Published:Updated:

சரிகமபதநி டைரி - 2016

சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து, ப.பிரியங்கா

சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து, ப.பிரியங்கா

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016
சரிகமபதநி டைரி - 2016

முன்பு `ஜெய ஜெயலலிதா' என்ற பெயரில் மறைந்த பாலமுரளி கிருஷ்ணா புது ராகம் கண்டுபிடித்ததுபோல, இப்போது காலத்தின் கட்டாயம் என நினைத்து இசை வல்லுநர் யாராவது ‘சசிகலா’ என்ற பெயரில் புது ராகம் ஒன்றைக் கண்டறிந்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது!

சேம் பின்ச்!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மேடையில் சுதாரகுநாதன், வயலின் ராகவேந்திர ராவ், மிருதங்கம் நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியம் மூவரும் பேசிவைத்துக்கொண்டு வந்த மாதிரி நீல வண்ணப் புடவையும் ஜிப்பாவும் அணிந்திருந்தார்கள். மோர்சிங் ராமனை முன்கூட்டியே உஷார்படுத்தவில்லைபோல. அவர் மட்டும் வேறு கலரில் மேல் சட்டை!

ஆந்தோளிகா ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். மேடத்துக்கும் தொண்டைக் கட்டு ஆரம்ப நிலையில்.

‘ஆறு துணை’ என்ற தலைப்பில் தெய்வங்கள் அறுவரை ஆதரவாக இருக்கும்படி வேண்டும்விதமாக ஆறு பாடல்கள் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார். கணபதி ராயனில் தொடங்கி, செல்வத்திருமகள் வரையிலான இந்த மூவிரண்டு பாடல்களை ராகமாலிகையில் பாடினார் சுதா. ஒவ்வொரு ராகத்துக்கும் ஸ்வரங்களும் உண்டு. பை த வே... அன்று பாரதியாரின் பிறந்த தினம்!

சரிகமபதநி டைரி - 2016

‘ஸாக்ஷாத்கார நீ ஸத்பக்தி’ என்று தியாகராஜரின் ‘மோட்சமு கலதா...’வை அனுபல்லவியில் ஆரம்பித்துப் பாடியபோதும், அடுத்து ஆபோகி ராக ஆலாபனையில் பயணித்து கோபாலகிருஷ்ண பாரதியின் சமானம் இல்லாத சபாபதியை துதிக்கும் வரையிலும் சுதாவின் குரல் warmup mode-ல்தான் இருந்தது.

பின்னர் வந்தாள் கல்யாணி... வந்தார் சுதா, அவரின் என்றும் இனிமை குறையாத குரலுடன். ஜி.என்.பி., எம்.எல்.வி பிராண்ட் கல்யாணி சங்கதிகள், மேல்ஸ்தாயி வரையில் சறுக்குமரம் மாதிரி ஏறி இறங்கின. அமிதாப், பிரபு மாதிரி இந்தக் கல்யாணிக்கு, தானே பிராண்ட் அம்பாசிடர் என்பதை அழுத்தமாக நிலைநிறுத்தினார்.

‘வேகமாக வரங்கள் அளிப்பவளே... உன்னையே நம்பிக்கொண்டிருக்கும் என்னை காப்பாற்று’ என்று அன்னை காமாட்சியிடம் மனு தரும் சியாமா சாஸ்திரியின் ‘பிராண வராலிச்சி ப்ரோவுமு...’ பாடல், சுதாரகுநாதனை அன்று ஜோராகக் காப்பாற்றியது.

மிஸஸ் ரகுநாதனுக்கு ஒரு யோசனை... உங்கள் குருநாதர் எம்.எல்.வி மாதிரி ஏன் நீங்களும் உங்கள் மாணவிகளில் ஓரிருவரை மேடையில் பின்பாட்டுக்கு வைத்துக்கொள்ளக் கூடாது? சங்கீத கலாநிதி முதல் விருதுகள் பல வாங்கிவிட்ட நீங்கள், இப்போது சீனியர் பாடகிகளில் ஒருவர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டவர். உதவிக்கு ஒருவர் பின்னால் உட்கார தருணம் இதம்மா!

மேக்ஸிமம் மீடியாவின் மார்கழி மகா உற்சவத்துக்காக ஒரு மாலைப்பொழுதில் காயத்ரி வெங்கட்ராகவன் எடுத்துக்கொண்ட தீம்: ஆடும் தெய்வங்கள்.

ஆனை முகத்தானின் ஆனந்த நர்த்தனத்துடன் ஆரம்பமான கச்சேரியில், பாரதி, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், புரந்தரதாஸர், ஊத்துக்காடு வேங்கடகவி, முத்துஸ்வாமி தீட்சிதர், பாபநாசம் சிவன் எனப் பலரும் தலைகாட்டிச் சென்றார்கள். (கையில் கேமரா இருந்திருந்தால் இவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கலாம்!) ராமமூர்த்தி ராவ் என்பவர், தமது பாடல் ஒன்றில் சரஸ்வதி தேவி நடனம் ஆடியிருப்பதைக் கண்டு களிப்படைந்ததாகத் தகவல் பரிமாறி, பாடிக்காட்டினார் காயத்ரி.

புரந்தரதாஸர் தனது கனவில் குட்டிகிருஷ்ணன் நர்த்தனம் ஆடியதைப் பாடலாகப் புனைந்திருப்பதையும், சதாசர்வகாலமும் நாட்டியக் கோலத்திலேயே காட்சிதரும் கண்ணனை ‘ஆடாது அசங்காது வா...’ என்று ஊத்துக்காட்டார் விளித்தது ஏன் என்றொரு வினா எழுப்பி, கண்ணனுக்கு பிறர் ‘கண்’பட்டுவிடப்போகிறதே என்ற அச்சம்தான் காரணம் என்பதை நேர்த்தியாக விளக்கிப் பாடியும், ‘ஆடும் தெய்வம் நீ அருள்வாய்...’ என்ற பாபநாசம் சிவனின் பாடலைப் பாடுவதற்கு முன், காம்போதி ராகத்தின் முழு சொரூபத்தை அவுன்ஸ் கிளாஸ் அளவில் குழைத்துக் கொடுத்தும்... தனக்கு இட்டப் பணியைச் செவ்வனே நிறைவேற்றினார் காயத்ரி வெங்கட்ராகவன்.

சரிகமபதநி டைரி - 2016

63 வருடங்களுக்கு முன்னர் ஐ.பி.எஸ் தேர்ச்சிபெற்றவர் மதுரை ஜி.எஸ்.மணி. மிடுக்கான தோற்றம் இருந்தும் காவல் துறைக்குப் போகாமல் பாட்டுத் துறையைத் தேர்வுசெய்தவர். ஆயிரம் பிறைகள் கண்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 83 வயதுக்காரர்.

“நான் இப்போ பாடப்போற ராகம் கோசலம். கோடீஸ்வர ஐயர் கீர்த்தனை. இந்த ராகத்தை ரொம்பப் பேர் பாடுறது இல்லை. கத்துக்கணும்னு ஆர்வம் கிடையாது. இந்தக் காலக் குழந்தைகளுக்கு (இளசுகளுக்கு என்று பொருள்!) பயம், பக்தி, அபிமானம் கிடையாது. இதை எல்லாம் நான் பேசலைன்னா, வேற யார் பேசப்போறா?” என்று சொல்லிவிட்டு, ஜி.எஸ்.மணி பாடியது பிரம்ம கான சபா கச்சேரியில். கணீர் குரல் மணிக்கு. மந்த்ர ஸ்தாயியில் பேஜாரின்றிப் பயணிக்கிறார். இந்த வயதில் இவர் கொடுக்கும் கார்வைகள் புருவம் உயர்த்தவைக்கின்றன. மிகமிகச் சொற்பமாகக் கச்சேரிகள் செய்தாலும், மிகமிக அதிகமாக சாதகம் செய்வார்போல!

கச்சேரியில் ஜி.எஸ்.மணி பாடிய சண்முகப்ரியாவுக்கு ஆயிரம் பொற்காசுகள் தரலாம். அந்தக் காலத்து நாகஸ்வரச் சக்கரவர்த்திகளின் சங்கதிகளையும் பிடிகளையும் அத்தனை ஜோராக வெளிப்படுத்தி, ராகத்தை விரிவுபடுத்தினார். தான் சொந்தமாக இயற்றிய ‘பார்வதி சம்பாவயே...’ பாடலைப் பாடினார். வயதாகிவிட்டதால் இவரை திண்ணை ஓரத்தில் உட்காரவைத்து ஒதுக்கிவிட முடியாது. இன்றும் கர்ஜிக்கும் சிங்கம் இவர்!

வயலின் நாகை ஸ்ரீராம். ‘simply brilliant' என்று இவரது வாசிப்புக்குப் புகழாரம் சூட்டினார் ஜி.எஸ்.மணி. ஸ்ரீராமா... பெரியவர் சொல்லிட்டா, வசிஷ்டர் சொன்ன மாதிரி இல்லையா?!

திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கம். மைக்குடன் நீண்ட நேரம் மல்லுக்கட்டினார். திருப்தி அளிக்கவில்லை. வருத்தப்பட்டார். அதை எல்லாம் மறந்து, ‘தனி’யில் தனித்து நின்று அப்ளாஸ் அள்ளினார்.
கடம் ரவிச்சந்திரன், கச்சேரி மேடைக்கு அறிமுகம். எடுத்த எடுப்பில் சீனியர் வித்வான் பக்தவத்சலத்துடன் இணைந்து பானை பிடித்த பாக்கியசாலி!

ர்தா காரணமாக, போறதா... வேண்டாமா என்ற தயக்கம், நிறைய ரசிகர்களுக்கு இருந்திருக்கும். ஜேசுதாஸ் கச்சேரிக்கு (கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்) அரங்கம் நிரம்பி வழியாமல்போனதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கும்.

சீஸனில் முதல் கச்சேரி தாஸ் அண்ணாவுக்கு. வெள்ளை வெளேர் தாடியில் துறவிபோல் இருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் மரியாதை ஏற்படுத்தும் தோற்றம்; கேட்ட மாத்திரத்தில் வசீகரப்படுத்தும் ‘மார்கண்டேய’க் குரல்!

