Published:Updated:

நம்பிக்கை விதைப்போம்!

நம்பிக்கை விதைப்போம்!

பிரீமியம் ஸ்டோரி

சென்னைக்கு, மீண்டும் ஒரு டிசம்பர் சோதனை. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் தாக்குதல் தொடுத்த ‘வர்தா’ புயலால், ஆயிரக்கணக்கான மரங்கள் மரணித்துவிட்டன. அந்த மரங்களை அண்டியிருந்த பறவைகள், பூச்சிகள் என அனைத்துக்கும் அந்த மரங்கள்தான் உலகம். மரங்களின் அழிவு என்பது, இந்த உயிரினங்களுக்கும் இழப்புதான். மகத்தான ஒரு சுற்றுச்சூழல் சங்கிலியை இழந்து நிற்கிறோம்.

வீடுகளின் மேலே குடையாகக் கவிழ்ந்திருந்த மரங்கள் இப்போது இல்லை என்பதால், ஏற்கெனவே கொளுத்தும் சென்னையில், வருகிற கோடைக்காலத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. `மரங்களின் இழப்பால், இனிவரும் காலங்களில் காற்றில் மாசு அதிகரிக்கும்' என, சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். 

நம்பிக்கை விதைப்போம்!



`ஒரு மரத்தை வெட்டினால், பத்து மரங்களை நட வேண்டும்' என்பார்கள். ஆனால், இப்போது புயல் வீழ்த்தியிருக்கும் மரங்களின் இழப்பை ஈடுகட்ட, நாம் எத்தனை மரங்களை நடவேண்டும்? நடைபாதையை அகலப்படுத்துகிறோம் என்ற பெயரில் புயலுக்குத் தப்பிப் பிழைத்த மரங்களின் குரல்வளைகளை நெரிப்பதைப்போல, சாலையோர மரங்களைச் சுற்றி சிமென்ட் கலவையை ஊற்றும் அவலத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்?

சங்கிலித் தொடராகத் தொடர்ந்துவரும் இதுபோன்ற கேள்விகளுக்கு, தமிழக அரசு மட்டும் அல்ல... சூழலியல் குறித்து புரிதல்கொண்ட அனைவரும் கைகோத்துச் செயலாற்ற வேண்டும்.

வர்தா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தால், சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள மூன்று மாவட்டங்களில் 20 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன; 40 மின்கோபுரங்கள் சரிந்தன; 800 மின்மாற்றிகள் மற்றும் 4,500 மின் பகிர்மானப் பெட்டிகள் சேதமடைந்துள்ளன; 15,000 கிலோமீட்டருக்கு உயர்நிலை மின்கம்பிகள் பழுதுபட்டன. தீயணைப்புப் படையினரோடு சேர்ந்து மின் துறை ஊழியர்கள் கால நேரம் பார்க்காமல் செயல்பட்டு, பல இடங்களுக்கு மின்சாரம் வழங்கினார்கள். வாகனப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலைகளின் குறுக்கே வீழ்ந்த மரங்களை, புயல் வீசிய அன்றைய இரவே அந்தந்தப் பகுதி இளைஞர்களின் உதவியோடு காவலர்கள் அகற்றியதைப் பார்க்க முடிந்தது. புயல் பாதித்த ஒருசில மணி நேரத்துக்குள்ளேயே முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகக் களத்தில் இறங்கி, நிவாரண வேலைகளைத் துரிதப்படுத்தினார்.

இழந்த பசுமையை மீண்டும் பெற, நாம் ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டிய தருணம் இது. ஏனெனில், `ஒரு குளம், பத்து கிணறுகளுக்குச் சமம். ஓர் ஏரி, பத்து குளங்களுக்குச் சமம். ஒரு புத்திரன், பத்து ஏரிகளுக்குச் சமம். ஒரு மரம், பத்து புத்திரர்களுக்குச் சமம்' என்கிறது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுரபாலர் அருளிய விருக்ஷ ஆயுர்வேதம். இதை நிஜமாக்க வேண்டாமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு