கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது 2016. ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000-த்துக்கும் மேற்பட்ட கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் ஜீன்ஸ், லெகிங்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி அணிந்து வந்தவர்களுக்கு, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆடைக் கட்டுப்பாட்டை ரத்துசெய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. தொடர்ந்து நடந்த விவாதங்களின் இறுதியில் ஏப்ரல் மாதம் ஆடைக் கட்டுப்பாடு உத்தரவை ரத்துசெய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ஆண்டு முழுக்கவே ஜல்லிக்கட்டு விவகாரம் பரபரத்தது. பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு தரப்புகளுமே ஜல்லிக்கட்டின் மூலம் தமிழகத்தில் அரசியல் ஆதாயம்பெற துடித்தன. `காங்கிரஸ் அரசுதான் ஜல்லிக்கட்டைத் தடைசெய்தது. ஆனால், ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்த அனுமதிக்கிறோம்’ என, தேர்தலை மனதில் வைத்து அரசாணை வெளியிட்டது பா.ஜ.க அரசு. ஆனால், விலங்குகள் நல அமைப்புகள் ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர, அரசின் ஆணைக்குத் தடா போட்டது உச்ச நீதிமன்றம். அரசுத்தரப்பில் வாதாடியும், `ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது’ என இறுகி நின்றது நீதிமன்றம்.

விழுப்புரம் மாவட்டம், பங்காரம் எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா மூவரும் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிரவைத்தது. படிப்பதற்கோ, தங்குவதற்கோ எந்தவித வசதியும் இல்லாத, கற்றுத்தருவதற்கு சரியான ஆசிரியர்கள்கூட இல்லாத கல்லூரி என்பதால், சரியான கல்வி கிடைக்காமல், தங்களுடைய எதிர்காலம் குறித்த அச்சத்தில் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்தக் கல்லூரிக்குத் தடைவிதித்தது மருத்துவ கவுன்சில்.

விவசாயிகளின் எதிர்ப்புகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, கெயில் திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டியது உச்ச நீதிமன்றம். கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை, இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்தத் திட்டமிட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 310 கிலோமீட்டர் அளவுக்கு குழாய்கள் அமைக்கத் திட்டமிட, இதில் பெரும்பாலான பகுதிகள் நம் விளைநிலங்கள். தமிழ்நாடு அரசும், விவசாய அமைப்புகளும் சட்டப் போராட்டம் நடத்த... இப்போது தீர்ப்பு, கெயிலுக்கு ஆதரவாகவே வந்திருக்கிறது.

குடிபோதையில் சொகுசுகார்களைத் தறிகெட்டு ஓட்டிச்சென்று அப்பாவிகள் மீது ஏற்றிக்கொல்லும் பயங்கரமான சம்பவங்கள் இந்த ஆண்டும் அதிகரித்தன. சென்னையில் அண்ணாசாலை, கதீட்ரல் சாலை, ராஜீவ் காந்தி சாலை என வெவ்வேறு இடங்களில் நடந்த குடிபோதை விபத்துக்களால் பலர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியவர்கள் வசதிபடைத்தவர்கள் என்பதால், ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள், இழப்பீடு கேட்டு பரிதாபகரமாக நீதிமன்ற வாசல்களில் அலைந்துகொண்டிருக்கின்றன.

வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் நால்வரும்தான் 2016-ம் ஆண்டின் `வானத்தைப்போல’ பிரதர்ஸ். மக்கள் நலக் கூட்டு இயக்கமாக உதயமான அமைப்பு, மக்கள் நலக் கூட்டணியாக ஆக்ஷன் எபிசோடுக்குத் தாவியது. செல்ஃபியுடன் புதுக்கோட்டையில் இருந்து எழுச்சிப் பயணம் தொடங்கினார்கள். புறக்கணிப்பு, போராட்டம் என்று இருந்த மக்கள் நலக் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என டெம்ப்போவைக் கூட்டியது. வைகோ துண்டை உதறி உதறி மேடைகளில் ஆக்ரோஷமாக முழங்க, இறுதியில் கொட்டாவிவிட்டது மக்கள் மட்டும் அல்ல.

