Published:Updated:

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!
பிரீமியம் ஸ்டோரி
`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

Published:Updated:
`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!
பிரீமியம் ஸ்டோரி
`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

கூழாங்கற்கள் குளிக்கும் சின்னச்சின்ன குளங்களுடன் குட்டி ஒயிட் ஹவுஸ்!

கோடம்பாக்கத்தின் வாசலில் அழகும் ரசனையும் மிதக்கிற புதிய அலுவலகத்தில், இந்திய சினிமாவின் டாப் 10 இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் வரவேற்கிறார்... ‘ஹேப்பி பொங்கல்!’

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

சன்னமாக சங்கீதம் பாடும் செல்போனைச் சற்றே சைலன்ட் மோடில் போட்டுவிட்டு நிமிர்கிறார் ஷங்கர். ஒரு பக்கம் இந்த ஆண்டின் பிரமாண்டமான சினிமாவான ‘சிவாஜி’யின் இயக்குநர், இன்னொரு பக்கம் புதிய தலைமுறைக்கான எளிமையான அழகியலுடன் தயாராகும் மிக முக்கியமான மூன்று படங்களின் தயாரிப்பாளர்... பண்டிகை தினத்திலும் பரபரப்பாக இருக்கிறது அலுவலகம்!

கண்ணாடிச் சுவர்களுடன் மாடியில் இருக்கிற ஷங்கரின் பிரத்யேக அறை இன்னும் ஸ்பெஷல். மெடிட்டேஷன் ஹால் மாதிரி இருக்கிற அறையில் ஆரம்பிக்கிறது பேட்டி.

‘`ஷங்கர் என்றாலே, அதிரடி, ஆக்‌ஷன், பிரமாண்டம், ஃபேன்டஸி என ஒரு இமேஜ் உண்டு. ஆனால், உங்களின் தயாரிப்பில் வந்த ‘காதல்’... ஷங்கரின் பேனரில் இப்படி ஒரு சிம்பிளான படமா என இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அடிப்படையில் உங்க டேஸ்ட் என்ன?”

“உண்மையைச் சொல்லணும்னா, மனசைத் தொடத்தான் எனக்கும் ஆசை. யதார்த்தமா, வாழ்க்கைக்கு ரொம்ப நெருக்கமா ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்ற படங்கள் பண்ணத்தான் ஆசைப்பட்டேன். ‘அழகிய குயிலே’னு என் முதல் கதையுடன் கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினேன். யாருமே அதை வரவேற்கலை. ‘ஆக்‌ஷன் படம்தான் இப்ப ட்ரெண்ட்’னு சொல்லி, ஒரு போராட்டத்துக்குப் பின் ‘ஜென்டில்மேன்’ கதைதான் ஓ.கே ஆனது. அது ஹிட்டாக, அதுதான் டிராக்னு ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’னு ஓடினேன். எல்லா படங்களும் தெளிவான என்டர்டெயின்மென்ட்; பெரிய பிசினஸ்; சூப்பர் ஹிட் படங்கள். ஆனா, என் மனசுக்குள் ஒரு ஏக்கம் இருந்துட்டே இருந்தது. ‘ஜென்டில்மேன்’ கதைக்குப் பதில் ‘அழகிய குயிலே’ படமாகியிருந்தால், என் பாதையே வேற மாதிரி இருந்திருக்கும்.”

``மறுபடி, ‘அழகிய குயிலே’ பண்ணணும்னு தோணவே இல்லையா?”

“தோணுச்சு! நானே சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு ‘அழகிய குயிலே’ ஆரம்பிக்க முடிவு செய்தேன். என் நண்பர்களிடம் சொன்னப்போ, ‘நல்ல யோசனைதான். முதலில் ஒரு பெரிய படம் செய்து, உன் கம்பெனியை ஸ்ட்ராங்கா நிறுத்து. அப்புறம் குயில், மயில் படம் எல்லாம் எடுக்கலாம்’னு சொன்னாங்க, அப்படி எடுத்ததுதான் ‘முதல்வன்’.

