Published:Updated:

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

ம.செந்தமிழன், படங்கள்: வி.பால் கிரேகோரி

Published:Updated:
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29
பிரீமியம் ஸ்டோரி
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29
ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

‘ஊழ்’ எனும் சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். `ஊழ்’ என்பது மிக விரிவாக விளக்கவேண்டிய கருத்து. இதைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லா செயல்களுக்கும் அந்தச் செயல்களின் விளைவுகளால் உருவாகும் மறுசெயல்கள் உண்டு. `வினைப்பயன்’ என்று இதைக் குறிப்பிடுவது நம் மரபு வழக்கம். எந்த வினை (செயல்) செய்தாலும், அதற்கான மறுவினையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு பந்தை சுவரில் அடித்தால், அது எதிர்வினையாற்றி வீசப்பட்ட திசைக்கே மீண்டும் வரும் என்ற பாடத்தை, நியூட்டன் கொள்கையாக அனைவரும் படித்திருப்போம். நான் குறிப்பிடுவது அவ்வாறான பொருள் சார்ந்த கொள்கை அல்ல.

மனித மனதின் செயல்பாடுகளில் உருவாகும் வினைகளுக்கான மறுவினைகளைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். ஒருவர் தன் மனதில் என்னென்ன எண்ணங்களைப் பதித்துக்கொள்கிறாரோ, அவ்வளவு எண்ணங்களுக்குமான மறுவினைகளை அவர் அனுபவிக்க வேண்டும். அவரது எண்ணங்கள்தான் அவருடைய வினைகளாகின்றன. ஆகவே, அந்த வினைகளுக்கான மறுவினைகள் அவரை வந்து சேரும். இதுதான் வினைப்பயன் எனும் பொருளின் அடிப்படை.

`ஊழ்வினை’ என்று நம் மரபில் இதைத்தான் குறித்தார்கள். ஆசான் திருவள்ளுவர் ‘ஊழ்’ என்று அதிகாரமே இயற்றினார். `ஒருவர் எத்தனைக் கோடி பொருட்களைச் சேர்த்திருந்தாலும், அந்தப் பொருட்களை அவர் அனுபவிப்பாரா... மாட்டாரா என்பதை, படைத்தவர் வகுத்த விதிகள்தான் முடிவுசெய்யும்’ என்பது அவற்றில் ஒரு குறள். மனதின் அறச்சிந்தனைக்கு மாறாக வினைசெய்து சேர்க்கும் எல்லா பொருட்களும், சேர்ப்பவருக்குத் துன்பத்தைத்தான் தரும் என்பது இதன் உட்பொருள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

‘ஊழிற் பெருவலி யாவுள’ எனும் குறள் மேலும் வலிமையான மந்திரம். வினைப்பயனில் இருந்து தப்புவதற்காக ஒருவர் முயற்சிகள் செய்தால், வினைப்பயனாகிய ஊழ், அந்த முயற்சிகளை எல்லாம் முந்திக்கொண்டு சென்று வென்றுவிடும் என்பது இதன் கருத்து. தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் இந்தக் கருத்துக்களை மனதில் பதித்துக்கொண்டு நடப்போருக்கு தீவினைகள் நேருவது இல்லை. `ஊழ்’ என்றாலே தீமைகளை மட்டும் செய்யும் எனப் பொருள் அல்ல. `ஆகூழ்’ எனும் சொல்லை ஆசான் வள்ளுவர் கையாண்டிருக்கிறார். நன்மைகளை வாரித்தரும் ஊழ்வினைகளை `ஆகூழ்’ என்கிறார். தீமைகளைக் கொண்டுவரும் வினைப்பயன்களைப் ‘போகூழ்’ என்கிறார்.

`தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது நம் மரபில் தோன்றிய போற்றத்தக்க மெய்யறிவாளர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் அருளிய மந்திரம். இவை அனைத்தும் ஒரு செய்தியை நம்மிடம் அறிவிக்கின்றன. `நீங்கள் என்னென்ன வினைகளைப் புரிகிறீர்களோ, அவை அனைத்துக்குமான மறுவினைகள் உங்களை வந்து சேரும்’ என்பதுதான் அந்தச் செய்தி. உடல்நலக் கேடுகளுக்கு மருத்துவம், புவியின் சூழல் கேடுகளுக்குச் சூழலியல் என்ற வகையில் தனித்தனியாகக் கொள்கைகள் வகுக்கும் நவீனச் சிந்தனைகள் புரிந்துகொள்ளாத செய்தியும் இதுதான்.

