Published:Updated:

பெண் டெண்டுல்கர்!

பெண் டெண்டுல்கர்!
பிரீமியம் ஸ்டோரி
பெண் டெண்டுல்கர்!

சார்லஸ்

பெண் டெண்டுல்கர்!

சார்லஸ்

Published:Updated:
பெண் டெண்டுல்கர்!
பிரீமியம் ஸ்டோரி
பெண் டெண்டுல்கர்!
பெண் டெண்டுல்கர்!

தொடர்ந்து ஆறாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று அசத்தி​யிருக்​கிறது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. இறுதிப்​போட்டியில் 76 ரன்கள் குவித்ததோடு, தொடர் முழுக்க தன் அபாரமான பேட்டிங் திறமையால் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் மித்தாலி ராஜ். தொடர் நாயகி விருதையும் வென்றார்.

ஆசியக்கோப்பையில் மட்டுமா... கடந்த 17 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டில் வெவ்வேறு வெற்றி​களுக்கும் வளர்ச்சிக்கும் காரண​மாக இருக்கிறவர் மித்தாலி.

`இந்தியாவின் பெண் டெண்டுல்கர்' என அழைக்கப்​படும் மித்தாலி ராஜ், இந்தியாவுக்​காக மிக அதிக ரன்கள் குவித்த வீராங்கனை; உலக அளவில் 5,000 ரன்களைக் கடந்திருக்கும் இரண்டாவது பெண்; இந்தியப் பெண்கள் அணிக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கும் கேப்டன்... என மித்தாலி ராஜின் சாதனைகள் அசாதாரண​மானவை.

ராஜஸ்தானில் பிறந்தாலும், மித்தாலி ராஜுக்குப் பூர்வீகம் தமிழ்நாடு. அப்பா விமானப்​படை அதிகாரி. அம்மாவுக்கு தன் மகளை மிகப்பெரிய பரதநாட்டியக் கலைஞராக உருவாக்க வேண்டும் என்பதே கனவு. மூன்று வயதில் மித்தாலியை நடனப் பள்ளிக்கு அனுப்பினார் அம்மா. ராஜஸ்தானில் இருந்து குடும்பம் ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்தது. எட்டு வருடங்கள் தொடர்ந்து நடனம் கற்ற மகளுக்கு, நடனத்தில் ஆர்வம் குறைந்தது. கிரிக்கெட் பயிற்சிக்காகச் சேர்க்கப்பட்ட தம்பி மிதுனுடன், கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்ல ஆரம்பித்த மித்தாலிக்கு, கிரிக்கெட் பைத்தியம் பிடித்தது. `இது ஆண்களின் விளையாட்டு. இதை ஏன் நீ விளையாடு​கிறாய்?' என உறவினர்கள் தடுத்தனர். ஆனால், தன் மனம் விரும்பியதை வாழ்க்கையாகத் தேர்ந்​தெடுத்தார் மித்தாலி.

பெண் டெண்டுல்கர்!

``என் பரதநாட்டிய குரு ஒருகட்டத்தில் `நடனமா, விளையாட்டா... எது உன் லட்சியம் என்பதை இன்றே முடிவுசெய்து சொல்’ என மிரட்டியபோது, என்ன முடிவு எடுப்பது, வீட்டில் எப்படிச் சொல்வது என ஏகப்பட்ட குழப்பங்கள். ஆனால், கிரிக்கெட்டை விட்டுவிட்டு மற்றொன்றைத் தொடர்ந்தால், அது எனக்கு நானே செய்யும் மிகப்பெரிய தீங்கு என்பது மட்டும் புரிந்தது.  `கிரிக்கெட்தான்’ என குருவிடம் தைரியமாகச் சொன்னேன்'' என்கிறார் மித்தாலி.

1999-ம் ஆண்டு 17-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் மித்தாலி. முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துடன் மோதியது. தொடக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்கினார் மித்தாலி. 114 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். ரேஷ்மா காந்தியுடன் இணைந்து மித்தாலி ராஜின் பார்ட்னர்ஷிப்  258 ரன்கள். அவ்வளவு பெரிய சாதனையைச் செய்த மித்தாலிக்கு, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டது; துவண்டு​போனார். 

