Published:Updated:

ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

ப.திருமாவேலன், ஓவியம்:பிரேம் டாவின்ஸி

ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

ப.திருமாவேலன், ஓவியம்:பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

`சம்பவாமி யுகே யுகே’ - சோ ராமசாமி பெயரை தமிழகம் அறியவைத்த நாடகம். அது, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தயாரானது. பக்தவத்சலம் முதலமைச்சர். ‘எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலை ஒழிக்க இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும், பைத்தியக்காரப் பட்டம் வாங்கிக்கொண்டு அவன் திரும்பிப் போகவேண்டியதுதான்’ என்று அதில் ஒரு வசனம் வரும். அதனால் அந்த நாடகத்துக்கு அனுமதி தரவில்லை. உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார் சோ. இவரது மனுவைப் படித்துப் பார்த்த அன்றைய தலைமை வழக்குரைஞர், சில வசனங்களை மட்டும் மாற்றித் தரச் சொன்னார். சோ, அதற்குச் சம்மதிக்கவில்லை. சோ, உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு, அரசால் எதிர்வாதங்கள் வைக்க முடியாததாக இருந்தது. தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைக்காது என அறிந்ததால், ‘இந்த நாடகத்துக்கு அனுமதி கொடுத்துவிடுங்கள்’ என அரசு வழக்குரைஞர் சொன்னார். அனுமதி கிடைத்தது.

ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

சென்னை பாலமந்திர் அரங்கத்தில் நாடகம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் பெருந்தலைவர் காமராஜர், கொஞ்சம் தாமதமாக உள்ளே வந்தார். ஜெமினிகணேசன் பேசிக்கொண்டிருந்தார். ‘இந்த நாடகத்துக்கு லைசன்ஸ் மறுத்துவிட்டார்கள்’ என்று காமராஜரிடம் சொன்னார் சோ. ‘நீங்க ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமா எழுதியிருப்பீங்க’ என்றார் காமராஜர். ‘அப்புறம் எதற்காக இப்ப லைசன்ஸ் கொடுத்தாங்களாம்?’ எனத் திருப்பிக் கேட்டார் சோ. ‘லைசன்ஸ் கொடுத்தா எப்படி வேண்டுமானாலும் கார் ஓட்டுவீங்களா?’ என்றார் காமராஜர். சோவும் விடவில்லை. ‘லைசன்ஸ் கொடுத்தால் ரூல்ஸ்படிதான் நான் கார் ஓட்டுவேன். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்றார் சோ. அந்தப் பதிலை காமராஜர் ரசிக்கவில்லை. ‘ஓகோ’ என்றார். கூட்டத்தில் அனைவருக்கும் இது கேட்டது. உடனே சோ, ‘ஹா... ஹா...’ என்று கிண்டல் அடித்தார். இதுவும் கூட்டத்தில் கேட்டது. இரண்டு பேருக்கும் ஏதோ சண்டை ஆகிவிட்டது என்பதை, கூட்டத்தில் உள்ளவர்கள் உணர்ந்துவிட்டார்கள். திடீரென காமராஜர் எழுந்து வெளியே போய்விட்டார். கவலைப்படவில்லை சோ. நாடகத்தை நடத்தி முடித்தார். ஜெமினிகணேசன் உள்பட அனைவரும் காமராஜரிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். மறுத்துவிட்டார் சோ. இதுதான் சோ. தன் மனதுக்கு சரி எனப் பட்டதை, பெருந்தலைவரே சொன்னாலும் ஏற்க மாட்டார். சிறு எண்ணம்கொண்ட தலைவர்களைச் சிதைத்துவிட மாட்டாரா?

‘யார் எதைச் சொன்னாலும் அதற்கு ஏடாகூடமாகப் பதில் சொல்லும் பாணி என்னுடையது’ என சோ தனக்கான வரையறையை வைத்துக்கொண்டார். அதைக் கடைசிவரைக்கும் கைவிடவில்லை. முதலமைச்சர் பக்தவத்சலத்தை வெறுப்பு ஏற்றியது அந்த நாடகம் என்றால், முதலமைச்சர் கருணாநிதியை கனல் ஆக்கியது ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ நாடகம். இதற்கு எதிராக தி.மு.க-வினர் ‘யார் அறிவாளி?’ என்ற நாடகத்தை அரங்கேற்றினர். எம்.ஜி.ஆரைக் கோபப்படுத்தியது, ‘முகமது பின் துக்ளக்’ படம். இப்படி பேனா யுத்தம் தொடுத்து புகழ்பெற்ற சோ, டிசம்பர் மாதம் 7-ம் தேதி மறைந்துவிட்டார்.