சரி, அடுத்த படமாவாவது இதை ஆரம்பிக்கலாம்னு நினைச்சா, ‘உனக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு. ஒரு ட்ரெண்ட் செட்டாகி இருக்கு. ‘முதல்வன்’ முடிச்சேன்னா, அடுத்து அதைவிடப் பெரிய படமா யோசி. இந்தியில் படம் எடு, இங்கிலீஷ் படம் எடு’னு அட்வைஸ் பண்ணினாங்க. நண்பர்களா எனக்கு நல்லதுதான் அவங்க சொல்றாங்க. ஆனா, என் மனசில் இருந்த சினிமாவை நான் என்ன பண்றது? என்னைப்போல எத்தனையோ பேர் இருக்காங்க. எனக்காவது ஒரு கதவு திறந்தது. ஆனா, இங்கே க்யூவில் காத்திருக்கிறவங்கதானே நிறைய. அப்படி எளிமையான யதார்த்தமான சினிமாவைப் பண்ண ஆசைப்படுகிற திறமையான இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பைத் தரலாமேனு நினைச்சேன். முதல் முயற்சிதான் ‘காதல்’.”

“புதுசா சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வர்றவங்களுக்கு நம்பிக்கை தந்த படம் `காதல்'. அந்த வரவேற்பு எப்படி இருந்தது?”

“நான் நம்பின ஒரு விஷயம் நல்லபடியா வந்ததில் முதல் சந்தோஷம். என் சாய்ஸ், பப்ளிக் டேஸ்ட்டோடு சரியா இருக்கு என்பது மிகப்பெரிய சந்தோஷம். குறிப்பா ஒரு விஷயம்... நான் ஒரு படம் தயாரிச்சு, அது சரியாப் போகலைன்னா ஏற்படுற பணநஷ்டத்தைவிட, மனக்கஷ்டங்கள் அதிகமாகி, அது என் மற்ற வேலைகளைப் பாதிச்சுடக் கூடாது என்பதில் தெளிவா இருந்தேன்.

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

‘காதல்’ படத்தைத் தயாரிச்சது, இந்த ஆபீஸ் கட்டுறதுக்காக நான் சேர்த்துவெச்சிருந்த பணம். சரி, பணம் திரும்பிவந்தால் ஆபீஸ் கட்டிக்கலாம்னு நினைச்சேன். இதோ, இந்த ஆபீஸ் உருவானது அப்படித்தான்.”

`‘உங்களின் மூன்று கண்டுபிடிப்புகளையும் சொல்லுங்களேன்...”

“முதலில் பாலாஜி... சின்ன ஈகோகூட இல்லாத மனுஷன். என்னிடம் வேலை பார்த்தார். அப்புறம் ‘சாமுராய்’னு படம் பண்ணினார். டைரக்டரான பிறகும் எப்போ நேரம் கிடைச்சாலும், ‘இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா, நானும் வர்றேன்’னு கிளம்பி வந்து, கிளாப் அடிக்கிறதில் ஆரம்பிச்சு, கூட்டத்தைச் சரிபண்றது வரை ஓடியாடி வேலைபார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி, என் நல்ல நண்பர். வழக்கமான சந்திப்புகளில் பல விஷயங்களைப் பகிர்ந்துக்கிற மாதிரி, ‘காதல்’ கதையைச் சொன்னார். எங்கு எல்லாம் போனேன், யாருக்கு எல்லாம் கதை சொன்னேன்னு எல்லாம் சொல்வார். திடீர்னு ஒருநாள் ‘ரெண்டு கோடி ரூபா கொடுங்க. ரெண்டே மாசத்தில் படத்தை எடுத்துடுறேன்’னார். சத்தியமா அந்த நிமிடம் வரை எனக்கு அந்த யோசனையே இல்லை. ‘இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்கும். ஜெயிக்கலேன்னாலும் கவலை இல்லை. தரமான படத்தைக் கொடுத்த நிம்மதி இருக்கும்’னுதான் சம்மதிச்சேன்.

‘காதல்’ கதை தமிழ் சினிமாவுக்குப் பழசுதான். ஆனால், பாலாஜி அதுக்கு ஸ்க்ரீன் ப்ளே பண்ணியவிதமும் அதன் எளிமையும் அதில் உலவிய மனிதர்களும், இது கண் முன்னால் ஒரு நிஜம்னு நம்மை நம்பவெச்சதும்தான் சக்சஸ்.”

