Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 14

#MakeNewBondsகீதா இளங்கோவன் - படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

`மாதவிடாய்' என்கிற என்னுடைய ஆவணப்படத்தைத் திரையிடு​வதற்காக ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அது, பெண்களைவிட ஆண்கள் அதிகம் பேர் படிக்கும் கல்லூரி. ``எங்க பையன்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதுங்க. வால்பசங்க. இது மாதிரி விஷயங்கள்னா பயங்கரமா கத்தி கலாட்டா பண்ணிடுவாங்க. இவனுங்களைச் சமாளிக்க, எங்களால முடியாது’ என்று கையெடுத்துக் கும்பிட்டு, ஆசிரியர்கள் ஒதுங்கிக்கொண்டனர். எனக்கும் கொஞ்சம் பயம்தான். படம் திரையிடுவதற்கு முன்னர் `இந்தப் படத்தை எதுக்கு மச்சான் நமக்குக் காட்டுறாங்க?' என்பதுபோல இருந்தது மாணவர்​களின் உடல்மொழி. படம் தொடங்கும்போதே சலசலப்பு, சில சிரிப்பொலிகள், கேலியான கிசுகிசுப்புகள். ஆனால், படம் தொடங்கி சில நிமிடங்களில் எல்லாமே அடங்கின. முடியும் வரை முணுமுணுப்புக்கூட இல்லை.

அரங்கத்தில், அமைதி பரவி இருந்தது. படம் குறித்து ஒரு மாணவர் எழுந்து பேச ஆரம்பித்தார். ``எங்க அம்மா இதுவரைக்கும் இதைப் பத்தி என்கிட்ட பேசினதே இல்லை மேடம். அக்காகிட்ட கேட்டா, எரிஞ்சு விழுவா. காலேஜ்ல கிளாஸ் பொண்ணுங்களை இதைவெச்சு கிண்டல்தான் அடிச்சிருக்கோம். இப்ப ரொம்ப வெட்கமாயிருக்கு. ஏன்டா இப்படி நடந்துக்கிட்டோம்னு அவமானமா இருக்கு'’ என்று உள்ளார்ந்து சொன்ன மாணவனின் பதற்றமான முகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அவனுடைய குரலில் ஒட்டுமொத்த ஆண்கள் மீதும் கரிசனம் எழுந்தது.

`மாதவிடாய்' திரைப்படத்தை தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் திரையிட்டிருக்கிறேன். படம் பார்த்த எட்டாம் வகுப்பு மாணவன் தொடங்கி 80 வயது ஆண் வரை, எல்லோருடைய ஆதங்கமும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14


``ஏன் மேடம் எங்களுக்கு மாதவிடாய் பற்றி யாருமே சொல்லித்தரலை?''

உண்மைதானே! ஆண்களுக்கு நாம் ஏன் பெண் உடல் குறித்துச் சொல்லித்தருவது இல்லை?

``ஆணை மனிதனாக வரையறுக்கிறார்கள். ஆனால், பெண்ணை? ஒரு பெண் மனுஷியாக நடந்துகொள்ளும்போது எல்லாம் அவள் ஆண்போல நடந்துகொள்வதாகப் புலம்புகிறார்கள்'' என்கிறார் எழுத்தாளர் சிமன் டி புவா.

இந்த உலகில் பிறக்கும் ஆணுக்கு `ஆண்’ என்கிற அடையாளத்தை இடுவது மட்டுமே சமூகத்துக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஆணின் உடல் மீது பெண் ஏற்படுத்தும் பாதிப்பால் அவனுக்கு வேறு ஒரு பெயர் இருப்பது இல்லை.

ஆனால், பெண் உடல் மீது ஓர் ஆண் ஏற்படுத்தும் பாதிப்பைப் பொறுத்து, சமூகம் அவளுக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டுகிறது. கன்னி, முதிர்கன்னி, சுமங்கலி, பத்தினி, மலடி, வாழா​வெட்டி, விதவை, கற்பு இழந்தவள், ஓடுகாலி, விபச்சாரி, அவுசாரி இத்தியாதி இத்தியாதி... ஆக, பெண்பாலின் இருப்பும் அதன் தன்மையும் பெண் உடல் மீது ஆண்கள் நிகழ்த்தும் பாதிப்பினால்தான் தீர்மானிக்கப்​படுகிறது.