2016-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டங்களை, காவல் துறை லத்தியால் மட்டுமே டீல் செய்தது. ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளைத் தடியடி நடத்தி, அடித்து உதைத்துக் கைதுசெய்தது காவல் துறை. மாற்றுத்திறனாளிகளின் சில கோரிக்கைகளை ஏற்பதாக அரசு அறிவித்தும், நல்லது எதுவும் நடக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளின் அலைக்கழிப்பு இன்றும் தொடர்கிறது.

கும்பகோணம் மகாமக விழா, 2016-ம் ஆண்டு எந்தப் பிரச்னையும் இன்றி நடந்து முடிந்தது. மிகச்சிறிய நகரமான கும்பகோணத்தில், மகாமக விழாவுக்காக 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து 20,000 காவலர்கள் குவிக்கப்பட்டனர். தீர்த்தவாரிக்கு மூன்று நாட்களுக்கு வாகனங்கள் நகருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, குளங்களில் நிரப்பினர். `24 மணி நேரமும் நீராடலாம்’ என்று புதுமையான அறிவிப்புகள் எல்லாம் செய்தனர். எல்லோரும் குளித்தனர். ஆனால், அது மகாமகக் குளியல்தானா?

`தே.மு.தி.க-வை யாராலும் அழிக்க முடியாது. இது இரும்புக் கோட்டை’ என விஜயகாந்த்தும் பிரேமலதாவும் மேடைகளில் முழங்கும்போதே, தே.மு.தி.க கரைந்துகொண்டிருந்தது. சட்டமன்றத்தில் எட்டு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த். தேர்தல் நெருக்கத்தில் சில எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க பக்கம் தாவ, மக்கள் நலக் கூட்டணியில் ஃபிக்ஸ் ஆனார் கேப்டன். முதல் தேர்தலில் விருத்தாசலம், இரண்டாவது தேர்தலில் ரிஷிவந்தியம் என தொகுதி மாறியவர், இந்த முறை உளுந்தூர்பேட்டையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், உளுந்தூர்பேட்டை அவரை உதறித்தள்ளியது.

விவசாயிகளின் தொடர் தற்கொலையும், விவசாயிகள் மீதான வன்முறையும் அதிகரித்துக்கொண்டே சென்றன. டிராக்டருக்கான கடனைத் திரும்பச் செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில், ஓரத்தூரைச் சேர்ந்த விவசாயி அழகர் தற்கொலை செய்துகொண்டார். விவசாயி பாலன் என்பவரை, டிராக்டருக்கான கடன்தொகையைச் செலுத்தச் சொல்லி நிதி நிறுவன ஊழியர்கள் அடித்து இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி, தமிழ்நாடே பார்த்துப் பரிதாபப்பட்டது. விவசாயிகள் மீதான அரசின் அலட்சியம் தொடர்ந்துகொண்டே இருக்க, உயிர்பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டேபோனது.

ஆணவக்கொலைகள் தொடர்ந்தன. சாதி மாறித் திருமணம் செய்துகொண்ட இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர், உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவின் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. தன் அப்பாவே கூலிப்படையை வைத்துக் கொன்றுவிட்டதாகக் கதறினார் கெளசல்யா. சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி இருந்த ஒரு தலித் இளைஞனின் கனவுகள், நடுரோட்டில் துண்டாடப்பட்டன.