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

‘`ஒப்பிட்டுப் பார்க்க இருக்கிற ஓர் உதாரணம், ராம்கோபால் வர்மா. தன் உதவியாளர்களை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கிறார். கதைக் களங்கள் பெரும்பாலும் திகில் கதைகள், நிழல் உலகம் என்பதைச் சுற்றியே இருக்கும். ஆனால், நீங்கள் தயாரிக்கிற மூன்று படங்களுமே வேற வேற கலர்களில் இருக்கு. ஒரு கதையை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”

“என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான்.நான் ‘கிங்காங்’ பார்ப்பேன். ‘லகான்’ பார்ப்பேன். ‘சந்திரமுகி’யும் பிடிக்கும். ‘ஆட்டோகிராஃப்’பும் பிடிக்கும். ஏன்னா, நமக்கு வெரைட்டி வேணும். தீபாவளிக்கு ஒரு இடத்தில் டிரெஸ் வாங்கினால், பொங்கலுக்குப் புதுசா திறந்திருக்கிற இன்னொரு கடைக்குப் போவோம்தானே? இந்த மாசம் இந்த ஹோட்டலில் சாப்பிட்டோம்; அடுத்து வேற டேஸ்ட் தேடி வேற ஹோட்டல் பார்ப்போம் இல்லையா, அதே மாதிரிதான்.

‘காதல்’ படத்துக்குப் பிறகு இப்போ பாலாஜி சக்திவேல் அடுத்த படத்துக்குத் தயாராகிட்டி ருக்கார். ஸ்டெப் பை ஸ்டெப்பா கதை சொல்லிட்டிருக்கார். இன்னும் டைட்டில் மட்டும் முடிவுபண்ணலை. ஆனா, அது ‘காதல்’ படத்தைவிட சிறப்பா, இன்னும் மரியாதையா இருக்கும்.

‘வெயில்’ பண்ற வசந்த பாலன், என் சின்ஸியர் அசிஸ்டென்ட். ‘ஜென்டில்மேன்’ தொடங்கி ‘முதல்வன்’ ஷூட்டிங் போகிற வரைக்கும் என் கூடவே இருந்தார். டிசிப்ளினான பையன். கதை, கவிதை, சினிமானே எப்பவும் யோசிக்கிற ஆள். தனியாப் போய் ‘ஆல்பம்’னு ஒரு படம் பண்ணி, எனக்குப் போட்டுக் காட்டினார். அங்கங்கே மனசைத் தொட்ட படம்... ஆனா, மொத்தமா பார்க்கும்போது, ஏதோ ஒண்ணு மிஸ் ஆன ஃபீலிங். அதுக்கு அப்புறம் அவரை நான் சந்திக்கவே இல்லை. என் வேலைகளில் பிஸியாகிட்டேன்.

நிறையத் தடவை கதை சொல்லணும்னு கேட்டுட்டிருந்தார். ‘நம்மகிட்டே வேலை பார்த்த பையனாச்சே, உயிரை எடுக்கிறான்... கேட்டுத் தொலைப்போம்’னுதான் ஒருநாள் கூப்பிட்டுக் கதை கேட்டேன். வசந்த பாலன் கதை சொல்ல ஆரம்பிக்க... பொலபொலனு அழுதுட்டேன். என்னாலேயே கண்ணீரை அடக்க முடியலை. அப்படி ஓர் அழுத்தமான கதை, ‘வெயில்’.

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

வாழ்க்கையைப் படிச்சிருக்கார் வசந்த பாலன். மதுரைப் பக்கம் விருதுநகர் வட்டாரத்தில் நடக்கிற ஒரு கதை. ‘இவன்கிட்டே இவ்வளவு விஷயம் இருக்கா?’னு எனக்கு ஆச்சர்யம்... அதிர்ச்சி. அப்பவே ‘ஓ.கே, நீ இதைப் படமா பண்ணு’னு சொல்லிட்டேன். பரத், பசுபதி நடிக்கிற ‘வெயில்’... ரொம்ப ஈரமான படம். ஒவ்வொரு மனுஷனும் தனக்குள்ளே எவ்வளவு விஷயங்களைப் பொத்திப் பொத்தி வெச்சுப் புழுங்குறான். அந்தப் புழுக்கம் எவ்வளவு பெரிய வெக்கையா இருக்கும். அப்படி அழுத்தமான உணர்வுகளை, விஷுவலைஸ் பண்ற படம். ஆழமான, உணர்வுபூர்வமான படம்.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’னு ஒரு சிரிப்பு ராஜா கதையை இயக்குவது சிம்புதேவன். ஆனந்த விகடனில் சில ஜோக்ஸ் பளிச்சுனு பிடிக்கும். யார் எழுதினதுனு பார்ப்பேன். சில கார்ட்டூன்ஸ் அழகா இருக்கும். யார் போட்டதுனு பார்ப்பேன். அப்படி நான் அடிக்கடி கவனிச்ச பெயர் சிம்பு.