புனிதம்-தீட்டு இந்த இரண்டு சொற்களில்தான் பெண் உடல் மீதான அரசியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பெண் தொடர்பாக எவை எல்லாம் தீட்டாகக் கருதப்படு​கிறதோ, அங்கு எல்லாம் பெண்ணுரிமை மீறல் இருக்கிறது. நகைமுரணாக, பெண் உடல் சார்ந்து எவை எல்லாம் புனிதமாக்கப்​பட்டுள்​ளனவோ, அங்கு எல்லாம் பெண்ணுக்கான உரிமை மறுக்கப்படுகிறது.

இத்தகைய புனிதத்தையும் தீட்டையும் மதங்களின் மூலம் சாதிகளின் துணையோடு ஆண்டாண்டுகாலமாக ஆண்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.

பெண் உடல் மீது நாம் செலுத்தும் ஆதிக்கம் என்பதைப் புரிந்துகொள்ள, 1991-ம் ஆண்டில் வெளியான `சம்திங் லைக் எ வார்’ (Something like a war) என்ற ஆவணப்படம் உதவும்.

 தீபா தன்ராஜ் இயக்கிய இந்தப் படம், இந்தியாவின் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பெண்களின் பார்வையில் ஆழமாக மதிப்பிடுகிறது. பெண்ணிடம் சம்மதமோ... கருத்தோ கேட்காமல், அவள் உடல், நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் கருவியாக எவ்வளவு மோசமாக உபயோகிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்தது இந்தப் படம். `டியூபெக்டோமி' சிகிச்சை பற்றியோ, அதை எப்படிச் செய்கிறார்கள் என்றோ அந்தச் சிகிச்சை உடலில் ஏற்படுத்தும் தாக்கம், வலி, வேதனை பற்றியோ சராசரி பெண்ணுக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான டியூபெக்டோமி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. லட்சக்கணக்கான பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டார்கள். அந்தப் படத்தில் வரும் ஒரு டாக்டர், தான் சில நிமிடங்களிலேயே ஒரு கேஸுக்கான அறுவைசிகிச்சையை முடித்துவிடுவேன் எனப் பெருமைபொங்கச் சொல்வார். இங்கு `கேஸ்' என்பது பெண்ணின் உடல்.

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆணுக்கு உள்ள பங்கு என்ன? இதே காலகட்டத்தில் எத்தனை சதவிகித ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொண்டார்கள் என்கிற தகவல்கள் யாருக்கும் தெரியாது. ஏன் ஆணுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை குறித்து நம் சமூகமோ, அரசோ அக்கறைப்படவில்லை? ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் ஏன் பிரபலமாக்கப்படவில்லை, பரவலாக்கப்​படவில்லை? இந்தக் கேள்விகளில் இருக்கிறது பெண் உடலை வெறும் பொருளாக மட்டுமே கருதும் நம் கூட்டுமனப்பான்மை. ஆண்-பெண் உறவு குறித்த உரையாடல் தொடங்கவேண்டிய இடம் இதுதான்.

பெண்ணுடல் பெண்ணுக்கானது என்ற புரிதலை, ஆணுக்கு ஏற்படுத்த வேண்டும். இப்படிச் சொல்லும்போது ஆணுடல் ஆணுக்கானது எனச் சொல்லிப்பாருங்கள். சிரிப்பு வருகிறதா? ஆணின் உடல் அவனுக்கானது என்பது அழுத்தமாக நம் மனங்களில் தொடர்ச்​சியாகப் பதியவைக்கப் பட்டிருக்கிறது. அவன் அனுமதி இன்றி யாரும் அத்துமீற முடியாது. அதில் எந்தச் சந்தேகமும் நமக்கு இருப்பது இல்லை. பெண் உடலுக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்?