தமிழ்நாட்டையே அதிரவைத்தது மேலூர் நீதிபதி மகேந்திரபூபதியின் தீர்ப்பு. முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியை விடுதலை செய்ததோடு, வழக்கு தொடுத்த மாவட்ட ஆட்சியாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மாஜிஸ்திரேட் பூபதி அளித்த தீர்ப்பு, நீதித் துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாஜிஸ்திரேட் பூபதியின் தீர்ப்பையும் அதன் பின்னணியையும் விசாரிக்க, உயர் நீதிமன்ற நீதிபதிகளை அனுப்பினார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி. கிரானைட் கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக மகேந்திரபூபதி மீதான முதல்கட்ட அறிக்கை வர, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் மாஜிஸ்திரேட்.

பினாமிகளைப் பிரபலமாக்கியது 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். அரவக்குறிச்சி தொகுதியில் கரூர் நிதி நிறுவன அதிபர் அன்புநாதன் என்பவரது குடோனில் ஆம்புலன்ஸ்கள் வந்து போவதாகத் தகவல் வர, கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4.77 கோடி ரூபாய் பணத்தோடு சேர்ந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்களும் சிக்கின. ஆனால், பணத்தைப் பதுக்கியிருந்த அன்புநாதன் மட்டும் இதுவரை சிக்கவில்லை. பணம் யாருடையது, எதற்காக அன்புநாதன் குடோனுக்குள் வந்து அடைந்தது போன்ற கேள்விகளுக்கு, இதுவரை பதில் இல்லை.

திண்டுக்கல் நத்தம் விசுவநாதன், ஊழல் புகார்களால் துவைத்து வெளுக்கப்பட்டார். சூரிய மின்சாரக் கொள்முதலில் விசுவநாதன் 525 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார் வர, நீதிமன்றம் களத்தில் இறங்கியது. மற்ற மாநில மின்சார வாரியங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட்டுக்கு 5 ரூபாய்க்கு வாங்க, தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டும் ஏன் 7 ரூபாய் தர ஒப்பந்தம் போட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்ப, முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டது. அமைச்சர் விசுவநாதன் ஆட்டம்கண்டார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். கட்சியிலும் ஓரங்கட்டப்பட்டார்.

‘`தமிழ்ப் படங்கள்ல இங்க மரு வெச்சிக்கிட்டு, மீசையை முறுக்கிட்டு, லுங்கியைக் கட்டிக்கிட்டு, நம்பியார் `ஹே கபாலி..!’அப்படின்னு சொன்ன உடனே குனிஞ்சு `சொல்லுங்க எஜமா’ அப்படி வந்து நிப்பானே... அந்த மாதிரி கபாலினு நினைச்சியாடா... கபாலிடா!’’ என்ற `கபாலி’ பட டீஸரின் ஒற்றை வரி டயலாக், உலகம் முழுவதும் வைரலாகப் பரவியது. இந்தியாவிலேயே அதிகமுறை பார்க்கப்பட்ட டீஸர் என, 3 கோடி ஹிட்ஸைத் தாண்டியது `கபாலி’ டீஸர். ‘மகிழ்ச்சி’ சொல்லி மகிழ்ந்தனர் ரசிகர்கள். விமானத்தில் விளம்பரம், அமெரிக்காவில் ப்ரீவ்யூ என, ‘கபாலி’ ஃபீவர் உச்சம் தொட்டது.

`காசு... பணம்... துட்டு... மணி... மணி!’ என, திரும்பிய பக்கம் எல்லாம் கோடிகளால் களைகட்டியது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016. தேர்தல் ஆணையம் நடத்திய பணவேட்டையில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் சிக்கியது. உச்சகட்டமாக 570 கோடி ரூபாய் பணத்துடன் மூன்று கன்டெய்னர்கள் திருப்பூரில் பிடிபட்டன. முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி வந்த இந்த கன்டெய்னர்களில் இருந்த பணம் யாருடையது என மீடியாக்கள் அலசி ஆராய, பாரத ஸ்டேட் வங்கி கடைசியாக வந்து `அது எங்கள் பணம்’ என துண்டு போட்டது.

