Published:Updated:

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!
பிரீமியம் ஸ்டோரி
அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

கலாமின் காலடிச் சுவட்டில்... விகடன் டீம், படங்கள்: கே.குணசீலன்

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

கலாமின் காலடிச் சுவட்டில்... விகடன் டீம், படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!
பிரீமியம் ஸ்டோரி
அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!
அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

`‘100 ரூபாய் கிடைக்காதானு ஏங்கியிருக்கேன். ஆனா இன்னிக்கு, என் ‘காஞ்சனா-2’ படம் 100 கோடி ரூபாய் வசூலிச்சிருக்கு. மக்களோட இந்த அன்புக்கு, ஏதாவது செய்யணும்.

இந்த ஒரு கோடி ரூபாய், என் அடுத்த பட அட்வான்ஸ். இதை உங்ககிட்ட தர்றேன். இதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க, விகடனைவிட சரியான ஆள் கிடைக்க மாட்டாங்க. இதை மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல்னு மூணு விஷயங்களுக்குப் பயன்படுத்துங்க. நான் உதவுறது மட்டும் இல்லாம, உதவி செய்யணும்கிற எண்ணத்தை மத்தவங்க கிட்டயும் விதைக்க, 100 இளைஞர்கள் மூலமா இந்த உதவிகளை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.’'

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

அம்பத்தூர் ராகவேந்திரா ஸ்வாமி கோயிலில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நம்மிடம் தரும்போது, நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தைகள் இவை. ‘கலாமின் காலடிச் சுவட்டில்... அறம் செய விரும்பு’ திட்டம் உருவானது அங்கு இருந்துதான்.

சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையால், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் உதவிகள் போய்ச் சேராத பின்தங்கிய கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினோம். மழையால் பாதிக்கப்​பட்ட சென்னை மக்களைக் காக்க, வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து ஓடோடி வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினோம். இப்படி, வெள்ளப் பாதிப்பின்போது கிட்டத்தட்ட 40 லட்ச ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டன.

அபூர்வமான நீரிழிவுநோயால் உயிர்வாழப் போராடிக்கொண்டிருந்த சிறுமி தேவிக்கு, 1.4 லட்சம் ரூபாய் செலவில் உடலோடு ஒட்டிவைக்கக் கூடிய இன்சுலின் பம்ப் பொருத்தப்​பட்டது.

உக்ரைன் நாட்டில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிக்க இலவசமாக இடம் கிடைத்தும் பயணிக்கப் பணம் இல்லாமல் தவித்த உதயகீர்த்திகாவுக்கு, 1.8 லட்சம் ரூபாய் வழங்கினோம்.


மின்சாரம் இல்லாமல் இருந்த தூமனூர் வனக்கிராமத்துக்கு, சோலார் விளக்குகள் பொருத்தப்​பட்டன.

மேகமலை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு, ஹீட்டர் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளி நீச்சல்வீரர் தமிழழகனுக்கு, உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன.கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு `ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்' அமைத்துத்​தரப்பட்டது. கொரவன்கண்டி மலைக் கிராமத்துக்குப் பரிசல் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

இப்படி, இந்த ஓர் ஆண்டில் எத்தனை எத்தனை உதவிகள்... மகிழ்வும் நெகிழ்வுமாக எத்தனை சம்பவங்கள்! இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்தத் திட்டத்தின் நிறைவாகச் செய்த உதவி, நமக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் அனுபவமாக அமைந்தது.

தடகள வீராங்கனை சாந்தி, ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் தன்னார்வலர்களில் ஒருவர். சர்வதேச வீராங்கனை ஆக விரும்பியவர், இன்று சர்வதேசத் தடகளப் பயிற்சியாளராகும் முயற்சியில் இருக்கிறார். தன்னைப்போலவே தமிழகக் கிராமங்களில் வெற்றி வேட்கையோடு உழைக்கும் ஏழை மாணவ, மாணவியர் 40 பேருக்கு, தடகளப் பயிற்சிகளை வழங்கிவருகிறார்.

