Published:Updated:

நேற்று... இன்று... நாளை!

நேற்று... இன்று... நாளை!
பிரீமியம் ஸ்டோரி
நேற்று... இன்று... நாளை!

ப.திருமாவேலன், படம்: ஸ்டில்ஸ் ரவி

நேற்று... இன்று... நாளை!

ப.திருமாவேலன், படம்: ஸ்டில்ஸ் ரவி

Published:Updated:
நேற்று... இன்று... நாளை!
பிரீமியம் ஸ்டோரி
நேற்று... இன்று... நாளை!

னவு தேசமாம் சினிமாவில் நளினமாகவும், கனல் தேசமாம் அரசியலில் அச்சுறுத்தலாகவும் நின்று வென்ற ஜெயலலிதா, இதோ படுத்திருக்கிறார். அம்மா சந்தியா இறந்தபோது ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை முடிந்தது. எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இதோ இப்போது எதன் தொடக்கம்... எதன் முடிவு?

நேற்று... இன்று... நாளை!

தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அலாதியான ப்ரியம்கொண்டவர் ‘நடிகை’ ஜெயலலிதா. தினமும் காலையில் எழுந்ததும் சிறிது வெந்நீரில் எலுமிச்சம் பழத்தையும் தேனையும் கலந்து குடிப்பார். வைட்டமின் கிரீமால் முகத்தை மசாஜ் செய்துகொள்வார். முகத்தில் விளக்கெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு, பச்சைப் பயறு மாவைத் தேய்த்துக் கழுவுவார். கண்களுக்கு மேலேயும் விளக்கெண்ணெய் போட்டால், பளபளப்பாக இருக்கும் என்பார். வெண்ணையும் பயத்தமாவையும் சேர்த்து குளியலுக்குப் பயன்படுத்துவார்... இப்படி தனது அழகுக் குறிப்புகளை அடுக்கினார் ஜெயலலிதா. இவை எல்லாம் சினிமா நடிகையாக இருந்தபோது சொன்னவை. அப்போதும் அதற்குப் பின்னாலும் அழகுக்குக் காட்டிய அக்கறையை உடல்நலத்தில் ‘அரசியல்வாதி’ ஜெயலலிதா காட்டவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகள் துன்பத்துக்கும் கடந்த இரண்டு மாதத் துயரத்துக்கும் இதுதான் காரணம்!

தனக்காக ஒரு பெருங்கூட்டம் காத்திருப்பதையும், தன்னைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர் மகிழ்வதையும் மனதுக்குள் சேகரித்தபடியே செல்வதில் அதீத ஆசைகொண்டவர் ஜெயலலிதா. ஆனால், அவருக்காக லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்வதையும் கண்ணீரால் நனைந்து நிற்பதையும் அவர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைப்பார். இன்று அவர் அறியாமலேயே அனைத்தும் நடக்கின்றன. மருத்துவமனைக்குப் போனால் இமேஜ் போய்விடும் என்று நினைத்தார். உடம்பே போன பிறகு இமேஜ் பற்றி கவலைப்படும் நிலைமையில் ஜெயலலிதா இல்லை.

‘நான் நினைத்தது மாதிரி வாழ்க்கை அமையவில்லை’ என்று ஜெயலலிதா வருந்தியது உண்டு. நினைத்தது மாதிரியான நிம்மதியும் அவருக்கு அமையவில்லை என்பதே செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் நாம் பார்த்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு 10:30 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் சொன்னது. போயஸ் கார்டன் வீட்டில்வைத்தே அவருக்கு இதயத் தாக்கு ஏற்பட்ட நிலையில்தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமச்சந்திரா மருத்துவமனையில் தனக்கான உடல் பரிசோதனைகளைச் செய்துவந்த ஜெயலலிதாவை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தது இதனால்தான். ராமச்சந்திரா மருத்துவமனை மிகத் தொலைவில் இருந்ததால், அருகில் இருக்கும் அப்போலோவில் சேர்த்தார்கள்.

நேற்று... இன்று... நாளை!

முதல் இரண்டு நாட்கள் மிகச் சாதாரணப் பரிசோதனைகள்தான் அவருக்குத் தரப்பட்டன. இயல்பாக இருந்தார்; பேசினார். காய்ச்சல் ஓரளவு குறைந்தது. ஆனால், செப்டம்பர் மாதம் 25-ம் தேதிக்குப் பிறகு உடல்நிலை மோசம் அடையத் தொடங்கியது; அவரது இதயத்தின் செயல்பாடு குறைந்தது. மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திடீரென அவரது கை, கால், வாய் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக நீரிழிவு நோய்ச் சிகிச்சை எடுத்துவந்தவர் ஜெயலலிதா. அது அவரது சிறுநீரகத்தைப் படிப்படியாகப் பாதித்தே வந்தது. இந்தச் சூழலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் இயல்பு நிலைமையில் இல்லாமல்போனது. நுரையீரல், இதயம் ஆகிய இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டதன் காரணமாக, அவருக்கு செயற்கை சுவாசம் தரப்பட்டது. செயற்கை சுவாசம் இல்லாமல் அவரால் இயங்க முடியாத நிலைமை, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதலே இருந்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தேக்கம் அடைந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் அழைத்துவரப்பட்டார். லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ரிச்சர்டு பெய்ல், செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அப்போலோ வந்தார். நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகத்தான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. அதை நீக்குவதற்காக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் அவருக்குத் தரப்பட்டன. தொடர்ந்தும் அதிக அளவிலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை உட்செலுத்துவதால், உடலில் நிறமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் 5-ம் தேதிதான், ‘முதலமைச்சருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை’ என்ற உண்மையை அப்போலோ மருத்துவமனை வெளிப்படையாக ஒப்புக்​கொண்டது.

ஒரே நேரத்தில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான மருந்துகள், சுவாசத்துக்குத் தேவையான சிகிச்சை, இதய நோய் மருத்துவப் பரிசோதனை, நீரிழிவு நோய் சிகிச்சை... போன்ற பலதரப்பட்ட சிகிச்சைகள் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கை, கால் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதற்கான கதிரியக்கப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்​களையும் தாண்டி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ​மனையின் புகழ்பெற்ற மருத்துவர்களின் ஆலோசனையும் ஜெயலலிதாவுக்கு அவசியமானது. நுரையீரல் மருத்துவர் கில்நானி, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை துறை நிபுணர் அஞ்சன் டிரிக்‌ஹா, இதய மருத்துவ நிபுணர் நிதிஷ் நாயக் ஆகிய மூவரும், அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஜெயலலிதாவைப் பரிசோதனை செய்தனர். இவர்கள் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் இங்கேயே தங்கியிருந்தார்கள். செயற்கை சுவாசம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைமையில்தான், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்தது. அதோடுதான் அனைத்து சிகிச்சைகளையும் இந்த மருத்துவர்கள் செய்தார்கள். இதயத்தின் செயல்பாடு சீராக இருந்தால், மற்ற எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் அதை இதயம் முறைப்படுத்தி வழங்கும். எனவே, செயற்கை சுவாசத்தை லேசாக எடுத்துப் பார்த்து, ஜெயலலிதாவால் இயற்கையாக மூச்சு விட முடிகிறதா என்ற சோதனையை அக்டோபர் மாதம் 9-ம் தேதி, மருத்துவர்கள் செய்து பார்த்தார்கள். திருப்தியான அளவுக்கு முன்னேற்றம் இல்லை. அதே நாளில் இருந்துதான் முதலமைச்சருக்கு பேஸிவ் பிசியோதெரபி செய்யப்பட்டது. தானாக அசைக்க முடியாத உடல் உறுப்புகளை, இயந்திரம் மூலமாக அசைக்க வைக்கும் பயிற்சி. சுவாசம், உடல் செயல்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையில்தான், ஜெயலலிதா இதுவரை கவனித்துவந்த துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

