Published:Updated:

புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!

புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!
பிரீமியம் ஸ்டோரி
புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!

மருதன்படம்: ப.சரவணகுமார், ஓவியம்: அ.நன்மாறன்

புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!

மருதன்படம்: ப.சரவணகுமார், ஓவியம்: அ.நன்மாறன்

Published:Updated:
புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!
பிரீமியம் ஸ்டோரி
புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!
புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!

ல்லாயிரக்கணக்கான மரங்களோடு சேர்த்து, ‘கேஷ்லெஸ் எக்கானமி’ என்னும் மோடியின் கனவுத் திட்டத்தையும் வேரோடு வாரிச் சுருட்டி, வீதியில் வீசியிருக்கிறது வர்தா புயல். பல வண்ண கார்டுகளை பர்ஸில் பந்தாவாகச் செருகிவைத்திருந்தவர்கள், முதல்முறையாக கடந்த வாரம் கோபமும் வெறுப்பும் ஆற்றாமையும் பொங்க அந்த கார்டுகளை வெறித்துப் பார்த்தனர். ‘ஏன் ஏ.டி.எம் முன்னால் நிற்கிறீர்கள்... பேடிஎம்-முக்கு மாறவேண்டியது​தானே?’ என்று தாராளமாக அறிவுரை வழங்கிகொண்டிருந்த பலரை, வர்தா வெறுப்புக்குள்ளாக்கியது.

`‘ஸ்கான்டிநேவியன் நாடுகளைப்போல் நாம் எப்போது மாறுவது? நார்வேயில் ஆறு சதவிகிதம் பேர் மட்டும்தான் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? வீ மஸ்ட் சேஞ்ச்!'’ என்று அங்கலாய்த்தவர்களுக்கு ‘சேஞ்ச்’ எவ்வளவு அவசியம் என்பது இப்போது புரிந்திருக்கிறது.

ஆவடியில் வசிக்கும் முருகன் என்பவரின் வீட்டின் மீது, தேக்கு மரம் ஒன்று சரிந்து விழுந்துவிட்டது. ‘`வீட்டுக்குள் நுழைய முடியாத அளவுக்கு சுவர் நசுங்கிவிட்டதால், பக்கத்து வீட்டில்தான் தங்கியிருந்தோம். நகராட்சியிடம் புகார் தெரிவித்து​விட்டுப் பொறுமையாகக் காத்திருந்தோம். மூன்று நாள் ஆகியும் ஒருவரும் வரவில்லை. இறுதியில் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து, மரத்தை வெட்டி அகற்றினோம். 5,000 ரூபாய் தரவேண்டியிருந்தது. கிரெடிட், டெபிட் என கையில் நான்கு கார்டுகள் இருந்தும் பலன் இல்லை. நண்பர்​களிடம் வாங்கித்தான் கொடுத்தேன்'’ என்கிறார் முருகன்.

வீடு இடிந்ததைவிடவும் பெரிய வருத்தம் ஒன்று, அவரை வாட்டிக்கொண்டிருக்​கிறது. ‘` `கையில் பணம் வைத்துக்​கொள்ளாதே, கார்டுக்கு மாறிவிடு!' என்று நண்பரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன். கடைசியில் அவன்தான் மொத்த பணத்தையும் கொடுத்தான். இனி ஒருபோதும் யாரிடமும் அப்படிச் சொல்ல மாட்டேன்’' என்றார்.

‘`ஒரு தண்ணீர் கேன் வாங்க முடியவில்லை. ஒரே ஒரு மெழுகுவத்தி வாங்க முடியவில்லை. இரவு முழுவதும் கொசுக்​கடியில் புரண்டு புரண்டுப் படுத்துக்கிடந்தோம். கொசுவத்திச் சுருள்கூட வாங்க முடியவில்லை. பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுக்களைக் கற்பனை செய்துபார்த்தபடியே பொழுதைப் போக்கினோம். காசின் அருமை நிஜமாகவே இப்போதுதான் புரிகிறது'’ என்கிறார் கொரட்டூரைச் சேர்ந்த சத்யா.

