Published:Updated:

ஆசை - சுண்டலோ சுண்டல்!

ஆசை - சுண்டலோ சுண்டல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - சுண்டலோ சுண்டல்!

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: மீ.நிவேதன்

ஆசை - சுண்டலோ சுண்டல்!

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
ஆசை - சுண்டலோ சுண்டல்!
பிரீமியம் ஸ்டோரி
ஆசை - சுண்டலோ சுண்டல்!
ஆசை - சுண்டலோ சுண்டல்!

“கடற்கரைக்கு அடிக்கடி போகும்போது, சுண்டல் விற்கிறவங்களைக் கவனிப்பேன். அவங்களும் ஒருவகையில் தொழிலதிபர்கள்தானே! ஒரு நாள் அவங்கள மாதிரி லுங்கியோடு களத்துல இறங்கி, சூடான சுண்டல் விக்கணும்!” - இது கோகுலின் ஆசை. செல்போன்களுக்கான செயலிகளை உருவாக்கும் மென்பொருள் நிறுவனம் ஒன்றை, சென்னையில் நடத்துகிறார் கோகுல்.

ஆசை - சுண்டலோ சுண்டல்!நாள், நேரம் குறித்துக்கொண்டு, ``நாங்க ரெடி... நீங்க ரெடியா?'' என சர்ப்ரைஸாக அழைத்தோம். ``சுண்டல் குண்டா எங்கே... ஸ்பாட் எங்கே?'' என உடனே தயாராகிவிட்டார் கோகுல்.

“தூத்துக்குடியில் இருக்கிறப்பவும், சென்னை வந்த பிறகும் கடற்கரைக்குப் போய் கொஞ்ச நேரம் உலாத்திட்டு, அலைகள்ல கால் நனைச்சுட்டுப் போறதுதான் நான் இளைப்பாறும் ஒரு வழி. அப்படிப் போறப்ப, சுண்டல் விற்கிறவங்களைக் கவனிப்பேன். போன​ வாரம் விகடன் படிச்சுட்டு அங்கே போய், ‘நாம சுண்டல் வித்தா எப்படி இருக்கும்?’னு தோணிச்சு. விகடன் `ஆசை' பகுதிக்கு எழுதிப்போட்டேன்” என்று தனது `ஆசை’ கதையைச் சொன்னார் கோகுல்.

ஆசை - சுண்டலோ சுண்டல்!

அலுவலகத்தில் இருந்து கோட்சூட்டோடு கிளம்பத் தயாரானவரிடம் “இப்படியேவா... நாங்க சொன்ன காஸ்ட்யூம் எங்கே பாஸ்?” என்றோம். அறைக்குள் சென்று பத்து நிமிடங்களில் உடை மாற்றிக்கொண்டு லுங்கியோடு வந்தவரை,  மொத்த அலுவலகமும் வேடிக்கை பார்த்தது. “மொதலாளி... ஒரு செல்ஃபி!’' என்று சிலர் ஓடிவர, ‘`டைம் ஆச்சுப்பா!” என்று தப்பித்து வெளியே வந்தார்.

“லுங்கியை எங்க ஊர்ல ‘சாரம்’னு சொல்வாங்க” என்ற கோகுலுடன் காரில் ஏறி, நேராக மெரினா கடற்கரைக்கு வந்தோம்.

வெயில் கொஞ்சம் தணிய ஆரம்பித்திருந்தது. சுண்டல் விற்பனை செய்யும் ஒருவரைப் பிடித்து “இவருக்கு சுண்டல் விக்கணுமாம். அந்தக் குண்டானைக் குடுங்க. வித்துத் தருவாரு” என்று சொன்னதுக்கு ‘யோ போவியா... பொழப்பக் கெடுத்துட்டு!' என்கிற மாதிரி ஒரு லுக் விட்டார். “அண்ணே... திருப்பித் தந்துருவோம்ணே. அப்படி ஒரு மணி நேரத்துல விக்க முடியலைன்னா, மொத்தத்தையும் நாங்களே வாங்கிக்கிறோம்” என்று நாம் பேரம் பேசிக்கொண்டிருக்க,  “அதுக்கு முன்னாடியே அமவுன்ட்டைக் கொடுத்து வாங்கிடலாம்'' என இடைமறித்தார் கோகுல். ``இவ்ளோதானே இருக்கு. எவ்ளோனு சொல்லுங்க, இட்ஸ் ஈஸி” என ஆங்கிலத்தில் பேச சுண்டல்காரர் மேலும் கீழும் பார்த்தார்.