காரணம், இங்கு பெண்ணின் உடல் என்பது சமூகத்தின் மானம் தொடர்பானதாகக் கருதப்படுகிறது. அவளுடைய உடலில் குடும்பத்தின் `மானம்’, அவள் சாதியின் `மானம்’, ஊரின் `மானம்’, நாட்டின் `மானம்’ என ஏராளமான மானங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக வலியுறுத்தப்​படுகிறது.

அதுவும் அந்த மானங்கள் எல்லாமே அவளுடைய கருப்பையில்தான் இருப்பதாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான், பன்னெடுங்காலமாக பெண்ணின் கருப்பை அவளுக்கே சொந்தமாக இல்லை.

அது மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.

1971-ம் ஆண்டில் நடந்த பங்களாதேஷ் விடுதலைப்போரில், இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் பெண்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். உலகம் எங்கிலும், ராணுவம் எதிரி நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதை, போர் உத்தியாகவே கையாளும் கொடுமை காலம்காலமாக நடக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது வெறும் காமம் மட்டும்தானா? இங்கே ஆண்களைப் பழிக்கவும் பழிவாங்கவும்கூட பெண்ணின் கருப்பைதான் கருவியாகிறது.

பங்களாதேஷில் நடந்தது என்ன? விடுதலைப்போரை அடக்க வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அங்கு சித்ரவதை முகாம்களை அமைத்து, ஒன்பது மாதங்களில் ஏறத்தாழ நான்கு லட்சம் பெண்களை திட்டமிட்டு பலாத்காரம் செய்தனர். ஒன்றும் அறியாத வளரிளம் பருவத்துச் சிறுமிகள் என எல்லோரும் இதில் அடங்குவர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கர்ப்பமுற்று `போர்க் குழந்தைகளை’ப் பெற்றெடுத்தனர். கருக்கலைப்புகள் நடந்தன. ஏராளமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14

போருக்குப் பிறகு ஆட்சி அமைத்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் அரசு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு `பிரகனாஸ்’ (Biraganas) `போர் வீராங்கனைகள்' எனப் பெயர் சூட்டி, அவர்கள் மறுவாழ்வுக்குத் திட்டமிட்டது. ஆனால், 1975-ம் ஆண்டில் முஜிபுர் கொலை செய்யப்​பட்டவுடன் அமைந்த ராணுவ ஆட்சி, அதை நிறுத்திவிட்டது. பிரகனாஸ்-க்கு நீதி கேட்டு மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடின.

சர்வதேசப் போர்க் குற்றத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில், `சொந்த நாட்டின் விடுதலைக்காக தமது சுயமாண்பைத் தியாகம் செய்த `பிரகனாஸ்’ பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்துக் கௌரவப்படுத்தி, இழப்பீட்டுடன் அவர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு’ உத்தரவிட்டது. இதற்குப் பிறகுதான், பிரகனாஸ் பெண்களை விடுதலைப் போராட்ட வீராங்கனைகளாக அங்கீகரித்து, அவர்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் வரலாற்றுத் தீர்மானம் 43 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த 43 ஆண்டுகளில், பாதிக்கப்பட்ட நான்கு லட்சம் பெண்களில் மிகச்சிலரே எஞ்சியிருந்தனர்.

கருப்பையோடு நெருங்கிய தொடர்புள்ள இன்னோரு விஷயம் `தாய்மை'. நமது ஊரில் திருமணமான பெண்ணுக்கு, தாயாகியே தீர வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆனால், ஆணுக்கு அத்தகைய நெருக்கடிகள் கிடையாது. ஒரு பெண், தான் தாயாக வேண்டுமா... வேண்டாமா என்பது அவளுடைய தேர்வாக இருப்பது இல்லை. திருமணமான ஒரு பெண் தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை எனச் சொல்ல மு​டியுமா? சொன்னால் என்ன நடக்கும்! `ரெண்டு வருஷம் கழிச்சு, குழந்தை பெத்துக்கலாம்' என்று சொல்லும் உரிமைகூட ஆணுக்கு மட்டும்தான் இங்கே உண்டு.

