக்களுடன் உட்கார்ந்த இருவர் மட்டுமே சீனியர் சிட்டிசன்ஸ்!

ஓர் உபரி தகவல்:
அனிருத் ஆத்ரேயாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘வுட்பி’-யின் போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். கங்கிராட்ஸ் ப்ரோ!

அமெரிக்காவில் படிப்பை முடித்த கையோடு ‘பாட்டு பாடவா... பறந்து செல்லவா...’ என்று இந்தியாவுக்கு விமானம் ஏறி வந்துவிட்டவர் ராமகிருஷ்ணன் மூர்த்தி. வயலின் கலைஞர் டெல்லி சுந்தரராஜனிடம் முதலில் பாட்டு ட்யூஷன். இப்போது, இன்னொரு வயலின் வித்வான் ஆர்.கே.ஸ்ரீராம்குமாரின் மாணவராக பயணம் தொடர்கிறது. ‘என்னுடைய குரு மற்றும் ஆன்மிக வழிகாட்டி ஸ்ரீராம் அண்ணா. உண்மையில் அவர் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்...' என ‘சுருதி’ மாத இதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் புகழாரம் சூட்டியிருக்கிறார், ரா.மு. தம்பி தேறிடும்!

சரிகமபதநி டைரி - 2016

கேட்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாத குரல் ராமகிருஷ்ணன் மூர்த்திக்கு. கைத்தட்டல்களைக் குறிவைத்து சிலம்பாட்டம் ஆடுவது இல்லை. இலக்கணம் மீறாமல், சம்பிரதாயம் வழுவாமல், அலுங்கல் குலுங்கல் இல்லாமல் சுகமான ஹைவேஸ் பயணம் மாதிரியான பாட்டு இவருடையது. அதிகம் புழக்கத்தில் இல்லாத பாடல்களை எடுத்துவிடுவதில் சமர்த்தர்.

அன்று இவர் பவப்ரிய ராகம் ஆரம்பித்தபோது, ‘சுபபந்து வராளி...’ என பின்வரிசையில் இருந்து ஒரு குரல். இந்த ராகத்தில் தியாகராஜரின் ‘ஸ்ரீகாந்த் நீயெட..’வை பாடிவிட்டு, ராமகிருஷ்ணன் மூர்த்தி விரிவாக்கம் செய்தது கரகரப்ரியா. வாய்ப்பு இருந்தும், நான்காயிரம் சதுர அடிகளில் நான்கு படுக்கை அறைகளுடன் வீடு கட்டாமல், சிம்பிளாகச் சிக்கனமாக சிங்கிள் பெட்ரூம் அளவு ஆலாபனை செய்து அழகு தியாகராஜரின் ‘கோரிஸேவிம்ப ராரே...’ பாடி, கோவூருக்கு ஒரு விசிட் அழைத்துச் சென்றார்.

சந்தேகம் தேவை இல்லை. ராமகிருஷ்ணன் மூர்த்திக்கு பிரைட்டான எதிர்காலம் உண்டு. மிருதங்கம் பரத்வாஜ், கஞ்சிரா அனிருத் ஆத்ரேயாவுக்கும் அப்படியே!

பாலமுரளிக்கு ஆராதனை

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவுக்கு அஞ்சலி செய்யும்விதமாக பலரைப் பேசவைத்து பிளேடு​போடாமல் மூன்று நாட்களுக்கு பாட்டுக் கச்சேரி​களுக்கு ஏற்பாடு செய்திருந்தது ‘ஆராதனா’.

முதல் நாள் ஆர்.சூரியபிரகாஷ். கலைஞர்களை அறிமுகம்செய்த பெண்மணி, பாடகரை செம்மங்குடி ஸ்கூலுடன் தொடர்புள்ளவராக தகவல் பிசகுசெய்தார். பாடுவதற்கு முன் சுருக்கமாகப் பேசிய சூரியபிரகாஷ், தன்னுடைய பரமகுரு மதுரை மணி ஐயர் எனக் கூறியதோடு நிறுத்திக்கொண்டார். ஏனோ தெரியவிலை. கச்சேரி மேடைகளில் தனக்கு முகவரி தந்த குரு டி.வி.சங்கர நாராயணனை அவர் கண்டுகொள்ளவே இல்லை. மறந்துடுச்சோ?

