பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 13

ஆண்பால் பெண்பால் அன்பால் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 13

#MakeNewBondsமாரி செல்வராஜ் - படங்கள்: அருண் டைட்டன்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 13

`கிளம்புகிறேன்' என்று சொல்லாதே
வழியனுப்ப மாட்டேன்
`போய்விட்டு வருகிறேன்' என்றும் சொல்லாதே
`போய் வா' என்றும் சொல்ல மாட்டேன்...
`கொஞ்ச நேரம் கண்களை மூடு
போய் ஒளிந்துகொள்கிறேன்' என்று சொல்
கண்களை மூடுகிறேன்
திறப்பதற்குள் போய்விடு
நீ திரும்பி வரும் வரை

ஆண்பால் பெண்பால் அன்பால் - 13


என் அறைக்குள்ளேயே
உன் வாசத்தின் வழித்தடத்தில்
என்னை நானே தேடிக்கொண்டிருப்பேன்
எத்தனை நாள் கழித்து வந்தாலும்
எத்தனை வருடம் கழித்து வந்தாலும்
எத்தனை யுகங்கள் கழித்து வந்தாலும்
சொல்லாமல்கொள்ளாமல் வா
கதவைத் திறந்தவுடன்
நானே உன்னைக் கண்டுபிடித்ததைப்போல
இறுக்கக் கட்டிப்பிடித்துக்கொள்வேன்
அந்த நொடியில்
நான் சிரித்தாலும் சிரிப்பேன்
அழுதாலும் அழுவேன்
என் முத்தத்தைத் தவிர பதிலுக்கு
எதுவும் பேசக் கூடாது நீ...


திருமணமான பத்து நாட்களில், திவ்யாவை வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு நான் பேருந்தில் ஏறிக் கிளம்பியதும் திவ்யா எனக்கு எழுதி அனுப்பியிருந்த வரிகள் இவை. இந்த வரிகளை முதல்முறை வாசிக்கும்போது ஓர் ஆண் மீது ஒரு பெண் வைத்திருக்கும் தீராக்காதல் தெரியலாம். ஆனால், இந்த வரிகளை இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். ஓர் ஆண் தைரியமாக உலகத்தைச் சுற்றிவர இந்தச் சமூகத்தின் பெரும் ஒப்புதலோடும் ஆசீர்வாதத்தோடும் கிளம்பிக்கொண்டிருக்கும் காட்சியும், இன்னொரு பக்கம் ஒரு பெண் தேங்கி நிற்கும் கண்ணீர்க் கண்களோடு தன் கதவுகளை தன் விருப்பத்தின் பெயரில் இந்தச் சமூகத்தின் அறிவுரைகளின்படி, காவியக் காதல்களின் காத்திருத்தலின் வழி அடைத்துக்கொண்டு உள்ளேயே விம்முகிற காட்சியும் தெரியும். நிச்சயமாக, இதைத் தீர்மானித்தது நாங்களும் அல்ல; எங்கள் காதலும் அல்ல.

``உச்சி மத்தியானத்துல குளிக்க ஆத்துக்குப் போறவ, கோயில்ல கொட்டடிக்கிறதுக்கு முன்னாடியே சீவி சிங்காரிச்சுக் கொடை பார்க்கப் போறவ, பள்ளிக்கூடம் முடிஞ்சும் இருட்டுக் கருக்கல்ல வீட்டுக்கு வர்றவ, திரையைக் கட்டிப் படத்தைப் போடுறதுக்கு முன்னே வந்து பாயை விரிச்சு வாயைப் பொளந்து பார்க்கிறவ, எழவு வீட்டுக்குப் பூவை வைச்சுக்கிட்டு பொத்துனாப்ல வந்து அழுதுட்டுப் போறவ, இந்த மாதிரி பொண்ணுங்களை மட்டும் நம்பவே நம்பிடாதீங்கடா. அழகைக் காட்டியும் அழுதுகாட்டியும் ஆம்பிளைய அழிச்சிருவாளுங்க.''