“ `மெரினா'னு ஒரு படம் வந்துச்சு தெரியுமா? அதுக்குக் கேட்டப்பவே என் சுண்டல் பாத்திரத்தைக் குடுக்​காதவன்யா நான். அதெல்லாம் முடியாது” எனக் கெத்தாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
‘`ஓவரா பேசிக் கெடுத்துட்​டோமோ...'’ என மைண்ட் வாய்ஸ்கள் ஒலிக்க நடந்தோம்.

பஞ்சுமிட்டாய்களுடன் ஒருவரைக் கண்டதும் “பஞ்சுமிட்டாயும் விற்கிறேனே...” என்றார் கோகுல். பவன் என்கிற அந்த இளைஞரிடம் இருந்து பஞ்சுமிட்டாய்களை வாங்கிக்கொண்டு விற்பனை செய்யத் தொடங்கினார்.

கடல் அலையைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த ஒரு ஜோடியைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார் கோகுல். கையில் இருந்த மணியை அடித்துக்கொண்டே ‘பஞ்சு மிட்டாய்.. பஞ்சுமிட்டாய்..!’ எனக் கத்த, அந்த இளைஞர் திரும்பி முறைத்ததில் பத்து அடி தள்ளி வந்தார்.

“என்னங்க இப்படி முறைக்கிறாரு...” எனப் புலம்பியபடியே அடுத்தடுத்து சென்றார். யாருமே வாங்குவதாகத் தெரியவில்லை. இரண்டு, மூன்று குழந்தைகள் விளையாடிக்​கொண்டிருந்த குடும்பத்திடம் போய், “பஞ்சுமிட்டாய்..!” என்றதும் அவர்கள் திரும்பி முறைத்தார்கள். உடனே “பஞ்சுமிட்டாய்” எனத் தணிந்த குரலில் சொல்லி, “வியாபாரத்தை ஆரம்பிச்சுவைங்கம்மா” எனக் கேட்க, அவர்கள் என்ன நினைத்தார்களோ, ஒன்று வாங்கிக் கொண்டார்கள்.

ஆசை - சுண்டலோ சுண்டல்!
ஆசை - சுண்டலோ சுண்டல்!

பந்தாவாக அந்தப் பத்து ரூபாயை வாங்கியவர், அடுத்து ஒரு கிலோமீட்டர் நடந்தும் நான்கைந்து பாக்கெட்கள்தான் விற்க முடிந்தது. “இவ்ளோ தூரம் வந்ததுக்கு, நான் இந்நேரம் 20 பாக்கெட் வித்திருப்பேன்” எனச் சொன்ன பவன், பாக்கி பஞ்சுமிட்டாய்களையும் மணியையும் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

சிறிது தூரம் நடந்ததும் அஜய் என்கிற இளைஞர் சுண்டல் விற்றுக்கொண்டுவர, அவரிடம் கோகுலின் ஆசையைச் சொன்னோம்.

மேலும் கீழும் பார்த்த அஜய், ``விக்கணும்னு கிளம்பி வந்தா விற்க முடியுமா? இருங்க சொல்லித்தர்றேன்” என்று வகுப்​பு எடுக்கத் தயார் ஆனார்.

“15  ரூவா, 20 ரூவானு சொல்லணும். 15 ரூவான்னா, பேப்பரை கொஞ்சம் உள்ளே விட்டு மடிக்கணும். 20 ரூவானா ஒரு சுத்து சுத்தினா போதும்” என்று ஆரம்பித்து, “பிரதர், லவ் பண்றவங்களைத் தொந்தரவு பண்ற மாதிரி இருக்கக் கூடாது. அதே சமயம் நமக்கு வியாபாரமும் ஆகணும். அதுக்கு ஒரு டெக்னிக் இருக்கு” என்றார்.

