Published:Updated:

எதையும் தாங்கும் இதயம்!

எதையும் தாங்கும் இதயம்!
பிரீமியம் ஸ்டோரி
எதையும் தாங்கும் இதயம்!

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

எதையும் தாங்கும் இதயம்!

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
எதையும் தாங்கும் இதயம்!
பிரீமியம் ஸ்டோரி
எதையும் தாங்கும் இதயம்!

காவேரி மருத்துவமனையில் நினைவு தடுமாறிய நிலையில், மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெறுகிறார் கருணாநிதி. அவர் தமிழக அரசியலின் சாதனைச் சரித்திரம் மட்டும் அல்ல; சோதனைச் சித்திரமும்கூட. கருணாநிதியின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், அவர் செய்த சாதனைகளைவிட எதிர்கொண்ட சோதனைகளே அதிகம் என்பது புரியும். அவற்றை எல்லாம் தன் சாதுர்யத்தால் எளிதில் கடந்து வந்திருக்கிறார். ஆனால், அவர் உடல் நலம் குன்றி கோபாலபுரம் வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரத்தில், அவரது சொந்தங்கள் நடத்திய தந்திர ஆட்டங்கள் அவரை அதிகமாகவே அசைத்துப்பார்த்திருக்கின்றன. அவைதான் கருணாநிதியை காவேரி மருத்துவமனை வரைக்கும் கொண்டுபோயிருக் கின்றன.

எதையும் தாங்கும் இதயம்!

சுயகட்டுப்பாடே பலம்

கருணாநிதியின் மனதைப்போல உடலும் அதிக எதிர்ப்புசக்தி கொண்டது; இயல்பிலேயே ஆரோக்கியமானது. அவர் தன் வாழ்நாளில் உடற்பயிற்சி எல்லாம் செய்ததே கிடையாது. ஆனால், தனது 15 வயது தொடங்கி 42 வயது வரை, அவர் கால் படாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு அலைந்திருக்கிறார். அவருக்கு உடலில் வலுவையும் எதிர்ப்புசக்தியையும் உருவாக்கியது அந்த உழைப்புதான். எப்போதும் உணவில் தீவிரக் கட்டுப்பாட்டைப் பின்பற்றக்கூடியவர். தேசிகாச்சாரியாரிடம் யோகா கற்றுக்கொண்டார். தனக்குத்தானே ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, அதைத் தீர்க்கமாகப் பின்பற்றுவார். அதனால்தான், அவருக்கு இன்று வரை சர்க்கரை நோய் இல்லை; ரத்த அழுத்தம் கிடையாது; இதயப் பிரச்னைகள் இல்லை; கடந்த அக்டோபர் மாதத்துக்கு முன்னர் வரை அவர் மூளை நன்றாகவே இயங்கியது.

முதுமை உருவாக்கிய தளர்வு

கருணாநிதியின் ஆர்வம், ஓயாத உழைப்பு, குன்றாத உற்சாகம்...ஆகியவற்றில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சில மாற்றங்கள் ஏற்பட்டன. முதுமை உருவாக்கிய தளர்வு காரணமாக, அவர் அந்த முடிவை எடுத்தார். அறிக்கைகள் தன் கையால் எழுதுவதை அடியோடு நிறுத்தினார். அவர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் அதை எழுதினார்கள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் குறைத்துக்கொண்டார். கட்சிக்காரர்களின் திருமணத்துக்கு நேரில் போய் வாழ்த்துவதை நிறுத்திவிட்டு, அவர்களை நேரில் வரவழைத்து வாழ்த்தினார். 

கொப்புளங்கள்... கொந்தளிப்புகள்...

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எப்படியும் வெல்வோம்; ஆட்சியைக் கைப்பற்றுவோம்; ஆறாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்வோம் எனத் தெம்பாக இருந்தார் கருணாநிதி. ஆனால் தேர்தலில் கோட்டைவிட்டது தி.மு.க.. கருணாநிதிக்கு அதில் உண்டான வேதனை சொல்லிமாளாதது. அது, அவரது உடலையும் மனதையும் மிக அதிக சோர்வுக்கு உள்ளாக்கியது. அதே நேரத்தில் பிசியோதெரபி சிகிச்சைக்காக, கருணாநிதி உடலில் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயால், அவருக்குத் தோலில் அலெர்ஜி உண்டானது. அது கொப்புளங்களை உருவாக்கியது. அக்டோபர் மாத ஆரம்பத்திலேயே கருணாநிதிக்கு இந்தப் பிரச்னை வந்துவிட்டாலும், அக்டோபர் 25-ம் தேதி அன்றுதான் அதிகாரபூர்வமாக அண்ணா அறிவாலயம் அதை அறிவித்தது. கருணாநிதி, கோபாலபுரம் வீட்டுக்குள் முடங்கினார். உடலில் ஏற்பட்ட கொப்புளங்களால் கருணாநிதிக்கு விழுந்த இந்தத் தடை, மன அளவில் அவரிடம் பல கொந்தளிப்புகளை உருவாக்கிவிட்டன. 
 