சரிகமபதநி டைரி - 2016

தோடியில் ஓர் உருப்படி. தொடர்ந்து கல்யாணியில் தியாகராஜரின் பிரஹ்லாத பக்தி விஜய கீர்த்தனைகளில் ஒன்றான ‘வாசுதேவயனி..’. சில வருடங்கள் முன்னர் வரையில் எம்.கே.டி. பாகவதரின் மறுபிறவியாகத் தன்னைக் கருதி உரக்கப் பாடிக்கொண்டிருந்தவர் சூரியபிரகாஷ். இப்போது இரைச்சல் சங்கீதம் அவரிடம் இல்லை. குரலைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார் வரவேற்போம்!

கல்யாணியின் ஆலாபனையில், நிரவலில், ஸ்வரங்களில் கே.வி.மகாதேவனின் சங்கதிகள் நிறைய. நல்லவேளை, ஸ்வரங்கள் முடிந்து பாடலை எடுக்கும்போது ‘மன்னவன் வந்தானடி...’ என்று ஆரம்பித்துவிடவில்லை!

ராகம், தானம், பல்லவிக்கு ஹம்ஸானந்தி. ராகம் சுகமாக வளர்ந்துகொண்டிருந்தபோது, மேல் ரிஷபத்​தில் கிரகபேதம் செய்து ஹிந்​தோளத்தை நுழைத்தது தேவைதானா சூர்யா?

‘ஆராவமுதனை ஆராதனை செய் மனமே முரளி கான லோலனை...’ என்பது சூர்யபிரகாஷ் இயற்றிக் கொண்டுவந்து பாடிய ஸ்பெஷல் பல்லவி.

பாடகர் பாடுவதை அச்சு அசலாக வயலினில் திருப்பி வாசிப்பதில் கில்லாடி நாகை ஸ்ரீராம். துளி பிசிறு இல்லாமல் இனிமை பொழியும் வாசிப்பு. அன்றும் என்றும்... எங்கும்... எப்போதும்!

இது மாணவர்களுக்கு!

பிறர் பாட, கேட்கும்போது தூக்கம் வரலாம். ஆனால், பாட்டு பற்றி பிறர் பேசக் கேட்கும்போது கொட்டாவி வரக் கூடாது! - யாரோ.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வித்யாபவன் மினி ஹாலில் ‘சங்கீத சௌரபா’ என்ற தலைப்பில் லெக்-டெம் செய்துவருகிறார் டாக்டர் ராதா பாஸ்கர். ‘சமுத்ரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர், இசை ஆராய்ச்சியாளர், பாடகர், Etc... Etc!!

நவம்பர் மாதக் கடைசி ஞாயிறு, கீர்த்தனையின் அமைப்பு மற்றும் அழகுபடுத்துவது குறித்து பேசி, பாடி​னார். முதலில் கீர்த்தனாவுக்கும் கீர்த்தனைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். அடுத்து, காலப்பிரமாணம், எடுப்பு பற்றி.

``கர்னாடக இசைக்கு மட்டுமே பிரத்யேகமானது சங்கதிகள்'' என்றார் ராதா பாஸ்கர். தியாகராஜர் தனது பாடல்களில் எப்படி எல்லாம் சங்கதிகளில் விளையாடியிருக்கிறார் என்பதை ராதா பாடி, விளக்கியது அன்றைய ஹைலைட். உதாரணமாக, ‘ஆடமோடி கலதே ராமய்ய மாட...’ என்ற பல்லவி வரியில் ‘ஆடமோடி’ என்ற வார்த்தையில் மட்டுமே எல்லா சங்கதிகளையும், அதேமாதிரி, ‘மறுகேலரா ஓ ராகவ...’வில் சங்கதிகள் அனைத்தையும் ‘ஓ ராகவ...’ வரியில் மட்டும் அவர் திணித்திருப்பதையும் ராதா சொல்ல பாடக் கேட்டபோது, ‘அட, ஆமாம்!’ எனச் சொல்லவைத்தது.

இது மாதிரியான லெக்-டெம்களால் இசை ரசிகர்களைவிட, பாட்டுப் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத்தான் பயன்பாடு அதிகம். ஆனால், பின்னவர்கள் திரண்டுவந்து அதைப் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரியவில்லை!

- டைரி புரளும்...