Published:Updated:

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”

நடராசன் பொளேர் பேட்டி!

காபலிபுரக் கடற்கரை...

கடல் அலைகள் கை தட்ட, தனியே நடந்து வருகிறார் தமிழகத்தின் பரபரப்புப் பிரமுகரான ம.நடராசன்.

“அப்போ எல்லாம் பண்டிகை விடுமுறை நாட்களில் நானும் என் மனைவி சசிகலாவும் இந்தக் கடற்கரைக்குத்தான் வருவோம். எங்களோடு தினகரன், பாஸ்கரன், சுதாகரன்னு சொந்தக்காரங்க எல்லோரும் வருவாங்க. அப்போ அவங்க எல்லாம் சின்னப் பசங்க. ‘சித்தப்பா... சித்தப்பா...’னு என் பின்னாலேயே திரிவாங்க. ஹும்... அது ஒரு காலம்!” என்று வானம் பார்க்கிறார்.

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”

தொலைவில் எங்கோ பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க, ``தீபாவளி குஷி அதுக்குள்ள வந்திருச்சா..?” எனச் சிரிக்கிறவர், ‘`சிறு வயதில் எல்லோரையும்போல நானும் தீபாவளியைக் கொண்டாடியவன்தான். ஆனால் பெரியார், அண்ணா, கடவுள் மறுப்பு என என் சிந்தனைகள் விரிந்த பிறகு, எந்தப் பண்டிகையையும் பெரிதாகக் கொண்டாடியது இல்லை.

ஒவ்வொரு தீபாவளி அன்றும், என்னை அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லி, கையில் எனக்கான புத்தாடைகளுடன் வந்து என்னை எழுப்புவார் என் தாய். கல்யாணம் ஆன பிறகு, அம்மாவின் இடத்தில் என் மனைவி. அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கமுடைய நான், தீபாவளி அன்று மட்டும் வேண்டுமென்றே படுத்துக்கிடப்பேன். ‘தீபாவளின்னாலே இப்படிச் செய்யறதை வழக்கமா வெச்சிருக்கீங்க...’ எனச் செல்லமாகக் கோபித்தபடியே, ஒவ்வொரு தீபாவளி அன்றும் என்னை எழுப்பப் பெரும்பாடுபடுவாள் சசி. தீபாவளி என்றாலே, என் வீட்டுக்குக் குறைந்தது பத்து இருபது சொந்தக்காரர்களாவது வந்துவிடுவார்கள். அவர்களை உபசரிப்பதில், அன்று முழுவதும் என் மனைவி பிஸி. நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ்ந்த 1990-ம் ஆண்டு வரையில் எங்கள் வீட்டின் நடைமுறை இதுதான்.

அதன் பிறகு என் மனைவி, போயஸ் தோட்டத்தில் குடியேறினார். இப்போது நான் ஒரு இடத்தில், அவர் ஒரு இடத்தில்!”

“சரி, உங்களுக்கும் போயஸ் தோட்டத்துக்கும் இப்போது தொடர்பு இருக்கிறதா, இல்லையா?”


“என் மனைவி, முதலமைச்சர் வீட்டில் இருக்கும் வரை இந்தக் கேள்விகள் இருந்துகொண்டே தான் இருக்கும். எனக்கும் முதல்வர் வட்டாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நான் சொன்னால், ‘நான் எதையோ மறைப்பதற்காக இப்படிச் சொல்கிறேன்’ என்பார்கள். எனக்கு முதல்வரின் அதிகார மையத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்று யாரேனும் சொன்னால், ‘அட போப்பா, இவங்களை எல்லாம் அங்கே சேர்த்துக்கு வாங்களா... எல்லாம் பொய்’ என்று சொல்வார்கள்.

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”

பொதுவாக இந்த மாதிரியான கேள்விகளுக்கு இப்போது தெளிவான பதிலையோ, விளக்கத்தையோ சொல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!”

“நீங்கள் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு விழாவில் ‘விளக்குக்குப் பக்கத்தில் இருக்கும் பொருள் பிரகாசமாகத்தான் தெரியும். ஆனால், விளக்கின் வெப்பம் அந்தப் பொருளை எப்படி வாட்டுகிறது என்பது பலருக்குத் தெரியாது’ என்று பேசினீர்கள். முதல்வருக்குப் பக்கத்தில் இருக்கும் உங்கள் மனைவியைப் பற்றிய வர்ணனையா அது?”

“அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்த சமயத்தில், ‘பதவி என்பது தங்கக் கிரீடம் அல்ல. அது ஒரு முள் கிரீடம்!’ என்று அடிக்கடி சொல்வார். கிட்டத்தட்ட அதைத்தான் நான் அந்த விழாவில் குறிப்பிட்டுப் பேசினேன். அங்கே அன்று நான் பல உதவிகளை வழங்கினேன். `நடராஜனுக்கு எங்கு இருந்தோ பணம் வருது என்று நினைக்காதீர்கள். எனக்கு யாரும் எங்கு இருந்தும் பணம் கொடுக்கவில்லை’ என்பதைச் சொல்லும்போதுதான் இந்த விளக்கு உதாரணத்தைச் சொன்னேன்.

முதல்வருக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கோ, அல்லது அதிகார மையத்துக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்கோ பாதிப்புகள் வரத்தான் செய்யும். ஆனால், அன்று நான் என் பேச்சில் குறிப்பிட்டது முதல்வரைப் பற்றியோ, அவருக்குப் பக்கத்தில் இருக்கும் என் மனைவியைப் பற்றியோ அல்ல!”

