Published:Updated:

‘வர்தா’ சொல்லும் சேதி!

‘வர்தா’ சொல்லும் சேதி!
பிரீமியம் ஸ்டோரி
‘வர்தா’ சொல்லும் சேதி!

மு.நியாஸ் அகமது, ஆ.நந்தக்குமார், படங்கள்: ப.சரவணகுமார்

‘வர்தா’ சொல்லும் சேதி!

மு.நியாஸ் அகமது, ஆ.நந்தக்குமார், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
‘வர்தா’ சொல்லும் சேதி!
பிரீமியம் ஸ்டோரி
‘வர்தா’ சொல்லும் சேதி!

ர்தா புயல் குறித்து வானிலை மையம் முதன்முதலில் எச்சரித்தபோது, மக்கள் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்​கொள்ளவில்லை. எப்போதும்போல் இந்தப் புயலும் பக்கத்து மாநிலங்களுக்குத் திசை​மாறிச் செல்லும் என்றே நினைத்தனர். அந்த நினைப்பில் பிழை இல்லை. கடந்த திங்கள்கிழமை வரை வங்கக்கடலில் உருவான புயல்கள் பலவும் ஆந்திரா, ஒடிசாவுக்குத்தான் சென்றிருக்கின்றன. ஆனால், திங்கள்கிழமை காலை லேசாகத் தூறிய தூறல் சில நிமிடங்களில் வேகம் எடுக்க, மக்கள் மனதில் மெள்ள இருள் மேகங்கள் படரத் தொடங்கின. இந்த நாள் மற்றும் ஒரு நாளாக இருக்கப்போவது இல்லை என அவர்கள் உணர்வதற்குள், காற்றின் வேகம் கட்டுக்குள் அடங்காது கரை தாண்டத் தொடங்கியது.

‘வர்தா’ சொல்லும் சேதி!

அன்று, சென்னை வீதிகளில் புயலைவிட வேகமாக ஒரு பேரச்சம் படரத் தொடங்கியது. புயலின் ‘Eye Wall’ பகுதி சென்னையைத் தொட்டதும், காற்றின் வேகம் இன்னும் கூடியது. மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் இல்லை, கூட்டம் கூட்டமாக வேரோடு விழத் தொடங்கின. அதைவிட வேகமாக மின்கம்பங்கள் சரியத் தொடங்கின. ஹோட்டல்கள், பெரும் நிறுவனங்களின் மேற்கூரைகள், பெயர்ப் பதாகைகள்... என, காற்றின் ராட்சசக் கரங்களுக்கு எதுவுமே தப்பவில்லை. மாலையில், பெருங்காற்று கொஞ்சம் கோபம் தணிந்து, திருவள்ளூர் மாவட்டம் பழவந்தாங்கல் பகுதியில் கரையைக் கடந்தது. ஆனால் சென்னை, முற்றாக அலங்கோலமாகி இருந்தது. கால்நடைகள் கூட்டம் கூட்டமாக மாண்டன. சென்னை மீது படர்ந்து இருந்த கொஞ்சநஞ்சப் பசுமையும் துடைக்கப்​பட்டிருந்தது.

தொலைந்த மணற்குன்றுகள்

‘‘சென்னை நகரம், இதற்கு முன்னர் 1984-ம் ஆண்டும் 1994-ம் ஆண்டும் புயலை எதிர்கொண்டிருக்கிறது. அப்போதும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன; பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு இல்லை. அதற்குக் காரணம், சென்னையின் முறையற்றக் கட்டடங்களும், அதற்காக அழிக்கப்பட்ட மணற்குன்றுகளும், வெட்டப்பட்ட மண்ணின் மரங்களும்தான்.

‘வர்தா’ சொல்லும் சேதி!

25 வருடங்களுக்கு முன்னர் ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பனைமர உயரத்துக்கு மணற்​குன்றுகள் இருந்தன. சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் வாழும் மக்களை, இந்த மணற்குன்றுகள் புயலில் இருந்து பாதுகாத்து​வந்தன. கடற்கரைகளில் கருங்கற்களைக் கொட்டுவதுபோல் அல்லாமல், மென்மையான மணற்குன்று சுவர்கள் புயலில் இருந்து மக்களைப் பாதுகாத்தன. கடந்த 20 ஆண்டுகளில் கடற்கரையை ஒட்டி நிறையக் கட்டடங்கள் வந்துவிட்டன. செயற்கையான கட்டடங்கள், இயற்கையான மணற்குன்றுகளை அழித்துவிட்டன. கடற்கரையை ஒட்டிக் கட்டப்படும் கட்டடங்களை, அரசு ஒன்றும் செய்யவில்லை; இனி என்ன செய்யப்போகிறார்கள் என்றும் தெரியவில்லை. குறைந்தபட்சம், நெய்தல் திணைக்கு ஏற்ற மண்ணின் மரங்களாவது கடற்கரைப் பகுதிகளில் வளர்க்க அரசு முன்வர வேண்டும்’’ என பிரச்னையின் அடித்தளம் குறித்துப் பேசுகிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

திணை வாழ்வு

நித்யானந்த் சொல்லும் `மண்ணின் மரங்கள்’ என்ற வார்த்தைகளை அரசும் நாமும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆம்... இந்தப் புயலில் நம் மண்ணின் மரங்கள் தன் கிளைகளை மட்டும் பறிகொடுத்து, தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, வெளிநாட்டு மரங்கள்தான் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, இயற்கை விவசாய அறிஞர் பாமயனிடம் பேசினோம்.