எந்தச் சமூகத்தில் மனிதர்களின் உடல்நலம் மோசமடைகிறதோ, அதே சமூகத்தின் புவிச் சூழலும் சீரழிந்துதான் இருக்கும். ஏனெனில், இவை இரண்டும் தனித்தனியானவை அல்ல. திருமூலர் உரைத்தவாறு, ‘அண்டமும் பிண்டமும் ஒன்றுதான்’. டெல்லியில் காற்று மாசுபட்டுவிட்டது என்றால், அங்கு உள்ள மக்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பொருள். சென்னையில் வெள்ளமும் புயலும் தீவிரத் தாக்குதல் நடத்துகின்றன என்றால், அங்கு வாழும் மக்கள் உடல் நலம் இழந்துகொண்டுள்ளனர் என்றும் பொருள்.

`ஊழ்’ எனும் வினைப்பயனில் இருந்து தப்புவது இயலாதது. டெல்லி, சென்னை மாநகரங்களில் உருவாகியுள்ள சூழல் கேடுகளைப் பாருங்கள். டெல்லியைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் யாவும் மிகப்பெரிய தொழிற்சாலைகளால் சீரழிக்கப்படுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை, வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், மின்னணுப் பொருட்கள் (electronincs) போன்றவை எல்லாம் கூட்டுசேர்ந்து அங்கே சூழலைச் சீரழிக்கின்றன. `தீபாவளிப் பட்டாசுகளாலும், வயல்களில் கொளுத்தப்பட்ட வைக்கோல் பொதிகளாலும்தான் இவ்வளவு சீரழிவுகள்’ என்று அரசு சார்ந்த அமைப்புகளும் பல ஊடகங்களும் கருத்து கூறியுள்ளன. இவ்வாறு எல்லாம் கருத்து தெரிவிப்பதும் வினைதான். இந்த வினைகளுக்கான பயனையும் அனுபவிக்கத்தான் வேண்டும்.

சென்னை மாநகரமும் அதைச் சுற்றி உள்ள காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களும் ஈவுஇரக்கம் இல்லாத வகையில் வஞ்சிக்கப்பட்டுவிட்டன. திரும்பெரும்புதூர் எனும் அழகிய கிராமம் இப்போது தொழிற்சாலைப் புகைபோக்கிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. திருமழிசை எனும் வைணவத் திருத்தலம், இப்போது வீட்டுமனைக் கொள்ளைகளுக்கான பலிபீடமாகிவிட்டது. எண்ணூர், வியாசர்பாடி, பாடி, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் வீசும் காற்று, நஞ்சாக மாறியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடிநீர் கடினத்தன்மை மிகுந்துவிட்டது.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

காற்று, நீர் ஆகிய இரு பூதங்களும் சீர்கெட்ட பிறகு, `நிலம்’ எனும் நல்லாள் நிம்மதியாக வாழ வாய்ப்பே இல்லை. நிலமும் தனது துன்பங்களுக்கான மறுவினைகளை ஆற்றத் தொடங்கினால், நிலைமையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

நமது மரபுக்கொள்கைகளின்படி, இவை யாவும் ஊழ்வினைகள்தான். பொதுவான சுற்றுச்சூழல் கொள்கையாக இந்தச் சிக்கல்களைப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சுற்றுச்சூழலியல் என்பது ஓர் அறிவியல். அதன் அடித்தளம் மனித சமூகத்தின் வாழ்வியலைச் சீர்திருத்துவதாக இருக்க வேண்டும். வெகுசிலர்தான் அவ்வாறான புரிதலுடன் செயலாற்றுகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக புவி எங்கும் செயலாற்றிய சூழலியலாளர்கள், எவ்வளவோ நற்செய்திகளை உரைத்துள்ளனர். ஆனால், ‘மரம் நடுவதுதான் சூழலுக்கு உகந்தது’ என்ற ஒரே ஒரு கருத்தை மட்டும் இந்தச் சமூகம் தூக்கிப் பிடித்துக்கொண்டுள்ளது.

மரம் நடுவது, சிறப்பான செயல்தான். ஆனால், அதைவிட முக்கியமானது சூழலைச் சீரழிக்கும் தொழில் துறைகளை நிராகரிப்பதும், தடைசெய்வதும் என்பதை, இந்தச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. உண்மையில் மரக்கன்றுகளை நடுவது, சூழலைக் காக்கும் பணியில் முக்கியமான செயல்திட்டம் அல்ல. ஏனெனில், மனிதர்களின் நவீன நடவடிக்கைகளால் அழிந்துவரும் ஆறுகள், காடுகள், உயிரினங்கள், கடல் பகுதிகள் ஆகியவற்றால் உருவாகும் தீய விளைவுகளை மரங்களால் எள்ளளவும் தடுக்க முடியாது.