இந்தியாவிலேயே முதல்முறையாக, அதிகபட்ச பண விநியோகத்தைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அன்புநாதன் என்பவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 4.77 கோடி ரூபாய், அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் மகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 1.98 கோடி ரூபாய் பணத்தைக் காரணம்காட்டியும் அதிக வழக்குகளும் பதிவுசெய்யபட்டதாலும், தேர்தலைத் தள்ளிவைப்பதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இருமுறை மறுதேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டு ரத்துசெய்தது. ஐந்து மாதங்கள் கழித்து நவம்பரில் இந்தத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க-வே வென்றது.

232 தொகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆளும் கட்சியான அ.தி.மு.க 134 தொகுதிகளைக் கைப்பற்றி, பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்து சாதனை படைத்தார் ஜெயலலிதா. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, மொத்தம் 98 இடங்களைக் கைப்பற்றியது. நத்தம் விசுவநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட ஐந்து அ.தி.மு.க அமைச்சர்கள், தேர்தலில் தோல்வி அடைந்தனர். விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறை பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அவருடன் 28 அமைச்சர்களும் `கடவுளின் மேல் ஆணையிட்டு’ பதவியேற்றுக்கொண்டனர். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி, 23 நிமிடங்களில் முடிந்தது. அமைச்சர்கள், கோரஸாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்ததும் நேராக தலைமைச்செயலகம் சென்ற ஜெயலலிதா, விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து, 100 யூனிட் மின்சாரம் ரத்து, தாலிக்கு எட்டு கிராம் தங்கம், 500 டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட சில கோப்புகளில் கையெழுத்திட்டார்.

சிலைத் திருட்டு நெட்வொர்க்கை அம்பலப்படுத்தியது சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸ். 80 கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள், திரைப்பட இயக்குநர் வி.சேகர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. இதை அடுத்து, மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் இருந்து சிலைகளைக் கடத்திய தீனதயாளன் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்தது போலீஸ். தீனதயாளனின் வீட்டில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து, திருடப்பட்ட சிலைகள் கணக்கிடப்பட்டு அவற்றைத் தேடும் பணி தொடர்ந்துவருகிறது.

காணாமல்போன குழந்தைகளின் எண்ணிக்கை, முன் எப்போதையும்விட 2016-ம் ஆண்டில் மிக அதிகம். `தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு குழந்தைகள் காணாமல்போகிறார்கள்’ என, தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மோசமானது. கடத்தப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் சாலையோரத்தில் வாழ்வோரின் குழந்தைகள். இதைத் தொடர்ந்து `தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகளைப் பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கூலிப்படைக் கொலைகள், சென்ற ஆண்டு அதிகரித்தன. சென்னை பெரியமேட்டில் ஃபைனான்ஸ் அதிபர் வெட்டிக் கொலை, பெரியமேடு காவல் நிலையம் அருகே சமூக ஆர்வலர் இளங்கோ வெட்டிக் கொலை, அரியலூரில் புதிய நீதிக்கட்சி நிர்வாகி முருகேசன் படுகொலை, கோடம்பாக்கத்தில் உயர் நீதிமன்ற வக்கீல் முருகன் கொலை... என, கூலிப்படையினரின் கொடூரத் தாக்குதல், தலைநகர் சென்னையிலேயே அளவு மீறியது. சிலர் குடும்ப உறவுச் சிக்கல்களில் `தீர்வு’ காணவும் கூலிப்படையினரின் உதவியைத் தேர்தெடுத்தது, மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, தொகுதிக்குள் பிரசார வேனில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது `நன்றி தெரிவிக்க வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமாக நன்றி தெரிவிப்பேன்’ என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனது கடைசி விழாவை ஆர்.கே.நகரில்தான் நடத்தினார்.

`ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்களா?’ என்ற சஸ்பென்ஸ், 2016-ம் ஆண்டில் பல திருப்பங்களைக் கடந்தது. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகளான பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி, சென்னையில் கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. ஆனால், இந்தப் போராட்டத்துக்கும் பேரணிக்கும் அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை, பள்ளி-கல்லூரிகள் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை... எனப் பல சட்டங்கள் இருந்தாலும், அவை தொடர்ந்து காற்றில் பறக்கவிடப்படுகின்றன. `கல்வி நிலையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது என சட்டமே உள்ளது. ஆனால், பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்கூட சிகரெட் எளிதாகக் கிடைக்கிறதே’ என உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அந்த நேரத்தில் மட்டும் களத்தில் இறங்கி கண்டிப்பு காட்டிய போலீஸ், சில நாட்களில் கண்டுகொள்ளாமல் கடக்க ஆரம்பித்தது.

`விருப்பம் இருந்தால் மட்டுமே பள்ளிச் சான்றிதழ்களில் சாதி, மத விவரங்களைப் பூர்த்திசெய்யலாம்’ என்ற அரசாணை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இப்படி ஓர் அரசாணை இருப்பதே பலருக்கும் தெரிவது இல்லை என்பதால், `தமிழக அரசு, சாதி-மத விவரங்களைக் குறிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை என்ற விழிப்புஉணர்வு விளம்பரங்களை அதிகப்படுத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. `கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதம் போன்ற விவரங்களைக் குறிப்பிட விரும்பாத பெற்றோர்களை, பள்ளி-கல்வி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது’ எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

சினிமா பாணியில் நடந்த ரயில்கொள்ளை, அனைவரையும் அதிரவைத்தது. சேலம் கோட்டத்தில் உள்ள வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சேதம் அடைந்த செல்லாத நோட்டுக்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. அதில் சில பெட்டிகள் உடைக்கப்பட்டு 5.75 கோடி ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதை, ஆகஸ்ட் மாதம் தொடங்கி இன்னமும் விசாரித்து வருகிறார்கள். ஆனால், துப்புதுலக்க முடியவில்லை.

கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் மர்மநபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை யார் செய்தது எனத் தெரியாமல் திணறியது போலீஸ். ஒரு வாரம் கழித்து மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்கிற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். கைதின்போதே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்ட ராம்குமார், குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள், புழல் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிவித்தது போலீஸ். கடைசி வரை உண்மை வெளிவரவே இல்லை.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா, ‘மார்ஃபிங் செய்து ஆபாசமாகப் படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடுவேன்’ என மிரட்டியவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்தார். போலீஸோ, வினுப்ரியா மீதே சந்தேகத்தை எழுப்பியது. மிகவும் மோசமான வார்த்தைகளால் ஒரு போலீஸ்காரர் வினுப்ரியாவைப் பேச, இன்னொருவர் லஞ்சமாக செல்போன் கேட்டிருக்கிறார். இங்கே எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முடிவைத் தேர்ந்தெடுத்தார் வினுப்ரியா. தற்கொலைக்குக் காரணமான காவல் துறையினர் மீது பெரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல், மார்ஃபிங் செய்து படத்தை வெளியிடுவதாக மிரட்டிய சுரேஷ் என்பவரை மட்டுமே கைதுசெய்தது காவல் துறை.

`ஐ.பி.எல் போனால் என்ன... நாங்களே சொந்தமா லீக் தொடங்குவோம்’ என, தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களைக் கெத்து காட்டவைத்தது தமிழ்நாடு பிரீமியர் லீக். ஐ.பி.எல் போலவே வீரர்கள் ஏலம், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு, சர்வதேசப் பயிற்சியாளர்கள், ஃப்ளட்லைட்ஸ் போட்டிகள் என, தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் ஆண்டே ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட எட்டு அணிகள் கலந்துகொண்ட முதல் டி.என்.பி.எல் போட்டிகளில், ஒரு கோடி ரூபாய் பரிசையும் சாம்பியன் பட்டத்தையும் வென்றது தூத்துக்குடி.