துபாயில் ஃபுட்பால் ட்ரெய்னராக இருந்த சுல்தான் அலி, தற்போது மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளை அளித்துவருகிறார். தன்னுடைய பகுதியில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்குத் தன்னால் ஆன உதவிகளைத் தொடர்ந்து செய்துவருபவர். அவருடைய ஒருங்கிணைப்பின் கீழ் உடற்பயிற்சிக் கூடம் அமைத்தால் பல வீரர்கள் பயன்பெறுவர் என, நம்மோடு இணைந்து அறம் செய்ய விரும்பினார் சாந்தி.

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

சாந்திக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயோடு சேர்த்து, மொத்தம் நான்கு லட்சம் ரூபாயில் மயிலாடுதுறையில் அந்த ஜிம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. இதை, குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஏ.செல்லப்பாண்டியன் சென்ற வாரம் திறந்துவைத்தார். ஏழை மாணவர்களின் வலிமையான எதிர்காலத்துக்கான ஓர் எளிய நிகழ்வாக அது அமைந்தது.

செம்மண் அப்பிய ஷூக்களோடு அதிகாலை நேரத்திலேயே அங்கு வந்திருந்தனர் தடகள வீரர்-வீராங்கனைகள். அங்கு இருந்த உபகரணங்களைப் பார்த்து அத்தனை உற்சாகமாகவும் பரவசத்தோடும் பேசிக்கொண்டிருந்தனர்.

`‘எங்க சார்பா லாரன்ஸ் அண்ணாவுக்கு தேங்க்ஸ் சொல்லுங்கண்ணா’' என்ற பாக்யாவின் கண்களில் நெகிழ்ச்சிப் பரவசம். லாரி டிரைவரின் மகளான பாக்யா, 5,000 மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவில் வெள்ளி வென்றவர்.

உபகரணங்களின் பெயர்களையும் பயன்பாடுகளையும் வீரர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் சுல்தான் அலி. தொட்டியில் அடைத்த மீன்களை மீண்டும் கடலில் விட்டதுபோல வீரர்-வீராங்கனைகள் அத்தனை லாகவமாக அந்த உபகரணங்களை எளிதில் பயன்படுத்தத் தொடங்கினர்.

‘‘புகையிலை கம்பெனி வேலைக்குப் போயிட்டே விளையாடிட்டு இருந்தேன். ‘பொட்டபுள்ள விளையாடப் போறதா?’னு பெரியம்மா என்னைத் தடுத்தாங்க. அப்புறம்தான் என் கோச் என்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டாங்க. எனக்கு சின்னவயசுல இருந்தே தலைவலி, மயக்கம் வரும். `மூளையில் ஏதோ நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கு'னு டாக்டர் சொன்னாங்க. அதுக்காக மாத்திரை சாப்பிடுவேன். என்னைப் பிடிக்காத ஒரு சார், நான் போதை மருந்து சாப்பிடுறேன்னு சொல்லி, ஹாஸ்டலைவிட்டு வெளியேத்திட்டாரு. இப்ப தெரிஞ்சவங்க வீட்லதான் தங்கியிருக்கேன். சாப்பிடுறதுக்கு இன்னொருத்தர் வீட்டுக்குப் போறேன்’’ - வெடித்து அழுத இளவரசியைத் தேற்றினோம்.

‘‘ஒலிம்பிக்ல மெடல் ஜெயிக்கணும்கிறதுதான் என்னோட கனவு. அதை விட மாட்டேன். என்னை மாதிரி ஏதோ ஒரு மூலையில் இருக்கிற ஒருத்தருக்கு லாரன்ஸ் சாரும் விகடனும் செய்ற இந்த உதவிக்கு, நிச்சயம் என் வெற்றியின் மூலமா நன்றி சொல்வேன்!’’ என்று நன்றி சொல்லியபடி பயிற்சிகளைத் தொடர்ந்தார் இளவரசி. இப்படி அங்கு இருந்த ஒவ்வொருவரின் பின்னாலும் வலி நிறைந்த ஒரு கதையும் உறுதிமிக்க நம்பிக்கையும் இருந்தன.