பத்திரிகையில் இருந்து சினிமாவுக்கு வந்து, சேரனிடம் வேலை பழகின சிம்புவின் அப்ரோச் நேர்மையா இருக்கும். கரெக்ட்டா ஒருத்தரை எப்படி ரீச் பண்ணணும்னு தெரிஞ்சவர். ஒருநாள் என்னிடம் எமோஷனலா ஒரு கதை சொன்னார். ‘உங்ககிட்டே நகைச்சுவையான ஒரு கதையை எதிர்பார்த்தேன்’னு சொன்னேன். சிம்புவின் கண்களில் பளிச்னு ஒரு பல்பு எரிஞ்சது. ‘நீங்க விருப்பப்பட்டீங்கன்னா, உடனே ரெடி பண்ணிட்டு வர்றேன்’னு போய், ஜாலியான ஸ்க்ரிப்ட்டுடன் வந்தார். பல விஷயங்களை ஆராய்ச்சி பண்ணி, ரெஃபரென்ஸ்களுடன் அவர் அதைத் தயார் செய்திருந்தது நேர்த்தியா இருந்தது. அந்த பெர்ஃபெக்‌ஷன்தான் சிம்புவின் அடையாளம்.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம், தமிழ் சினிமாவுக்கு ஓர் அழகான ரிலீஃபா அமையும்னு நம்பறேன். காதல், ஆக்‌ஷன், ஃபேமிலினு வர்ற படங்களுக்கு நடுவே வித்தியாசமான சரித்திரக் கதை. அதே சமயம், சரியான காமெடிப் படம். ராஜா, ராணி, அரண்மனை, அந்தப்புரம், ராஜகுரு, எதிரி நாட்டு ராஜா, போர்னு தியேட்டருக்குள் வந்தீங்கன்னா, விஷுவலே வேற மாதிரி இருக்கும். இம்சை அரசனா, அந்த விநோத மீசையோடு வடிவேலு வந்து நிற்கிற ஸ்டில்லைப் பார்த்தாலே, சிரிப்பு ஆரம்பிச்சிரும்.”

‘`எப்படிப்பட்ட படங்களை ‘S பிக்சர்ஸ்’ நிறுவனத்தில் தயாரிக்க விரும்புகிறீர்கள்?”

“தரமான சினிமா எடுக்க விரும்புகிற திறமையான இளைஞர்களுக்கு என் வாசல் திறந்திருக்கும். ‘இவர் ஹீரோ, இவங்க ஹீரோயின், இப்படி ஒரு காமெடி டிராக், செமத்தியான மியூஸிக்’னு காம்பினேஷன் கணக்கு போட்டு வியாபாரத்தை முன்னாடி வைக்காமல், கதையை நம்பி வர்றவங்களுக்கு இது நல்ல இடமாக இருக்கும்.

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!எனக்கு எல்லாம் தருகிற சினிமாவுக்கு என்னாலான ஆரோக்கியமான பங்களிப்பாக என் நிறுவனத்தின் படங்கள் இருக்கும். புதிய தலைமுறைக்கான தரமான கதைகள் வேணும். கதை என் மனசுக்குப் பிடிக்கலைன்னா, ரெண்டு மூணு வருஷம் படமே எடுக்காமலும் இருப்பேன். நல்ல கதைகள் கிடைத்தால், ஒரே நேரத்தில் பத்து படங்கள் தயாரிக்கவும் நான் தயார்.”

“யாரோ ஒருவர் சொல்ற கதையை மட்டுமே நம்பி சில கோடி ரூபாய்களை முதலீடு செய்யவேண்டியிருக்கிற ரிஸ்க் சினிமாவில் அதிகம்னு நினைக்கிறீங்களா?”

“சினிமாவில் என்ன முக்கியம்னா... சிலரிடம் நல்ல கதை இருக்கும். ஆனா, அதை சினிமாவாக்க அது மட்டுமே போதாது. ஒரு டைரக்டர்னா, சினிமா என்ற சயின்ஸ் புரியணும்; சினிமா என்ற பிசினஸ் தெரியணும்; சினிமா என்ற நிர்வாகம் பழகணும்; இப்படி ஒரு பாட்டு வேணும்னு சொல்லி வாங்கத் தெரியணும்; இந்த லென்ஸ் போடுங்கனு கேமராமேனிடம் கேட்கணும்னா, அது முதலில் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். ஆர்ட் டைரக்டரிடமும் ஒரு கரெக்‌ஷன் சொல்லும்போது, ‘ஏன்?’னு அவர் கேட்டா, அதுக்குப் பதில் சொல்ற அளவுக்காவது பழகி இருக்கணும்.