ஒரே ஒரு புயல் பல்லாயிரம் மரங்களைச் சாய்த்துவிட்டு நகர்ந்ததை, கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்தோம். சென்னையும் பிற பகுதிகளும் தொழிற்பெருக்கம், நகர்ப்பெருக்கம், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. இவற்றை நிறுத்தாமல் எத்தனை கோடி மரங்கள் நட்டாலும், வேள்விகள் நடத்தினாலும் தப்பிக்க இயலாது. ஏனெனில், மனிதர்கள் தாங்கள் செய்யும் வினைகளுக்கான பயன்களைத்தான் அறுவடை செய்வார்கள்.
ஒரு பக்கம் பாவ நதியில் நீராடுவது, மறுபக்கம் புண்ணிய தீர்த்தத்தைப் பருகுவது என படைப்பின் விதிகளை ஏமாற்ற இயலாது.

`எதனால் இந்தக் கேடு சூழ்ந்ததோ, அதை விட்டொழிப்போம்’ என்று சிந்தித்தால், வினைப்பயன்களில் இருந்து விலகலாம். இது ஊழிக்காலம் என்பது என் கருத்து. இதே கருத்தை நவீன வார்த்தைகளில் ‘புவிவெப்பக் காலம்’ என்றும் அழைக்கலாம். புவி வெப்பமயம் குறித்த ஆய்வறிக்கைகளைப் படித்துப்பார்த்தால் மனம் நடுங்கும். சென்னை, மும்பை, அந்தமான் உள்ளிட்ட பகுதிகள் ‘கடல்கொள்ளும்’ ஆபத்தில் உள்ளவை என அந்த அறிக்கை உரைக்கிறது. இதைப் பற்றி எந்த அரசுத் துறையும் பேசுவதும் இல்லை... செயலாற்றுவதும் இல்லை. உண்மையைச் சொல்வதானால் சென்னை, மும்பை போன்ற ஆபத்துப் பட்டியலில் உள்ள பகுதிகளில் இருந்து படிப்படியாக மக்களை வெளியேற்றும் செயல்திட்டத்தை இந்த அரசுகள் உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம், இந்தப் பகுதிகளில் உள்ள சூழலைச் சிதைக்கும் தொழிற்சாலைகளைக் குறைக்க வேண்டும்.

மிக முக்கியமாக, இந்தப் பகுதிகளில் வந்து குவியும் மக்கள்தொகையையாவது வரையறுக்க வேண்டும். இவ்வாறான செயல்திட்டங்களை, எந்த அரசும் காகிதத்தில்கூட எழுதவில்லை. புவி வெப்பமயமாதலின் விளைவுகளைத் தடுக்கும் நோக்கில்தான் தேசியப் பேரிடர் நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களால் எந்தப் பேரழிவையும் தடுக்க முடியாது. வெள்ளத்தில் மிதப்பவர்களை, படகுகளில் ஏற்றலாம். முறிந்து விழுந்த மரங்களை அறுத்து ஓரம் கட்டலாம். இந்தக் குழுக்களில் பணியாற்றுவோரின் தன்னலமற்றச் செயல்கள் போற்றத்தக்கவைதான். ஆனால், இது தீர்வு அல்ல!

அறிகுறிகளை மட்டுமே கணக்கில்கொண்டு மருந்து தரும் அரைகுறை மருத்துவரைப்போல, புயல், வெள்ளம் போன்ற இடர்களை மட்டும் சமாளிக்கும் ஏற்பாடுகளைத்தான் அரசுகள் செய்துவருகின்றன.