தாய்மையைப் புனிதமாக்கி ஓவராகக் கொண்டாடுவதை எல்லாம் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, யதார்த்தம் பேசுவோமா!

என் தோழி கவிதாவுக்கு, இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. மற்றொன்று தலை பெரிதாகவும் கை-கால்கள் சூம்பிப்போயும் உடல் முழுக்கக் குறைபாடுகளுடன் பிறந்தது. ``அந்தக் குழந்தை சில வருடங்களில் இறந்துவிடும்'' என்று டாக்டர் கூறினார். ``சிகிச்சை ஏதும் தராவிட்டாலே அந்தச் சிசு இறந்துவிடும். அதுதான் அந்தக் குழந்தைக்கும் நல்லது'' என்றார். குடும்பத்தினரும் அவரின் கருத்துக்கு உடன்பட்டனர். ஆனால், கவிதா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. குறைபாடு உள்ள குழந்தைக்குச் சிகிச்சை தரச்சொல்லி வற்புறுத்தினார். ஆரோக்கியமாக இருந்த குழந்தையோடு, படுக்கையிலேயே இருந்த அந்தச் சிசுவையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே வளர்த்தார். ஏழு வருடங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வலிகளோடு போராடிய அந்தக் குழந்தை, கடைசியில் இறந்துவிட்டது.

கவிதாவின் தியாகத்தை நினைத்தால் உருக்கமாக இருக்கிறது அல்லவா? ஒருவேளை கவிதா அந்தக் குறைபாடுள்ள குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அது இறந்துபோகட்டும் என விட்டிருந்தால், நாம் கவிதாவை எப்படி இகழ்ந்திருப்போம்! தாய் என்றால் தியாகத் திருவுருவம் அல்லவா! குழந்தையை வேண்டாம் என்று அவள் சொல்லவே கூடாது. கவிதா மீது திணிக்கப்பட்ட இந்தத் தாய்மைக்குப் பெயர் என்ன?

தாய்மை என்பது, இங்கே என்னவாகப் பார்க்கப்படுகிறது? Biological mother-ஆக, குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணுக்கான விஷயம்தானா தாய்மை? தாய்மை என்பது, ஓர் உணர்வு. குழந்தை பெறாத பெண்ணுக்கும், குழந்தைகளை வளர்க்கும் ஆணுக்கும்கூட தாய்மை உண்டு. தாய்மை என்பதையும் இங்கே கருப்பையோடுதான் தொடர்புபடுத்திவைத்திருக்கிறோம்.

``ஒரு பெண், தன் கருப்பையை என்றைக்குத் தூக்கி எறிகிறாளோ, அன்றைக்குத்தான் அவளுக்கு விடுதலை'' என்றார் பெரியார். அது வெறும் குழந்தை பெறுவதை நிறுத்தும் பொருளில் மட்டுமே சொல்லப்பட்டது அல்ல.

பெண்ணுரிமைக்காகப் போராடிய பெண்ணிய​வாதிகளில், முதன்மையானவர்களாக நான் கருதும் இருவர் பெரியாரும் அம்பேத்கரும். நான் சவால்களை எதிர்கொள்ளும்போது எல்லாம் உள்ளுக்குள் உரமூட்டுவது பெரியார்தான். என் அத்தையின் துணிச்சலை எண்ணும்போது எல்லாம் உள்ளுக்குள் உத்வேகம் பிறக்கும். அந்தக் காலத்திலேயே `தாலி அணிய மாட்டேன்' என உறுதியாக இருந்தவர். தன் கணவரையும் சேர்த்து மூன்று குழந்தைகளையும் வளர்த்தவர். மருத்துவராக, இரவு-பகல் பாராமல் கிராமம் கிராமமாகச் சுற்றி நூற்றுக்கணக்கான பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர். கணவரை எதிர்பார்க்காமல் தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில், குடும்பத்தை நடத்தினார். இவரின் நெஞ்சுரத்துக்குப் பின்னால் பெரியார் இருந்தார்.

