Published:Updated:

டிசம்பர் பயங்கரம்!

டிசம்பர் பயங்கரம்!
பிரீமியம் ஸ்டோரி
டிசம்பர் பயங்கரம்!

அதிஷா - படங்கள்: சு.குமரேசன், ப.சரவணகுமார், மீ.நிவேதன்

டிசம்பர் பயங்கரம்!

அதிஷா - படங்கள்: சு.குமரேசன், ப.சரவணகுமார், மீ.நிவேதன்

Published:Updated:
டிசம்பர் பயங்கரம்!
பிரீமியம் ஸ்டோரி
டிசம்பர் பயங்கரம்!
டிசம்பர் பயங்கரம்!

சென்னைக்கு இன்னும் ஒரு மோசமான டிசம்பர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த துக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. அரசு குறித்த குழப்பங்கள் இன்னும் தீரவில்லை. அன்றாட ஏ.டி.எம் பிரச்னைகளும்கூட... இந்த இக்கட்டான காலகட்டத்தில் இவ்வளவு கடுமையான புயலை எதிர்பார்த்திருக்கவில்லை. இயற்கைக்கு எஜமானர்கள் கிடையாது. சில வாரங்களுக்கு முன்னர் உருவான நடா புயல், சின்னச் சலசலப்பைகூட ஏற்படுத்தாமல் கடந்துசென்றது. அதுபோலவே வர்தாவும் கடந்துவிடும் என, சென்னை மக்கள் நினைத்தனர். ஆனால், வர்தா என்ற `சிவப்பு ரோஜா' மென்மையாக இருக்கவில்லை. கடலூரில் `தானே' ஆடிய கோர தாண்டவத்துக்கு இணையாக, சென்னையை அதிரவைத்திருக்கிறது `வர்தா'. 

சென்னைக்கு வரும் பெரிய புயல்கள் ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் சென்றுவிடுவதுதான் வாடிக்கை. ஆனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு புயலை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது சென்னை. 2010-ம் ஆண்டில் வந்த `ஜல்' புயலோ, 2012-ல் மகாபலிபுரத்தில் கரைகடந்த `நீலம்' புயலோகூட இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வர்தாவுக்கு இணையான புயல் 1994-ம் ஆண்டில் உருவானது. அப்போது இரண்டே நாட்களில், 34 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 140 கி.மீ வேகத்தில் மழை பெய்தது. அரசுக் கணக்கின்படி புயல் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகினர்... ஏராளமான பொருட்சேதமும்.ஆனால், `அதைவிடவும் ஆக்ரோஷமாக இருக்கிறது இந்த `வர்தா’ ’ என்பதே, 1994-ம் ஆண்டு புயலைப் பார்த்தவர்களின் ஒட்டுமொத்தக் கருத்து.

1984-ம் ஆண்டிலும் இதுபோன்ற அதிவேகப் புயல் சென்னையைத் தாக்கியிருக்கிறது. அப்போது மணிக்கு 214 கி.மீ வேகத்தில் காற்று வீசி, பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இப்போது வந்திருக்கும் வர்தாவும், அந்த எண்களைக் கிட்டத்தட்ட நெருங்கியது.  இந்தப் புயலின் தாக்கம் முந்தைய புயல்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானது என்பதை, வரும் நாட்கள் தரப்போகும் புள்ளிவிவரங்கள் நமக்குத் தெளிவாக்கும்.

டிசம்பர் பயங்கரம்!

சென்னை முழுக்க நடந்துகொண்டிருந்த கட்டட வேலைகள், மெட்ரோ ரயில் வேலைகள், இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. குழிகளும் அதை மறைப்பதற்காக வைத்திருந்த தகர மறைப்புகளும் முழுமையாகச் சரிந்தன. இந்த வேலைகளைச் செய்த கூலித் தொழிலாளர்கள் தங்கும் இடங்களும், பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. இந்தத் தொழிலாளர்களின் பாதிப்புகள் முறையாகக் கணக்கிடப்பட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகள் தரப்பட வேண்டும்.

விரிவாக்கத்துக்கும் கட்டடங்கள் கட்டவும் சாலைகள் போடவும் என ஏற்கெனவே கணிசமான மரங்களை இழந்து நிற்கும் மாநகரம் சென்னை. வர்தா புயல் தாக்குதலில் சில ஆயிரம் மரங்கள் வேரோடு வீழ்ந்து கிடக்கின்றன. மரங்கள் இல்லாத இடங்களில் மீண்டும் மரங்களை நட்டு வளர்ப்பதுதான் மீட்புப் பணிகளில் முக்கியமானது. அதை மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் அரசின் உதவியோடு தொடங்கிவைக்கலாம்.

ஒருபக்கம் புயலின் தாக்குதல் பற்றி கவலையில் இருந்தாலும், `வர்தா' கணிசமான அளவு மழையை சென்னைக்குக் கொண்டுவந்ததில் மக்களுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சிதான்.

புயல் சென்னையைத் தாக்கிய சமயத்தில், அது ஃபேஸ்புக்கையும் வலுவாகத் தாக்கியது. ஆளாளுக்கு கையில் கேமராவோடு மொட்டைமாடிக்குச் சென்று `லைவ்' போடத் தொடங்கினர். சிலர் சலித்துக்கொண்டு, சிலர் மகிழ்ச்சி மனநிலையில், சிலர் அதிர்ச்சியில்... என இந்த லைவ்கள் எல்லாமே மக்களின் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலித்தன. சரிந்துவிழுந்த மரத்துக்கு முன்பும், தகர்ந்துபோன சாலைக்கு முன்பும் என எப்படியும் சில லட்சம் செல்ஃபிகளும் அந்த நாளில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும். ஒருபக்கம் லைவ் வீடியோக்களும் செல்ஃபிகளும் கொட்டிக்கொண்டிருக்க, மீம்ஸ் மேக்கர்கள் `வர்தா'வைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ் போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், சென்ற ஆண்டைப்போல மீட்புப் பணிகளுக்கும் நிவாரண உதவிகளுக்கும் என, இணையத்தின் இளைஞர்கள் ஆர்வத்துடன் களத்தில் இறங்கி, உதவிகள் செய்வதையும் காண முடிந்தது.

எண்ணற்றோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். கட்டடங்கள் சேதம் அடைந்திருக்கின்றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள் பலவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு வீழ்ந்துகிடக்கின்றன. இதற்கு முன்னர் எத்தனையோ முறை இப்படியான தருணங்களை சென்னை கடந்துவந்திருக்கிறது. இப்போதும் அது மீண்டு எழும்!