ஒருவேளை, எந்த அரசாவது மேற்கண்ட செய்திகளை மக்களிடம் அறிவித்துவிட்டு, ‘இனிமேல் தொழிற்சாலைகளைக் குறைக்கப்போகிறோம். குடிமக்களாகிய நீங்களும் தொழிற்சாலைகளைச் சாராத வாழ்க்கைமுறையைக் கடைப்பிடியுங்கள்’ என்று அறிவித்தால், அதை இந்தச் சமூகம் ஒப்புக்கொள்ளுமா எனச் சிந்தித்துப்பாருங்கள். `மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’ என்ற ஒரே ஓர் அறிவுரை, நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. எந்த நேரமும் சுழலும் மின்விசிறிகள், கொஞ்சம் குளிர் குறைந்தாலும் முடுக்கிவிடப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், மாடிப்படிகள் இருந்தும் இயக்கப்படும் மின்தூக்கிகள் (Lift), ஊரே அடங்கிய பிறரும் விடிய விடிய ஒளிரும் கடைகளின் முகப்பு விளக்குகள், பெயர்ப் பலகைகள், அறைக்கு ஒன்று என அலறும் தொலைக்காட்சிப் பெட்டிகள் என மின்சாரத்தை அளவுக்கு அதிகமாகவே விரயம்செய்யும் போக்குதான் வளர்த்துள்ளது.

நமக்கு சுற்றுச்சூழலும் நன்றாக இருக்க வேண்டும், மின்சார உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் என்றால், நாம்தான் புதிதாக பூமி ஒன்றைப் படைத்து, அதற்கேற்ற விதிகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

`அடிப்படைத் தேவைகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். தேவைக்கு அதிகமாக எள்ளளவு எடுத்தாலும் அதன் பயனை அனுபவித்துக்கொள்ளுங்கள்’ - இதுதான் நாம் வாழும் இந்தப் பூமியில் உள்ள விதி.

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 29

நமது உள்ளங்கை, பாதங்கள் மற்றும் தோல் பகுதிகளில் மிக அதிகமான நுண்ணுயிரிகள் தங்குகின்றன. புறச்சூழலில் இருந்து நம் மீது அப்பிக்கொண்டு அந்தப் பகுதிகளிலேயே வாழ்கின்றன அவை. இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டால், நமது உடல் நலம் கெடும். உடலின் உள்ளிருந்து சுரக்கும் வியர்வை அந்த நுண்ணுயிரிகளை அழிக்கும். வியர்வையில் உள்ள உப்பு, நுண்ணுயிரிகளை அப்புறப்படுத்தவல்லது. உடலின் உள்ளேயும் உப்பு இதே பணியைச் செய்யும்.

உப்புதான் பூமியின் மிகச்சிறந்த கிருமிக்கொல்லி. ஊறுகாய், மீன் மற்றும் இறைச்சி வற்றல் ஆகிய பதப்படுத்தும் பொருட்களில் உப்பு சேர்ப்பதும் இதே காரணத்தினால்தான். உப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் நுண்ணுயிரிகள் வளராது. கடல் நீரில் ஏன் உப்பு இருக்கிறது எனச் சிந்தியுங்கள். கடல் நீர்தான் நம் பூமியின் உயிர்ச் சூழலைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த பூமியின் சூழல் கெடும் அளவுக்கு உயிரிகள் பெருகினால், அந்த உயிரிகளை அழிப்பதற்காக, கடல் நீர் நிலத்துக்குள் நுழையும்.

மனித குலத்தின் வயது என்ன என, இதுவரை உறுதியாக எவராலும் கூற முடியவில்லை. ஆனால், நாம் வாழும் பூமிக்கு மனிதர்களைவிட கோடானுகோடி ஆண்டுகள் வயது அதிகம். அது, நிறைய உயிரினங்களைப் பார்த்துவிட்டது. நமது அறிவும் செருக்கும் அதன் ஒரு குலுங்கலுக்குச் சமம் அல்ல.

பூமியின் உடலில் அப்பிக்கொண்டுள்ள சின்னஞ்சிறிய நுண்ணுயிரிகள் நாம். நமக்கு வாழ்க்கை மீது எவ்வளவு விருப்பம் உள்ளதோ, அதேபோன்ற விருப்பம் நமது வருங்காலச் சந்ததிக்கும் உண்டு. நமது பேராசைகள், நமது சந்ததியினரின் வாழும் உரிமையைப் பறித்துவிடக் கூடாது. அது மிகப்பெரிய பாவம்.

எந்த அளவுக்கு எளிமையாகவும் இயற்கை விதிகளுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ முடியுமோ, அந்த அளவுக்கு வாழ்வோம்.

‘கேட்டால் கொடுப்பதும், பிடுங்கினால் அழிப்பதும்’ இறைக் குணங்களில் ஒன்று. இயற்கை விதிகளும் இதே குணம் கொண்டவைதான். நாம் தேவையானவற்றை மட்டும் வேண்டி வாழ்வோம்!

- திரும்புவோம்...