Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 16

ஆண்பால் பெண்பால் அன்பால் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 16

#MakeNewBondsலீனா மணிமேகலை, படங்கள்: அருண் டைட்டன்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 16

`வயது 36. சிங்கிள். திரைப்படத் துறையில் இயக்குநராக இருக்கிறேன். கவிதைகள் எழுதுவேன்' என அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கினால், குலுக்கலில் நெளியும் கைகளில் ஆயிரம் கேள்விகள்.

இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் கை குலுக்கக்கூட ஆள் இல்லாதபோது, வாடகைக்கு வீடு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய பகல் கனவு. `பிராமின்ஸ் ஒன்லி’, `ஃபேமிலி ஒன்லி’, `ஐ.டி புரொஃபஷனல்ஸ் ஒன்லி’, `வெஜிடேரியன்ஸ் ஒன்லி’களைத் தாண்டி நாளிதழ்களில் வெளியாகும் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்கள் ஏதேனும் ஒன்றிரண்டைக் குறித்துக்கொண்டு, வீட்டு உரிமையா ளர்களிடம் பேசிப்பார்த்தால் புரிந்துவிடும், `வீடு' என்றால் `ஆண்பால்' என்பது.

ஹைஸ்கூல் படிக்கும்போது இந்தியைத் தனியாகப் படித்து, பிராத்மிக், ராஷ்ட்ர பாஷா, பிரவீன் வரை பரீட்சை எழுதியிருக்கிறேன். அந்த மொழியில் `மேஜை, நாற்காலி, கட்டில், கத்தி' என உயிரற்றப் பொருட்களுக்கும் பால்விகுதி வருவது, இப்போதும் குழப்பமாக இருக்கும். தமிழ் மொழியில் அந்தச் சிக்கல் இல்லை என்றாலும், தமிழ்ச் சமூகத்துக்கு `பால்' என்பது எப்போதுமே சிக்கல்தான்.

`கல்யாணம் ஆகலையா... ஏன், ஓ... விவாகரத்தா... எதனால் விவாகரத்து ஆச்சு, வேறு கல்யாணம் ஏதும் பண்ணலையா, அப்பா என்ன செய்றாரு... என்ன... இறந்துட்டாரா, அச்சச்சோ பாவம்! எங்க வேலை செய்றீங்க, படம் எடுக்குறீங்களா, என்ன படம்?' எனத் துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கும் வாடகை வீட்டுக்கும் பல மைல்கள் கடக்க வேண்டியிருக்கும். கடந்த ஐந்து வருடங்களில் ஆறு வாடகை வீடுகள் மாறிய என் அனுபவங்களைக் கொண்டு மிக மிக மிக நீண்ட நாவலே எழுதலாம்.
 
தனித்து வாழும் பெண், தமிழ்ச் சமூகத்தில் இன்னும் தீண்டப்படாத ஜந்துதான். ஓராயிரம் சுட்டுவிரல்கள் அவள் இருக்கும் திசை நோக்கி நீண்டுக்கொண்டே இருக்கும். தந்தை, சகோதரன், கணவன் என குடும்ப ஆண்களின் துணை இல்லாது, தன் சொந்த சம்பாத்தியத்தில் தனியே ஒரு பெண் நேர்மையாக வாழ முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், இன்னும் நம் சமூகத்துக்கு வாய்க்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 16சுயதேர்வுடன் அமைப்புகளுக்கு வெளியே வாழும் பெண்களை, சதா சந்தேகத்துடனும் கண்காணிப்புடனும்தான் சமூகம் அணுகுகிறது. தனித்த பெண் சந்திக்கும் ஒவ்வொரு நபரும், ஓர் ஒழுங்கு போலீஸ்தான். உடுத்தும் உடை, பேசும் மொழி, செய்யும் வேலை, மேற்கொள்ளும் பயணங்கள், உடன் இருக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாவற்றையும் எடைபோட்டுக் கொண்டே இருக்கும் கூட்டம், ஒரு சின்ன சரிவு ஏற்பட்டாலும் `அவளுக்கு இது தேவைதான்' எனப் பழிக்கத் தயாராகிவிடும்.
போறவன், வர்றவன், பெயர் தெரிஞ்சவன், தெரியாதவன், ஆம்பள, பொம்பள, கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், ஃபெமினிஸ்ட் என வகைதொகை தாண்டி எல்லோரிடமும் `ஆண் துணை இல்லாத பெண்'ணைக் குறித்த ஒரு மரியாதைக் குறைவு இருப்பது கசப்பான உண்மை. கற்கள் எறிவதற்கு உரிய எளிய திசையாக, தனித்து வாழும் பெண் எப்போதும் இருக்கிறாள்.