`‘வழக்கமாக சூப்பர் மார்க்கெட்டில்தான் எல்லா மளிகைச் சாமான்களும் வாங்குவோம். அங்குதான் கார்டு வாங்கிக்​கொள்வார்கள். சென்ற வாரம் இரண்டு நாட்களும் ஸ்வைப்பிங் மெஷின் இயங்கவில்லை என்பதால், எதையும் வாங்க முடியவில்லை. சூப்பர் மார்க்கெட் வந்த பிறகு ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்காத பழைய அண்ணாச்சி கடைக்குச் சென்றேன். `பரவாயில்லை சார், பிறகு வாங்கிக்கிறேன்!' என்று நான் கேட்ட பொருட்களை பெருந்தன்மையுடன்  பொட்டலம் கட்டிக் கொடுத்தார். நிஜமாகவே இந்தப் புயல் என் கண்ணோட்டத்தை மாற்றி​விட்டது'’ என்கிறார் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மார்ட்டின்.

‘`எங்களிடம் ரெகுலராக வரும் பலரிடம் சென்ற வாரம் பணம் இல்லை. `பரவாயில்லை, பிறகு வாங்கிக்​கொள்கிறேன்' எனச் சொல்லி, டிபன் கொடுத்து அனுப்பினேன்’' என்கிறார் அம்பத்​தூரில் மெஸ் நடத்திவரும் நவநீதம்.

புயல்... பணம்... பதற்றம்... கதறடிக்கும் கேஷ்லெஸ்!

பல மணி நேரம் வரிசையில் நின்று வாங்கிய 2,000 ரூபாய் நோட்டை இறுதி வரை செலவழிக்க முடியாமல், திருப்பித் திருப்பிப் பார்த்தபடி மூன்று தினங்களைக் கழித்திருக்கிறார்கள் பலர். கார்டு மட்டும் அல்ல, புதிய 2,000 ரூபா நோட்டும் பல கடைகளில் ஏற்கப்படவில்லை. சில பெரிய ஹோட்டல்கள்கூட புதிய நோட்டை வாங்க மறுத்திருக்கின்றன. ‘` `120 ரூபாய் பில்லுக்கு 2,000 ரூபாய் நோட்டை நீட்டினா, எப்படி சார் சில்லறை தருவது?' என்று சலிப்புடன் கல்லாப்பெட்டியைத் திறந்து காட்டுகிறார் ஹோட்டல் மானேஜர். நானும் பதிலுக்குக் கோபத்துடன் என் பர்ஸைத் திறந்து காட்டினேன்.இரண்டு பேரும் பதினைந்து நிமிடங்கள் சண்டை போட்டுக் கொண்டோம். கடையில் `நாளை தருகிறேன்' எனச் சொல்லி வெளியேறி​விட்டேன்’' என்கிறார் சதீஷ்.

‘`டீசல் ஜெனரேட்டர் இருந்தால், சில மணி நேரம் வியாபாரத்தை நடத்தலாம். ஆனால், அதற்கு பணம் கொடுக்க முடியாது என்பதால், கடையை மூடிவிட்டேன். வங்கிக்கணக்கில் இருக்கும் என் பணத்தைக்கூட எடுக்க முடியாதபடி இந்த அரசு முடக்கிவிட்டது. இதை `துரோகம்' என்று​தான் சொல்ல முடியும். எங்களைப் போன்ற சாமானியர்களைத்​தான் வரிசையில் நிற்கவைத்துச் சாகடித்து, ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். செய்தித்தாளைப் பிரித்தால் 10 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் என புதிய ரூபாய் நோட்டுகள் சிக்குகின்றன. அவர்கள் எந்த வரிசையில் நின்று இவ்வளவு பணம் எடுத்தார்கள்?’' என்று சீறுகிறார் அம்பத்தூரில் பலசரக்குக் கடை நடத்திவரும் ஏழுமலை.

