Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

ம.செந்தமிழன், ஓவியம்: ஹாசிப்கான், படம்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

ம.செந்தமிழன், ஓவியம்: ஹாசிப்கான், படம்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

சான் திருமூலர் உரைத்துச் சென்ற மந்திரங்களில் முதன்மையானது, ‘அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது’ என்பது. இந்த உலகில் எவை எல்லாம் உள்ளனவோ, அவை எல்லாம் உடலிலும் உள்ளன. பூமியில் முக்கால் பங்கு நீர் உள்ளது; நம் உடலிலும் முக்கால் பங்கு நீர் உள்ளது. உப்புநீர்தான் பூமியில் அதிகம்; உடலிலும் உப்புநீர்தான் அதிகம். பூமியில் உள்ள நச்சுக்காற்றை, உப்புநீர்தான் அதிக அளவில் தூய்மையாக்குகிறது; நம் உடலிலும் உப்புநீர்தான் நச்சுக்களை அகற்றுகிறது. உப்புநீர் பூமியில் மிகுந்தால், உயிரினங்களின் வாழ்க்கை சிதையும்; உடலிலும் உப்புநீர் மிகுந்தால் உயிர் சிதையும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூமியில், காற்று என்ன செய்கிறது எனப் பாருங்கள். காற்று என்பது, ஆற்றல் கடத்தும் பூதம். ஓர் இடத்தில் உள்ள ஆற்றலை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் காற்று. புயல் எனும் காற்றுதான் மேகத்திரளை இழுத்துவருகிறது. தென்றல் எனும் காற்றுதான் மலைக்காடுகளின் குளிர்ச்சியை அழைத்துவருகிறது. காற்றின் செயல்பாடுகள் வழியாகத்தான் மழை பொழிகிறது. உடலில், காற்றுதான் உயிராற்றலை எல்லா செல்களுக்கும் அளிக்கிறது. காற்று மண்டலம் நன்றாக இயங்கும் உடலின் எல்லா செல்களும் புத்துணர்ச்சியுடன் வாழ்கின்றன. காற்று மண்டலம் சீர்கெட்டால் நுரையீரல் பாதிப்படைகிறது. பின்னர் ஒவ்வோர் உறுப்பாக பாதிப்பு நீள்கிறது.

பூமியில் வெப்பம் மிகுதியாக இருக்கும் இடங்களில், உயிர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. பாலை நிலங்களைப் பாருங்கள். அங்கு எல்லாம் உயிர்களின் எண்ணிக்கையும் வகைகளும் குறைவு. வெப்பம் மிகவும் குறைவாக உள்ள இடங்களிலும் உயிரினங்கள் மிகக் குறைந்த அளவில்தான் வாழ்கின்றன. பூமியின் வட, தென் முனைகளில் உள்ள பனிக்காடுகளைப் பாருங்கள். இமயம் போன்ற மலைப்பகுதிகளைப் பாருங்கள். இங்கு எல்லாம் உயிரினங்களின் வகைகளும் எண்ணிக்கையும் குறைவே! குளிர் நாடுகளில் மக்கள்தொகையும் குறைவுதான்.

மிதவெப்பம் நிலவும் ஆசியப் பகுதிகள், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், தென் அமெரிக்கப் பகுதிகளில் கணக்கில் அடங்காத உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியில் வாழும் உயிரினங்களில் பெரும்பாலானவை இவ்வாறான மிதவெப்ப மண்டலங்களில்தான் இருக்கின்றன.

உடலிலும் இதே நிலைதான். வெப்பம் அதிகமான உடலில், செல்கள் உயிர்வாழ்வது இல்லை. வெப்பம் மிகவும் குறைந்த உடல்களில் செல்கள் உறைந்துவிடுகின்றன. மிதவெப்பம் உள்ள உடல்தான் எப்போதும் துடிப்புடன் இயங்குகிறது. உடலின் உள்ளுறுப்பு களான கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரண்டையும் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்ப்போம்.