`Personal is Political' என்ற ஒரு வாசகம் உண்டு. சரி என்று நான் நம்பும் விஷயத்துக்கும் வாழ்வுக்கும் நடுவே பெரிய இடைவெளி இல்லாமல் வாழத் தலைப்படுவது உண்டு. என் குடும்பக் கண்ணியில் இருந்து விலகி முதன்முதலாக சாதி மீறி, மதம் மீறி, தாலி போன்ற சடங்குகள் மறுத்து திருமணம் செய்தேன். பிறகு, கணவனிடம் இருந்து மணவிலக்கு வாங்கினேன். `குடும்பம், திருமணம், சாதி, மதம், சட்டம் என நடப்பில் இருக்கும் எந்த அமைப்பும், சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்ணுக்கானது அல்ல' என்று அனுபவபூர்வமாக உணர்ந்ததால், இவை எல்லாவற்றுக்கும் வெளியே ஒரு வாழ்க்கையைச் சாத்தியமாக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்.

`நீ என்ன `அனார்க்கிஸ்ட்டா?' (Anarchist) என்று பலர் கேட்பது உண்டு. `இல்லை, ஒரு பறவை போல, புழு பூச்சி போல, காட்டுச்செடி போல, ஆட்டுக்குட்டி போல தன்னியல்பாக வாழ நினைக்கும் உயிரி' என்று நான் பதில் சொல்வதும் உண்டு.

`பொம்பளப்புள்ளயா... தலையப் பின்னாம விரிச்சுப்போட்டு அலையுறா, பொம்பளப் புள்ளயா கால்களைச் சேர்த்து உக்காராம பப்பரப்பானு விரிக்கிறா, பொம்பளப்புள்ளயா அடக்கமா இருக்காம, இடி இடின்னு சிரிக்கிறா, பொம்பளப்புள்ளயா பொழுது சாயுறதுக்குள்ள வீடு சேராம ஊர் மேயுறா, பொம்பளப்புள்ளயா சட்டி, பான தேய்க்காம   ஓயாம விளையாட்டுப்புத்தி, பொம்பளப்புள்ளயா ஒரு இடத்துல குந்தாம கால்ல சுடுதண்ணி ஊத்திட்டுத் திரியுறா, பொம்பளப்புள்ளயா வாயடக்கம் இல்லாம எதுத்து எதுத்துப் பேசறா' என்று வளரும் பருவத்தில் என் தன்னியல்பான நடத்தைகள் எல்லாம் குற்றமாக்கப்பட்டன.

`இவ ஆம்பள மாதிரி கேள்வி கேக்குறா, இவ ஆம்பள மாதிரி அக்கரைக்கு இக்கரை நீச்சல் அடிக்கிறா, இவ ஆம்பள மாதிரி சுவரேறிக் குதிக்கிறா, இவ ஆம்பள மாதிரி மரத்துக்கு மரம் தாவுறா, இவ ஆம்பள மாதிரி பைக் ஓட்டுறா, இவ ஆம்பள மாதிரி தெருவுல சண்டை இழுக்குறா...' என என் மேல் தரப்பட்ட பிராதுகள் ஒவ்வொன்றும், நான் விரும்பிச் செய்தவை. அனைத்தும் `பால்' மீறிய செயல்களாகக் கருதப்பட்டதன் அடிப்படையிலானவை.