இப்படி, பெண்களைப் பற்றி சித்தப்பாக்களும் மாமாக்களும் தாத்தாக்களும் அண்ணன்களும் தலைமுறை தலைமுறையாக கோயில் திண்ணைகளில் அமர்ந்து பேசிப் பேசிக் கேட்ட பால்யத்தில் இருந்துதான் நான் பெண்களை நோக்கி வந்தேன். ஆனால், எனக்கோ தெருவில் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் பெண்களைத்தான் பிடித்தது. முறைக்கிற ஆணைப் பார்த்து உடனே நாக்கைத் துருத்துகிற பெண்ணை ரொம்பப் பிடித்தது. மருதாணி இலைகளுக்காக, பெரிய மதில்களைத் தாண்டிக் குதிக்கும் பெண்களைக் காதலிக்கும் அண்ணன்கள்தான் எனக்கு இப்பவும் நாயகர்கள்.

பெண்களைப் பற்றி ஆண்கள் சொல்வது, ஏன்... பெண்களே பெண்களைப் பற்றி சொல்வதுகூட  பொய்தான். ஒரு பெண்ணை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் அவளுடன் வாழவேண்டும். அவள் அம்மாவாக இருந்தால் மகனாக, அவள் மகளாக இருந்தால் அப்பாவாக, அவள் அக்காவாக இருந்தால் தம்பியாக, அவள் தங்கையாக இருந்தால் அண்ணனாக, அவள் தோழியாக இருந்தால் தோழனாக, அவள் காதலியாக இருந்தால் காதலனாக, அவள் மனைவியாக இருந்தால் கணவனாக, அவள் மனுஷியாக இருந்தால் மனுஷனாக... இப்படி அவள் எதுவாக நம்முடன் இருக்கிறாளோ, அதுவாக அவளுடன் நாம் வாழ்ந்தால்தான் அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும். நான் அப்படித்தான் பெண்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 13

நான் பிறந்திருந்த காலம், எங்கள் நிலம் நீரற்ற நிலமாக இருந்தது. பஞ்சம் பிழைப்பதற்காக, கூலி வேலையாட்களாக வெளியூருக்கு அம்மாவும் அப்பாவும் சென்றுவிட, அம்மாவின் கைகளில் இருந்து நான் அக்காவின் கைகளில் மடிமாற்றப்பட்டேன். அக்கா எனக்கு அம்மாவானதை அம்மா தன் குரலில் இப்படிச் சொன்னாள்...

``கன்னங்கரேல்னு காக்காக்குஞ்சு மாதிரி எட்டு மாசத்துல யாருக்கும் பிடிக்காத மாதிரி, யாருமே தூக்கிக் கொஞ்ச முடியாத மாதிரி உன்னைப் பெத்துப்போட்டுட்டேன்.

நீ பொறந்ததால நம்ம வீட்டுல அப்படியொரு பஞ்சம் வந்துச்சா, அப்படியொரு பஞ்சம் வந்ததால நீ பொறந்தியான்னு சொல்லத் தெரியலை. அவ்வளவு பெரிய பஞ்சம்.

அஞ்சு பிள்ளைகளுக்கு இரை தேட, நானும் உங்க அப்பனும் ஐந்நூறு ஊர் போக​வேண்டி​இருந்தது. `பிள்ளையைக் கொடுத்தாப் பாத்துக்​கலாம், இந்தப் பிண்டத்தை எப்படிப் பாத்துக்​கிறது?'னு உங்க ஆச்சியும் தாத்தனும் சொன்னப்ப, `தம்பிய நான் பாத்துக்கிறேமா!'னு கையை நீட்டி உன்னை வாங்கினா அக்கா. அப்ப அவளுக்கு ஏழு வயசு. மூணாம் கிளாஸ் படிச்சுட்டு இருந்தா.

சோத்துப்பைக்குள் வைச்சுக் கிட்டுப் போவாளா இல்லை புத்தகப்பைக்குள்ள வைச்சுக்​கிட்டுப் போவாளானு தெரியாது. பள்ளிக்கூடத்துக்கு உன்னைக் கொண்டுபோயிடுவா. எல்லா பிள்ளைகளும் ஓடிப்பிடிச்சு விளையாடும்போது, இவ மட்டும் உன்னை மடியில போட்டு நீச்சத் தண்ணி குடிச்சுக் கிட்டிருப்பா. நீ அம்மாவைத் தேடி  அழுறப்போ, அவளுக்கும் அம்மாவைத் தேடி அழுற வயசுதான். ஆனா, அவ உனக்குக் கொடுக்கிறதுக்கு கேப்பைக் கூழ்கூட இல்லை​யேனுதான் அழுதிருக்கா. அவ இல்லாத வீடும் வாசலும் எப்படி இருக்கும்னு நான் இன்னைக்குத்தான் பாக்கிறேன்.''