கல்லீரல், குளிர்ச்சியாக இருக்க வேண்டிய உறுப்பு. இது அதிகமாக வெப்பமடைந்தால் காமாலை, பித்தம், சிறு கட்டிகள், வீக்கம் போன்ற நோய்கள் தாக்கும். கல்லீரல் அதிகமான குளிர்ச்சியை அடைந்தால், உடலில் கொழுப்புத் தேக்கம் உருவாகும். ஏனெனில், கல்லீரலில் சுரக்கும் மிதவெப்பச் சுரப்புகள் உடலின் கொழுப்புக் களைச் செரிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

சிறுநீரகம், மிதவெப்பத்தில் இருக்கவேண்டிய உறுப்பு. இது அதிக வெப்பமடைந்தால் சிறுநீரக மண்டலமே பாதிப்படையும். குளிர்ந்தால் சிறுநீர்த் தேக்கம், கட்டிகள் போன்ற தொல்லைகள் உருவாகி, நாளடைவில் நச்சு வெளியேற்றும் பணியில் முடக்கம் உருவாகிவிடும்.

பூமி சிறப்பாக இயங்க வேண்டுமானால், படைப்பின் விதிகளில் சீரழிவு உருவாகக் கூடாது. வட, தென் முனைகளில் உருவாகி யுள்ள கூடுதலான வெப்பம்தான் இப்போது பூமி எங்கும் உயிர்ச் சூழலைச் சிதைத்துவருகிறது. `புவி வெப்பமயமாதல்’ (Global Warming) என, இந்தச் சூழலை அழைக்கிறது நவீன சமூகம். இதே நிலைதான் உடல்களிலும் உருவாகிவருகிறது. பூமியில் ஒரு மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றம் உடலிலும் ஏற்பட்டே தீரும். ஏனெனில், நாம் அனைவரும் பூமி எனும் பெரிய உடலில் வாழ்கிறோம். நாம் வாழும் பேருடலில் உருவாகும் மாற்றங்கள் அனைத்தும், நமது உடலிலும் இருக்கத்தான் செய்யும்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

நம் உடலில் உள்ள செல்கள் யாவும் நமது செயல்பாடுகளால் மாற்றமடைகின்றன. அதேபோல், பூமியின் செயல்பாடுகளால் இங்கு வாழும் அனைத்து உயிர்களும் மாற்றமடைகின்றன. நம் உடலில் உள்ள செல்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அது நமது ஒட்டுமொத்த உடல் இயக்கங்களையும் பாதிக்கிறது. அதேபோல், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் செயல்பாடுகளால் உருவாகும் பாதிப்புகள் பூமியின் இயக்கத்திலும் பாதிப்பை உருவாக்கும்.

உணவுப் பழக்கங்களில் ஐம்பூதக் கொள்கைகளை விளங்கிக் கொள்ளும்போது, இந்த அடிப்படையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், மருத்துவம் என்பது மனிதர்களுக்கு மட்டுமேயான தனித்துவமான துறை அல்ல. நாம் இந்த அண்டத்தின் உறுப்பினர்கள். இந்த அண்டத்தின் இயக்க விதிகள்தான் நமக்குமான விதிகள். அண்டத்தின் விதிகளைப் புரிந்துகொள்ளாமல் உடலின் விதிகளைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவ்வாறு முன்வைக்கப்படும் மருத்துவக் கொள்கைகளால் உடல் நோய்களைத் தீர்க்க முடியாது.

இதனால்தான் மருத்துவத்துக்கான நாடிகளையும் வாதம் (காற்று, நிலம்), பித்தம் (நீர், வெப்பம்), கபம் (நீர், காற்று) ஆகிய பூதங்களின் சேர்க்கையில் வகுத்தனர் நம் முன்னோர். மருத்துவம் என்பது, வாழ்க்கைமுறையைக் கற்றுத்தரும் மெய்யறிவு. நிச்சயமாக, அது உடலைப் பற்றிய பாடங்களைக் கொண்ட அறிவுத் துறை அல்ல. வாழ்வியலைப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்காமல், நோயற்ற வாழ்க்கையை அடைய முடியாது. பூமியைப் பற்றிய நவீன அறிவுத் துறைகளால், பூமியில் உருவாகும் பேரழிவுகளைத் தடுக்க முடியவில்லை என்பதை இந்தக் காலத்தில் பார்க்கிறோம். அதேபோல்தான், உடலில் உருவாகும் எந்த நோயையும் வெறும் உடல் குறித்த அறிவைக்கொண்டு தடுக்கவோ, தீர்க்கவோ முடியாது.
வாழ்வியல்கொள்கைகளைத்தான் நம் மரபு முதன்மையாக வலியுறுத்தியுள்ளது. உணவுப் பழக்கங்கள், வீடு கட்டும் முறை, வேளாண் முறைகள், தேவைக்கு அதிகமாக ஆசைப்படாத மனம் ஆகியவற்றைத்தான் நம் முன்னோர் அறிவுறுத்தினர். இவை எல்லாம் இணைந்த கலவைதான் மருத்துவம். வாழ்வியலை ஒழுங்கு செய்யாமல், நோய்களுக்கு மருந்து தேடினால் ஒருகாலத்திலும் கிடைக்காது.