பால் அடையாளம் பெரும் லஜ்ஜையாக, முட்டுக்கட்டையாக, கைவிலங்காக பதின் பருவத்திலேயே எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டதால், பெண்ணாகப் பிறந்துவிட்டதால் `நீ இதைச் செய்ய முடியாது' எனச் சொன்னதை எல்லாம் செய்துபார்ப்பது எனக்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. `செய்' எனச் சொன்னால் செய்யாமல் ஏய்ப்பதும், `செய்யாதே' எனச் சொன்னால் செய்து பார்ப்பதும் பிடிவாதமும் தேவை இல்லாத கட்டுப்பாடுகள் வளர்த்துவிடும் குணங்கள்தானே!

18 வயதில், `திருமணம் செய்துகொண்டு,  பிறகு எதுவானாலும் படி' எனக் கட்டாயப்படுத்திய பெற்றோரை மீறிப் படித்தேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 16

பொறியியல் படிப்பில் பெண்கள் தேர்வுசெய்யத் தயங்கும் இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து டிஸ்டிங்கஷனில் பட்டம் வாங்கினேன். கல்லூரி இறுதி ஆண்டில், மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாம் எனப் பரீட்சைகளை எழுதித் தள்ளிக்கொண்டிருந்த காலத்தில், தற்செயலாகக் கிடைத்த சினிமா அனுபவம் எனக்குள் இருக்கும் படைப்பாளியைக் கண்டெடுக்க உதவியது .

அப்பா ரகுபதி, தமிழ் ஆசிரியர். அவர் கற்றுக்கொடுத்திருந்த தமிழ், என்னுள் ஊறித் தினெவெடுத்திருந்தது. அம்மா ரமாவின் கம்யூனிசப் பின்புலம் தந்திருந்த துணிச்சல் கைகொடுத்தது.

என் கல்லூரித் தோழர்கள் எல்லோரும் அமெரிக்காவில் செட்டில் ஆனபோது, நான் எழுத்தும் சினிமாவும்தான் என் வாழ்க்கை என முடிவெடுத்தேன். `ஒழுக்கம்கெட்ட பெண்கள்தான் கலைத் துறையைத் தேர்ந்தெடுப்பார்கள்' என உறவுகள் கடுமையாக எதிர்த்தன. பிரமாண்டமான ஆண்குறியாக இறுகித் தடித்திருந்த சினிமா, கலை, இலக்கிய, அரசியல் துறைகள் தந்த சவால்கள், எனக்கு உரிய பரந்த ஆடுகளத்தைத் தந்தன. தெருவில் என்னையே தூக்கி எறிந்துக்கொண்டேன்.
உண்மையான கற்றல் அந்தப் புள்ளியில்தான் தொடங்கியது.

கற்றல் என்பது, ஏற்கெனவே தவறாகக் கற்றுக்கொடுக்கப்பட்டதைக் கைவிடுதலும்தானே!

தமிழ் சினிமா, ஆணின் உலகம். பெண்ணின் உடலைக் காட்சிப் பொருளாக்குவதைத் தவிர, பெண்ணுக்கு வேறு எதையும் செய்துவிடும் பிரயத்தனமும் அதற்கு இல்லை. பழைய பண்ணையார் மனப்பான்மையோடும், வீங்கிய ஆண் ஈகோவோடும் வலம்வரும் இயக்குநர்கள், சரிசமமாக அவர்கள் முன் அமர்ந்து விவாதம் செய்யும் பெண்ணை, அவளின் அறிவை வெறும் திமிராக மட்டுமே பார்க்கும் இயலாமை நிறைந்தவர்கள்.

உதவி இயக்குநராக மிகக் குறைந்த காலமே வேலைசெய்தேன். டைரக்டர் சார் ஸ்பாட்ல நிற்கும்போது, வேறு யாரும் உட்காரக் கூடாது; பேசக் கூடாது போன்ற சர்வாதிகாரச் சட்டங்களுக்கும் கலைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகள், ஒவ்வொன்றாக என்னைக் குடைய ஆரம்பித்தது.

