Published:Updated:

சரிகமபதநி டைரி - 2016

சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி - படங்கள்: ப.சரவணகுமார், மீ.நிவேதன்

சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி - படங்கள்: ப.சரவணகுமார், மீ.நிவேதன்

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016
சரிகமபதநி டைரி - 2016

நினைவுகள் பின் நகர்கின்றன...

2012-ம் வருடம் டிசம்பர் 15-ம் தேதி மியூஸிக் அகாடமியின் 86-ம் ஆண்டு இசைவிழாவைத் தொடக்கிவைக்க வந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

‘`உலகக் கலைவிழாவை சென்னையில் நடத்த, மியூஸிக் அகாடமி ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான எந்த உதவிக்கும் நீங்கள் என்னை நம்பலாம்” என்றார் ஜெயலலிதா, தனது தொடக்க உரையில்.
‘`சுருதி, ராகம், பாவம், சாகித்யம் ஆகியவற்றை உள்ளடக்கியது கர்னாடக இசை. இதற்கும் இணையாக உலக இசை அரங்கில் ஒருசில மட்டுமே இருக்க முடியும்” என்ற ஜெயலலிதா, தொல்காப்பியத்திலும் சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதே மாதிரி 1991-ம் ஆண்டில் பல்கலைக்கழகம் நூற்றாண்டு அரங்கில் நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
எம்.எஸ்.சுப்புலட்சுமி இறை வணக்கம் பாடிய அந்த விழாவில் பேசியபோது, ‘`பிரான்ஸில் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டும் விவசாயச் சமூகத்தினருடன் கிரிக்கெட் விளையாடியிருந்தால், பிரெஞ்சுப் புரட்சி நடக்காமலேயே போயிருக்கும். காரணம், இந்த விளையாட்டுக்கு சாதி, வர்க்க, இனப்பாகுபாடு கிடையாது” என்றார் ஜெயலலிதா.

அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் எவ்வளவுதான் பணிச்சுமை இருந்தாலும் அவற்றுக்கு தொடர்பற்ற வேறு விழாக்களுக்கு வரும்போது பக்காவாக ‘ஹோம்வொர்க்’ செய்துவிட்டுவருவதில் உதாரணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

இப்போது பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சரும், இனி இந்த நாற்காலியை அலங்கரிக்கப்போகிறவர்களும் மறைந்த அம்மையார் மாதிரி ஆல்ரவுண்டர்களாக இருப்பார்களா? டவுட்டுதான்!

சரிகமபதநி டைரி - 2016

ஜெயா டி.வி-யின் `மார்கழி உற்சவம்' விழா மேடையில் டாக்டர் எஸ்.சௌம்யா. எம்பார் கண்ணன் - வயலின். நெய்வேலி நாராயணன் - மிருதங்கம். ‘ஓம் முருகா’ என்பது தலைப்பு.

முருகக் கடவுள் பற்றி சிறு குறிப்பு வரைந்துவிட்டு, குருநாதர் டாக்டர் எஸ்.ராமநாதன் இயற்றிய வர்ணம் பாடியபோது, வழக்கமாக தேனினும் இனிய குரலில் பாடும் சௌம்யாவுக்குத் தொண்டை கட்டியிருப்பது புரிந்தது. ஆனாலும் இசை அறிவு, அனுபவம் மற்றும் முருகனின் அருள்கொண்டு குறை தெரியாத அளவுக்குச் சமாளித்தார்.

‘ஸ்ரீநாதாதி குரு குஹோ ஜததி... ஜததி...’ இது, திருத்தணி முருகன் மீது முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய பாடல்.  இதுவே அவருடைய முதல் கீர்த்தனையும்கூட. மாயாமாளவகௌள ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைப் பாடுவதற்கு முன்னர், எந்த சிச்சுவேஷனில் தீட்சிதர் அதைப் பாடினார் என்பதை விளக்கினார் சௌம்யா.

சக்கரவாகம் ராகத்தை எந்த ஜோடனைகளும் இன்றி எளிய முறையில் விரிவாக்கம் செய்துவிட்டு, ‘நானொரு சிறு வீணை...’ என்ற பெரியசாமி தூரனின் பாட்டு. ‘நல்ல நல்லிசையின் நாதனே வருவாய்...’ வரிகளை சௌம்யா நிரவல்செய்ய, வயலினில் நல்லிசை கொடுத்தார் எம்பார் கண்ணன்.

சரிகமபதநி டைரி - 2016

பிறகு வந்தது தோடி. எக்காலத்திலும் சோடைபோகாத ராகம். முக்காலங்களிலும் தோடியின் பிடிகளை நழுவவிடாமல் தன்வசப்படுத்தி சௌம்யா பாடியது அசத்தல். இலையில் விபூதி தந்து அருள்பவரான திருச்செந்தூர் சுப்ரமண்யர் மீது தீட்சிதர் பாடியுள்ள, ‘ஸ்ரீசுப்ரமண்யோமாம் ரக்ஷது...’வைப் பாடி, பொருள் விளக்கி... காவடிச்சிந்து, திருப்புகழ் என்று துக்கடாக்களுக்குத் தாவினார் சௌம்யா.