மீண்டும் ஒரு விமானம் மர்மமான முறையில் மறைந்தது. ஜூலை 22-ம் தேதி சென்னையில் இருந்து அந்தமானுக்குப் புறப்பட்ட ஏ.என் 32 ரக விமானம், ரேடாரின் கண்காணிப்பில் இருந்து பாதியில் காணாமல்போனது. `29 பேருடன் புறப்பட்ட விமானம் எங்கே?’ என்ற மர்மத்தை அதிநவீனக் கருவிகள் மூலம் தேடியும், இந்திய ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல்போன விமானம், அதே மாதத்தில் மூன்று முறை தொழில்நுட்பக் கோளாறால் சரிசெய்யப்பட்ட உண்மை, விபத்துக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்தது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்தது.

பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் வாங்கி, மகன் லெனினை இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தார் மதுரையைச் சேர்ந்த கதிரேசன். படிப்பை முடித்த லெனினுக்கு, வேலை கிடைக்கத் தாமதமானது. ஆனால், கடன் தவணையை உடனடியாகச் செலுத்தச் சொல்லி நெருக்கடி கொடுத்தது, கடன் தொகையை வசூலிக்கும் கான்ட்ராக்ட் பெற்றிருந்த ரிலையன்ஸ் நிறுவனம். மிரட்டல்கள் தொடரவே, தற்கொலை செய்துகொண்டார் லெனின். அவரின் மரணத்துக்குப் பிறகுதான் கல்விக்கடன் வசூலை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர்கள் கொடுத்த அழுத்தங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்களின் மீதான தாக்குதல் தொடர்ந்தது. சேலம் மாவட்டம் முள்வாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக, சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஸ் மனுஷ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு வெளியே பியூஸுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடக்க, கடுப்பானது போலீஸ். நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, ஒரு வாரம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த பியூஸ், தன்னை 30 போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கினர் என்றும் கதறினார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த சரவணன், எய்ம்ஸ் நடத்தும் பட்டமேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வில் 47-வது ரேங்க் எடுத்து, பொது மருத்துவப் படிப்புக்குத் தேர்வானார். கவுன்சிலிங்குக்கு சில நாட்களே இருந்த நிலையில் விடுதி அறையில் சரவணன் இறந்து கிடந்தார். டெல்லி போலீஸ் இதைத் தற்கொலை எனச் சொல்ல, போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் `சரவணன், விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு’ என்றது. ஆனால், இன்று வரை சரவணன் மரணம் கொலை வழக்காக மாற்றப்படவில்லை. நீதிக்காக சரவணனின் பெற்றோர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கப் போராடுகின்றனர்.

சென்னை அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் நடந்த தப்பியோட்டமும் வன்முறையும் இந்த இல்லங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்ற அச்சத்தை, மக்கள் மத்தியில் விதைத்தது. சென்னை கெல்லீஸில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மோதிக்கொண்டதோடு, 33 பேர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடினர். அவர்களை உடனடியாக போலீஸார் பிடிக்க, அதில் நான்கு சிறுவர்கள் கத்தி, பிளேடால் தங்களைத் தாங்களே அறுத்துத் தற்கொலைக்கு முயல... கூர்நோக்கு இல்லங்களின் பல்வேறு அவலங்களை விவாதத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தியது கெல்லீஸ் சம்பவம்.

சம்பளப் பணத்தை ஏ.டி.எம்-ல் இருந்து எடுப்பதற்காகச் சென்ற சென்னை பட்டினம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை நந்தினி, கொள்ளையனிடம் பணத்தைப் பறிகொடுத்து, அதை மீட்கும் முயற்சியில் விபத்துக்குள்ளாகி இறந்த பரிதாபம் பதறவைத்தது. `மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைதான், எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்’ எனப் பட்டினம்பாக்கவாசிகள் டாஸ்மாக் கடையை அகற்றப் போராடினார். ஆனால், டாஸ்மாக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, நந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போது சில மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் மூடப்பட்டதுதான் மிச்சம்.