ஏடாகூட விமர்சனங்கள்தான் அவரது பாணி. கேலி, கிண்டல், நக்கல், நையாண்டிகொண்ட வசனங்கள் சரளமாகத் துள்ளிவிழும். ஒவ்வொரு முறை மேடை ஏறும்போதும் வசனங்கள் மெருகேறி, கிண்டல்கள் கூடிக்கொண்டே போகும். ‘நாடக உலகின் புதிய பாதை திறக்கப்பட்டுவிட்டது’ என எஸ்.வி.சகஸ்ரநாமம் சொல்லும் அளவுக்கு, நாடக மேதைகளைக் கவர்ந்தது இவரது பாணி.

`என்னிடம் கிடைத்தால்', `யாரிடமும் சொல்லாதே', `ஏன் கூடாது?', `காத்திருந்து பார்', `எதற்காக?' போன்ற இவரது நாடகங்கள் பொதுவான சமூக, குடும்பக் கிண்டல்கள்தான். தி.மு.க ஆட்சிக்கு வருவது, இந்தி எதிர்ப்புக் கொள்கை, பெரியாரின் கடவுள் மறுப்புப் பிரசாரம்... ஆகிய மூன்றும் சோவுக்கு ஆகாதவை. அவற்றின் எதிர்ப்பில் இருந்துதான் அரசியல் விமர்சனம் பக்கமாக தனது நாடகங்களைத் திருப்பினார். தி.மு.க-வை, திராவிட இயக்கத்தை விமர்சித்து எடுக்கப்பட்ட நாடகங்களாக இருந்தாலும், அதற்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, அப்போது தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர்., தி.க-வில் இருந்த எம்.ஆர்.ராதா ஆகியோரை, சோ துணிச்சலாக அழைக்கிறார். அவர்களும் பாராட்டிப் பேசுகிறார்கள். ‘முகமது பின் துக்ளக்’ நாடகமாக இருக்கும்போது சீரியஸாக நினைக்கவில்லை எம்.ஜி.ஆர். அது சினிமாவாக ஆகும்போது சிக்கல் செய்யத் தொடங்கினார். படத் தயாரிப்பாளர் முதல் நடிகர்கள் வரை மிரட்டப்பட்டார்கள். தமிழகத்தை ஆண்ட கருணாநிதியும், சினிமாவை ஆண்ட எம்.ஜி.ஆரும் எதிர்த்த நிலையில் வெளிவந்த படம் ‘முகமது பின் துக்ளக்’. இந்தப் படத்துக்கு விழுந்த தடைகள் மூலமாகத்தான் தமிழகப் பிரபலம் ஆனார் சோ!

ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒரு விழா. மாணவர்கள், சோவிடம் சினிமா, நாடகம் தாண்டி அரசியல், சமூகம், வரலாறு எனப் பல கேள்வி​களைக் கேட்டார்கள். இவர் சொல்லிக்கொண்டே போனார். கைதட்டல் அள்ளினார். கூட்டம் முடிந்து திரும்பும்போது, ‘உன் வேலை நடிப்பது. நீ ஏன் அரசியல் பற்றி எல்லாம் பேசுகிறாய்? `தெரியாது’னு சொல்லவேண்டியதுதானே?’ என நண்பர் கேட்க, ‘எனக்குத் தெரியும்’ என இவர் சொல்ல, ‘தெரிந்தால் எழுது’ என அந்த நண்பர் தூண்ட, அப்படி ஆரம்பித்ததுதான் ‘துக்ளக்’ பத்திரிகை.

‘நாடகம் நடித்துக்கொண்டிருக்கும் நான், பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்... ஆரம்பிக்கலாமா?’ என ‘இந்து’வில் இவர் விளம்பரம் தர, ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சோவை வரவழைத்துப் பேசினார். 20 நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அது. 47 ஆண்டுகள் தொய்வு இல்லாமல் தொடர்ந்து வருகிறது. இதற்கு ஒரே காரணம், சோவின் மூளை, சிந்தனை, தர்க்கம், வாதம், விவாதம்... இவை மட்டும்தான். தன்னை நம்பியே ஆரம்பித்தார். சேலத்தில் பெரியார் நடத்திய கடவுள் மறுப்பு ஊர்வலத்துக்கு தி.மு.க அரசு அனுமதி தந்ததைக் கண்டித்து வெளியான ‘துக்ளக்’ இதழை, கருணாநிதி ஆட்சி மொத்தமாகப் பறிமுதல் செய்தது. அன்று ‘துக்ளக்’ இதழ் 40 பைசா. ‘20 ரூபாய் தர்றேன். அதுல என்ன வந்திருக்கு?’ எனத் தேடினார்கள் வாசகர்கள். இந்தியப் பத்திரிகைகள், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இந்தியப் பிரபலம் ஆனார் சோ!