`அருள் தர வா கணபதி’ என அழைத்துவிட்டு, முத்தையா பாகவதரின் ‘பாலசுப்ரமண்யம் பஜேஹம்...’ என்ற ஆபேரி ராகப் பாடல். பாகவதர் குறிப்பு எழுதிவைத்திருக்கும் ஆபேரி ஸ்கேலில் பாடினார் ஜேசுதாஸ். இப்போது பாடப்பட்டுவரும் தியாகராஜரின் ‘நகுமோமு...’ ஆபேரி கிடையாது என்றும், அது கர்னாடக தேவகாந்தாரி என்று ஸ்வர உதாரணங்களுடன் விளக்கினார்.

பிரதானமாக கல்யாணி. தியாகராஜரின் ‘ஏதாவுனரா...’ பாடல், நிரவல் ஸ்வரங்களுடன். ஜேசுதாஸ் டைப் கலக்கல்ஸ்! தொடர்ந்த ‘தனி’யில் கே.வி.பிரசாத் அடக்கமாக, அடர்த்தியாக வாசித்தார். திருபுனித்துரா ராதாகிருஷ்ணன் கடம் வாசிப்பில்தான் சத்தம் அதிகம் - பானையே உடைந்து சிதறும் அளவுக்கு!

கடைசி அரை மணி நேரத்துக்கு விசிறிகளைப் பரவசப்படுத்தும் ‘ஹரிவராசனம்’ உள்ளிட்ட பக்திப் பாடல்கள். நேயர் விருப்பக் குரல்கள் எழும்பிக்கொண்டே இருந்தன. குறிப்பிட்ட ஒரு பாடல் கேட்கப்பட்டபோது, ‘என்ன... இந்தப் பாடலா? அடுத்த வருஷம் என்னோட லைட் மியூஸிக் கச்சேரி இருக்கு. அங்கே வாங்க பாடுறேன். இங்கே, கேட்கும்போதே உடம்பு கூசுது. நல்ல பாட்டுதான்... ஆனா, இங்கே எப்படிப் பாட முடியும்?” என்று கேட்டார் ஜேசுதாஸ்.

சரிகமபதநி டைரி - 2016

அந்த நேயர் விருப்பப் பாடல்: ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..!’

ழையோ, வெள்ளமோ... புயலோ, பிரளயமோ... மியூஸிக் அகாடமியின் துவக்க விழா எப்போதும் மிகச்சரியாக 5 மணிக்கு ஆரம்பித்துவிடும். ஆனால், கடந்த வியாழன் அன்று மேடையில் திரை விலகியபோது, கடிகாரம் காட்டிய நேரம் 5 மணி 16 நிமிடங்கள். டெல்லி விமானம் தாமதமாக தரை இறங்கியதோ! அன்று விழாவைத் துவக்கிவைத்தவர் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த வருடம் அகாடமியின் 90-ம் வருட மாநாட்டுக்கு தலைமைதாங்கவும், `சங்கீத கலாநிதி' விருது பெறுவதற்கும் தேர்வாகி இருப்பவர் வயலின் கலைஞர் எ.கன்யாகுமாரி.

மியூஸிக் அகாடமியின் மரபுபடி, ஏற்கெனவே கலாநிதி விருது பெற்ற ஒருவர் இதை முன்மொழிய வேண்டும். இன்னொருவர் ஆமோதிக்க வேண்டும். இந்த வருடம் சுதாரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும் முன்மொழிந்து ஆமோதித்தார்கள். மேடையில் `இளமை' ஊஞ்சலாடியது.

தன்னை சங்கீத ரசிகையாக அல்லாமல்,  பக்தையாக அறிமுகப்படுத்திக்கொண்ட நிர்மலா சீதாராமன், துவக்க உரையின்போது ஹைகிளாஸ் கதை சொல்லியாகத் தோற்றமளித்தார்.

தியாகராஜரின் இல்லம் வந்த கோபாலகிருஷ்ண பாரதி, மகனின் வேண்டுகோளை ஏற்று ஆபோகி ராகத்தில் `சபாபதிக்கு...' பாடலை இயற்றியதையும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயில உ.வே.சா சென்றதையும் சிதம்பரம் சென்ற கோபாலகிருஷ்ண பாரதி அங்கு கூடியிருந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற `எந்நேரமும் உந்தன் சந்நதியில்...' என்ற தேவகாந்தாரி ராகப் பாடலை (ஆரபி அல்ல அமைச்சரே!) ஆன் த ஸ்பாட் பாடியதையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகக் கலந்து பொளந்துகட்டினார் நிர்மலா சீதாராமன்.

கர்னாடக இசை எப்போதுமே `இன்க்ளூசிவ் மியூஸிக்' என்பதை வலியுறுத்தவே அமைச்சர் இந்தக் கதைகளைச் சொன்னார். வித்வான் டி.எம்.கிருஷ்ணாவுக்குப் பிடித்தமான சப்ஜெக்ட்!

- டைரி புரளும்...