எடுக்கும் படம் நல்ல படமா என்பதைத் தாண்டி, கொஞ்சம்கூட ஜனநாயகம் இல்லாத வேலைச் சூழல் அலர்ஜியாக இருந்தது. சுற்றிலும் போலி பம்மாத்துக்கள். நான் வேலைசெய்த யூனிட்களில், டெக்னீஷியனாக ஒரே ஒரு பெண்ணாக நான் மட்டும் வேலைசெய்தேன். லொக்கேஷனில் என்னை `நடிகையா..?' என்றுதான் பார்ப்பவர்கள் கேட்பார்கள். `இல்லை, நான் அசிஸ்டன்ட் டைரக்டர்' என்றால், மேலும் கீழும் விநோதமாகப் பார்ப்பார்கள்.

தலையை இறுக்கக் கட்டி தொப்பி மாட்டி தொளதொள  டி-ஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு நின்றாலும் `நீ அழகா இருக்க' என்ற வாசகத்தின் குறுக்குவாசல் வழியாக நட்புகோரும் மக்கு ஆண்களோடு ஒரு காவியமும் படைத்துவிட முடியாது என்பதை உணர முடிந்தது. இது எனக்கான இடம் அல்ல என்பதை உணர்ந்து, சுயாதீன சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன்.

`சரியோ, தவறோ நாமே செய்து பார்த்துவிடுவோம்' என்ற நம்பிக்கையில் சிறிய கேமராவோடும், காலரில் மாட்டிய மைக்ரோபோனோடும், தோள்பையில் தொங்கும் மேக்புக்கோடும், தன்னந்தனியாக 2002-ம் ஆண்டில் ஒரு நாளில்... சினிமா எடுக்கக் கிளம்பினேன்.

இன்று வரை சிறியதும் பெரியதுமாக ஒரு டஜன் படங்கள், திரையிடல்கள், விவாதங்கள் என 300 கிராமங்கள், 30 நாடுகள், 3,000 இரவுகள் என, பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பெண்ணாகப் பிறந்ததால், என் தந்தை மரணம் அடைந்தபோது அவரை வழியனுப்ப என்னை சுடுகாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால், என் `தேவதைகள்' படத்துக்காக புதுவையில் அநாதைப் பிணங்களை அடக்கம்செய்யும் கிருஷ்ணவேணியம்மாவைப் படம்பிடிக்க முதன்முதலில் கேமராவோடு இடுகாட்டில் நுழைந்தேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 16

என் பாட்டி ராஜேஸ்வரிக்கு 11 வயதிலும், என் அம்மா ரமாவுக்கு 15 வயதிலும் திருமணம் செய்துவைத்ததைக் கேள்விகேட்க, நான் பிறந்திருக்கவில்லை. ஆனால், என் `பலிபீடம்' படம் மூலம், குழந்தைத் திருமணங்களை ஆவணப்படுத்தி விவாதங்களை எழுப்பினேன்.
பெண்கள் சாதியாகவும் பாலினமாகவும் இரண்டடுக்குகளில் ஒடுக்கப்படுவதைத் தட்டிக்கேட்க, என் படங்களைப் பயன்படுத் தினேன். மீனவர்களை, ஆதிவாசிகளை, அகதிகளை, போர் தின்ற மனிதர்களைச் சந்தித்துப் புரிந்துக்கொண்டு அரவணைக்கும் வாய்ப்பை எனக்கு கேமராதான் வழங்கியது. அந்தப் பயணங்களும், பயணங்களில் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும்... மொழி, தேசம், நிறம் என்ற அடையாளங்களைக் கடந்த, குறிப்பாக பால் அடையாளத்தைக் கடந்த உயிரியாக என்னை மாற்றிவிட்டன. எனக்கு நானே தேடிக்கொண்ட ஆசிரியர்கள், பயணங்களிலும் படப்பிடிப்புகளிலும் சந்தித்த மனிதர்கள்தாம்.

