
கோல்டன் சூப்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேவையானவை: கேரட், தக்காளி - தலா 2, வெங்காயம் - 1, பிரியாணி இலை - 1, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய், சோள மாவு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய புதினா இலை - தலா 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, பிரியாணி இலையைச் சேர்த்து வதக்கி, இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் சோள மாவைக் கரைத்து மிளகுத்தூள் சேர்த்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி புதினா இலைகளைத் தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறலாம்.
பலன்கள்: பிரியாணி இலையில் நியாசின், பைரிடாக்ஸின், பேன்டோதெனிக் அமிலம், ரிபோஃபிளேவின் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும். பைல்ஸ், பெப்டிக் அல்சர், ஜீரண மண்டலக் கோளாறுகள், கவுட், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
நேந்திரம் இலை அடை

தேவையானவை: கோதுமை மாவு - 300 கிராம், நேந்திரம் பழம் -1, தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு, தண்ணீர், வாழை இலை - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, சிறிய வட்டமாக இலையில் வைத்து தட்டிக் கொள்ளவும். நேந்திரம் பழத்தைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, வெல்லப் பாகு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிவிடவும். பிறகு, இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல் வைத்து, இலையை சரிபாதியாகப் பிரித்து, அரை வட்ட வடிவில் மூடவும். குக்கரில் இலை அடையை ஆவியில் வேகவைத்து உப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
பலன்கள்: வாழை இலையில் உள்ள சத்துக்கள், உள்ளே இருக்கும் சப்பாத்தி மாவில் இறங்கிவிடும். இதனால் தாதுஉப்புகள் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்க இதைச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
ஆஸ்துமா
பனிக்காலம், ஆஸ்துமா நோயாளிகளுக்கு மோசமான பாதிப்புகளைத் தரும். மூச்சுக்குழாயிலும் நுரையீரலிலும் மூச்சுக்காற்று செல்லும் வழித்தடங்களில் வீக்கம் ஏற்பட்டு தடை ஏற்படுவதுதான் ஆஸ்துமாவுக்கு முக்கியக் காரணம்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் உணவுகள்: ஆப்பிள், கேரட், முட்டை, ஃபிளாக்ஸ் விதைகள், பூண்டு, வேர்க்கடலை, பட்டர் ஃப்ரூட்.