Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

`செரிமானம்' என்ற சொல்லின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். உணவில் உள்ள ஆற்றலை உட்கொண்டு, மீதம் உள்ளவற்றை வெளியே தள்ளும் செயல்தான் `செரிமானம்'. இந்த விளக்கம் சுருக்கமாக இருந்தாலும், சற்று கவனம் செலுத்தி உள்வாங்கவேண்டியது அவசியம். இதுதான் நமது மரபு உணவுக்கொள்கைகளின் அடித்தளம்.

ஒருவர் உண்ணும் உணவு மலமாக வெளியேறிவிட்டால், அவருக்கு செரிமானம் சீராக உள்ளது எனப் பொருள் அல்ல. அந்த உணவில் இருந்து தேவையான ஆற்றலை அவரது உடல் பிரித்து எடுத்துக்கொண்டதா என்பதுதான் முக்கியமானது. ஆற்றலைப் பிரிக்கும் செயலில் குறைபாடு இருந்தால், செரிமானம் சீர்கெட்டுள்ளது எனப் பொருள்.

பசிக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளும் வழக்கத்தில் இருப்போருக்கும், செரிமானச் சீர்கேடுகள் இருப்பது உண்டு. அதாவது, அவர்களது உடல் தனக்குத் தேவையான ஆற்றல்களைப் பிரிக்காமல் மலமாக, நீராக அனுப்பிவிடும். இதன் விளைவாக உடல் பலவீனம் அடைந்துகொண்டே இருக்கும். இந்தப் பலவீனம், பலவகையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

`பசித்தால் போதும். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்ற பழக்கம் இப்போது உள்ளது. தவறான உணவுப் பழக்கங்களால்தான் நம் சமூகம் நோயாளிகளின் கூடாரமாக மாறியது. `பசிக்கும்போது உண்ணுதல்’ எனும் கொள்கை, நம் மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதுதான். இந்தக் கொள்கையோடு, ‘உணவுக் கொள்கை’யும் இணைந்துதான் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

`மாறுபாடு இல்லாத உணவை உண்டால், உயிருக்கு ஊறுபாடு இல்லை’ என்றார் நம் ஆசான் திருவள்ளுவர். உடலின் இயல்புக்கு மாறுபாடு இல்லாத உணவை உண்ண வேண்டும் என்பது அவரது அறிவுரை.

நமது உடலும் உணவும் ஐம்பூதங்களின் சேர்க்கைதான். நமது உடலின் தன்மைக்கு ஏற்ப உணவைத் தேர்ந்தெடுப்பது, நலமான உடலுக்கான தகுதியாகும். நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ள காய்கறிகள், தானியங்களில் ஐம்பூதங்களின் சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது, உணவைத் தேர்ந்தெடுப்பதற்கான எளிய வழி.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீர், வெப்பம் ஆகிய இரண்டும் கலந்த நிலையில் உள்ள எல்லா காய்களும் தானியங்களும் அனைவருக்குமான உணவுகள். அவை பிஞ்சுக் காய்கள், புழுங்கல் அரிசி உள்ளிட்ட தானியங்கள்.  காய்கள் முற்றும்போது அவற்றில் நீர் குறைந்து காற்று மிகும். ஆகவேதான் பிஞ்சுக் காய்கள் சிறப்பானவை. அரிசி மட்டும் அல்லாமல் சீர்தானியங்களையும் புழுங்கலாக உண்பது செரிமானத்துக்கு உகந்தது. பச்சையரிசி, பச்சை தானியங்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டியவை அல்ல; அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை.

சித்த மருத்துவக் கோட்பாட்டில் உள்ள மூன்று அடிப்படைப் பொருட்கள் – வாதம், பித்தம், கபம். வாதம் என்பது, காற்றும் நிலமும் கலந்த நிலை. பித்தம் என்பது, நீரும் வெப்பமும் திரிந்த நிலை. கபம் என்பது, நீரும் காற்றும் இணைந்த நிலை. இவை மிக ஆழமான பாடங்கள் என்றாலும், ஓர் அறிமுகத்துக்காகக் குறிப்பிட்டுள்ளேன். உடலில் வாதம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், உணவில் காற்றும் நிலமும் மிகக் கூடாது.

ஒரு
காய்கறித் தோட்டத்துக்குப் பயணம் செல்வோம். இந்தத் தோட்டத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா காய்கறிகளும் இருக்கின்றன. இவற்றில் எவை எல்லாம் காற்றும் நிலமும் குறைவாக உள்ள காய்கள் எனத் தெரிந்துகொள்வோம். எந்தக் காய்கள் முற்றத் தொடங்கிவிட்டனவோ, அவை எல்லாம் நீர்த்தன்மையை இழந்து, காற்றின் தன்மையை உள்வாங்கிக்கொண்டுள்ளன என்பது முதல் பாடம். நிலத்தின் தன்மைக்கு மாறிய காய்கள் எவை எனக் கண்டுபிடிப்பது அடுத்த பாடம். எந்தக்  காய்களில்  விதைகள் கடினமாகிவிட்டனவோ, அவை எல்லாம் நிலத்தின் தன்மைக்கு மாறிவிட்டன எனப் பொருள்.

கத்திரிச் செடிகளைப் பாருங்கள். ஒரு செடியில் பிஞ்சுக் காய்கள் இருக்கின்றன. இந்தக் காய்களை அறுத்துப்பார்க்கையில், நீர்த்தன்மையுடன் உள்ளன. இவற்றின் விதைகள் சின்னஞ்சிறியவையாக மிகவும் மென்மையாக உள்ளன. இந்த விதைகளை நிலத்தில் தூவினால், அவை முளைக்காது. ஏனெனில், இவை இன்னும் முற்றவே இல்லை. வேறு ஒரு கத்திரிச் செடியைப் பாருங்கள். இதன் காய்கள் முற்றத் தொடங்கிவிட்டன. இவற்றின் உள்ளே ஈரப்பதம் குறைவாக உள்ளது; விதைகள் சற்றே கடினமாக உள்ளன. இந்த விதைகளை நிலத்தில் போட்டால், முளைக்காது. ஏனெனில், இந்த விதைகள் இன்னும் முழுமையாக முற்றவில்லை.

இந்த இரு வகையான கத்திரிக்காய்களையும் நாம் உண்ணலாம். பிஞ்சுகள், ஓர் அளவு முற்றியவை... இரண்டும் நமக்கான உணவுகள்தான். இவற்றில் உள்ள வேறுபாடுகள் என்னவென்றால், பிஞ்சுக் காய்களில் காற்று குறைவு; சற்றே முற்றியவற்றில் காற்று கூடுதலாக உள்ளது. நிலத்தின் தன்மையும் இவற்றில் உருவாகத் தொடங்கிவிட்டது. பிஞ்சுகள், முதல் தரமானவை. அடுத்த வகையில் உள்ளவை இரண்டாம் தரமானவை.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

சுரைக்காய்க் கொடிகளுக்கு அருகே செல்வோம். சுரைக்காய்கள் எல்லாம் நீர்க்காய்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பரங்கி (அரசாணி), பூசணி (வெண்பூசணி), பீர்க்கன், புடலை ஆகியவை எல்லாம் நீர்க்காய்கள். இவற்றின் தோற்றத்தைப் பாருங்கள். இந்தக் காய்களைத் தரும் தாவரங்கள் எல்லாம் கொடி வகைகளாக உள்ளன. இந்தக் கொடிகள் எல்லாம் மேல் இருந்து கீழ் நோக்கி காய்களை அனுப்பும் குணம்கொண்டவை. பரங்கி, பூசணி ஆகியவையும் மரங்கள், புதர்கள், வேலிகள் மீது ஏறும் தன்மைகொண்டவை. இவற்றோடு பாகற்காயையும் கோவைக்காய்களையும் இணைத்துக்கொள்ளலாம்.

இந்தக் காய்கள் அனைத்தும் நீர்த்தன்மை கொண்டவை. இவற்றில் காற்றின்தன்மை அதிகரிப்பது எப்போது என்றால், இவற்றின் விதைகள் முற்றும்போதுதான். எல்லா நீர்க்காய்களிலும் முற்றியவற்றில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதைக் கவனிக்கலாம்.

நீர்க்காய்களில் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளவேண்டிய மற்றொன்று முள்ளங்கி. இது ஒரு கிழங்கு வகை என்றாலும், நீர்த்தன்மை மிகுந்த குணம்கொண்டது. முள்ளங்கியும் முற்றத் தொடங்கிவிட்டால், அதன் நீர்த்தன்மை குறைந்து சதைப்பற்று முழுவதும் பஞ்சுபோல மாறிவிடும். இதே காலத்தில், முள்ளங்கியின் பூக்கள் எல்லாம் விதைகளாக மாறிப்போயிருக்கும்.

விதைகளுக்கும் நிலத்துக்கும் உள்ள உறவை நன்கு புரிந்துகொண்டால், காய்களைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம். எவை எல்லாம் விதை நிலைக்கு மாறிவிட்டனவோ, அவை எல்லாம் நிலத்தின் தன்மைக்கு மாறியவை.

நம் தோட்டத்தில் உள்ள கீரைப் பாத்திகளுக்குச் செல்வோம். தண்டுக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, அறுகீரை(அரைக்கீரை), பசலைக்கீரை, மணத்தக்காளிக் கீரை இவை எல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை வகைகள். இவற்றை விதை வழியாகப் பரவுபவை, தண்டு வழியாகப் பரவுபவை என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்வோம்.

முளைக்கீரை, தண்டுக்கீரை, அறுகீரை, சிறுகீரை, புளிச்சக்கீரை போன்றவை விதை வழியாகப் பரவுபவை. இந்தக் கீரைச் செடிகள் பூக்கும் முன் அறுவடை செய்தால், அவை நல்ல உணவுகள். இந்த நிலையில், அவற்றில் நீரும் வெப்பமும் கூடுதலாக இருக்கும். பூக்கத் தொடங்கிவிட்டால் காற்றும் வெப்பமும் கலந்திருக்கும். பூக்களில் இருந்து விதைகள் தோன்றத் தொடங்கினால், காற்று, வெப்பம், நிலம் ஆகிய மூன்றும் இருக்கும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

பசலை, பொன்னாங்கண்ணி போன்ற தண்டு வழி பரவும் கீரைகள், தண்டுகள் நீர்த்தன்மையுடன் இருக்க வேண்டும். அதுதான் உண்ணத் தகுந்த நிலை. இந்தக் கீரைத்தண்டுகளை ஒடித்து நடவு செய்தால், அவற்றின் முளைக்கும் திறன் குறைவாக இருக்க வேண்டும். மாறாக, இவற்றின் முளைப்புத் திறன் அதிகமாக இருந்தால், அவற்றில் காற்று, வெப்பம், நிலம் ஆகியவை கூடுதலாகிவிட்டன எனப் பொருள்.

இப்போது ஒரு பாடம் தெளிவாகப் புரிந்திருக்கும். எவை எல்லாம் முளைக்கும் தன்மைக்கு வந்துவிட்டனவோ, அவை எல்லாம் நிலத்தின் குணம்கொண்டவை. நிலத்தின் குணம் கூடுதலாக உள்ளவை நமக்கான உணவுகள் அல்ல. இது பொதுவான விதி.

காய்கள், கீரைகள் ஆகிய இரண்டும் இளம் பருவத்தில் இருப்பதுதான் உடலுக்கு உகந்தது. தானியங்களிலும் புழுங்கல் முறையில் அரைக்கப்பட்டவை சிறப்பானவை. இந்த இரண்டு செய்திகளுடன் உணவுப் பழக்கங்களுக்குள் செல்வோம்.
வாதம் மிகுந்த உடல்கொண்டோர், மேற்கண்ட புரிதல்களுடன் காற்று மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பதும் குறைப்பதும் நன்மை தரும். குறிப்பாக, நீர்த்தன்மை குறைந்த உணவுகளை எந்த அளவுக்குத் தவிர்க்கிறார்களோ, அந்த அளவுக்கு வாதம் நீங்கும். உணவு சமைக்கும் முறையிலும் இந்தச் செய்திகளை இணைத்துப் புரிந்துகொள்ளுங்கள். சோறு, இட்லி, பொங்கல், இடியாப்பம், புட்டு ஆகியவை நீரும் வெப்பமும் கலந்த முறையில் சமைக்கப்படுபவை. இவை அனைத்தும் சிறந்த உணவுகள். தோசை, ரொட்டி, சப்பாத்தி போன்றவை நீர்த்தன்மையை வற்றச்செய்யும் முறையில் சமைக்கப்படுபவை. இந்த வகை உணவுகள், வாதத்தின் அளவை உயர்த்தவல்லவை. தோசை சாப்பிட்டால், கூடுதலான வறட்சி உருவாவதைக் கவனித்திருப்பீர்கள். ஏற்கெனவே, வாதம்கொண்ட உடலுக்கு இது நல்ல நிலை அல்ல.

இவ்வாறாக சுட்டுச் சமைக்கப்படும் உணவுகளை வாதம்கொண்டோர் குறைத்துக்கொள்ளலாம். வாய்ப்பு இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு முற்றிலும் தவிர்க்கலாம். உடல் நிலை சீரானதும் இந்த வகை உணவுகளை உட்கொள்ளலாம்.
பயறுகள், பருப்பு வகைகள் ஆகியவை காற்றும் நிலமும் மிகுந்தவை என்பதால், அவற்றைக் குறைப்பது மிக முக்கியமானது. அதேவேளை, இவை இரண்டும் நமது உடலுக்குத் தேவையான ஆற்றல் தரவல்லவை என்பதால், இவற்றை உண்ணும் முறையில் ஒரு மாறுதலைச் செய்துகொள்ளலாம். காற்றும் நிலமும் அதிகமாக இருக்கும் பயறு, பருப்பு, தானியங்களை ஒரு செயல்முறையின் வழியாக சீரான உணவாக்க முடியும். இதுவும் நமது மரபுவழிப்பட்ட மெய்யறிவின் விளைவுதான்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 27

ஐம்பூதங்களுக்கும் உணவுக்கும் உள்ள உறவை தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ள, இந்தச் சிறிய செயல்முறை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஒரு விதை எப்போது முளைக்கும் என்ற கேள்விக்கு விடை தேடுவோம். வெளி (ஆகாயம்), காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களும் சீராகச் செயல்பட்டால் மட்டும்தான் ஒரு விதை முளைக்கும். மாறாக, காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய நான்கில் எந்த பூதம் கூடுதலாக இருந்தாலும் அந்த விதை முளைக்காது. வெளி என்பது, எல்லா இடங்களிலும் உள்ள பூதம் என்பதால், அதை நம்மால் வரையறுக்க இயலாது. அது படைப்பின் வசம் உள்ள முழுமுதற்பூதம். ஆகவே, வெளி தவிர்த்த மற்ற நான்கு பூதங்களும் சீராக உள்ள நிலைதான் உயிர் வளரும் பக்குவம்.

பயறுகளும் பருப்புகளும் அரிசி தவிர்த்த தானியங்களும் காற்று, நிலம், வெப்பம் ஆகியவை மிகுந்தவை எனக் கண்டோம். இவற்றில் நீர்த்தன்மை மிகக் குறைவாக இருக்கும். நீர் வறண்ட எந்த உணவும், காற்றை அதிகரிக்கச் செய்யும். இதே பயறு, பருப்பு, தானியங்களை முளைகட்டவைத்து உண்டால், அது மிகச் சிறந்த உணவாகிவிடும். ஐம்பூதங்களும் சீராக இருந்தால்தானே முளைவரும். முளைவிட்டவற்றை உணவாகக்கொண்டால், அந்த உணவு ஐம்பூதச் சமநிலையுடன் இருக்கும் அல்லவா!

இதுதான் முளைகட்டிய உணவுகளின் சிறப்புத்தன்மை.

பயறு, பருப்பு ஆகிய காற்றுப் பண்டங்களைத் தவிர்க்கவேண்டியவர்கள் அவற்றை முளைகட்டவைத்து உண்டால், உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்கும்... செரிமானச் சிக்கலும் உருவாகாது. மிக முக்கியமாக, இந்த உணவுகளால் உடலில் காற்று அதிகரிக்காது!

- திரும்புவோம்...