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”

“முதல்வருக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே இப்போது பல விஷயங்களில் கருத்து வேற்றுமை ஏற்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. நிஜம்தானா?”

“கிசுகிசுக்கள், பத்திரிகைகளுக்கு அழகு!”

“உங்களை இந்தச் சமூகம் எப்படி அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

“எனக்கென்று ஒரு அடையாளம் எப்போதும் உண்டு. எழுத்தாளனாக, பத்திரிகை ஆசிரியராக, சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு பொதுநல ஊழியனாக என் அடையாளங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”ஒரு காலகட்டத்தில் பல அரசியல் நடவடிக்கைகளின் மூலகர்த்தாவாக அடையாளம் காணப்பட்டேன். புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க கட்சியையும் ஆட்சியையும் உரிய இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் இந்த நடராசனின் பங்கு பெரியது என்பதும் என் அடையாளம். அதன் பலனை இன்று அனுபவிப்பவர்கள், என்னை சம்பந்தம் இல்லாதவன் என்று நினைத்திருக்கலாம். ஆனாலும், விட்ட குறை தொட்ட குறையாக அரசியலில் இன்னும் என் பங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சமூக சேவைகளில் என்னால் முடிந்தவரை முதல் ஆளாக களத்தில் நிற்கிறேன். சுனாமி சுழற்றியடித்த இருபது நிமிடங்களில் அந்தப் பகுதிகளில் நான் ஆஜரானேன். பெரிய அளவில் செலவுசெய்து, சுமார் பத்து நாட்கள் அந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்தேன். இப்படி, காலமெல்லாம் நல்ல விஷயங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று என்னை இந்தச் சமூகம் அடையாளம் காணவே ஆசைப்படுகிறேன்!”

“அ.தி.மு.க., தேர்தலுக்குத் தயாராகிவிட்டதா?”


“அந்தக் கட்சியின் தலைமை நியாயமாக நடந்துகொண்டாலும், அவ்வப்போது அந்தக் கட்சியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் தொண்டர்களிடம் தொய்வை ஏற்படுத்தி வருகின்றன என்பதே உண்மை.

கொளப்பாக்கத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரே நேரடியாகப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறார். சில மாதங்களில் அவர்கள் மாற்றப்படுகிறார்கள். இதற்கு யார் காரணம் என்றாலும், இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது கட்சியின் பொதுச்செயலாளர்தானே? இன்றைய தேதியில் அரசியல் கட்சிகளில் இருக்கும் பொறுப்பாளர்கள் யாரும் மகாத்மாக்கள் அல்ல. எல்லோரிடமும் குறைபாடுகள் இருக்கின்றன. இதற்காகக் கட்சியில் களை எடுக்கிறேன் என்று தலைவர்கள் கிளம்பினால், அப்புறம் களை எடுக்க கட்சியே இல்லாத நிலைதான் ஏற்படும்!”

“எனக்கு அதிகார மையத்தில் செல்வாக்கு இருக்கிறது!”

“ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் போட்டியிடப்போவதாக அறிவிப்புகளும், சூடான செய்திகளும் கிளம்பும். பிறகு அப்படியே அமுங்கிவிடும். இதெல்லாம் வெறும் ஸ்டன்ட்தானே?”

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை அல்லது நெல்லை என ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதென்று முடிவெடுத்து, வேட்புமனுத் தாக்கலுக்கும் நாள் குறித்தேன். தேர்தல் முடிவுகள் பற்றி, என் பாணியில் ஒரு சர்வே செய்துபார்த்தேன். அதில் 40 இடங்களையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என எனக்குத் தெரிந்தது. அதில் ஒரு இடத்தில் நான் நின்றால், அங்கே நான்தான் ஜெயிப்பேன் என்பதும் எனக்குத் தெரிந்தது. அப்படி ஒரு தொகுதியில் நின்று நான் ஜெயித்தால், அ.தி.மு.க-வின் படுதோல்விக்கு நான்தான் காரணம் என்பது மாதிரியான செய்திகள் பரவும். அப்படி ஒரு வரலாற்றுப் பழி என் மீது விழ வேண்டாம் என்றுதான் அப்போது போட்டியிடவில்லை. மற்றபடி, யாருக்கும் பயந்து நான் பின்வாங்கவில்லை!”

“வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?”


“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மனதில்வைத்து `தி.மு.க கூட்டணியை பலமான கூட்டணி' என முடிவுசெய்வது மாபெரும் அரசியல் தவறு. இப்போதைக்கு அ.தி.மு.க இதே ரீதியில் மக்கள் பணியில் அசராமல் தொடர்ந்தால், அந்தக் கட்சியே அடுத்து தமிழகத்தை ஆளும்.

தி.மு.க கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூட்டணியைவிட்டு வெளியே வந்துவிடும். முதலில் வெளியேறப்போகும் கட்சி காங்கிரஸ்தான். ப.சிதம்பரத்தை முன்னிலைப்படுத்தி, விஜயகாந்த் கட்சியுடன் அது கூட்டு சேரும் வாய்ப்புகள் உள்ளன. இதுதான் தமிழகத்தின் எதிர்கால அரசியலாக இருக்கும். இந்தக் களேபரத்துக்கு நடுவே, அ.தி.மு.க-வே மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும்!”

- எஸ்.சரவணகுமார்
படங்கள்: கே.ராஜசேகரன்

30-10-2005 இதழிலிருந்து...