அம்மா இதைச் சொல்லி முடித்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொள்ளவோ, மறுபடியும் மடியில் படுத்துக்​கொள்ளவோ அன்றைக்கு அக்கா எங்கள் வீட்டில் இல்லை. இன்னோர் ஊரில் இன்னொரு வீட்டில் இன்னொரு குடும்பத்துக்​குரியவளாக இருந்தாள். கிடைக்கும் நேரத்தில் அலைபேசியில் மட்டுமே பேசுபவளாக மாறியிருந்தாள்.

இப்போது அந்த ஏழு வயசு முருகம்மாள் அக்காவையும் காக்காக்குஞ்சாட்டம் இருந்த என்னையும் பார்க்க வேண்டும் போலிருந்தால், நான் உடனே பார்ப்பது `ஹயத்' என்ற ஈரானியத் திரைப்படத்தையே! அந்தப் படத்தில் அந்த ஹயத் என்கிற சிறுமி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு தேர்வு எழுது​வதற்காக தெருத் தெருவாக உதவி கேட்டு அலையும் ஒரு காட்சி போதும் என்னை அழவைப்பதற்கு.

யோசித்துப்​பார்க்கையில் சமூகம் கற்பித்துவைத்​திருக்கும் பெண்கள் பற்றிய புரிதல்களுக்கு நேர்மாறாக பெண்களோடும், பெண்களின் சிரிப்போடும், அவர்களின் அழுகையோடும், அவர்களின் எதிர்பார்ப்பு​களோடும்,  ஏன்  ஏமாற்றங்களோடும், அவர்களின் வெற்றிகளோடும் கூடவே விரும்பிப் பயணிக்கும் ஓர் ஆணாக நான் இருப்பதற்கு நிச்சயமான காரணம், என் அக்கா முருகம்மாளின் முகமும் சிரிப்பும்தான்.

க்காக்கள் வளர்க்கும் ஆண்​பிள்ளைகளுக்கு, தோழிகள் கிடைப்பது இயல்பானது. எனக்குக் கிடைத்த முதல் தோழிகள் அக்காவின் தோழிகள்தான். அவர்களோடு தான் தெருவில் இறங்கி விளையாடத்​ தொடங்கினேன். அவர்களோடுதான் ஆற்றில் இறங்கி நீந்தத்​ தொடங்கினேன். அவர்களோடுதான் எனக்கான நாவற்பழங்களைப் பொறுக்கத்​தொடங்கினேன். அக்காவின் தோழிகள் காதலிக்கத் தொடங்கினார்கள். அவர்​களிடம் இருந்துதான் காதல் கதைகளைக் கேட்கத் தொடங்கினேன். நானும் காதலிக்கத் தொடங்கினேன். ஓர் ஆணின் பிரதியாக என் காதல்களைப் பற்றிய நினைவில் தோய்வதைவிட, இதுவரை எங்கும் எதிலும் நாம் அறிய முடிந்திராத அக்காவின் தோழிகளின் கனவுகளாகிப்போன காதல்களையும் அதன் துயரமான முடிவுகளையும் இன்றொரு படைப்பாளியாகத் தேடித் தெரிந்த பிறகு வந்து சேர்ந்திருக்கும் வலியானது, ஓர் ஆணாக நிச்சயமாக எனக்குக் கிடைத்தே ஆகவேண்டிய தண்டனைதான்.

`நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்'


`கோபுர வாசலிலே' திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை கேட்கும்போது, நீங்கள் ஜானகியை நினைத்துக்கொள்ளலாம் அல்லது பானுபிரியாவை நினைத்துக்கொள்ளலாம் அல்லது மிகவும் பிடித்தமான ஒரு தோழனையோ, தோழியையோ நினைத்துக்கொள்ளலாம். ஆனால், நான் சுந்தரவள்ளி அக்காவைத்தான் நினைத்துக்கொள்வேன். ஏன் என்றால், இந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டது அவள் பாடித்தான். சுந்தரவள்ளி அக்கா விஷம் குடிக்கும் வரை எனக்குத் தெரியாது தன்னுடைய `மன்னனாக' தபால்காரர் ஒருவரை நினைத்துத்தான் வீட்டுத் திண்ணையில் இருந்து இந்தப் பாடலை தினமும் பாடினாள் என்பது. 
 