மக்களாட்சி அமைப்பில் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுத்தந்தவர் டாக்டர் அம்பேத்கர். பெண்களுக்கு சட்டரீதியான உரிமைகள் தருவதற்கான Hindu Code bill மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல்போனபோது, தனது எதிர்ப்பைத் தெரிவித்து சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அம்பேத்கர். சாதிய முறையை முற்றிலும் ஒழித்தால்தான் முழுமையான பெண் விடுதலை சாத்தியம் என்று எப்போதும் முழங்கியவர்.

பெண் உடல் பற்றிய கற்பிதங்களை இருபாலர் இடையேயும் உருவாக்குவதில், ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பெண்ணின் அங்கங்களை அணுஅணுவாக உடலுறவுக்கான கருவிகள் என்பதாகவே நம் திரைப்படங்கள் போதிக்கின்றன. இந்தக் காலத்திலும் பெண் பூப்படைதலை கிளுகிளுப்பான விஷயமாகவும், அது விருப்பமான ஆணுக்காகவே நிகழ்வதாகவும் சித்தரிக்கும் திரைப்பாடல்கள் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. அது மாதிரியான பாடல்கள், நம் வரவேற்பறைக்குள் சகஜமாக நுழைகின்றன. அவற்றை நம் குழந்தைகளும் பாடுகிறார்கள். நிகழ்ச்சிகளுக்கு நடுவே நீல நிற மையை ஊற்றி, நாப்கினின் உறிஞ்சும் திறனை விவரிக்கும் விளம்பரங்கள் பற்றி கேள்வி கேட்கும் குழந்தைகளைக் கண்டித்து வளர்க்கிறோம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14

துரைக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பதின்பருவ மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அந்தப் பையன்களிடம் `ஒரு பெண் வயதுக்கு வருவது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்று கேட்டேன்.

`குடிசை கட்டி தனியா உட்காரவைப்பாங்க.  நிறையப் பலகாரம் தருவாங்க. புட்டு சுத்துவாங்க' என்று தொடங்கி, அவர்களுக்குத் தெரிந்த விவரங்களை அடுக்க ஆரம்பித்தனர்.

`சரிப்பா, பெண் எப்படி வயசுக்கு வர்றாங்கனு, அறிவியல் பாடம் இருக்குமே. அதைப் படிக்கலையா?' என்று விசாரித்தேன்.

‘பாடம் இருக்குக்கா. ஆனா, டீச்சர் எடுக்கலை. எங்களையே படிக்கச் சொல்லிட்டாங்க' என  கோராஸாக பதில் வந்தது.

`உங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டிருக்கீங்களா?’

ஒரு பையனை மட்டும் பார்த்து எல்லோரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

`எங்ககூடப் படிக்கிற லதா, ஒரு வாரமா ஸ்கூலுக்கு வரலை. இவன் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் அவ வீடு. இவன் அவங்க வீட்டுக்குப் போய், `அவ ஏன் ஸ்கூலுக்கு வரலை, ஏன் அவளைத் தனியா உட்காரவெச்சிருக்கீங்க?'னு கேட்டான். செமயா திட்டிட்டாங்க. இது தெரிஞ்சு இவனோட அம்மா, `கெட்ட பேச்சு பேசுவியா?'னு கால்ல சூடுபோட்டுருச்சு' என்றான். குனிந்து உட்கார்ந்து இருந்த அந்தப் பையனின் தலையைத் தடவிக்கொடுக்கத் தோன்றியது.

பாவம் நம் பையன்கள்! தன் சகதோழிக்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானது.  அதைச் சரியாகச் சொல்லிக்கொடுத்தால், அவளுக்கு உடல்ரீதியாக என்ன சிரமம் வந்தாலும் உதவக்கூடிய பொறுப்பு உணர்வுமிக்க இளைஞனாக அவன் வளர்வான். நாம் என்ன செய்கிறோம்?

வீ
ட்டில் கற்றுத்தர மாட்டோம். ஆசிரியர்களோ, பள்ளியில் அந்தப் பாடத்தை மட்டும் `ஸ்கிப்' செய்துவிடுவார்கள். நண்பர்களுக்கோ, ஒன்றும் தெரியாது. சரி, கல்யாணம் முடிந்து மனைவி வந்தவுடன் அவள் மூலம் பெண் உடல் பற்றி தெரிந்துகொண்டாலும், அப்போதும்கூட முழுமையான புரிதல் கிடையாது. ஏனென்றால், தன் உடல் பற்றி கணவனோடு உரையாடுவதில் பெண்ணுக்கே தயக்கம் இருக்கிறது. மகேஸ்வரி அக்காதான் நினைவுக்கு வருகிறார்.

`இந்தாப்பாருங்க, எனக்கு தீட்டு ரொம்பப் போகுது. உடம்புக்கு முடியலை. சமைக்க முடியாது. மெஸ்ல இட்லி வாங்கி குழந்தைகளுக்குக் குடுங்க.நீங்களும் சாப்பிட்டுட்டு, எனக்கும் வெச்சிருங்க. நான் தூங்கப்போறேன்’ என்று தெளிவாகக் கூறிவிட்டுப் படுத்துவிடுவார். அவர் கணவரும் அக்கா சொன்னவாறு செய்துவிட்டு, வேலைக்குப் போய்விடுவார். நம் வீடுகளில் இப்படி எத்தனை பெண்களால் சொல்ல முடிகிறது? ஒரு மேம்பட்ட சமூகத்தில் ஆண்-பெண் உறவு அப்படித்தான் இருக்க வேண்டும்.

பெண் உடலை முழுமையாகப் புரிந்துகொண்ட ஆண்களுடன் பயணப்படும்போதுதான், வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். என் இணையர் இளங்கோவனை `தோழர்' என்று அறிமுகம் செய்யத்தான் விரும்புகிறேன். நண்பர்களாக அறிமுகமாகி, நட்புடன் சில ஆண்டுகள் பயணித்து, நேசத்தில் மலர்ந்து, வாழ்க்கையில் இணைந்தோம். எங்கள் உறவை நிரப்புவது, காதலுடன் கலந்த தோழமை மட்டுமே!

`இன்னிக்கு புது ரெசிபி ட்ரை பண்ணினேன், நல்லா இருக்கா?’ என ஆர்வத்துடன் பரிமாறிவிட்டு, தோழர் முகத்தையே பார்ப்பேன். ம்ஹூம்… பெருசா எந்த ரியாக்‌ஷனும் இருக்காது. `பரவாயில்லை. இதுக்கு எல்லாம் ஏன் டைம் வேஸ்ட் பண்றே?' என்பார். கெட்டகோவம் வரும். கஷ்டப்பட்டு செய்துட்டு, திட்டுவேற வாங்க வேண்டியிருக்கே. போகப்போகத்தான் அவருடைய நோக்கம் புரிந்தது. அது சமையலறையில் இருந்து என்னை விடுவிப்பதற்கான ஒரு சிறிய முயற்சி என்பது. சமையலில் இருந்து தன்னை விடுவிக்கும் ஆண் மீது பெண்ணுக்கு வரும் நேசம் அளப்பரியது. தோழர் மீதான என் காதலும் அத்தகையதே!

பெண் உடல் குறித்த ஆணின் பார்வையை மாற்ற விரும்பினால், அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும். `குட் டச், பேட் டச்’சை ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக, இன்னொன்றையும் கற்றுத்தர வேண்டும். பெண் உடலையும் மனதையும் அவள் அனுமதி இல்லாமல் நெருங்கக் கூடாது என்பதே அது.

பெண் குழந்தைகளுக்கு தந்தையாகும் இந்தத் தலைமுறை ஆண்கள், தன் மகளுக்காகவாவது பெண்ணைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்; உதவ முன்வருகிறார்கள்; மாதவிடாய் காலத்தில் நாப்கின் வாங்கி வருகிறார்கள். காரணம் இல்லாமல் கோபப்படும் மனைவியின் மனநிலைக்கு `Pre-mentural stress’ இருக்குமோ எனச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

உலகில் கச்சிதமானது என்று எதுவுமே கிடையாது. பெண்-ஆண் உறவிலும் அப்படித்தான். தனிநபர்களாக பெண்ணும் சரி, ஆணும் சரி குறைநிறைகளுடன்தான் இருக்​கிறார்கள். அவர்களின் உறவில் தோழமையைத் தக்கவைத்துக் கொள்வதுதான் இங்கு இருக்கும் ஒரே சவால். பெண் தன்னைவிட ஒரு மாற்று குறைந்தவள்தான் என்ற எண்ணம் இயல்பிலேயே ஆணுக்கு இருக்கிறது. இதை மதமும் சாதியும் சான்றளித்து உறுதிப்படுத்து​கின்றன. இந்த அடிப்படைச் சிந்தனையை மாற்றி அமைப்பதுதான், பலமான பெண்-ஆண் தோழமையைத் தக்கவைப்பதற்கான முதல் நகர்தலாக இருக்கும்!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

பெண்ணைப்போல உடை அணிய
நான் வெட்கப்படவில்லை.
ஏனென்றால்,
பெண்ணாக இருப்பதை வெட்கக்கேடானது என்று நான் நினைக்கவில்லை.

- இக்கி பாப்

ன்றைக்கு எனது வாழ்க்கை
என்னுடையதாக இருந்துள்ளது?
வீட்டில் ஆண் கோபம்
ஒரு கன்னத்தில் அடியாய் விழ
தெருவிலோ, சாதிவெறி
மற்றொரு கன்னத்தைப் பிய்த்தெறிகிறது

- தெலுங்குக் கவிஞர் ஸ்வரூப ராணி 
(தமிழாக்கம்: வ.கீதா)

ப்பு குறைந்ததற்காய்
சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
தாத்தாவைப் பற்றி
கதை சொல்லும் பாட்டி
எப்போதும் முடிக்கிறாள்
`என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை!'

- கிருஷ்ணப்ரியா (`வெட்கத்தில் நனைகின்ற' கவிதை நூல்)

அடையாளம்

ருக்கலிட்டு மினுங்கும்
சூரியன் தார்க்கொப்பளத்தில்
கால்பாவவொட்டாது கடும்வெயில் கொளுந்தும்
நிழல் பொசுங்கிய
கடுவெளியின் மரத்தடியில்
தாயின் மார்க்காம்பு ஞாபகத்தில்
விரல் சப்பித் துயிலாரும்
குழந்தை நினைப்பில்
அனல் வளவும் பாய்லரில்
தார் காய்ச்சிக்கொண்டிருப்பாள் தாய்.

- ஆதவன் தீட்சண்யா

ஆண்பால் பெண்பால் அன்பால் - 14

தீட்டு

பாத்ரூம் போனால்
காவலாய்ச் சத்தகம்.
படுக்கைப் பக்கம்
தடுப்பாய் உலக்கை.
தலைக்குக் குளித்தாலும்
மூன்று நாட்கள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு, தனி டம்ளர்.
தனிநாடு கேக்காத
எனக்குத் தனியிடம்.
துண்டு நிலம்
தோல் தலையணை.
கிணறு வற்றிவிடும்
செடி பட்டுவிடும்
ஊறுகாய் கெட்டுவிடும்
கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது.
சாமி படைத்த என்னை மறைக்க, சாமிக்கு ஏன் திரைச்சீலை?
பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படித் தீட்டுகளற்று.

- தேனம்மை லக்ஷ்மணன்