புயல் ஓய்ந்துவிட்டாலும் இன்னமும் பல இடங்களில் மின் இணைப்பு சீரடையவில்லை. பெரும்​பகுதியினர், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியோ, சென்னைக்கு வெளியே உள்ள உறவினர்களின் இல்லங்களுக்கு தற்காலிக​மாகக் குடிபெயர்ந்தோ, வாழ்வைத் தொடர்கிறார்கள். கிரெடிட், டெபிட் கார்டுகளும் பேடிஎம், வாலட் வசதிகள் அவர்கள் கண் முன்னால் அர்த்தம் இழந்து வருகின்றன. இந்த அனுபவத்தை அவர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிடுவார்கள் என்றோ, கடந்து சென்றுவிடுவார்கள் என்றோ கருத முடியாது. அவர்கள் எழுப்பும் கேள்விகள் எதற்கும் இதுவரை திருப்திகரமான பதில்கள் இல்லை. எனக்கும் என் நியாயமான வங்கி சேமிப்புக்கும் இடையில் அரசு ஏன் ஒரு சுவரை எழுப்ப வேண்டும்? நாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எடுப்​பதற்கு, எதற்காக எங்களை அநாவசியமாக அலைக்​கழிக்க வேண்டும்? `காசு இல்லா பொருளாதாரம்' என்னும் கனவை, நான் ஏன் துரத்திச் செல்ல வேண்டும்? ``உடைந்துகிடக்கும் என் வீட்டைச் சரிசெய்வேனா அல்லது மீண்டும் ஏ.டி.எம் வாசலில் நிற்பேனா?’' இது சென்னைவாசிகள் பலரின் கேள்வி. இப்போதைக்கு எந்தக் கேள்விக்குமே அரசிடம் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

வர்தா புயல், பலருக்கு நியாயமான சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. நார்வேயிலோ ஃபின்லாந்திலோ இருக்கும் கட்டமைப்பு வசதியை நாம் முதலில் இங்கே உருவாக்கியுள்ளோமா? அதற்கான செயல்திட்டம் முதலில் உருவாக்கப்​பட்டுவிட்டதா? வர்தா அல்ல, ஆண்டு​தோறும் பெய்யும் இயல்பான பருவமழைக்கே மின்கம்பிகள் அறுந்து தொங்குகின்றன. இது அல்லவா அடிப்படைப் பிரச்னை? தலைக்கு மேல் தொங்கும் குழப்பமான கம்பி இணைப்புகளை அகற்றிவிட்டு, முதலில் நிலத்தடி கம்பிகளைப் பதிக்கும் வேலையைத்தானே தொடங்க வேண்டும்? அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதைக்கூட உறுதிசெய்ய முடியாத ஓர் அரசு, எப்படி காசு இல்லா பொருளா​தாரத்தை அமைக்கும்? மின்சாரமும் இணையமும் 24 மணி நேரமும் எல்லோருக்கும் கிடைத்த பிறகுதானே இதைப் பற்றி பேசவே ஆரம்பிக்க வேண்டும்!

இந்தியாவில் கிட்டத்தட்ட 90 சதவிகிதப் பரிமாற்றங்கள், காகிதப் பணத்தால்தான் மேற்கொள்ளப்​படுகின்றன. 80 முதல் 90 சதவிகித கிராமங்களில் வங்கியோ, ஏ.டி.எம் இயந்திரமோ இல்லை. 16 சதவிகிதம் பேர் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்​படுத்து​கிறார்கள். அவர்களில் கணிச​மானவர்கள் ஏ.டி.எம் கார்டு பின்னால் பின் நம்பரை எழுதிவைக்கும் பழக்கம் உள்ளவர்கள். இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டு பேடிஎம் பற்றிப் பேசுவது பிழை அல்ல, வன்முறை. ‘`பத்து ரூபாய்க்கு நான்கு இடியாப்பம் விற்றுவருகிறேன். சுமார் பத்து ஆண்டுகளாக இதுதான் என் வேலை. திடீரென ஏன் என் வாழ்வை நான் மாற்றிக்கொள்ள வேண்டும்? ஏன் என் மீது சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ திணிக்கிறீர்கள்? `வருமானத்தைச் சேர்த்துவைத்து, ஒரு வங்கிக்கணக்கைத் தொடங்கலாம்' என நினைத்துக்​கொண்​டிருந்தேன். இனி அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன். உண்டியலே போதும் என முடிவு​செய்து​விட்டேன்’' என்கிறார் மதுரவாயல் பகுதியில் இடியாப்பம் விற்றுவரும் வெங்கடேஷ்.