இந்த அடித்தளத்தில்தான் எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். உணவுப் பழக்கத்தை வகுத்துக்கொள்ளும் முன், உணவுப் பொருட்களில் உள்ள ஐம்பூதக் கலவையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

`காய்’ என்றால் வெப்பத்தில் இருத்தல் என்று பொருள். `வெயிலில் காயவைத்தல்’ என்கிறோம் அல்லவா! காயம் என்பது உடலைக் குறிக்கும். தமிழில் ‘அம்’ என்பது பன்மையைக் குறிக்கும் சொல். ஏதேனும் ஒரு பொருள், பல பொருட்களாகப் பெருகுவதை இவ்வாறு ‘அம்’ எனும் ஒட்டுச்சொல்லுடன் குறிப்பது நம் இலக்கணம். `ஆ’ எனும் சொல் உயிர் என்று பொருள்கொண்டது. இந்த ‘ஆ’வுடன் ‘அம்’ இணைவது அம்மா (அம் + ஆ). உயிர்கள் பல்கிப்பெருகும் நிலையை உருவாக்குபவர் அம்மா.

`காய்’ எனும் வெப்பத்துக்கான சொல்லுடன் `அம்’ இணைந்து உருவானதுதான் காயம் எனும் சொல். வெப்பம் எனும் ஒரு பூதத்தின் விரிவாக்கமும் பெருக்கமும்தான் `காயம்'. வெப்பம் எனும் பூதம்தான் உயிர்களுக்கு உடல் தரும். கறி என்பது, `கடித்துத் தின்னுதல்’ என்ற பொருள்கொண்ட சொல். காய்கறி என்றால், ‘வெப்பத்தில் உருவான கடித்துத் தின்னும் பொருள்' எனலாம். எவற்றை எல்லாம் கடித்து உண்கிறோமோ, அவற்றையே `கறி' என்று அழைக்கிறோம்.

நமது உடலை `காயம்' என்றும், உணவுப் பொருட்களில் ஒரு வகையை `காய்கறி' எனவும் அழைத்தனர். வெப்பம் எனும் பூதம்தான் உடல்களை உருவாக்குகிறது. இந்த வெப்பம் மிகுந்தாலும் குறைந்தாலும் உடல்கள் சிதையும்.

உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மேற்கண்ட புரிதல்களை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். காய்கறிகளில் எவை எல்லாம் நன்மைதரக்கூடியவை என்றால், எவற்றில் எல்லாம் வெப்பத்தின் அளவு சீராக உள்ளதோ, அவை எல்லாம் சிறப்பானவைதான்.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 28

சில காய்களைப் பட்டியலிட்டு அவற்றின் ஐம்பூதத் தன்மைகள் அடிப்படையில் பிரிப்போம்.

மிதவெப்பம் - கத்திரி, வெண்டை, கொத்தவரை, அவரை, முருங்கை, சுண்டை, பாகல்.

நீர் - பீர்க்கன், சுரை, புடலை, பரங்கி, பூசணி, முள்ளங்கி, பாகல்.

காற்று – அவரை, பீன்ஸ், மொச்சைக்காய், காராமணி, தட்டைப் பயறு.

நிலம் - கருணை, சேனை உள்ளிட்ட கிழங்குகள்.

அவரை, பாகல் ஆகிய இரண்டும் மிதவெப்பம் மற்றும் நீர் ஆகிய இரு பட்டியல்களிலும் இடம்பெறுகின்றன. இதுதான் அவற்றின் குணம். மிதவெப்பம், நீர்த்தன்மை ஆகிய குணங்கள் கொண்ட காய்கறிகளில் மிதவெப்பத்துக்கு முன்னுரிமை அளிக்கலாம். நீர்த்தன்மை கொண்டவற்றுக்கு அடுத்த இடம் தரலாம்.

