Published:Updated:

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!

பரிசல் கிருஷ்ணா, படங்கள்: கே.ராஜசேகரன்

`நிறைய நோக்கியா போன்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்' என, aasai@vikatan.com-க்கு ஒற்றை வரி ஆசை வந்தது. மெயில் அனுப்பியவரின் பெயரைப் பார்த்த பிறகுதான் ஆசைக்கான காரணம் புரிந்தது.

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!

மெயில் அனுப்பிய சுட்டியின் பெயர் மே.ம.நோக்யா. சென்னை கோட்டூரில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி. அலைபேசி எண்ணில் அழைத்து, ``உனக்கு ஏன் இந்தப் பேர் வெச்சாங்க?'' என்று ஆர்வமாகக் கேட்டால், ``மொதல்ல போன் கலெக்ட் பண்ணிட்டுக் கூப்பிடுங்க அங்கிள். நேர்ல சொல்றேன்'' என்றாள் துடுக்காக.

சவாலாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினோம். ``N-க்குப் பதிலா M போட்டு சைனா செட் வேணா இருக்கு. தரவா?'' என்று கலாய்த்தார்கள் சென்னையின் எலெக்ட்ரானிக்ஸ் தெருவான ரிச்சி ஸ்ட்ரீட்டில். வானத்துக்குக் கீழே இருக்கும் அனைத்தும் கிடைக்கும் ரங்கநாதன் தெரு, சத்யாபஜாரில் ``பத்து பதினைஞ்சு வேணா தேத்தலாம்... நோக்கியா எல்லாம் ரொம்பப் பழசு பாஸு'' என்ற கமென்ட் வந்தது. ``பர்மாபஜார் பாபுவைப் பார்த்தீங்கன்னா கிடைக்கலாம்'' என்று டிப்ஸ் கொடுத்தார் ஒருவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பர்மாபஜார் போய் பாபு என்று விசாரித்தால், ரெய்டுக்கு வந்த போலீஸ் கணக்காகப் பார்த்தார்கள். விஷயத்தைச் சொன்னதும், “நிறைய போன்... அதுவும் நோக்கியாவே வேணும்னா, லுத்துஃபுர் பாய்தான் சரியான ஆளு. டி.டி.கே ரோட்ல அவர் கடைக்குப் போனா அள்ளிடலாம்” என்று டேக் டைவர்ஷன் போட்டு அனுப்பினார்கள். ஒருகாலத்தில் கோலோச்சி, மார்க்கெட் இழந்த நடிகையைத் தேடுவதுபோல இருந்தது அந்தப் பயணம்.


“லுத்துஃபுர் ரஹ்மான் என் பேர்” என்று முகம் முழுக்கப் புன்னகையுடன் வரவேற்றார் பாய். ஆனந்த விகடன் என்றதும் முகம் இன்னமும் மலர்ந்தது. நிறையப் புத்தக வாசிப்பு உடையவர் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. விஷயத்தைச் சொன்னதும், “நாளைக்கே வாங்க. கடையில் கொஞ்சம் இருக்கு. என் பெர்சனல் கலெக்‌ஷன் வீட்டுல இருக்கு. அதையும் எடுத்துட்டு வர்றேன்” என்றார்.

நோக்கியா அலைபேசிகள் கிடைக்கும் என்று உறுதியானதும் நோக்யாவை அழைத்து விவரத்தைச் சொன்னோம்.

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!

வெள்ளிக்கிழமை, பெற்றோர் மற்றும் தம்பியுடன் நமது அலுவலகம் வந்தாள் நோக்யா. “நான் நிறைய முறை இங்கே வந்திருக்கிறேன். 30 வருடங்களாக விகடன் வாசகன் நான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நோக்யாவின் தந்தை மேதாவி. ``நிறைய கடிதங்கள், துணுக்குகள், ஜோக்ஸ் எல்லாம் எழுதிப் போட்டிருக்கேன். 12 கிராம் தங்கம் வரைக்கும் பரிசா வாங்கியிருக்கேன்” என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார் மேதாவி. நோக்யாவின் அம்மா பெயர் மனோரஞ்சிதம்.

எல்.கே.ஜி படிக்கும் தம்பி அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டே இருந்தான்.

“தம்பி பேர் என்ன சாம்சங்கா?” என்று கேட்டதும், “எப்டி அங்கிள் இவ்ளோ கரெக்டா கேட்கிறீங்க?” என்று அதிர்ச்சியடையவைத்தாள் நோக்யா.

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!“நிஜம்மா அதான் பேரா?” என்றதும், “இல்லை அங்கிள். அவன் பேரு அதிஷ்யன். ஆனா, எல்லாரும் `சாம்சங்'னுதான் கூப்பிடுவாங்க” என்றாள்.

“உங்க பேரு மேதாவிதானா... இல்லை அதுவும் புனைப்பெயரா?” என்று கேட்டால், “என் பேரு மேதாவிதான். ஆனா, நான் மேதாவியான்னு தெரியலை” என்று காமெடியாகவே ஆரம்பித்தார்.

“எனக்கு பொண்ணு பிறந்தப்ப நான் கோட்டூர்ல ஆபீஸ்ல இருந்தேன். மனைவி பெரம்பூர் மருத்துவமனையில் இருந்தாங்க. என் நண்பர் ஒருத்தர் நியூமராலஜி பார்த்து, ‘முதல் எழுத்து `நா, நீ, நோ'னு ஆரம்பிக்கணும், ‘நோ’ல வெச்சா ரொம்ப நல்லது’னு சொன்னார். அப்ப நோக்கியா போன் ரொம்பப் பிரபலம். டக்னு `நோக்யா'னு வெச்சுடலாம்னு சொன்னேன். அவரு சிரிச்சுட்டே போயிட்டார். பிறகு, அவர் மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தப்ப, என் மனைவியும் அதே பேரைச் சொல்லியிருக்காங்க. என் தங்கச்சி கொரட்டூர்ல இருந்தாங்க. அவரும் அதே பேரைச் சொல்லவும், ‘மூணு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்காமலே சொல்லிவெச்ச மாதிரி ஒரே பேரைச் சொல்றீங்க. அந்தப் பேர்ல ஏதோ வைபரேஷன் இருக்கு. அதையே வெச்சுடுங்க’னுட்டார்.”