மோடியின் முயற்சி ஏன் பிழையானது என்பதை, பொருளாதாரம் அறிந்தவர்கள் ஒரு மாத காலமாக விளக்கிக்​கொண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா உருவாவதை விரும்பாதவர்களும், கள்ளப்​பணத்தை ஆதரிப்​பவர்களும், இடதுசாரி​களும்தான் கேஷ்லெஸ் பொருளாதாரத்தைத் தவறு என்கிறார்கள் என்று முழங்கிவந்த மேட்டுக்குடியின் ஒரு பகுதியினரையும் வர்தா கலங்கடித்திருக்கிறது. ‘`முழுக்க மாறுவது சாத்தியம் இல்லை. வாட்டர் கேன், மெழுகுவத்தி, கொசுவத்திச் சுருள் போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் வாங்க மட்டும் பணம் வைத்துக்​கொள்ளலாம் தவறு இல்லை’' என்று மென்று விழுங்குகிறார்கள்.

உண்மையில், செல்லாப் பணம் அறிவிப்பின் நோக்கம் கேஷ்லெஸ் பொருளாதாரத்தை அமைக்க வேண்டும் என்பது அல்ல. கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு, பயங்கரவாதத் தடுப்பு... எனப் பல காரணங்களைச் சொல்லித்தான் திடீரென ஒரு நள்ளிரவில் 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாப் பணமாக மாற்றினார் நரேந்திர மோடி. ஆனால், இந்த நோக்கங்களில் ஒன்றுகூட நிறைவேற​வில்லை என்பது அடுத்தடுத்த தினங்களிலேயே புரிந்துவிட்டது. `தவறான முடிவெடுத்துவிட்டோம், திருத்திக்கொள்கிறோம்' என்று சொல்லி பின்வாங்கும் எண்ணமும் இல்லை. எனவே, தந்திரமாக ஒரு காரியத்தைச் செய்திருக்​கிறார்கள். எடுத்த முடிவு எடுத்ததுதான். ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கான நோக்கம் மாற்றப்பட்டுவிட்டது. ``கள்ளப்பணத்தை ஒழிப்பது அல்ல, காசு இல்லா பொருளாதாரத்தை அமைப்பதே செல்லாப் பண அறிவிப்பின் நோக்கம். இப்போது அதை நோக்கி முன்நகர்வோம்'' என்கிறார் மோடி.

ஏழ்மையை ஒழிக்க முடியாது என்பது தெரிந்ததும் ஏழைகளை அகற்றும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் இந்திரா காந்தி. மோடி கடைப்பிடிக்கும் பாதையும் அதுதான். கள்ளப்பணத்தை ஒழிக்க முடியாததால் நல்ல பணத்தையும் அவர் ஒழித்துக்கட்டியிருக்கிறார். ``நாட்டுக்காக சில சங்கடங்களைத் தாங்கிக்​கொள்ளத்​தான் வேண்டும்’' என்றும் சொல்கிறார்.

ஜான் கென்னடியின் புகழ்பெற்ற வாசகத்தை வர்தா புயலுக்குப் பிறகு மக்கள் சற்றே மாற்றியிருக்கிறார்கள். ‘நாட்டுக்காக நாங்கள் நிறையவே சிரமப்பட்டுக்​கொண்டிருக்கிறோம். எங்கள் சேமிப்பில் இருந்து சிறிது அளவை எடுக்க நாட்டுக்காக வரிசையில் பல மணி நேரம் நிற்கிறோம். நாட்டுக்காக எங்கள் வேலைகளை விட்டுவிட்டு வங்கிகளில் அலைந்து கொண்டிருக்கிறோம். நாட்டுக்காக, கையில் காசு இல்லாமல் திண்டாடிக்​கொண்டிருக்கிறோம். நாட்டுக்காக நாங்கள் இதை எல்லாம் செய்கிறோம். எங்களை, நாடு இன்னும் என்ன செய்யப்போகிறது?’