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

இப்படி எத்தனையோ பேரின் நம்பிக்கைக்கான முதல் விதையை விதைக்கக் காரணமாக இருந்தவர் ராகவா லாரன்ஸ். அவரிடம் பேசினோம். ‘‘பல உதவிகளை நானே என் கையால் பண்ணினேன். குறிப்பா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினது. அந்த மக்களோட அன்பையும் அவங்க முகத்துல நான் அன்னிக்குப் பார்த்த சந்தோஷத்தையும் என்னிக்கும் மறக்க முடியாது. அன்னிக்கு ஒவ்வொருத்தர் முகத்துலயும் என்னையே நான் பார்த்த மாதிரி இருந்துச்சு.
உதவிகளைப் பெற்றவங்க, ‘இனி எங்களுக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை’ங்கிற அளவுக்கு வளரணும். அதேபோல அந்த 100 தன்னார்வலர்களும் இதோடு நின்னுடாம தொடர்ந்து ஓடணும். இந்த ஒரு கோடி ரூபாய், உண்மையிலேயே கஷ்டப்படுறவங்களுக்குப் போய்ச் சேரணும்னு நினைச்சேன். இந்த முயற்சியில் ஆனந்த விகடன் இணைஞ்சதும், ‘எப்படி இதை செய்யப்போறோம்?’ங்கிற என் பாரம் குறைஞ்சது. விகடனுக்கு, பெரிய நன்றி'' பெருமிதங்கள் இன்றிப் பேசினார் லாரன்ஸ்.

இவரிடம் பேசிவிட்டு வந்த அன்று, `அறம் செய விரும்பு’ தன்னார்வலர்களில் ஒருவரான அக்கு ஹீலர் உமர் பாரூக் அழைத்தார்.

‘‘இந்தத் திட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவிக்கான பரிந்துரை செய்யும் வாய்ப்பை, விகடனும் லாரன்ஸும் எனக்கு அளித்தார்கள். தேனி மாவட்டப் பழங்குடி மக்கள் வசிக்கும் பளியங்குடி துவக்கப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உருவாக்கவும் இரவங்கல்லாறில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு ‘ஹாட் வாட்டர் ஸ்பென்சர்’ ஒன்று அமைக்கவும் பரிந்துரைத்தேன். எஞ்சிய நிதியை, தேனியில் உள்ள திருநங்கை கலைக்குழுவுக்கு வழங்கவும் பரிந்துரைத்தேன். என் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உதவிகள் செய்து முடிக்கப்பட்டன.

அறம் செய விரும்பு - மகிழ்வும்... நெகிழ்வும்!

இந்தத் திட்டத்துக்காக அரசுப் பள்ளிகளுக்குச் சென்று வரும்போதுதான் கல்விக்கான அடிப்படைக் கட்டமைப்பின் அவசியம் புரியத் தொடங்கியது. அந்த எண்ணம்தான் ‘அறம்’ என்ற இயக்கத்தை நாங்கள் தொடங்க அடிப்படை உந்துதல். இந்த இயக்கத்தை கிறிஸ்துமஸ் நாள் அன்று சென்னையில் தொடங்க உள்ளோம். இதற்குக் காரணமாக இருந்த லாரன்ஸ், இதைத் தொடக்கி​வைக்க ​வேண்டும்’' என்று கோரிக்கை வைத்தார்.

உமர் பாரூக்கின் கோரிக்கையை, லாரன்ஸிடம் தெரிவித்தோம். தன் கனவு நிறைவேறத் தொடங்கிவிட்ட மகிழ்ச்சி அவரிடம். `‘ `உதவி செய்யும் எண்ணத்தை விதைக்கணும்’கிற நம் எண்ணம் சரியாகப் போய்ச் சேர்ந்திருக்கு என்பதன் அடையாளமாத்தான் உமர் பாரூக்கைப் பார்க்கிறேன். நிச்சயம் வர்றேன்’' என்றார் பெருமகிழ்ச்சியுடன்.

அறத்துக்கு ஏது ஓய்வு? தொடர்ந்து செய்வோம்!