“அவங்களைக் கொஞ்சம் தூரத்துல பார்க்கும்போதே `சுண்டல்... சுண்டல்... அக்கா சுண்டல்ல்ல்ல்ல்'னு சத்தமாச் சொல்லிக்கிட்டே போகணும். நீங்க கத்துறதைக் கேட்டதுமே அந்த அக்கா, லவ்வர்கிட்ட ‘ஒண்ணு வாங்கிட்டு அனுப்புங்க’னு சொல்லிடும். பக்கத்துல நீங்க போறப்பவே உங்க வியாபாரம் கன்ஃபர்ம்” என்று அவர் சொன்னதை ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டார் கோகுல். “தவறியும் அண்ணேனு கத்திடாதீங்க. வேஸ்ட்” என்று எக்ஸ்ட்ரா டிப்ஸும் கொடுத்தார்.

ஆசை - சுண்டலோ சுண்டல்!

அடுத்த ஜோடியிடமே அந்த டெக்னிக் செல்லுபடியாக, முதல் விற்பனை முடித்த மகிழ்ச்சியில் ‘குரு’ அஜயைப் பார்த்து வெற்றி சைகைக் காட்டினார். ஆனால், அடுத்தடுத்து அந்தக் கதை தொடரவில்லை. கிட்டத்தட்ட 10, 15 பேரைத் தாண்டியும் அடுத்த பொட்டலம் விற்க முடியவில்லை. “சில்லறை இல்லைப்பா” என்று ஒருவர் சொல்ல, “ஹலோ... சுண்டல் வித்துட்டி​ருக்கேன். பிச்சை கேட்கலை!” என்றார் கோகுல்.

நன்றாக இருட்டியிருந்தது. கடற்கரையில் கூட்டமும் குறைய ஆரம்பித்துவிட்டது. அதற்குமேல் விற்க முடியாமல், சோர்ந்துபோய் சுண்டல்காரரிடம் பாத்திரத்தைக் கொடுத்து இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டார் கோகுல்.

“சுண்டல் விற்கிறதும் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்துறதும் ஒண்ணுதான்னு தோணுது. வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது, டார்கெட் மார்க்கெட்டிங், அவங்க ஏத்துக்கிற மாதிரி பேசுறது, அதற்கு ஏற்ற உடை, உடல்மொழி எல்லாமே அவசியம். இதெல்லாம் பண்ணியும் மென்பொருள் சில சமயம் பல்பு கொடுக்கிற மாதிரி இன்னைக்கு ஆகிடுச்சு. ஆனா ஒண்ணு, அவங்க வேலை எவ்ளோ கஷ்டங்களும் நுணுக்கங்களும் நிறைஞ்சதுனு தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கக் காரணமா இருந்த ஆனந்த விகடனுக்கு நன்றி” என்று நம்மிடம் நன்றி சொல்லிக்கொண்டிருக்க, அதற்குள் அங்கே ஐந்தாறு சுண்டல் விற்பனையாளர்கள் ஒன்றுசேர்ந்துவிட்டனர்.

அவர்களிடம், “ரொம்பக் கஷ்டம்தான்ல?” என்று கோகுல் உச்சுக்கொட்ட, “பழகினா ஈஸிதான் சார். யார்கிட்ட கேக்கணும்... யார்கிட்ட கேக்கக் கூடாதுனு ஒவ்வொண்ணுக்கும் ஒரு நேக்கு இருக்கு. அவங்க முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்கணும்” என ஐடியாக்களை அள்ளிப் பகிர்ந்து அன்னியோன்னியம் காட்ட... அதில் மிதமான சூட்டோடு இருக்கும் சுண்டல் ருசி தெரிந்தது!

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...
ஆசை
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
இ-மெயில்: aasai@vikatan.com