ஏதேனும் ஓர் உணவுப்பழக்கத்தைத் தெரிந்துகொண்டால் அதை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோர் இப்போது இருக்கிறார்கள். மனப்பாடக் கல்விமுறையால் உருவான சிக்கல் இது என நினைக்கிறேன். எனது விளக்கங்களையும் அதுபோல மாற்றிக் கொள்ளாதீர்கள். உணவுப்பொருட்களின் தன்மைகளை அறிமுகம் செய்கிறேன். இதன் அடிப்படையை நன்றாகப் புரிந்துகொண்டு சூழலுக்கேற்ப முடிவுசெய்யுங்கள்.

மிதவெப்பம் கொண்ட காய்கள், பொதுவாக எல்லா காலங்களுக்கும் உகந்தவை. நீர்த்தன்மை கொண்டவையும் இவற்றோடு சேர்ந்தால்தான் அது சீரான உணவாக இருக்கும். அதேவேளை, நீர்த்தன்மை உணவுகளைக் கூடுதலாக்கினாலோ, தவிர்த்தாலோ உடலில் உள்ள நீரின் அளவு சீர்கெடும். உயிர்களின் உடல் வடிவம் வெப்பத்தினால் அமைக்கப்படுகிறது என்பதால், மிதவெப்பக் காய்கள் முதன்மையானவை. அவ்வளவுதானே தவிர, நீர்க்காய்களிடம்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல.

ஏற்கெனவே குளிர்ந்த உடல் இருக்கும்போது, நீர்க்காய்களைக் குறைக்கலாம். ஒருவேளை உடல் வெப்பம் கூடுதலாக இருந்தால், மிதவெப்பக் காய்களைக் குறைத்துவிட்டு நீர்க்காய்களை அதிகரித்துக்கொள்ளலாம். இதுபோல, சூழல்களுக்கு ஏற்ப காய்கறி வகைகளைத் தெரிவுசெய்யுங்கள்.

கிழங்குகள் அனைத்தும் நிலத்தின் தன்மைகொண்ட காய்கள். ஐம்பூதங்களில், இறுதிநிலையில் உள்ளது நிலம். மற்ற நான்கு பூதங்களும் முழுமையான வடிவம் எடுத்தால் அதுதான் நிலம். இதற்கு மேல் மாறுவதற்கு வடிவம் இல்லை. காற்று வெப்பமாக மாறும், வெப்பம் நீரை உருவாக்கும், நீரில் நிலம் தோன்றும். ஆனால், நிலத்தில் இருந்து வேறு எதுவும் தோன்றாது. மாறாக, நிலம் மீண்டும் நீராக, காற்றாக, வெப்பமாக திரும்பிச் செல்லும். இதுதான் படைப்பின் ஐம்பூத விதி.
ஆகவே, நிலத்தின் தன்மைகொண்டவை அனைத்தும் செரிவானவை. அதாவது அதிகமான ஆற்றல்களைத் தம்முள் வைத்திருப்பவை. நிலத்தின் உள்ளே காற்று, வெப்பம், நீர் ஆகிய அனைத்தும் மிகுதியாகவே இருக்கும். பழங்குடிகள் கிழங்கு வேட்டையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

ஏதேனும் ஒரு கிழங்கை அகழ்ந்து எடுத்து விட்டால், அந்தக் கிழங்கை மட்டுமே சாப்பிட்டு ஒருநாள் முழுவதும் ஆற்றலோடு இயங்குவார்கள். இதுதான் கிழங்கின் தனித்தன்மை. உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்குக் கிழங்குகள் செரிமானச் சிக்கலை உருவாக்கத்தக்கவை. அதேவேளை, கிழங்குகளில் பொதிந்துள்ள ஆற்றல்களைத் தவிர்ப்பதும் மிகவும் தவறானது. ஆகவே, கிழங்குகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சமையல்முறைகளில் கிழங்குகளை அவித்துச் சமைக்கும் வழக்கம் கூடுதல் நன்மை தரும். அவிக்கும்போது, நிலத்தின் தன்மை நீரால் சிதைக்கப்படுகிறது. நீர் சிதைத்த பிறகு அந்த நிலம் எளிதில் செரிக்கப்படும். நமது உடலுக்கும் பூமிக்கும் இது பொருந்தும். சிந்தித்துப்பாருங்கள்!

- திரும்புவோம்...