பெண்கள் மீதான வன்முறையின் அடுத்த கட்டமாக, கல்லூரிக்குள் புகுந்த முன்னாள் மாணவரால் கொலை செய்யப்பட்டார் கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி. கல்லூரியில் நடந்த எல்லா தேர்வுகளிலும் 85 சதவிகித மதிப்பெண் பெற்று, மிகச்சிறந்த மாணவியாகத் தேர்வான சோனாலி, சக மாணவர் உதயகுமாரின் ஒருதலைக் காதல் தொந்தரவு குறித்து, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார், பழிவாங்கும் நோக்கில் கல்லூரிக்கு உள்ளேயே வந்து சோனாலியைக் கொலை செய்த சம்பவம் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கல்வித்தந்தையாக வலம்வந்த எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து, மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டார். மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி, 102 மாணவர்களிடம் 72 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பச்சமுத்துவைக் கைதுசெய்தது குற்றப்பிரிவு போலீஸ். ‘வேந்தர் மூவிஸ் மதன் காணாமல்போன வழக்கில், ஏன் பச்சமுத்துவை விசாரிக்கக் கூடாது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே, பச்சமுத்துவை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது போலீஸ். 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு பச்சமுத்து கைதுசெய்யப்பட்டார். ஆறு மாதகாலம் காவல் துறையுடன் கண்ணாமூச்சி ஆடிய மதன், திருப்பூரில் கைதுசெய்யப்பட்டார்.

அனைத்துவிதமான மக்கள் போராட்டங்களையும் முடக்கிவிட்ட பிறகு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து முதல் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடியும், ரஷ்யாவில் இருந்து அதிபர் புதினும், சென்னையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவும் காணொளிக் காட்சி மூலமாக திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் முதல் அணுஉலை, இப்போது அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியதாக அறிவிப்பு.

பெண்கள் மீதான பட்டப்பகல் படுகொலைகள், அன்பும் அமைதியும் தவழும் தேவாலயங்களுக்குள்ளும் நிகழ்த்தப்பட்டன. தூத்துக்குடியில் கிறிஸ்துவ ஆலயத்துக்குள் நுழைந்து ஃபிரான்ஸினா என்கிற இளம் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் நிகழ்ந்த இந்தப் படுகொலை, தமிழ்நாட்டையே உலுக்கியது. இன்னும் சில நாட்களில் திருமணம் என்ற நிலையில், தன்னுடைய கடைசி வேலை நாளுக்காகப் பணிக்கு வந்தவரை, உலகத்தைவிட்டே அனுப்பியது ஒருதலைக் காதல் வெறி. ஃபிரான்ஸினாவை வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான் கொடூரக் கொலையைச் செய்த கீகன் ஜோஸ்.

ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த, அரசுப் பெண் ஊழியர்களுக்கான ஒன்பது மாத மகப்பேறு விடுப்பு, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அரசாணையாக வெளியானது. `இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள பெண் அரசு ஊழியர்களின் பிரசவக்கால விடுமுறையாக 270 நாட்கள் முழு சம்பளத்துடன் எடுத்துக்கொள்ளலாம். தற்போது பிரசவ விடுமுறையில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்’ என்றது அரசாணை. 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்றபோதுதான், மூன்று மாதகால மகப்பேறு விடுப்பு என்பது ஆறு மாதங்களாக அதிகரிக்கப்பட்டது.

காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. `காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட வேண்டும்’ என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழ்நாடு பதிவு எண்கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களை அடித்து மிதித்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூர் நகரங்களில், 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்தது கர்நாடக அரசு.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன். கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில், 21 வயதான தமிழக வீரர் மாரியப்பன், தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரம் பாய்ந்து தங்கம் வென்று, தமிழ்நாட்டையே தலைநிமிரச் செய்தார் மாரியப்பன். தமிழ்நாடு அரசு, இந்தச் சாதனையைப் பாராட்டி 2 கோடி ரூபாய் பரிசு அளித்தது. வறுமையான குடும்பத்தில் பிறந்து உடல் குறைபாட்டோடு போராடி வென்ற மாரியப்பனின் தங்கம் எளியவர் பலருக்கும் நம்பிக்கை தந்தது.