தலைவர் யார்?

ஒரு மாதத்துக்கும் மேலாக, கோபாலபுரம் வீட்டிக்குள் கருணாநிதி ஓய்வில் இருந்த நேரத்தில், `மு.க.ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, மு.க.ஸ்டாலினுக்குப் பொதுச்​செய​லாளர் பதவி, மு.க.ஸ்டாலினுக்குப் புதிய பொறுப்பு’ என்ற பழைய பல்லவிகளைப் புதிய ராகத்தில் சத்தம்போட்டுப் பாட ஆரம்பித்தது தி.மு.க-வுக்குள் ஒரு குழு. உச்சக்கட்டமாக, நவம்பர் மாதம் 29-ம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் நடந்த, நீதிக் கட்சி நூற்றாண்டு விழாவில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘இன்னும் நூறாண்டு காலத்துக்கு திராவிட இயக்கத்தின் தேவை இருக்கிறது. மேலும், இந்த இயக்கத்தைத் தாங்கி வழிநடத்தும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. தி.மு.க-வின் அடுத்த தலைவராக அவர் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக அரியணை ஏறுவார்’ எனப் பேசினார். இதுவும் கருணாநிதியின் மனதுக்குள் வடுக்களை உண்டாக்கியது.

மருத்துவமனைக் காட்சிகள்

‘தலைவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், மு.க.ஸ்டாலின் நாற்காலியைப் பிடிக்கும் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்’ என அழகிரியும் கனிமொழியும் கொதித்தனர். இந்தக் காட்சிகள் கருணாநிதியைத் தொடர்ந்து சஞ்சலப்படுத்த, அவர் வேறு வழியில்லாமல் டிசம்பர் 1-ம் தேதி இரவு காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.  ஆனால், அந்த நேரத்திலும் ஸ்டாலின் தன் முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. ‘அழகிரியின் மகனை தி.மு.க அறக்கட்டளையில் சேர்த்துக் கொள்ளலாம். அவரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்’ எனத் தூது அனுப்பினார். அழகிரி தரப்பும் சளைக்கவில்லை. `தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அழகிரிக்கும், இளைஞர் அணியில் ஒரு பொறுப்பை அவர் மகன் துரை தயாநிதிக்கும் கொடுக்க​வேண்டும்’ என மதுரைக்குள் செய்தியைப் பரப்பினார்கள். இந்தப் பேச்சுவார்த்தை வழக்கம்​போல் காற்றோடு கரைந்து​போனது.

மு.க.ஸ்டாலின் Vs ராசாத்தி அம்மாள்

காவேரி மருத்துவமனையில், ஒரு வாரம் சிகிச்சைபெற்ற கருணாநிதியிடம், ஸ்டாலினின் பராக்கிரமங்கள்  ஒலித்துக் கொண்டே இருந்தன. இந்த நேரத்தில், ராசாத்தி அம்மாள் கனிமொழியின் சார்பில் கலவரம் செய்தார். மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கனிமொழி, இப்போது எம்.பி-யாகவும் இருக்கிறார். கருணாநிதியின் காலத்துக்குப் பிறகும் கனிமொழியின் இந்தச் செல்வாக்கு தொடர வேண்டும் என ராசாத்தி முயற்சி எடுத்தார். காவேரி மருத்துவமனையில் இருந்து கடந்த 7-ம் தேதி கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆனபோது, ராசாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு மாலை 5 மணிக்கே வந்துவிட்டார். அங்கு இருந்து கருணாநிதியை, சி.ஐ.டி காலனி வீட்டுக்கு அழைத்துப்போவது அவர் திட்டம். ஒரு மாதத்துக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டிலேயே இருந்த கருணாநிதியை, இதற்குப் பிறகு தன் வீட்டில் வைத்துக்கொள்ள ராசாத்தி அம்மாள் விருப்பப்பட்டார். அதுதான் தன் மகளின் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் கருதினார்.  ஆனால், காவேரி மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின், கருணாநிதியை சி.ஐ.டி காலனி வீட்டுக்கு அனுப்ப மறுத்துவிட்டார். ‘நான் கோபாலபுரத்தில் தலைவருக்கான அறையை அவருக்கு வசதியாக மாற்றிவைத்துள்ளேன். அதனால், அவரை அங்கு அழைத்துப்போகிறேன்’ எனச் சொல்லிவிட்டார். கருணாநிதி சி.ஐ.டி காலனி வீட்டுக்குப் போய்விட்டால், இப்போதைக்கு அவரை அங்கு இருந்து கோபாலபுரத்துக்கு அழைத்துவர முடியாது. அதன்பிறகு, சி.ஐ.டி காலனி வீடு அதிகாரமையமாக மாறிவிடும் என்பது ஸ்டாலின் கணக்கு.  இதனால், நீயா... நானா... போட்டியில் ராசாத்தியோடு முட்டிக்கொண்ட ஸ்டாலின், கடைசியில் கருணாநிதியை கோபாலபுரத்துக்கே அழைத்துவந்தார்.