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!

‘`போன்லயும் வைபரேஷன். பேர்லயும் வைபரேஷனா? சரி.. பையன் பேருக்கு ஏதாவது கதை வெச்சிருப்பீங்களே?”

``பையனுக்கு பேர் வெச்சதுல விகடனுக்கும் பங்கு உண்டு. அவன் பிறந்தபோது வெளிவந்த விகடன்ல ‘அதிஷ்யா’ங்கிற பேர்ல ஒருத்தர் கவிதை எழுதியிருந்தார். டக்னு `அதிஷ்யன்'னு வைக்கலாம்னு தோணிச்சு. மனைவிகிட்ட சொன்னதும் அவங்களுக்கும் பிடிச்சது. ஓ.கே பண்ணிட்டோம்'' என்றார் மேதாவி.

ஸ்டுடியோவில் டேபிள் முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நோக்கியா போன்களைப் பார்த்ததும், விழி விரிய ஆச்சர்யத்தின் எல்லைக்கே போனாள் நோக்யா. “அப்பா... இத்தனை மாடல் இருக்காப்பா?!” என்று சத்தமாகவே கேட்டாள். ஒவ்வொரு போனாக எடுத்து, ‘`இதுல கேமரா எங்க இருக்கு... இதுல டச் இல்லையா?” என்று ஆராய ஆரம்பித்தாள்.

“இந்தப்  பேர்  வெச்சதுக்காகக்  கோவப்பட்டிருக்கியா நோக்யா?” என்று கேட்டோம்.

“இல்லை அங்கிள். நான் ஸ்கூல்ல சேர்ந்தப்ப, வெளிநாட்ல இருந்து யாரோ சேரப்போறாங்கனு வகுப்புல எல்லாரும் வெளியே வந்து நின்னுட்டிருந்தாங்க. இப்ப படிக்கிற ஸ்கூல்ல, என்னை இன்டர்வியூ பண்றதுக்கு ஆறு பேர் உட்கார்ந்திருந்தாங்க அங்கிள். நான் போனதும்

‘நீ ஏற்கெனவே தேர்வாகிட்ட. யார்னு பார்க்கத்தான் வரச் சொன்னோம்'னாங்க. ஏதாவது ஹாஸ்பிட்டல், ஸ்பெஷல் க்ளாஸ்னு போனா, என் பேரைக் கூப்பிடுறப்ப எல்லாரும் திரும்பிப் பார்ப்பாங்க. சந்தோஷமா இருக்கும்.”

“அம்மா, இங்கே பாருங்க... சிந்தால் போனும் இருக்கு” என்றாள்.

``அது என்ன சிந்தால் போன்?'' என்று கேட்டோம்.

ஆசை - நோக்கியாவை நோக்யா நோக்கினாள்!

“எங்க அப்பா இந்த போன் வெச்சிருந்தாரு. அது தேஞ்சுத் தேஞ்சு சிந்தால் சோப்பு தேஞ்சா எப்படி இருக்குமோ, அப்படி ஆகிடுச்சு. இதோ... இதுகூட அப்படித்தான் இருக்கு” என்றாள்.

வேறு சில நோக்கியா போன்களையும் எடுத்து அடையாளம் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘`இது பெரியம்மா போன்... இது அத்தை போன்’' என்று எல்லாவற்றையும் பிரித்துக்கொண்டிருந்தாள்.

“ஐ... இந்த போன் என்னம்மா லேப்டாப் மாதிரி இருக்கு!” என்று ஆச்சர்யப்பட்டாள்.

“வீட்டுல பெரியவங்க இந்தப் பேரை மாத்தச் சொன்னாலும் சொல்லுவாங்கன்னு, அவ ஸ்கூல் சேர்ற வரை பிறப்புச் சான்றிதழே வாங்கலை. இவங்க வளர்ந்த பிறகு இந்தப் பேர் பிடிக்கலைன்னா, எப்ப வேணும்னாலும் மாத்திக்கலாம்னு சொல்லிருக்கோம்” என்றார் அம்மா மனோரஞ்சிதம்.

“அப்பாகிட்ட என் ஆசையைச் சொன்னதும், என்னையே மெயில் அனுப்பச் சொன்னார். ஆனா, இவ்ளோ சீக்கிரம் கூப்பிட்டு சர்ப்ரைஸ் குடுப்பீங்கன்னு எதிர்பார்க்கலை. வழக்கமா என் பேர் வெச்ச கதையைக் கேட்டா, இனிமே என் பேர்னாலதான் விகடன் தாத்தா கூப்பிட்டார்னு இதையும் சொல்லுவேன்” என்று சிரித்தார் நோக்யா.

வாசகர்களே... இதுபோல ரசனையான, நெகிழ்ச்சியான, ஜாலியான, காமெடியான ஆசைகளை எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழுவினரின் பரிசீலனையில் தேர்வாகும் ஆசைகளை, விகடன் நிறைவேற்றித் தருவான். உங்கள் ஆசைகளை அனுப்பும்போது அலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி...

ஆசை

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

இ-மெயில்: aasai@vikatan.com