Published:Updated:

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’
ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

“உலகம் பார்க்க, ஒரே ஒருநாள் நான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும்”  உயிரித் தொழில்நுட்பம் படிக்கும் சென்னை மாணவி கவிதாவின் ஆசை இது.

நியூஸ் 18 தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டோம், ‘விகடன் கேட்டு மறுக்கறதா...  எப்ப வேணும்னாலும் கூட்டிட்டு வாங்க’ என்று உற்சாகப் பதில் தந்தனர்.

அக்கா கல்பனா, அம்மா கங்காவுடன் வந்த கவிதாவை, நியூஸ்18 தொலைக்காட்சி படப்பிடிப்புத் தளத்துக்கு அழைத்துச் சென்றோம்.

“சின்ன வயசுல இருந்தே கவிதாவுக்கு தமிழில் ஆர்வம். பள்ளியில் பேச்சுப் போட்டிகளில் கலந்துகிட்டு நிறையப் பரிசுகள் வாங்கிருக்கா. செய்தி வாசிப்பில் ரொம்ப ஆர்வம். ஒரு சேனலில் செய்தி வாசிப்பாளரா பகுதி நேர வேலைக்கு விண்ணப்பித்தும், `ரொம்ப ஒல்லியா இருக்கா’னு தேர்வாகலை. விகடன் ஆசை பகுதிக்கு எழுதிப்போட்டதைக்கூட என்கிட்ட சொல்லவே இல்லை. நீங்க கூப்பிட்ட பிறகுதான் சொன்னா!’’ - மகளைவிட அம்மாவுக்கு மகிழ்ச்சியும் பதற்றமும் அதிகம் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூஸ் 18 வரவேற்பறையில் அமர்ந்த பிறகுதான்  கவிதாவுக்குப் படபடப்பு ஆரம்பித்தது. `‘அதெல்லாம் ஈஸியா பண்ணிடலாம்னு மனசுல நினைச்சுட்டே வந்தேன். இங்க வந்ததும் ஒரு மாதிரி இருக்கு. சொதப்பிடுவேனோனு பயமா இருக்கு’’ என்றார். சேனல் ஆட்கள் கவிதாவை அழைத்துச்சென்று, அன்றைய தின செய்தி வாசிப்பாளர் திவ்யாவிடம் கவிதாவை அறிமுகப்படுத்தினர். `‘மேக் அப் போட்டுக்கச் சொல்லுங்க. அப்டியே நியூஸ் வாசிக்க டிப்ஸ் கொடுங்க” என்றனர்.

மேக்கப் மேனும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டும் கவிதாவைத் தயார்படுத்தினார்கள். மேக் அப் போடும்போதே, கவிதாவுக்கு எப்படி எல்லாம் செய்தி வாசிக்கவேண்டும், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என டிப்ஸ் வழங்கிக் கொண்டிருந்தார் செய்திவாசிப்பாளர் திவ்யா.

“எந்த நியூஸ் தரப்போறாங்கனு தெரியலை. ஆனா எதுவா இருந்தாலும், சும்மா ரெக்கார்டு பண்றதுக்காகத்தான் இருக்கும். பதற்றம் இல்லாம படிடா. எதுக்கும் என் முன்னால ஒரு தடவை படிச்சுக்காட்டு. ஒருவேளை தப்பா படிச்சுட்டா, ‘அச்சச்சோ’லாம் சொல்லிடாத. அப்படியே படிச்சுட்டே இரு’’ என்று ஆசிரியர் அவதாரம் எடுத்திருந்தார் திவ்யா.

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

மேக் அப் முடிந்து வெளியே வந்ததும், தலைமைச் செய்தி ஆசிரியர் குணசேகரனைச் சந்தித்தார் கவிதா. கவிதாவுக்கு வாழ்த்து சொன்ன குணசேகரன், அவர் எந்தக் கல்லூரியில் படிக்கிறார், தமிழ் ஆர்வம் எப்படி வந்தது என சிறிது நேரம் இயல்பாகப் பேசி கவிதாவின் பதற்றத்தைத் தணித்தார்.

நியூஸ் ஃப்ளோரை நோக்கி நடந்த குணசேகரன், தன் சகா ஒருவரிடம், `‘லைவ் போறோம். அந்தப் பொண்ணு வாசிக்க ஒரு செய்தியைத் தயார் பண்ணிக்கோங்க'' என்றார். ``லைவ் நியூஸ்ல உன்கூட கவிதாவும் உட்காரட்டும். `விகடன் ஆசை’க்காக வந்திருக்காங்கனு அறிவிச்​சுட்டே பேசவிடு. அவங்க கரெக்ட்டா பேசுவாங்கனு நம்பிக்கை இருக்கு. கான்ஃபிடென்டாதான் இருக்​காங்க’’ - திவ்யாவிடம் சொல்லித் தயார்படுத்தினார்.

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’
ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

அவ்வளவுதான்... நியூஸ் ஃப்ளோரே, கடைசி ஓவரைச் சந்திக்கும் பேட்ஸ்மேன் போல ஸ்பீடு எடுத்தது.

லைவ் என்று தெரிந்ததும், “எல்லாருக்கும் சொல்லிடவா?” எனக் கேட்டு அம்மாவையும் அக்காவையும் பார்க்க ஓடினார் கவிதா. தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லச் சொல்லிவிட்டு உற்சாகம் குறையாமல் ஓடிவந்தார்.