சுவாசத்துக்கு மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் செய்த சிகிச்சை அக்டோபர் மாதம் 21-ம் தேதிக்குப் பிறகு ஓரளவு பயன்கொடுத்து, சுவாசம் சீரானது; ஆனால், உடல் இயக்கம் சீராகவில்லை. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து பிசியோ​தெரபிஸ்ட்கள் வந்தார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் கை, கால் இயக்கத்துக்குப் பயிற்சி அளித்தார்கள். அதன் பிறகு லேசாக முதலமைச்சர் பேச முயற்சித்தார். ஆனாலும் உடல் இயக்கம் சீராகவில்லை. எனவே, மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியது ஆயிற்று.

இந்த நிலையில் நவம்பர் மாதம் இறுதியில் சிறப்பு வார்டுக்கு முதலமைச்சர் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி, ஜெயலலிதா பற்றி இதுவரை வந்த செய்திகளுக்கு முழு விளக்கம் அளிப்பதாக அமைந்தது. அதுவரை மறைக்கப்பட்ட பல விஷயங்களைத் தெளிவுபடுத்து வதாகவும் அமைந்திருந்தது.

நேற்று... இன்று... நாளை!

‘முதலமைச்சரின் ஒட்டுமொத்த உடலுக்கும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான இயன்முறை சிகிச்சையை நிபுணர்கள் கையாளுகின்றனர். முதலமைச்சர் தாமாகவே உடற்பயிற்சிகளைச் செய்வதற்கான முயற்சிகளில் இயன்முறை நிபுணர்கள் ஈடுபடுகின்றனர். அடுத்த கட்டமாக முதலமைச்சர் எழுந்து, நின்று நடக்க வேண்டும்.

சுவாசத்தைச் சீராக்குவதற்காக அறுவைசிகிச்சை  அதாவது ட்ரக்யாஸ்டமி செய்யப்பட்டு, கழுத்தில் பொருத்தப்பட்ட குழாய் இன்னும் அகற்றப்படவில்லை. அந்தக் குழாயினால் அவர் அசெளகரியமாக உணரவில்லை. தற்போது தாமாகவே 90 சதவிகிதம் சுவாசிக்கிறார். கழுத்தில் பொருத்தப்படும் குழாயின் காரணமாக நோயாளிகளால் பேச முடியாது. எனவே, அந்தக் குழாயில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அவர் பேசி வருகிறார். மூச்சைப் பிடித்துக்கொண்டு பேச வேண்டும் என்பதால், குழாயில் உள்ள ஒலிபெருக்கி கொண்டுபேசுவது அவ்வளவு சுலபம் அல்ல. முதலமைச்சர் தற்போது சில நொடிகள், சில நிமிடங்கள் மட்டுமே பேசுகிறார்’ என நவம்பர் மாதம் 25-ம் தேதி அப்போலோ மருத்துவமனை தலைவர் சொன்னார்.

இந்த நிலைமையில் பார்த்தால், அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு முழுமையாகச் சீரடைய வில்லை. அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. கை, கால்கள் போன்ற உடல் உறுப்பு இயக்கம் சரிவர இல்லை. பேசுவதில் சிரமம் இருந்தது. 70 நாட்​களுக்கு மேல் வாட்டர் பெட்டில் படுத்தே இருந்தார். அதுவும் அவரது உடலுக்குச் சுணக்கத்தைக் கொடுத்தது. இப்படிப்பட்ட  நிலையில்தான், ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். சில வாரங்களுக்கு இருந்த நிலைமையைவிட கொஞ்சம் மாறுதல் என்பது சில மணி நேரமாவது அவர் தானாகச் சுவாசித்தார் என்பது மட்டும்தான். இப்படிப்பட்ட நிலையில் பெரிய அளவு உடல்நிலையில் முன்னேற்றம் இருக்காது என்பதால், போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. ஆனால், அதை சசிகலா ஏற்கவில்லை. அதனால், அப்போலோ மருத்துவமனைக்கு உள்ளேயே தனி அறையில் ஜெயலலிதா தங்கவைக்கப்பட்டார்.