பால் கடந்த அன்பும் நட்பும் சாத்தியமா என்றால், `சாத்தியம்' என அடித்துச்சொல்வேன். பரஸ்பர மதிப்பும் மரியாதையும் அதைச் சாத்தியப்படுத்தும். சினிமா, ஒரு கூட்டு முயற்சி. அதில் பால் சார்ந்த உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் இருந்தால், இணைந்து வேலைசெய்து படைப்புகளை உருவாக்க முடியாது.

என்னுடன் 15 வருடங்களாகப் பணியாற்றும் எடிட்டர் தங்கராஜ், என் ஆத்ம நண்பர். அவர் பயாலஜிக்கலாக ஆண் உடலுடன் இருக்கிறார் என்பதும், நான் பயாலஜிக்கலாக பெண் உடலுடன் இருக்கிறேன் என்பதும் எங்கள் நட்புக்கோ வேலைகளுக்கோ ஒரு பொருட்டாகவே இல்லை.

படைப்பாற்றல் வெளியே பால் அடையாளங்கள் மறக்கடிக்கப்படுவதும், பால் பேதங்கள் அடித்துச் செல்லப்படுவதையும் நான் திரைப்பட உருவாக்கப் பணிகளில் அனுபவித்தி ருக்கிறேன். பல சமயங்களில் படப்பிடிப்புக் குழுவுடன் காடுகளிலும் மலைகளிலும் கடற்கரைகளிலும் ஒன்றாகத் தங்கி, உறங்கி, உடை மாற்றி வேலைசெய்யும் சூழல்தான் இருக்கும். படைப்புதான் நாங்கள் காணும் கூட்டுக்கனவு. பால் படிநிலைகள் அங்கு குறுக்கே வர அனுமதியே இல்லை.

ஒளிப்பதிவாளர்கள் சன்னி ஜோசப், ரமணி, ரதீஷ் ரவீந்தரன், தனேஷ், அரவிந்த் என, என் நண்பர்கள் பால் கடந்த ஆன்மாக்கள். எங்கள் உறவிலும் பரிவர்த்தனைகளிலும் அன்பிலும் பால் உறுத்தியதே இல்லை.

இன்னும் சரியாகச் சொன்னால், என்னை பெண்பால் என நினைவுறுத்தும் யாரிடமும் என்னால் தொடர்ந்து நட்பு பாராட்டவோ, இணைந்து வேலைசெய்யவோ முடியவில்லை. வாழ்விலும் தாழ்விலும் அரவணைக்கும் என் சகோதரன் இளங்கோ, நிபந்தனையற்று நேசிக்கும் என் இணையும் சிற்பியுமான எஸ்வந், சித்தப்பா என நான் உரிமையுடன் அழைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா, ஓவியர் மணிவண்ணன், கவிஞர் சாகிப், வாசகராக இருந்து நண்பரான தீரா, என் மொழிபெயர்ப்பாளரும் உயிர் நண்பருமான பாலக்காடு ரவி, நிழற்படக் கலைஞர் விஜயசேகர் என, என் எல்லா மேட்னெஸ்களையும் பொறுத்துக்கொள்ளும் ஆண்பால் வட்டம் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

காலம் சென்ற என் தந்தை ரகுபதி நேசித்ததைப்போல், யாரும் இன்னும் என்னை நேசிக்கவில்லை. `கண்ணம்மா... நீ என்ன துறையைத் தேர்ந்தெடுத்தாலும், தமிழை மறக்கக் கூடாது. விடாது உழைக்கணும். பெண்ணுக்கு முக்கியம் பொருளாதாரத் தற்சார்பு. மற்றது எல்லாம் உன் தேர்வுதான்' என்று அவர் என் கைகளை அவர் கைகளில் பொதித்துச் சொன்ன ஈரம் இன்னும் காயவில்லை. அவர் என்னைத் திடீரென விட்டுச் சென்றதாலோ என்னவோ, நான் நேசிப்பவர்களும் என்னை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பதற்றம் எப்போதும் என்னை வாட்டும். ஆணோ, பெண்ணோ, உறவுகளில், `என்றென்றும்' என்ற நிலைத்த உணர்வு சாத்தியம் இல்லை என்றே நம்புகிறேன்.