“அலையாத்தி மரங்கள்தான் நெய்தல் திணைக்கு ஏற்றவை. தில்லை, கண்டல், சுரபுன்னை போன்றவை, அலையாத்திக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை, உப்பு நீரிலும் வளரும் தன்மைகொண்டவை. ஆனால், நாம் இவை அனைத்தும் பயன்தராத மரங்கள் என அழித்துவிட்டோம். தொழிற்சாலைகளுக்குத் தேவையான மலைவேம்பையும் குல்மொஹரையும் நடுகிறோம். இப்போது, இவைதான் மண்ணில் வீழ்ந்துகிடக்கின்றன” என, சரிந்த மரங்களின் சரித்திரம் சொன்னார்.

பொருத்தமானதுதான் வாழும்

பூவுலகு அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனும் இதையேதான் வழிமொழிகிறார்.

“ `வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகமாகியுள்ளதால், இந்தியக் கிழக்குக் கடற்கரையைத் தீவிரமாக புயல்கள் தாக்கக்கூடும்' என 2014-ம் ஆண்டில் ஓர் ஆய்வறிக்கை எச்சரித்தது. ஆனால், நம் அரசாங்கம் கடலுக்குள் என்ன நிகழ்கிறது, சுற்றுச்சூழல் எவ்வாறாக மாறிவருகிறது என்பது பற்றி எல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல், பேரிடர் வந்தால் நிவாரணம் கொடுப்பது மட்டும்தான் தம் பணி என நினைக்​கின்றன. அரசு விழித்துக்கொண்டு சூழலியலுக்கு ஏற்றவாறு நகரத்தின் உள் கட்டமைப்பை மாற்றவில்லை என்றால், பெரும் துயரம் நிகழும்’’ என எச்சரிக்கிறார்.

வறியவர்கள் வீதியில்

எல்லா இயற்கைப் பேரிடர்களும், வறியவர்களைத்தான் வீதிக்குக் கொண்டுவந்து​விடுகிறது. ஆம்... வர்தா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது செம்மஞ்சேரி மக்களும், கும்மிடிப்பூண்டி அகதி முகாம் மக்களும்தான்!

கூவம் ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் பல்லவன் நகரில் வசிக்கும் பீட்டர், “எங்களுக்கு,  சென்ற டிசம்பர் பெருமழை தந்த காயங்களே இன்னும் ஆறவில்லை. அதற்குள், இந்தப் புயலும் எங்கள் வாழ்க்கையைச் சிதைத்து வீதியில் விட்டுவிட்டது” என்கிறார்.

செம்மஞ்சேரி மக்களின் குரலும் இவ்வாறாகத்​தான் இருக்கிறது. “நல்ல வாழ்க்கை கிடைக்கும். வாழ்வாதாரம் மேம்படும் என வசீகரமான வார்த்தைகளைக் கூறித்தான் எங்களை மத்திய சென்னையில் இருந்து அப்புறப்படுத்தி, இங்கே கொண்டுவந்தனர். ஹும்... இங்கு வாழ்வு அதைவிட மோசமானதாக இருக்கிறது. வீதி எங்கும் தண்ணீர் நிற்கிறது. நான்கு நாட்களாக மின்சாரமும் வரவில்லை. என்ன ஆச்சு எனப் பார்க்க அரசும் வரவில்லை” என்கிறார்கள்.

‘வர்தா’ சொல்லும் சேதி!

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமின் நிலை இன்னும் மோசம். “அதிகாரிகளும் வரவில்லை... அரசியல்வாதிகளும் வரவில்லை. நாங்கள் இன்னும் எங்குதான் ஓடுவது?” என்கிறார் முகாமைச் சேர்ந்த லதா.

இனி வெப்பம் அதிகரிக்கும்

“சென்னைக்கு எனத் தனியாக ஒரு நுண்பருவநிலை உள்ளது. இதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பாதிப்புகளும் அதிகம் உள்ளன. கான்கிரீட் கட்டடங்கள் நிறைந்த சென்னை, வெப்பத் தீவுபோல உள்ளது. கான்கிரீட் கட்டடங்கள், பொதுவாக வெப்பத்தை உள்வாங்கி வைத்துக்கொள்ளும் தன்மைகொண்டவை. நகரத்தில் உள்ள கார்பன் மற்றும் வெப்பத்தை உள்ளிழுக்கும்தன்மை, மரங்களுக்கும் நீர்நிலைகளுக்கும் உள்ளது. வெப்பத்தைக் குறைக்கக்கூடிய நீர்நிலைகள் ஏற்கெனவே அழிந்துவிட்டன. தற்போது மரங்களும் புயலால் விழுந்துள்ளதால் வெப்பம் இன்னும் அதிகரிக்கும்” என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் - எழுத்தாளர் நக்கீரன்.

சென்ற ஆண்டு நீர்... இந்த ஆண்டு காற்று... என இது இயற்கையின் இரண்டாவது அபாய மணி. இன்றைய நிலைக்கு இயற்கை மட்டுமே காரணம் அல்ல. அதில் அரசுக்கு மட்டும் அல்ல, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. இயற்கை வளங்களைச் சூறையாடுவதை நாம் நிறுத்திக்கொள்ளவேண்டிய தருணம் இது. பூவுலகு, புதிர்கள் நிறைந்தது. அதில் எந்தக் கண்ணியைக் கலைத்துப்போட்டாலும் விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். வர்தா புயல் நமக்குச் சொல்லியிருக்கிற முக்கியச் செய்தி இதுதான்.