எட்டுத்திக்கும் வாசல்களையும் வழிகளையும் கொண்டிருக்கும் கிராமத்தில் உள்ளத்தின் உணர்ச்சியால் தனக்குள் வந்துவிட்ட காதலை அந்தத் தபால்காரரிடமும் சொல்லாமல், தன் தோழிகளிடமும் சொல்லாமல், அவனுக்காகக் காத்திருக்கும் அந்தத் திண்ணைக்குக்கூடச் சொல்லாமல் சுந்தரவள்ளி அக்கா ஒளித்துவைத்திருந்த காரணம், இன்னும் ஊரில் உள்ள எந்த ஆணுக்கும் புரிந்தபாடில்லை.

``ஊமை மாதிரி இருந்துக்கிட்டு எவன்கிட்டயோ போய் ஏமாந்திருக்கா. அரளி விதையை அரைச்சுக் குடுத்து வயித்துக்குள்ள முளைச்ச விதைய நசுக்கிடலாம்னு பாத்திருக்காவ. அது மூச்சப் பிடிச்சு அமுக்கிட்டு... சரி இப்போ என்ன ஆச்சு, நொண்டி நோக்கான்னு எத்துன பயலுவ பொண்ணு கிடைக்காம அலை​யிறானுவ. அவனுவல்ல ஒருத்தனுக்குப் பிடிச்சுக் கட்டிவைச்சுடவேண்டியதுதானே!”

அப்படித்தான் செய்தார்கள். மூன்றாம் தாரமாக வெள்ளச்சாமி என்கிற ஓர் ஆட்டு வியாபாரிக்குத்தான் வாக்கப்பட்டுப்போனாள் சுந்தரவள்ளி அக்கா. “கிழவன் கிடைக்குப் போனதும், மரி பழைய கிடாவை தேடுதோ?'' என்று வெள்ளச்சாமி சுந்தரவள்ளி அக்காவை அடித்து இழுத்துக்கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டுப் போன நாளில்தான் சுந்தரவள்ளி அக்காவின் அம்மா, தன் ஒரே மகள் ஒரு தபால்காரரைக் காதலித்ததையும் சிவத்த அந்தத் தபால்காரர் கருத்த சுந்தரவள்ளி அக்காவை வேண்டாமென்று சைக்கிள் பெல் அடித்துச் சொல்லிவிட்டுப்போன ரகசியத்தையும் சொல்லி அழுதாள். என்ன பிரயோஜனம்? அந்த நேரத்தில் சுந்தரவள்ளி அக்காவுக்கு அழுகை என்றால் என்ன என்பதே மறந்துபோயிருந்தது. ஏனெனில், அவள் மரத்துப்போயிருந்தாள்.

சுந்தரவள்ளி அக்காவிடம் ஒருநாள் பேசினேன். ``இங்க நம்ம ஊர்ல ஒவ்வொரு பொண்ணுக்குள்ளயும் ரெண்டு பொண்ணு இருக்கா. ஒருத்தி, ஆம்பிளயப் பார்த்து ஓடி ஒளியணும். இன்னொருத்தி, தன்னுடைய ஆம்பிளைக்கு ஒண்ணுன்னா கதறிக்கிட்டு ஓடி வரணும். ஆமா மாரி, விளையாட்டுக்குச் சொல்லலை பொம்பளைங்க எல்லாரும் கிளம்பிப்போனதுக்கு அப்புறம் நடுச்சாமத்துல கெட்டவார்த்தைப் பேசி, குறவனையும் குறத்தியையும் ஆடச் சொல்றாங்கள்ளா, அதுல குறத்தியா ஆடுறது யாரு ஒரு பொம்பளைதான!

காட்டுப்பேச்சிக்கு சாமக்​கொடை கொடுக்கும் சமயத்துல ஒரு கிடாவை நிக்கவைச்சு வெட்டும்போது, `யம்மா... பொம்​பளைங்க எல்லாரும் கண்ணை மூடிக்கங்க. பலிபோடப்​போறேன்'னு கத்துறாங்​களே பலியை வாங்கிக்கிற அந்தத் தெய்வம் காட்டுப்பேச்சி யாரு, ஒரு பொம்பளைதான.

ஊர்க் கூட்டம் போடுறானுவ `ஒரு பொம்பளையும் அந்தப் பக்கம் போயிடக்​ கூடாது'னு சொல்லிட்டு, அங்க யாரைப் பத்தி பேசி யாருக்குத் தீர்ப்பு சொல்​றானுவ ஒரு பொம்பளைக்குத்​தான.

பொம்பளை இல்லாமலும் இவனு​வளுக்கு ஒண்ணுக்குப் போகத் தெரியாது. இவனுவ ஒண்ணுக்குப் போகும்போது பொம்பளை வந்துட்டாலும் குத்தம். இவனுங்ககிட்ட அடங்கி கிடந்து வாழ்றதைவிட ஆட்டுத்​தொழுவம் மாதிரி இருக்கிற பொறந்த வூட்ல இன்னொரு ஆட்டுக்குட்டியா இருந்துட்டு கசாப்புக் கடைக்குப் போகாம​லேயே செத்துப்​போயிரலாம்.''

ஆண்பால் பெண்பால் அன்பால் - 13

ர் ஆணாக ஒரு பெண்ணை புரிந்துகொள்வது இருக்கட்டும். ஓர் ஆணாக இன்னோர் ஆணை நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறதா என்ன?

சமீபத்தில் நகரத்து நண்பன் ஒருவன் சுந்தரவள்ளி அக்காவைப்​போலவே காதலுக்காக விஷம் அருந்தி வீரச்சாவை விரும்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்​பட்டிருந்தான். காதல் என்ற வார்த்தைக்​காக அவனைப் பார்க்கப்போயிருந்தேன்.

``ஏன்டா இப்படிப் பண்ணின?” அவனிடம் பதில் இல்லை. கொஞ்ச நேரம் அழுதான்.

“அந்தப் பொண்ணுன்னா ரொம்பப் பிடிக்குமாடா?” நிமிர்ந்து பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியாது, பேசத் தொடங்கி விட்டான்.

“பிடிக்கும். ஆனா, அவதான் முதல்ல புரப்போஸ் பண்ணினா. எத்தனையோ முறை ரூமுக்குக்கூட கூப்பிட்டிருக்கா. ஆனா, நான் போனது கிடையாது. வெளியிலதான் கூட்டிட்டுப் போயிருக்கேன்.''

``அப்புறம் ஏன் அவ உன்னை வேண்டாம்னு சொன்னா?''

``அதுதான் சொன்னேனே, ரூமுக்குக் கூப்பிட்டும் நான் போகலைன்னு. அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, வேற ஆள் பார்த்துட்டாபோல.''

``சரி, அவளைக் கல்யாணம் பண்ணலாம்னு இருந்தியா?''

``ச்சேய்ய்ய்ய்! அவ அந்த அளவுக்கு எல்லாம் வொர்த்தும் இல்லை, அழகும் இல்ல. போர் அடிச்சா, பைக்ல வெளியே கூட்டிட்டுப் போகலாம். தூக்கம் வரலைன்னா ராத்திரி போன்ல கடலை போடலாம் அவ்வளவுதான்.''

இதைச் சொல்லும்போது எனக்கு அவனுடைய கண்களில் அந்தப் பெண் தெரிந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டேதான் கேட்டேன்.

``அவ்வுளதானே... அதுக்கு ஏன்டா விஷத்தைக் குடிச்சே?''

``ஏன் குடிச்சேனா… அவளுக்கு நான் வேண்டாம்னா, அதை நான்தான சொல்லணும். பொம்பள அவ எப்படிச் சொல்லலாம்? அவ வேண்டாம்னு சொல்ற அளவுக்கா நான் இருக்கேன்! அதான் செத்துர​லாம்னு முடிவுபண்ணேன்.''

இதைச் சொல்லும்போது அவன் கண்களில் அந்தப் பெண் இல்லை. மாறாக, ஓர் ஆண் தெரிந்தான். அந்த ஆண், நானாகக்கூட இருக்கலாம்.

``சூப்பர்டா! நீ எடுத்தது நல்ல முடிவு. நிச்சயமா ஒரு ஆணை பிடிக்கலைன்னு சொல்ற உரிமை, எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. நீ எடுத்ததுதான் சரியான முடிவு. செத்துபோ… வேணும்னா என் பேரைக்கூட எழுதிவைச்சுட்டு செத்துப்போ. என்ன ஆனாலும் நான் பார்த்துக்கிறேன்.''

நான் சொல்லி முடிக்கும் முன்னே அவனுக்குள் விழித்துக்கொண்ட ஆண், எப்படிப் பேசி தப்பித்தான் தெரியுமா?

``நான் எதுக்கு இனி அவளுக்காகச் சாகணும்? அவ அயிட்டம்... எவன்கூட போனா எனக்கென்ன? அவளவிட சூப்பர் பொண்னு எனக்குக் கிடைப்பா. என் பர்ஸைத் தூக்கிப் போட்டா, பாக்கெட்ல பத்தாயிரம் பொண்னுங்க கிடைப்பாளுக.”

அவ்வளவுதான், முடிந்தது இரண்டு ஆண்​களுக்கான பெண்கள் பற்றிய நீண்ட உரையாடல்.

இந்த உரையாடலில் இருந்து உங்களுக்கு என்ன புரிந்ததோ, அதுதான் நம் சமூகம் எத்தனையோ காலமாக பெண் குறித்து பதுக்கிவைத்திருக்கும் ஓர் ஆணின் நிஜம். இவன் என் நண்பன்தான். ஆனால், இவன் பெயர் இளவரசனும் இல்லை; கோகுல்ராஜும் இல்லை. இவனைப் போன்​றோரிடம் அம்மா அப்பா வைத்த பெயர்களும் இல்லை. ஆகையால், இவர்கள் யாரென்று அடையாளம் கண்டுபிடித்துச் சொல்வது சிரமம் எனக்கு. இவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். எனக்கு நண்பனாக இருப்பதுபோல உங்களுக்கும் நண்பனாக இருப்பார்கள். அதுமட்டும் அல்ல, இவர்கள் பீடி, சிகரெட், மது, அதோடு கதை, கவிதை என எந்தத் தீயபழக்கங்களும் இல்லாத தேசப்பற்றுகொண்ட  நல்லவர்களாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

``நீ காதலிக்கும் பெண் யாரென்று எனக்குத் தெரியாது. அவள் சாதி எது மதம் எது எதிலும் எனக்கு அக்கறை இல்லை. அவளுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், அவள் என்ன செய்கிறாள், அவர்கள் என்ன செய்கிறார்கள், எதற்கும் நீ பதில் தரவேண்டியது இல்லை. அவள் கறுப்பா... சிவப்பா அதையும் நீ எனக்குப் படம்பிடித்துக் காட்டவேண்டியது இல்லை. அவளைப் பற்றி நீ சொல்லும்போது நீ சந்தோஷமாக இருக்கிறாய். இதுவரை நாங்கள் பார்த்திடாத ஒளியொன்று உன் முகத்தில் படர்கிறது. உன் கடந்தகாலத்தின் இருளை அவள் அகற்றியிருக்கிறாள். அதோடு ஆச்சர்யம், அவள் உன்னை வெட்கப்படவும் வைத்திருக்கிறாள். இந்த வெட்கத்தில்  நீ ரொம்பவும் அழகானவனாகத் தெரிகிறாய். இந்த அழகு நீ தடுமாறும் விளிம்புகளில் உன்னைத் தாங்கிப்பிடித்துக்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். ஆகையால், அவளை நீ திருமணம் செய்துகொள்வதில் எனக்கும் சரி, அம்மாவுக்கும் சரி எந்த ஆட்சேபனையும் இல்லை. உனக்குப் பிடித்த நாளில், உனக்குப் பிடித்தபடி அவளை நம் வீட்டுக்கு அழைத்து வா, நீங்கள் வாழத் தொடங்குங்கள். நாங்கள் இப்போதே வாழ்த்துகிறோம்'' எனச் சொல்லி, என் காதலை என் தாய்மையாகவே ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்த முருகம்மாள் என்கிற பெண் எனக்கு அக்காவாகவும்...