மொழி எனது எதிரி. பாலின ஏற்றத்தாழ்வுகளின் ஊற்று, மொழி. சங்க காலத்தில் எழுதியதாகச் சொல்லப்படும் ஒளவையார், வெள்ளிவீதியார் போன்ற கவிஞர்கள் தவிர, ஆறாம் நூற்றாண்டின் காரைக்கால் அம்மையார், எட்டாம் நூற்றாண்டின் ஆண்டாள் தாண்டி தமிழில் பெண்கள் எழுதிய வரலாறு இல்லை. 2000-ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பெண்கள் எழுதுகிறார்கள் அல்லது ஆண் மைய மொழியை அடித்து, நிமிர்த்தி, வளைத்துத் தமதாக்கிக்கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லலாம்.

மொழிக்கு, பாலினம் இல்லை. ஆனால், பெண்கள் இந்த இந்தச் சொற்களைப் பயன்படுத்துவது ஆபாசம். மொழிக்கு, பாலினம் இல்லை. ஆனால், பெண்கள் அந்த அந்த விஷயங்களை வெளிப்படையாக எழுதுவது அசிங்கம். மொழிக்கு, பாலினம் இல்லை. ஆனால், நமக்கு என மரபு இருக்கிறது. அதை எப்படி பெண்கள் மீறலாம்? மொழிக்கு, பாலினம் இல்லை. ஆனால், பெண்களாக இருப்பதாலேயே கவனம் பெற்றுவிடுகிறார்கள் எனப் பலவாறு ஆண் எழுத்தாளர்களே காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

என் முதல் கவிதைத் தொகுப்பான `ஒற்றையில்லையென' புத்தக அட்டையில், நிர்வாணப் பெண்ணின் ஓவியம் இருக்கும்.வந்தவாசியில் நடந்த முதல் விமர்சனக் கூட்டத்தில் விமர்சகர் அந்தப் புத்தகத்துக்கு பிரவுன் கவர் போட்டு எடுத்துவந்திருந்தார். அவர் நம் ஊர் கோயில்களுக்கு எல்லாம் கண்ணைக் கட்டிக்கொண்டு போவார்போல! அன்று தொடங்கி இன்று வரை சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. பெண்களின் `இருப்பை' சதா சர்ச்சைக்கு உள்ளாக்குவதால், அவர்களின் வீரியமான படைப்புகள் சரியான வாசகக் கவனமோ, விமர்சனமோ பெற முடிவது இல்லை என்பதுதான் துயரம்.

தமிழ் இலக்கிய உலகம், விசித்திரமானது. தங்கள் கருத்தியல்களை வாசலில் செருப்பைக் கழற்றிவிடுவதுபோல விட்டுவிட்டு, `ஏய்... என்னடி சமையல்?' எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழையும் ஆண்கள்தான் அதன் நாயகர்கள். தெருவில் சீட்டியடிக்கிறவனிடம்கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனால், புரட்சி பேசுபவர்கள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்கிறவர்களில் பெரும்பாலானவர்கள், எழுதும் பெண்ணை, வாசகிகளை வெறும் செக்ஸுவல் ஆப்ஜெக்ட்டாகப் பார்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. `என்னோடு பயணம் வருவாயா? சரிக்கு சரி சிகரெட், சரக்கு அடிப்பாயா? இரவு இரவாக விவாதம் புரிவாயா?' என, கட்டபொம்மன் மாதிரி நம்ம இலக்கியவாதிகள் சவால்விடுவதோடு சரி. `No' சொல்லும் ஒரு பெண்ணை எதிர்கொள்ளும் மன உயரம்கூட இல்லாமல்தான் இருக்கிறார்கள்.

இந்த ஆண் எழுத்தாளர்களின் மன விகாரங்களுக்கு இப்போது ஃபேஸ்புக் புதிய மேடையை அமைத்துக்கொடுத்திருக்கிறது. பெண்ணின் படைப்புகளைவிட பெண் குறித்த பேச்சுக்கு அடிமையான இலக்கிய உலகில்தான், நானும் இயங்கிக்கொண்டிருக்கிறேன் என்பது சமயங்களில் ஆயாசமாக இருக்கும்.
 
இலக்கியக் கூட்டத்துக்குப் போய், பல நாட்கள் இரவு பகலாக விழித்து எழுதிய கட்டுரையை வாசித்திருப்பேன். ஆனால், அடுத்த நாள் நான் அணிந்திருந்த பிளவுஸ் குறித்த சலசலப்புதான் ஓடிக்கொண்டிருக்கும். நான் பியூட்டி பார்லருக்குப் போறேன், வெள்ளைக் கார்ல வர்றேன், ஜீன்ஸ் அணிகிறேன் என்பது எல்லாம்கூட விமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியதுகூட ஒரு பெண்தான் என்பது நகைமுரண்.

ஒரு பெண், பொருளாதாரத் தற்சார்போடு தொடர்ந்து இயங்குவதையும், ரசனையாக வாழ்வதையும், தன்னை அழகாக வைத்துக்கொள்வதையும்கூட ஒழுங்குப் பிரச்னையாகப் பார்த்து, பெண்கள்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆதிக்கச் சமூகம், பெண்களுக்கு ஏற்படுத்தும் கடும் உளவியல் சிக்கல் இது. பெண்ணியச் சிந்தனைகளுக்கும் ஆணின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் இந்தச் சிக்கலில் சக பெண் எதிரியாகிறாள்.

தந்தைவழிச் சமூகம், பெண்ணையும் பெண்ணையும் பிரித்துவைத்துதானே இத்தனை மாமாங்கமாகக் கோலோச்சுகிறது. `இந்தச் சூழலில் ஏன் தொடர்ந்து எழுத வேண்டும்?' என இதை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். எல்லாவற்றையும் எழுதிக் கடக்கும்போது என்னை நானே சோர்வில் இருந்தும் அவநம்பிக்கைகளில் இருந்தும் விடுவித்துக் கொள்ளவும் முடிகிறது. மனதில் வெறுப்பை மண்டிவிடாமல், முரண்களைத் தாண்டி, காயங்களை மறந்து, ஒரு முத்தத்தால் சட்டென எல்லோரையும் அரவணைத்துக்கொள்ள முடியும் பித்துநிலையை வரமாக வேண்டி தொடர்ந்து எழுதுகிறேன்; இயங்குகிறேன்.

தரப்பட்ட மத அடையாளத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதுபோல, சாதி அடையாளத்தை நிராகரிப்பதைப்போல, பால் அடையாளத்தையும் கட்டுடைக்கும் தேவை இருக்கிறது. ஆண்-பெண் என்ற இருமை எதிர்வுகளுக்கு வெளியே பால் இனத்தை ஒரு நிறப்பிரிகையாக, திரவமாகப் புரிந்துக்கொள்ளும் புள்ளிக்கு நகர்ந்து வந்திருக்கிறேன்.

திருநங்கை, திருநம்பி, இடையிலிங்கர், நடுநர், இருநர், முழுநர் என ஆண்-பெண் பைனரிக்கு (binary) வெளியே விளிம்பில் நிற்கும் பால் புதுமையரின்(gender queer) பக்கம் நின்று வரலாற்றை, கலை, இலக்கியம் வழிக்குத் திருப்பி எழுத விரும்புகிறேன். யாரும் யாருக்கும் மேலானவர்களும் அல்ல; கீழானவர்களும் அல்ல. வேறானவர்கள் என்பதை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, அந்த வேற்றுமையை மதிக்கக் கற்றுக்கொள்வது பேதங்களைக் கடக்க உதவும். பால், வெறும் பண்பாட்டு அலகுதானே? அன்பே உலக நாகரிகம்!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