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து, உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவித்தது மாநிலத் தேர்தல் ஆணையம். அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என செப்டம்பர் 24-ம் தேதி மாலை அறிவித்தது மாநிலத் தேர்தல் ஆணையம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறை, இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்ற காரணங்களால், தேர்தலை ஒத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர, இதை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலை அதிரடியாக ரத்துசெய்து உத்தரவிட்டார்.

நவம்பர் 8-ம் தேதி `இன்று இரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது’ என திடுக் அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. `கறுப்புப்பணம், கள்ளப்பணம், லஞ்சத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை. மக்கள் சில நாட்கள் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார் மோடி. ஆனால், வரிசையில் நின்ற சில முதியவர்கள் உயிர் இழந்தார்கள். இரு மாதங்கள் கடந்த பிறகும் நிலைமை சீராகவில்லை. கையில் காசு இல்லாமல், சொந்தப்பணத்தை எடுக்க முடியாமல், இன்றும் வரிசையில் நிற்கிறான் அப்பாவி இந்தியன்.

செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. ஆனால் அடுத்தடுத்த நாட்களில், ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமானது. லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள்... என 75 நாட்கள் தீவிர சிகிச்சை தரப்பட்டது. டிசம்பர் 4-ம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டிருப்பதாக அறிவித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆரின் கல்லறை அருகிலேயே முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

2015-ம் ஆண்டு டிசம்பரில் மழை வெள்ளத்தால் தத்தளித்த சென்னை, 2016-ம் ஆண்டு டிசம்பரில் காற்றால் கலவரப்பட்டது. டிசம்பர் 12-ம் தேதி மணிக்கு 130 கி.மீ வேகத்தில், புயலைக் கிளப்பி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மூன்று மாவட்டங்களையும் முடக்கியது வர்தா புயல். 6,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது வர்த்தகக் கூட்டமைப்பு. பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது வர்தா. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வர, ஒரு வாரம் ஆனது. ஏற்கெனவே குறைவான மரங்கள்கொண்ட சென்னை, வர்தா புயல் பாதிப்பால் மரங்கள் இல்லா மாநகரமாகக் காட்சியளிக்கிறது.

ஜெயலலிதா இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டதும், `ஓ.பி.எஸ் புதிய முதலமைச்சர் ஆகிறார்’ என்ற செய்தி வெளியானது. நள்ளிரவு 1:15 மணி அளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது அழுதுகொண்டே பதவியேற்ற முதலமைச்சரும் அமைச்சர்களும், கண்ணீர் இல்லாமல்... கதறல் இல்லாமல், அத்தனை அமைதியாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. டிசம்பர் 1-ம் தேதி திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிவித்தது. ஒரு வாரச் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய கருணாநிதி மீண்டும் டிசம்பர் 16-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளரின் அறைக்குள் புகுந்தே சோதனை நடத்தியது வருமானவரித் துறை. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி என்பவரிடம் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், கிலோகணக்கில் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றிய வருமானவரித் துறை, ரெட்டியிடம் இருந்து ராவை நோக்கி வந்தது. பல்வேறு இடங்களில் நடந்த வருமானவரித் துறை சோதனைகளில் கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது. தலைமைச் செயலாளருக்கு அடுத்து அமைச்சர்களின் வீடுகளில்தான் ரெய்டு எனத் தகவல்கள் கிளம்ப, அச்சத்தில் நடுங்கிப்போயிருக்கிறார்கள் மாண்புமிகுக்கள்.