``பெரு சாதி விருப்பத்தையும் மீறி நான் உன்னை என் மகள் திவ்யாவின் கணவனாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், திவ்யா மட்டும் அல்ல, மாரி நீயும்தான். ஒரு ஆணாக என் பெண்ணை நீ அணுகிய விதம் எனக்குத் தெரியும். அவளுக்காக எங்களையும் நீ நேசிக்கத் தொடங்கிய தருணம் எதுவென்றும் எனக்குத் தெரியும். நானோர் ஆண் இல்லாமல் வாழ விரும்பிய பெண். ஆனால், என் பெண்களை நான் அவர்களுக்குப் பிடித்தமானவர்களுடன் வாழ அனுமதிப்பதின் மூலம் நான் இழந்த காதலையும் அன்பையும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியே மீட்டெடுக்கிறேன். என் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஓர் ஆண் இல்லாமல் இந்தச் சமூகத்தில் எந்தப் பெண்ணாலும் வாழ முடியும்; தேவையான யுத்தங்களை நிகழ்த்த முடியும்; பெரு வெற்றிகளையும் எட்ட முடியும். ஆனால், ஒரு காதல் இல்லாமல் வாழ்தல் என்பது பெண்ணுக்கு பிறவிக்​கொடுமை. அது என்னோடு போகட்டும். என் மகளுக்கு காதல் கிடைத்திருக்கிறது. என் மகள் தான் விரும்பிய ஒருவனால் முழுமையாக நேசிக்கபடுகிறாள் என்பதும், என் மகள் அந்த நேசிப்பின் வழியே செல்லும் மலைகளின் உச்சியில் நின்றபடி மகிழ்ச்சியில் எவ்வளவு சத்தத்தோடு கூச்சலிடுகிறாள் என்பதும் எனக்குத் தெரியும்.  அதற்காக நான் இந்தத் திருமணத்தை இவ்வளவு கொண்​டாட்டமாக நடத்துகிறேன்'' என்று  முகம் தெரியா என் தூர ப்ரியத்தையே ஆராதித்த திவ்யாவின் அம்மா மங்கயற்கரசி என்கிற பெண், எனக்கு அத்தையாகவும்...  வாய்த்த இந்த வாழ்க்கையில் ஓர் ஆணாக நான் திமிர் எடுத்துக்கொள்ள கொம்பைச் சிலுப்பிக்கொண்டு இந்த மண்ணைக் குத்துக்கிற துளி தகுதியும் எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை.

இந்த மாதிரியான நம்பிக்கை​யின்மைதான் நிறைய ஆண்களின் நிஜத்தையும் நிறையப் பெண்களின் கனவுகளையும் அழகானதாக மாற்றிக்​கொண்டிருக்​கிறது என்பதை நான் நிச்சய​மானதாக நம்பிக்​கொண்டிருக்​கிறேன்.

பெரும் சக்திகொண்ட சாதியும் மதமும் காதலைப் பார்த்து நடுங்குவதைப் போலவேதான் ஆண் என்ற ஆதிக்கம் உள்ள ஆண்களும், பெண் என்ற அடிமைத்தனத்தை நம்புகிற பெண்களும் காதலைப் பார்த்து நடுங்குகிறார்கள்.

இவர்கள்தான், காதலை ஒரு மாற்றுவேலை என்று நம்பவைக்க அனுதினமும் உழைக்கிறார்கள். காதலை அதன் ஆதி சுதந்திரத்தில் இருந்து வேரறுத்துத் துருப்பிடித்த ஓர் இரும்பு​ப்பெட்டிக்குள் போட்டு அடைத்துவைக்கத் துடிக்​கிறார்கள். ஆனால், பாவம் இவர்கள் யாருக்கும் இதுவரை தெரியாது

`காதலென்பது சின்ன விதை​களில் இருந்து முளைக்கும் ஒரு மரம் அல்ல; அது பிரபஞ்சத்தின் வாசத்தில் இருந்து முளைக்கும் பெரு மலையென்று!'

-வெளிச்சம் பாய்ச்சுவோம்

செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை   

                              
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.


அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அந்தக் கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தான் ஒருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு படையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா
னெஞ்சத்த ராவர் விரைந்து.   
 
                        
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள்மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய்விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்துகொண்டார்.

அனிச்சமு மன்னத்தின் றூவியு
மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்.


அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்ததுபோல் துன்புறுத்தக்கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.

இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.


`இந்தப் பிறப்பில் யாம் பிரிய மாட்டோம்' என்று நான் சொன்னவுடன், `அப்படியானால் மறுபிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படும் எனக் கூறுகிறாயா?' எனக் கேட்டு, கண் கலங்கினாள் காதலி.