Published:Updated:

`அம்மா' என்றால் அன்பு!

`அம்மா' என்றால் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
`அம்மா' என்றால் அன்பு!

`அம்மா' என்றால் அன்பு!

`அம்மா' என்றால் அன்பு!

`அம்மா' என்றால் அன்பு!

Published:Updated:
`அம்மா' என்றால் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
`அம்மா' என்றால் அன்பு!

தைரியம், தன்னம்பிக்கை, எதிர்ப்புகள் பற்றிக் கவலைகொள்ளாத இரும்பு இதயம்... இதுதான் ஜெயலலிதா. துணிச்சலான அரசியல் நடவடிக்கைகளாலும், ஆட்சிக்காலங்களில் உறுதியோடு அவர் எடுத்த முடிவுகளாலும் இன்னும் பல்லாண்டுகள் தமிழர்களால் நினைவுகூரப்படுவார்.

காலம் எவ்வளவோ மாறியிருக்கிறது. பெண்கள், பல துறைகளிலும் சாதனைகள் படைத்துவருகின்றனர். ஆனாலும் பொதுவாழ்வில் பெண்கள் நுழைவதும் அரசியலில் அடியெடுத்துவைப்பதும், தங்கள் மீது வீசப்படும் அவதூறுச் சேற்றை எதிர்கொண்டு வெற்றிகரமான தலைவராகத் தங்களை நிரூபித்துக்கொள்வதற்குமான தடைகள் ஆயிரமாயிரம். அந்த வகையில், இந்திய அரசியலில் ஈடுஇணையற்ற அடையாளமாகவும் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர் ஜெயலலிதா.

சினிமாவிலும் அரசியலிலும் சாதிப்பதற்கு வலுவான குடும்பப் பின்னணி ஏதும் இல்லாமல் வந்தவர் ஜெயலலிதா. தனக்கான தனிக்குடும்பத்தை அவர் உருவாக்கிக்கொள்ளாததும் அவர் மீதான மக்களின் அபிமானத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. ஜெயலலிதா சாதித்த சாதனைகளானாலும் அவர்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களானாலும் எல்லாவற்றுக்கும் காரணமாக அவரே இருந்தார். தனி மனுஷியாக, தனக்கெனத் தனித்துவமான ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொண்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, `அ.தி.மு.க என்ற கட்சி இனி இருக்குமா?' என்ற கேள்வி, வரலாற்றில் விஸ்வரூபம் எடுத்து நின்றது. எந்தக் கட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உழைத்தாரோ, அதே அ.தி.மு.க-வில் தனக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு வலுவான கட்சியாக மாறிய திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டையும் சமாளித்து, வரலாற்றில் தனக்கான இடத்தை நிரூபித்தவர் ஜெயலலிதா. அதற்காக அவர் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் சொல்லிமாளாதவை.

10 ஆண்டுகால எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆட்சிப்பொறுப்புக்கு வர முடியாத தி.மு.க., 1989-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஜெயலலிதா அணி - ஜானகி அணி என இரண்டாகப் பிளவுபட்டிருந்த நிலை. ஆனாலும் தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அணி அதிக இடங்களில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித்

`அம்மா' என்றால் அன்பு!

தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. இரண்டே ஆண்டுகளில் கட்சியைத் தன்வசப்படுத்திக்கொண்டவர், முடக்கிவைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தார். மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்று, 1991-ம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சராகவும் ஆனார்.

வெற்றி-தோல்வி என்பது மாறி மாறி வந்தாலும், அ.தி.மு.க-வை மீண்டும் அசைக்க முடியாத ஓர் அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்ததோடு, `தானே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு’ என்பதையும் வெற்றிகரமாக நிறுவினார்.

‘அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா; ஜெயலலிதா என்றால் அ.தி.மு.க’ என்னும் நிலையை, கடந்த கால் நூற்றாண்டில் உருவாக்கினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு தி.மு.க., அ.தி.மு.க என மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன. ‘ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் ஆட்சி மாற்றம்தான்’ என்ற நிலையையும் மாற்றி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, தமிழ்நாடு முதலமைச்சரானார்.

1996-ம் ஆண்டில் வரலாறு காணாத தோல்வி, தி.மு.க ஆட்சியில் சிறை, சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரச் சிறை என, அவர் கடந்து வந்த சோதனைகள் ஏராளம். ஆனால், அரசியல் வாழ்க்கையில் சந்தித்த பின்னடைவுகளால் கட்சியில் அவர் இடம் பாதிக்கவில்லை. எம்.ஜி.ஆரைப் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைத்த தொண்டர்கள், ஜெயலலிதாவைப் ‘புரட்சித் தலைவி’யாக ஏற்றுக்கொண்டனர். அதற்கும் மேலாக ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையில் அவரை அடையாளப்படுத்திக் கொண்டாடினர். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது நாடெங்கும் நடந்த பிரார்த்தனைகளும், மாற்றுக்கருத்துகொண்ட அரசியல் தலைவர்களும் அவர் நலம்பெற வேண்டியதும் அவர், மக்கள் செல்வாக்குப் பெற்ற மகத்தான தலைவர் என்பதற்கு சான்று.

தமிழ்நாடு முதலமைச்சராகவும் ஜெயலலிதாவின் சாதனைகள் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவை. சமூகநீதி உணர்வு என்பது தமிழர்களின் ரத்தத்தில் கலந்தது என்பதை உணர்ந்ததால்தான், அவரால் 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றி, சட்டபூர்வ ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது.  காவிரிப் பிரச்னை தலைதூக்கியபோது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோதும் தனி ஒருவராக சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார். ‘ஜெயலலிதா ஆட்சி என்றால், சட்டம்-ஒழுங்குப் பிரச்னை இருக்காது; அளவுக்கு அதிகமாக ஆட்டம் போடுபவர்களைத் தூக்கி எறிவார்’ என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஆழப் பதித்தார். மாநில அரசின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாகப் போராடியவர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவைத்தது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது என, சட்டப்பூர்வமாகவும் சாதித்துக்காட்டியவர்.

ஒரு பெண்ணாக தமிழகப் பெண்களின் பிரச்னைகளை உணர்ந்ததால், அவர்களின் இன்னல் போக்கும் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். பெண்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவே மகளிர் காவல் நிலையங்கள் அவர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவிகிதம் என்பதில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தினார். பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை அமைத்தார். பேறுகால விடுப்பை ஒன்பது மாதங்களாக அதிகப்படுத்தினார், பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி மற்றும் இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டம் தொடங்கினார். ‘பசியைத் தீர்ப்பதுதான் மக்கள்நல அரசின் முதல் கடமை’ என, எம்.ஜி.ஆர் வழியில் சிந்தித்தவர். எம்.ஜி.ஆருக்கு `சத்துணவுத் திட்டம்’ என்றால், ஜெயலலிதாவுக்கு ‘அம்மா உணவகம்’. நீண்டகால நோக்கில் அவர் நிறைவேற்றிய மழைநீர் சேகரிக்கும் திட்டமும் குறிப்பிடத்தக்கது.

எல்லா விமர்சனங்களையும் தாண்டி, தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயலலிதா. அவரை விட்டுவிட்டு, தமிழக வரலாறு முழுமையடையாது!