இன்றைய இசைத் துறையில், ஏரியாவிட்டு ஏரியாவிடாமல் துரத்திச் சென்று கேட்கத் தூண்டும் ஆண்பால் பெண்பால் பாடகர்களை ஒரு கை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி, ‘நம்ப ஏரியாவுக்கு வந்து பாடும்போது கேட்டுக்கலாம்...’ என்று ரசிகர்களை நினைக்க வைக்கும் பாடகர்கள்தான் பெரும்பாலானவர்கள். சௌம்யா உள்பட பலர் இந்த மெஜாரிட்டி லிஸ்ட்டில்.

விருது பெறுபவர்கள், ஏற்புரையில் தங்கள் சுயமுயற்சியை வெளிப்படுத்துவது அபூர்வம். போலியான அடக்கம்தான் (False Modesty) அதிகம் இருக்கும்.

பி
ரம்ம கான சபாவில் ‘வாத்திய பத்மம்’ விருதுபெற்ற கிளாரினெட் மேதை ஏ.கே.சி. நடராஜனின் ஏற்புரை, சத்தியவாக்கு! ‘`மகாலட்சுமி...நல்லவன், கெட்டவன், அயோக்கியன்னு எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவா. அதேமாதிரி, கொடுப்பதைத் திருப்பியும் வாங்கிடுவா. ஆனா, கலைவாணி சரஸ்வதி அப்படி இல்லை. அவகிட்ட கெஞ்சணும், மன்றாடணும். தகுதியானவங்களுக்கு மட்டும்தான் அவளோட கருணை கிடைக்கும். எனக்கு 86 வயசு ஆகுது. இன்னிவரைக்கும் நான் உழைக்கிறேன், சாதகம் செய்றேன். கிளாரினெட்ல இருக்கிற 14 பட்டன்கள்ல 8 பட்டன்களைக் கழற்றிக் கடாசிட்டு அந்த வாத்தியத்தை நம்ப சங்கீதத்துக்குத் தோதா மாற்றினேன். யார் வேணும்னாலும் கிளாரினெட் வாசிக்க முடியாது. அப்படியிருந்தா, ஆயிரம் பேர் இதுல முன்னுக்கு வந்திருக்கலாமே! ஆனா, ஒருத்தர்கூட வரலையே! நான் உழைச்சு, சாதகம் செய்தேன். விருதுகள் என்னைத் தேடி வருது” என்று பாசாங்கு இன்றி பேசினார் நடராஜன்.

சிறந்த ஏற்புரைக்காக, ‘பேச்சு பத்மம்’ என்று இவருக்கு தனி விருது கொடுக்கலாம்!

ஏ.கே.சி தவிர, வித்வான் மதுரை ஜி.எஸ். மணி (கான பத்மம்), ராதா (நாட்டிய பத்மம்), நீலு (நாடக பத்மம்) மூவருக்கும் விருது. நால்வருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் உண்டு.
சோவின் நாடகக் குழுவில் பலப்பல வருடங்கள் இணைந்து இருந்த நீலு, விருதை சோவுக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னபோது அழுதுவிட்டார். ‘`அவன் (உரிமையோடு) சீக்கிரமே குணமாகி வரணும்” என்றார். ம்... விதியின் எண்ணம் வேறு மாதிரி இருந்துவிட்டது.

சரிகமபதநி டைரி - 2016

‘`காயத்ரி மந்திரம் ஜபித்தால் பயம் விலகும்... காயத்ரி கிரீஷ் கானம் கேட்டால் சுகம் பெருகும்” என்று பாடகியை அறிமுகப்படுத்தினார், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நிர்வாக கமிட்டி அங்கத்தினர் டி.எஸ்.ராஜகோபாலன்.

காயத்ரி கிரீஷ் செய்த வரமு ராக ஆலாபனை, சுகம் தந்தது; சென்னையின் சோகமான சூழலுக்கு ஆறுதல் ஒத்தடம் கொடுப்பதாகவும் அமைந்தது. வயலினில் வி.சஞ்சீவ் இதமான வாசிப்பால் இதை வழிமொழிந்தார்.
சர்க்கரைப் பாகு போன்று தித்திக்கும் வார்த்தைகளைப் பேசும் ஜானகியின் மிருதுவான தோள்களில் கலந்து பரிச்சயப்பட்ட மார்பை உடையவனான ராமனிடம் ‘சாகா வரம் அருள்வாய், ராமா...’ என்று யாசிக்கும் பாரதியின் பாடலை வரமுவில் பாடினார் காயத்ரி கிரீஷ். கவிராஜனின் பாடலை வெறும் துக்கடாவுடன் கடந்து செல்லாமல், இப்படி ‘சப் மெயின்’ பாடலாகக் கேட்பதும் தனி சுகம்தான்.

ராகம் - தானம் - பல்லவிக்கு, கீரவாணி. தானம் பாடுவதற்கு செம ராகம் இது. பாடுபவர் உருட்டி, புரட்டி மனோதர்மத்தை வெளிப்படுத்த​லாம். ஆனால், காயத்ரி சிக்கனமாகத்தான் தானம் செய்தார்.

‘அம்மா என்றே அழைத்தோமே அன்பும் பண்பும் நிறைந்த உன்னை...’ என்பது பல்லவி வரிகள். இது ஜெயலலிதாவுக்கு ஸ்பெஷல் அஞ்சலியாம்.

ம்... சீஸனில் இதுமாதிரி இன்னும் எத்தனை அபத்தங்களைக் கேட்கவேண்டி இருக்குமோ!

- டைரி புரளும்...