நேற்று... இன்று... நாளை!இந்த நிலையில் டிசம்பர் மாதம் 4-ம் தேதி மாலையில் ஜெயலலிதா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மாலை 6 மணி அளவில் ஜெயலலிதாவுக்குத் திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. இது மருத்துவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இதயத்தின் செயல்பாடு தடைபட்டது. உடனடியாக அவர் மீண்டும் ஐ.சி.யூ யூனிட்டுக்குக் கொண்டுசெல்லப் பட்டார். ‘மிகவும் கவலைக்கிடம்’ என்று அப்போலோவே அறிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது!

சரியோ... தவறோ அ.தி.மு.க இப்போது சசிகலா கைக்கு நேரடியாக வந்துள்ளது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரட்டை இலைக் கட்சிக்கு மூன்றாவது இலையாகத் துளிர்த்துள்ளார் சசிகலா. இதுவரை ‘பேக் ஸீட் டிரைவிங்’ செய்பவராகக் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இப்போது முன்னுக்கு வருகிறார். இன்று அ.தி.மு.க-வில் சசிகலாவை எதிர்க்க, ஏன் மூச்சுவிடக்கூட ஆள் இல்லை. அதே நேரத்தில் சசிகலாவின் உடல்நிலையும் அவ்வளவாக ஆரோக்கியமானதாக இல்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தன்னைக் கட்சியைவிட்டு நீக்கிய காலம் முதல் மனரீதியாகவும் உடைந்துபோனவராக சசிகலா இருந்தார். கொட்டிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் முடங்கியே இருந்தார். ஜெயலலிதா இவரை மீண்டும் கார்டனுக்குள் சேர்த்த பிறகும் பெரிய அளவில் எதிலும் ஆர்வம் இல்லாதவராகவே சசிகலா நடந்துகொண்டார். இந்தக் காலகட்டத்தில்தான் இளவரசி மகன் விவேக்கும் டாக்டர் சிவக்குமாரும் அதீத ஆர்வத்துடன் வலம்வந்தார்கள். ‘நான் அரசியலில் தலையிட மாட்டேன். உங்களுக்கு உதவியாக மட்டுமே இருப்பேன்’ என்று சொல்லிவிட்டு கார்டனுக்குள் வந்தவர் சசிகலா. ஆனால், காலம் அவர் கையில் கொடையை வழங்கப்போகிறது.

யாரால் யார் கெட்டது, யாரால் யார் பலன் பெற்றது என்பதைப் பிரிக்க முடியாத வாழ்க்கை ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும். இதுவரை ஜெயலலிதாவின் நாற்காலிக்குக் காவலாக இருந்த சசிகலாவுக்கு, இன்று அதிகாரம் கிடைக்கப் போகிறது. திரை மறைவு ஆலோசனைகள் சொல்வது எளிது. ஆனால், நேரடியாக சிறு காரியம் ஆற்றுவது கடினம். சசிகலா மட்டும் அல்ல, அவரது குடும்ப வட்டம் இதுவரை எதிர்மறை விமர்சனங்களையே வாங்கிப் பழகியவர்கள். தானும் சிக்கி, ஜெயலலிதாவையும் சிக்கவைத்தவர்கள். இந்த வட்டாரத்தின் கைக்கு அ.தி.மு.க போகப்போகிறது. அவர்கள் தகுதிவாய்ந்தவர்களா என்பதும், தகுதிக்கு தங்களை வளர்த்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகத்துக்கு உரியது.

இழப்புகளில் இருந்து எழுந்து வந்தவர் ஜெயலலிதா. ஆனால், இந்த இழப்பில் இருந்து அ.தி.மு.க எழுமா?