என்ன சொல்கிறார் தலைவர்?


வீட்டுக்கு வந்த கருணாநிதியின் உடல்நிலை முழுமையாகக் குணமடையாத நிலையில்தான், தி.மு.க பொதுக்குழு 20-ம் தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதில் மு.க.ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தி.மு.க தரப்பில் கூறப்பட்டது. அந்த நேரத்தில், தி.மு.க வட்டாரங்களில் பேசியபோது, ‘கருணாநிதி தற்போது எதையும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனால் நிச்சயமாக, மு.க.ஸ்டாலினுக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. உடல்நிலை, ஞாபகச்சக்தி எல்லாம் பழுதடைந்துள்ள நிலையில் கருணாநிதி, தீவிர மன உளைச்சலில் இருக்கிறார்’ என்றனர். `யாராவது தன்னை வந்து பார்த்தால், ‘உங்க தலைவர் என்ன சொல்றார்?’ எனக் கிண்டலாகக் கேட்டுக்கொண்டிருந்தார் கருணாநிதி. உண்மையில் அது கிண்டல் அல்ல... அவரது வேதனையின் வெளிப்பாடு.

எதையும் தாங்கும் இதயம்!

மீண்டும் காவேரி

தனது நாற்காலி, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டாலினை நோக்கி நகர்வதை, இப்போது கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடந்த 8-ம் தேதி அவர் அதை முழுமையாக உணர்ந்துகொண்டார். 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கருணாநிதி, 8-ம் தேதி மதியம் 3:30 மணிக்கு ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கிளம்பினார். போயஸ் கார்டனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, கருணாநிதிக்கு 45 நிமிடம் நேரம் ஒதுக்கப்படடது; பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், ஸ்டாலின் அதைக் கறாராகத் தடுத்துவிட்டதாகச் சொல்கின்றனர். அந்த நேரத்தில் கருணாநிதி, அதிகாரம் தன் கைகளைவிட்டுப் போய்விட்டதைப் பூரணமாக உணர்ந்திருக்க வேண்டும். அதன்பிறகு தீவிர மனக்காயத்தில் இருந்த அவருக்கு, பனிப்பொழிவு சளித் தொந்தரவை ஏற்படுத்தியது. அதனால், 15-ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். தி.மு.க பொதுக்குழு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் துளிர்க்கும் அரசியல் நாகரிகம்

கடந்த 30 ஆண்டுகளாக, கருணாநிதியும் ஜெயலலிதாவும் உருவாக்கிவைத்திருந்த அநாகரிக அரசியலுக்கு சமீபகாலமாக முடிவுரைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஜெயலலிதா, அப்போலோவில் இருந்தபோது மு.க.ஸ்டாலின், ராசாத்தி ஆகியோர் நேரில் நலம் விசாரிக்கப் போயினர். ஜெயலலிதாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்; கனிமொழி அப்போது காட்டிய பணிவு, பண்பட்ட அரசியல். ஆனால், அதை எல்லாம் மீறிய நாகரிகம், அ.தி.மு.க தரப்பில் இருந்து வெளிப்பட்டது. காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியை உடல்நலம் விசாரிக்க வந்த அ.தி.மு.க எம்.பி-யும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, `தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தோம். அவர் நலமுடன் இருக்கிறார் என்ற தகவல் கேள்விப்பட்டோம். உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி. அவர் விரைவில் நலம்பெற்று இயக்கப் பணிகளுக்குத் திரும்ப வாழ்த்துகள்’ என்றபோது சிலிர்த்துப்போனது தமிழகம். கடந்த 30 ஆண்டுகளில், ஒரு தலைமுறை பார்த்திடாத அரசியல் அதிசயம் இது.

ஜெயலலிதாவின் மரணமும் கருணாநிதியின் முடக்கமும் தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது கசப்பான உண்மை. அந்த உண்மையை உரமாக்கி, அதில் தமிழக அரசியல் நாகரிகம் புதிதாகத் துளிர்ப்பது வரவேற்கப்படவேண்டியதே!