சரியாக 4.50-க்கு நியூஸ் ரூமுக்குள் நுழைந்தோம். கவிதாவின் காதில் இயர் ஃபோனை மாட்டிக்கொண்டே, “உனக்கு கேமரா நம்பர் 3. அதைப் பார்த்துட்டே பேசணும். இதுக்குப் பேர் ப்ராம்ப்டர். அதோட கன்ட்ரோல் என்கிட்ட இருக்கு. நீ படிக்க வேண்டிய செய்தி அப்படியே நகரும். அதைப் பார்த்துப் படிச்சுட்டே இருந்தா போதும்” என்று அறிவுறுத்தியவர், ‘`இன்னும் எட்டு நிமிஷம் இருக்கு. ஒரு தடவை படிச்சுக் காமி’’ என்றார். கவிதா ஒரு முறை வாசித்ததும் நம்பிக்கை வந்தது திவ்யாவுக்கு.

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

ஐந்து மணிக்கு செய்தி நேரலை தொடங்கியதும், கம்பீரமாக செய்தி வாசிக்கத் தொடங்கினார் திவ்யா. 

சில செய்திகளுக்குப் பிறகு,

` ‘விகடன் ஆசை’க்காக நம்முடன் இணைந்திருக்கும் கல்லூரி மாணவி கவிதா, அடுத்த செய்தியை வாசிப்பார்’ என திவ்யா சொல்ல, ‘தூத்துக்குடி மாவட்டம் கோவில்​பட்டியில் கார்த்திகை சோமவார விழா...’ என்று ஆரம்பித்து இடைவெளியின்றி, பதற்றமும் இன்றி மிகச் சரியாகச் செய்தி வாசித்து முடித்தார் கவிதா.

முடிந்ததும் தனது நாற்காலியில் இருந்து துள்ளி எழுந்து கவிதாவைக் கட்டி அணைத்துப் பாராட்டினார் திவ்யா.   “நினைச்சே பார்க்கலை. முதல் தடவைனு சொன்னா நம்ப மாட்டாங்க” என்றபடி வெளியே அழைத்து வந்தார். ஸ்டுடியோவுக்கு வெளியே காலடி எடுத்து வைத்ததும் படபடபடவெனக் கைதட்டல் சத்தம் அரங்கை நிறைத்தது. குணசேகரன் தன் அணியோடு கைதட்டி வரவேற்றார்.

“முதல் தடவை மாதிரியே தெரியலையேம்மா” என்றார் குணசேகரன். எல்லாரும் கவிதாவிடம் கைகுலுக்கி தங்கள் வாழ்த்தைப் பகிர்ந்தனர்.

கீழே வரவேற்பறையில் காத்திருந்த அம்மாவும் அக்காவும் கவிதாவைக் கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

“எல்லாரும் பார்த்தாங்களாம். உன் செல்போன் அடிச்சுட்டே இருக்கு” என்று செல்போனை கவிதாவிடம் கொடுத்தார் அம்மா. அதை வாங்கி அப்பா மணியுடனும் அண்ணன் லோகேஷ் குமாருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

“நிஜம்மா என்ன சொல்றதுனு புரியலை சார்.  நேரலையில் பேசவைக்கணும்னு முடிவானப்போ, ஃப்ளோர்ல இருந்த எல்லாரும் அவ்ளோ பரபரப்பானதும், இது எவ்ளோ பெரிய விஷயம்னு புரிஞ்சது. அஞ்சு மணிக்கு செய்தி ஆரம்பிச்சப்பக்கூட ஒண்ணும் தெரியலை. ஆனா கரெக்ட்டா திவ்யா என்னை அறிமுகப்​படுத்தினப்போ என் ஹார்ட் பீட் அளவு தடதடனு ரொம்ப அதிகமாச்சு. ‘தீபாராதனை’ங்கிற வார்த்தையில் கொஞ்சம் தடுமாறினேன். ஆனா காட்டிக்காம அப்படியே தொடர்ந்து வாசிச்சேன்.  ஸ்டுடியோவுல இருந்து வெளியில வந்தப்ப எல்லாரும் கைதட்டி வரவேற்றது ரொம்பப் பெருமையா இருந்தது. நான் படிச்ச திருவேற்காடு எஸ்.கே.டி.ஜே பள்ளி தமிழாசிரியர் நீலகண்டன் ஐயாதான் என் தமிழ் ஆர்வத்துக்கு முக்கியக் காரணம்.  ஆனந்த விகடனுக்கு எப்போதும் என் நன்றிகள்” என்றார்.

ஆசை - ‘செய்திகள் வாசிப்பது கவிதா!’

அம்மாவிடம் இருந்து வாங்கிய மொபைல் டிங் டிங் என அடித்துக்கொண்டிருக்க, எடுத்துப் பார்த்தார். ‘82 மெசேஜ் வந்திருக்கு வாட்ஸ்அப்ல’ என்று சொன்னவர், “இனி ரெண்டு நாளைக்கு நான் பதில் சொல்றதுல பிஸி” என்று குதித்து ஓடினார்.

ஹேப்பி நியூஸ்!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...
ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism