Published:Updated:

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி
பிரீமியம் ஸ்டோரி
தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

Published:Updated:
தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி
பிரீமியம் ஸ்டோரி
தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி
தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

திகாலைச் சூரியன், குளிர் விலகாத பொழுது, நீல நிறச் சீருடையில் நிலம் அதிர அதிர ஓடிவருகிறார்கள் பத்து இளம் பெண்கள். இது பி.டி.உஷாவின் தடகளப் படை!

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொயிலாண்டி மக்கள் இப்போது கண் விழிப்பதே இளம் வீராங்கனைகளின் காலடி ஓசையால்தான்!

``எனக்குள் இன்னும் அந்தத் துக்கம் இருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்த இந்தியாவும் என்னிடம் எதிர்பார்த்தது ஒரே ஒரு பதக்கம்தான். ஆனால், வெண்கலப்பதக்கம்கூட பெற முடியாமல், நான்காவது இடம்தான் கிடைத்தது எனக்கு. அந்த ஏமாற்றம் எனக்குள் வெறியாக மாறியது. அதன் பலன்தான் இந்தப் படை. 1984-ம் ஆண்டில் நான் தவறவிட்ட ஒலிம்பிக் பதக்கத்தை என் பெண்கள் பல மடங்காகத் திருப்பிக் கொண்டுவருவார்கள்’’ என்கிறார் பி.டி.உஷா... இந்தியாவின் தங்க மங்கை!

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே ஆரம்பிக்கிறது பயிற்சி. எழுந்ததும் ஓட்டம். பிறகு உடற்பயிற்சி. பின்னர் தியானம் என்று பி.டி.உஷாவின் கண்காணிப்பில் பயிற்சி பெறுகிறார்கள். இந்தச் சின்னப் பெண்களுக்கு ஊருக்குள் முதல் மரியாதை. ``ஒரு உஷாவைக் கொடுத்ததுக்கே கொயிலாண்டிக்கும் பயோளிக்கும் ஏகப்பட்ட புகழ் கிடைச்சிருக்கு. இப்போ இன்னும் பத்துப் பொண்ணுங்க இந்த மண்ணில் இருந்து வந்தா, அந்த சந்தோஷம் எங்களுக்குத்தானே!’’ என்கிறார்கள் கண்கள் மின்ன.

``நான் ஒரு தடகள வீராங்கனையாக ஆசைப்பட்ட காலத்தில் அதற்கு உரிய எந்த வசதிகளும் எனக்குக் கிடைக்கவில்லை. பயோளி கடற்புரத்தில் ஓடி ஓடிப் பயிற்சி எடுப்பேன். அந்த வயதில் எனக்கு முறையான பயிற்சியும் தேவையான வசதிகளும் கிடைத்திருந்தால் நான் இன்னும் பல பதக்கங்களை வென்றிருப்பேன். அந்த வேதனையும் வருத்தமும்தான், இந்தப் பள்ளியைத் தொடங்கக் காரணம். 30 ஏக்கர் நிலமும் 25 லட்ச ரூபாயையும் தந்து வருங்கால வீராங்கனைகளை உருவாக்கும் இந்தக் கருவறையை ஆரம்பிக்க உதவிசெய்தது கேரள அரசு!’’ என்கிறார் உஷா.

இந்தப் பள்ளிக்கு, இப்போது நான்கு வயசு. தடகளத்தில் சாதிக்கத் துடிக்கும் 12 வயதுக்குட்பட்ட இளம் வீராங்கனைகளை அழைத்து, பல்வேறு போட்டிகளும் தேர்வுகளும் நடத்தி அவர்களில் 12 பேரை மட்டும் முதலில் தன் பள்ளியில் சேர்த்திருக்கிறார் உஷா.

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

``தடகள வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அசாத்திய திறமை இருக்கும்.

100 மீட்டர் ஓட்டத்தில் பிரமாதப்படுத்தக்கூடிய பெண், அதுபற்றி சரியாகத் தெரியாமல் 400 மீட்டர் 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்று எல்லாவற்றிலும் கலந்துகொண்டு தன் திறமையை ஒருமுகப்படுத்தாமல் வீணாகிப்போய்விடுவார். இந்த நிலை என் மாணவிகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக, ஒவ்வொருவரின் தனித்திறமையைக் கண்டுபிடிக்கவும் வளர்க்கவும் முதல் மூன்று ஆண்டுகளை எடுத்துக்கொண்டேன். அதன் பிறகே குறிப்பிட்ட துறையில் மட்டும் பயிற்சி அளிக்கிறேன்.

தங்களால் இன்னும் இன்னும் முன்னேற முடியும் என்பதை எங்களுக்கு நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்காக என் மாணவிகளுக்கு எட்டு வாரங்களுக்கு ஒருமுறை தேர்வுகள் நடத்துகிறேன். ஏதேனும் தவறுகள் தென்பட்டால், அடுத்த தேர்வுக்குள் அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். ஆண்டுத் தேர்வும் உண்டு. அப்படி மிகச் சிறப்பாக என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய பத்து பெண்களுக்குத்தான் இப்போது பயிற்சி கொடுத்துவருகிறேன். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்தான் எங்களின் இலக்கு!’’ - நம்பிக்கையுடன் சொல்கிறார் பி.டி.உஷா.

உஷாவின் மாணவிகளில் டின்டு லுகா என்கிற வீராங்கனை சமீபத்தில் தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டிகளில் 40 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். டின்டுவுக்கு வயது 15. ``சேச்சி பயிற்சியுடன் தன் அனுபவங்களையும் சேர்த்தே சொல்லித் தருகிறார். ஒரு வீராங்கனை எத்தனை வேகத்தில் எத்தனை தூரம் ஓடினாலும் அவரது ஹார்ட் பீட்டும் பல்ஸ் ரேட்டும் கூடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் சேச்சி. இங்கே வந்து சேர்ந்த புதிதில் எங்களை முதலில் மைதானத்தைச் சுற்றி ஒரு ரவுண்டு மட்டும் ஓடச் சொல்லி பல்ஸ் ரேட் பார்ப்பார். அது 165-க்கு மேலே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மனதை ஒருமுகப்படுத்தி அதைக் குறைப்பதற்கான வழிகளைச் சொல்வார். இதை வெற்றிகரமாகக் கடந்தால்தான் அடுத்து இரண்டு முறை மைதானத்தைச் சுற்றி அதே பல்ஸ் ரேட்டில் ஓடவைப்பார். இப்படிப் படிப்படியாக பல்ஸ் ரேட்டும் ஹார்ட் பீட்டும் கூடாமலேயே இன்று 10 ரவுண்டுகள் வரை ஓட முடிகிற வித்தையை எனக்குக் கற்றுக்கொடுத்தது சேச்சிதான்’’ என்கிறார் டின்டு.

டின்டுவுக்குப் போட்டி அவர் பள்ளியிலேயே இருக்கிறது. டின்டு முதலாவதாக வரும் எல்லா போட்டிகளிலும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிற சோனியாவுக்கு வயது 14.

தங்கப் பெண்கள் c/o உஷா சேச்சி

``இந்த வருஷம் டின்டுவை முந்திக்காட்டுகிறேன் பாருங்கள்’’ சவால்விடுகிறார் சோனியா. தனது சிஷ்யைகளுக்கு நடுவே நடக்கும் இந்தப் போட்டி மனப்பான்மையை ரொம்பவே ரசிக்கிறார் உஷா.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் எல்லா போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களுக்கும் தன் மாணவிகளுக்கு நடுவே மட்டுமே போட்டி இருக்க வேண்டும் என்பதே அவரது கனவு. வித்யா, சிஜி, ஸ்டெபி, அமந்தா, ஸ்வாதி, ஷில்பா, அஸ்வதி, திவ்யா... என ஒருவரை ஒருவர் முறியடித்து இந்தியாவுக்கான பதக்கங்களை தாங்கள்தான் வெல்ல வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்கள். மைதானத்தில்தான் போட்டி எல்லாம் மற்றபடி எல்லோரும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள்.

தடகளப் பயிற்சிக்காக இங்கே வரும் மாணவிகளின் படிப்பு, உடைகள், தங்கும் வசதி என்று எல்லாவற்றையுமே பள்ளியே ஏற்றுக்கொள்கிறது. இதற்கு ஆகும் செலவுகளுக்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஸ்பான்சர் பிடித்திருக்கிறார் உஷா. ``என்மீது நம்பிக்கைவைத்து என் குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்பவர்கள் எதிர்பார்ப்பது ஒரே ஒரு விஷயத்தைதான். அது, சர்வதேசப் போட்டியில் பதக்கம்!’’ என்கிற உஷா சேச்சிக்கும் கூடுதாலாக இன்னோர் எதிர்பார்ப்பு இருக்கிறது.

``விளையாட்டு வீரர்கள் பலர் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைத்ததும் விளையாட்டை மறந்துவிட்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது. கடைசி வரை தாய்நாட்டுக்காக உழைக்க வேண்டும். இந்தியாவுக்கு இன்னும் இன்னும் உஷாக்கள் தேவை. இது ஒரு ரிலே ரேஸ்!’’ என்கிறார்.

தங்கத் தங்கைகளை நம்பலாம்!

- பி.எம்.சுதிர்

(26.3.2006 இதழில் இருந்து...)