கிரிக்கெட்டுக்கு வந்ததே தவறோ என மித்தாலியைத் தடுமாறவைத்த தருணம் அது. ஆனால், பயிற்சியை இன்னும் பல மணி நேரம் அதிகம் ஆக்கினார். ஆட்ட நுணுக்கங்களையும் வியூகங்களையும் மாற்றினார். 
2000-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது.  இதுதான் சரியான நேரம் என, அதிரடி ஆட்டம் ஆடினார் மித்தாலி. முதலில் விளையாடிய மூன்று மேட்ச்களில் இரண்டில் அரை சதம் என ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த முறை உலகக் கோப்பை இந்தியாவுக்குத்தான், மித்தாலிதான் சூப்பர் ஸ்டார் என விமர்சகர்கள் பாராட்டிய நிலையில், திடீரென அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்க, உலகக் கோப்பையின் மூன்று போட்டிகளோடு வெளியேறினார் மித்தாலி. இந்தியாவும் அதற்குப் பிறகு அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

பெண் டெண்டுல்கர்!

2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார் மித்தாலி. ஒரு நாள் போட்டிகளில் முதல் போட்டியிலேயே சதம் அடித்தவருக்கு, முதல் டெஸ்ட்டில் பூஜ்ஜியம்தான் கிடைத்தது. ஆனால், துவண்டுவிடவில்லை. அதே ஆண்டின் இறுதியில் இங்கிலாந்துக்குச் சென்று இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் ரன் மெஷினாக மாறினார் மித்தாலி. டான்ட்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 214 ரன்கள் குவித்து பெண்கள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் என உலக சாதனை படைத்தார் மித்தாலி. அப்போது அவருக்கு வயது 20.

2005-ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பைக்கு இந்தியாவின் கேப்டனாக மித்தாலி தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்ஆப்பிரிக்காவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவை இறுதிப் போட்டி வரை அழைத்துச்சென்றார் மித்தாலி. உலகக் கோப்பை வரலாற்றில், இன்று வரை இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி எட்டிப்பிடித்த ஒரே உலகக் கோப்பை இறுதிப்போட்டி இதுதான்.
 
அரை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 91 ரன்கள் குவித்து, நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றார் மித்தாலி. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

பெண் டெண்டுல்கர்!

``முதல்முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டி, அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றதும் எங்களுக்குள் அதிகபட்சப் பதற்றம் வந்துவிட்டது. லீக் போட்டியோ, இறுதிப்போட்டியோ எதுவாக இருந்தாலும் அதை ஒரு போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை அன்றுதான் கற்றேன். என் அணியினரும் கற்றுக்கொண்டனர்'' எனத் தோல்விக்குப் பிறகு சொன்னார் மித்தாலி.

``கடந்த ஆண்டு விராட் கோஹ்லியுடன், எனது பெயரும் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகவல் வந்தவுடன் நிச்சயம் நமக்குக் கிடைக்காது. கோஹ்லியின் பாப்புலாரிட்டியுடன் ஒப்பிடும்போது நாம் யார், ஆண்கள் கிரிக்கெட்டுக்கு விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என நினைத்தேன். ஆனால், எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. எப்போதுமே பெண்கள் கிரிக்கெட் என்பதால், இரண்டாம் நிலை ட்ரீட்மென்ட்டை எதிர்கொண்ட எனக்கு, இது மிகப்பெரிய சந்தோஷம். என் நாடு என்னைக் கெளரவிக்கிறது என்பதைத் தாண்டி எனக்கு யார் என்ன பெரிய கெளரவம் கொடுத்துவிட முடியும்'' என நினைவுகூர்கிறார் மித்தாலி.

ஆசியக் கோப்பை வெற்றி ஒட்டுமொத்த பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.  2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை வென்று தந்துவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து இருந்து ஓய்வுபெறுவதுதான் மித்தாலியின் தற்போதைய இலக்கு.

பெண் டெண்டுல்கருக்கும்... உலகக் கோப்பை கனவு நனவாகட்டும்!