ஏன்னா, ‘ஸ்பாட்டில் பார்த்துக்கலாம்’னு ஷூட்டிங் போய் நின்னோம்னா, 200 பேர் வந்து ஸ்பாட்டில் உங்க முகத்தைப் பார்த்து நிப்பாங்க. அவங்களை மேய்க்கத் தெரியணும்னா, லகான் உங்க கையில் இருக்கணும். இல்லைன்னா குதிரை உங்களைக் கீழே தள்ளிட்டுப் போயிடும். உண்மையா சொல்லணும்னா... இது ‘கும்பிபோஜனம்’ மாதிரி ரொம்ப ரொம்ப வலியான விஷயம். அவ்வளவு பெயின்ஃபுல்லா இருக்கும்.”

“ரஜினி ஒவ்வொரு புதிய படம் ஆரம்பிக்கும்போதும், ‘ஷங்கர்தான் டைரக்டர்’ எனப் பேச்சு வரும். ஷங்கர் எப்போது படம் தொடங்கினாலும் `ரஜினிதானே ஹீரோ?’ என்ற கேள்வி எழும். ஆறேழு வருடங்களாக நீடித்த சஸ்பென்ஸ் முடிந்து, இப்போது நிஜமாகவே ‘மேஜிக்’ தொடங்கிவிட்டது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்?''

“ம்... ‘சிவாஜி’ எனக்கே ஓர் இன்ப அதிர்ச்சிதான். எல்லோரும் எதிர்பார்த்தபோது எல்லாம் நடக்காத அதிசயம், நானே எதிர்பார்க்காதபோது எனக்குக் கிடைச்சிருக்கு. அழகான ரஜினி... அட்டகாசமான ரஜினி படம். இப்போதான் தொடங்கியிருக்கோம்.”

`உழைப்பாளி... படைப்பாளி... முதலாளி’ - இதயம் திறக்கிறார் இயக்குநர் ஷங்கர்!

“எதிர்பார்ப்புகள் எகிற எகிற பொறுப்புகளும் கூடுமே, ‘சிவாஜி’க்கு எப்படித் தயாராகிறீர்கள்?”

“ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு ஃபிரேமும் இப்படி வரணும்னு நினைச்சா, அதுக்கான உழைப்பைக் கொடுத்தாகணும். இது ஒவ்வொரு நாளும் பீச் மணலில் குண்டூசி தேடுகிற மாதிரி சிரமம். அதுவும் ‘சிவாஜி’... ஒரே நேரத்தில் லாங் ஜம்ப் - ஹை ஜம்ப் ரெண்டிலும் கலந்துக்கிற மாதிரி.”

“ஆமா, ‘சிவாஜி’யில் ஐஸ்வர்யா ராய் இருக்காங்களா... இல்லையா?”

“இல்லை.”

“அப்பாடா, தமிழ்நாடு இனி நிம்மதியா அடுத்த வேலையைக் கவனிக்கும். சரி, இதுதான் ‘சிவாஜி’யின் கதை எனப் பத்திரிகைகள் எழுதுவதில் எத்தனை சதவிகிதம் உண்மை?”

“ஒரு படத்தின் கதை என்ன என்பது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. ஆனால், அது படமாகி வர ஒரு வருஷம் பிடிக்கும் என்பதால், அந்த ஃப்ரெஷ்னெஸ் இருக்கணும்னுதான் பாதுகாக்கிறோம். பத்திரிகைகளில் அவங்கவங்க மனதில் இருக்கிற கதையை அவங்கவங்க எழுதுறாங்க. என் மனதில் இருக்கிற கதை ‘சிவாஜி’யாகத் திரையில் வரும். அப்போ உண்மை எல்லோருக்கும் புரியும். உண்மை என்பது எப்போதும் ஒன்றுதானே இருக்க முடியும்’' - ஷார்ப்பாகச் சிரிக்கிறார் ஷங்கர்!

- ரா.கண்ணன், பா.ராஜநாராயணன் படங்கள்: என்.விவேக்


(29.1.2006 இதழில் இருந்து...)