`கூலி வேலைக்குப் போனா, களை வெட்டப் போனா, 20 ரூபா தர்றாங்க. நடவுக்குப் போனா, 15 ரூபா தர்றாங்க. நமக்குப் பத்தலை. குழந்தைங்களைப் படிக்கவைக்க முடியலை. உதவி கேட்டா, `உனக்குத் தாலியா கட்டியிருக்கேன், கல்யாணமா பண்ணியிருக் கிறேன் போடி'ன்றானுவ. மாத்தம்மாவுக்குச் சுத்திவிட்டதால் படுக்கத்தான் கூப்பிடுறானுவ. திருவிழாவுல மறுபடியும் ஆடப்போனா, கழுத்தைப் பிடிக்கிறது, நாலு ஆம்பளைங்க உடம்பைப் பிடிக்கிறது, ஆடுறது, பாடுறதுனு அவங்க என்னன்ன கேட்கிறாங்களோ, அதைச் செய்துன்னு வரணும். எப்படிப் பொழைக்கிறது, என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை!’

- `மாத்தம்மா' ஆவணப்படத்தில் இருந்து...

`வெளியே, நாங்க கடலுக்கு மீன் பிடிக்கப்போனா, சாமிக்குத்தம் வரும்'னு சொல்றாங்க. `அப்படி, பெண்கள் தொழிலுக்குப் போனா குத்தம்'னு ஆண்டவர் எங்ககிட்ட சொல்லலை. படைச்சதில் இருந்து கடல்லதான் உழைக்கணும்னு ஆண்டவன் எங்களைப் பிடிமானம் பிடிச்சுப்போட்டிருக்கான். இந்தக் கடல் இல்லைன்னா, எங்களுக்கு வவுத்துப்பாடு இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு எல்லாம். இந்தக் கடல், மீனவனுக்குச் சொந்தம்; மீனவப் பெண்களுக்குச் சொந்தம்!’

- தேவதைகள்' ஆவணப்படத்தில் இருந்து

`அஞ்சாவது வரை படிச்சேங்க. அக்காவுக்குக் குழந்த பிறந்தவுடன் நிறுத்திட்டாங்க. அப்புறம் வயசுக்கு வந்துட்டேன். ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்க. வீட்டுல தனியாத்தான் இருந்தேன். இப்ப விறகு வெட்டப்போறேன். வயசுக்கு வர்ற வரைக்கும்தாங்க படிப்பு. யாரையாவது இழுத்துட்டு ஓடிருவோம்னு பள்ளிக்கூடத்துக்கு விட மாட்டேங்கிறாங்க!’’
 
- `பலிபீடம்' ஆவணப்படத்தில் இருந்து...

`வெளிக்கு இருக்க, தொலைவுலதான் போகணும். கிட்ட எல்லாம் எங்களுக்கு இடம் இல்லை. இரண்டு மூணு பேர் சேர்ந்துதான் போகணும். ஒத்தையாப் போக முடியாது. அப்ப பார்த்து பிகிலடிப்பாங்க;
கை தட்டிக் கூப்பிடுவாங்க. வெளியே இருக்கும்போது கல் வந்து பொத்பொத்துனு விழும். `என்ன?'னு கேட்டா, `நாங்கதான்டி போடுறோம், எப்படித் திட்டம் போட்டாலும் உங்களைப் பிடிக்க முடியலையே'னு அப்படியே அடிச்சாப்ல மேல்சாதி ஆளுங்க பிடிக்க வந்துட்டாங்க. ஒரே அசிங்கமாப் போச்சு. என்ன சொல்றதுன்னு தெரியலை. `சுதந்திரம் வாங்கியாச்சு'னு சொல்றாங்க. `60 வருஷங்களுக்கு மேல ஆகிடுச்சு'னு வேற சொல்றாங்க. ஆனா, இந்த ஊர்ல பொம்பளைங்களுக்குச் சுதந்திரம் கிடைச்சதுன்னு சொன்னா, அதெல்லாம் சும்மாங்க!’

- `பறை' ஆவணப்படத்தில் இருந்து...