ஒரு நாடகம் - ஒரு சினிமா - ஓர் இதழ்... இந்த மூன்றும்தான் 84 வயது சோவை ஒரு பிம்பமாகக் கொண்டுவந்து நிறுத்தியது. எல்லோரையும் விமர்சித்தார். ஆனால், எல்லோருடனும் நட்புடன் இருந்தார். சோவைத் திட்டிக்கொண்டே எல்லோரும் ‘துக்ளக்’ படித்தார்கள். `‘எனது விமர்சனங்களை அனைவரும் நிராகரித்​தார்கள். ஆனால், என்னை நிராகரிக்க​​வில்லை’' என சோ சொன்னார். அந்த அளவுக்கு அரசியல் தலைவர்களுடன் நட்போடு இருந்தார். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மூப்பனார், வைகோ, விஜயகாந்த்,  ஜி.கே.வாசன் முதல் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, சந்திரசேகர், ராஜீவ் காந்தி, வாஜ்பாய், அத்வானி, மோடி வரை எல்லோரும் அறிந்த பத்திரிகையாளர் சோ. எழுத்தோடு பத்திரிகையாளனின் கடமை முடிந்துவிடவில்லை என நினைத்தார். தான் நினைத்ததைச் செயல்படுத்துவதற்காக சில காரியங்களைச் செய்ய வேண்டும் எனத் துடித்தார். மத்தியில் வி.பி.சிங் ஆட்சி கவிழவும், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைக் கலைக்கவும் முயற்சிகள் எடுத்தவர். த.மா.கா-வை உருவாக்கி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியைத் தூண்டியதில் இவருக்கு பங்கு உண்டு. ஜெயலலிதாவுடன் விஜயகாந்தைச் சேர்த்ததிலும் பங்கு உண்டு. இவை அனைத்துக்கும் ஒரு காரணம் வைத்திருந்தார். ‘எந்த ஆட்சியும் தொடர்ந்து இருக்கக் கூடாது. மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஊழல் இல்லாத, நாட்டுப்பற்று உள்ள கட்சியை நான் ஆதரிப்பேன்’ எனச் சொல்லி வந்துள்ளார்.

ஒரு நாடகம்... ஒரு சினிமா... ஓர் இதழ்!

தனது நிலைப்பாடுகளுக்கு தன்னைப் பொறுத்து சில நியாயங்களை வைத்திருந்தார். அவற்றை எழுதினார். வி.பி.சிங்கைக் கடுமையாக எதிர்த்தபோதும், விடுதலைப்புலிகளைக் கடுமையாகக் கண்டித்தபோதும் ‘துக்ளக்’ வாசகர்கள் கோபித்தார்கள் (இது சோவே சொன்ன கருத்துதான்!). ஜெயலலிதா ஆட்சியின் ஊழல்களை மிகக் கடுமையாக விமர்சித்த சோ, இறுதி காலத்தில் ஜெயலலிதாவை விமர்சனம் இல்லாத வகையில் அணுகியதும் பலவீனமாக மாறியது. ‘சசிகலா இல்லாத ஜெயலலிதா நல்லவர் என நம்பும் அப்பாவியாக சோ எப்படி ஆனார், இது வயதால் ஏற்பட்ட பலவீனமா அல்லது கருணாநிதி மீதான வெறுப்பால் விளைந்ததா...’ என்பது போன்ற கேள்வி​களுக்கு விடை சொல்லாமலே போய்விட்டார். ஆனால், இதே தொனியில் முன்னர் ஒரு விமர்சனக் கட்டுரை வந்தபோது, ‘அந்த விமர்சனத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது’ எனச் சொன்ன நேர்மை, சோ விதைத்துச் சென்ற இதழியல் தர்மம்.

‘ஒரு விஷயத்தைப் பற்றி தன் மனதில் ஒரு முடிவு ஏற்பட்ட பிறகுதான், அதைப் பற்றி மற்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்பார்’ என தன்னைப் பற்றி ‘சோ’வே ஒருமுறை எழுதினார். அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டபோது கறுப்பு அட்டை போட்டது ‘துக்ளக்’; பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கறுப்பு அட்டை போட்டது ‘துக்ளக்’. இந்தத் துணிச்சல்தான் சோ. காமராஜர் பற்றி தான் எழுதிய புத்தகத்தின் முடிவில், ‘சுபம்’ எனப் போடாமல், ‘இருள்’ எனப் போட்டார் சோ. இந்தக் கட்டுரையையும் அப்படித்தான் முடிக்கவேண்டும்.

‘இருள்!'