மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

#MakeNewBondsபா.இரஞ்சித், படம்: அருண் டைட்டன்

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

‘ரஞ்சம்மா’ என்றுதான் அம்மா குணவதி என்னை எப்போதும் அழைப்பார். பெண் குழந்தை வேண்டும் எனக் காத்திருந்து, பேர்கூடத் தேர்ந்தெடுத்து வைத்துவிட்ட பிறகு பிறந்த ஆண் குழந்தை நான். அதனாலேயே அம்மாவுக்கு எப்போதும் நான் செல்லமான ‘ரஞ்சம்மா’தான். ஊருக்குத்தான் இரஞ்சித்.

எங்கள் வீட்டில் மூன்று பையன்கள். அம்மாவையும் அப்பாவையும் நன்றாகவே பார்த்துக்கொள்வோம். இருந்தாலும் அம்மாவுக்கு இப்போதும் இருக்கிற ஒரே ஒரு குறை, `தங்களுக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே...’ என்பதுதான். இப்போதும் அடிக்கடி, ‘எனக்கு மட்டும் ஒரு பொண்ணு இருந்திருந்தா, உங்களை எல்லாம் ஒரு கை பார்த்திருப்பேன். உங்களோட சண்டை போட்டுட்டு, அவ வீட்லயே போய் தங்கிக்குவேன். அவ என்னைத் தங்கமா வெச்சுப் பாத்திருப்பா...’ என, பெற்றிடாத ஒரு மகளைப் பற்றியே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார். அப்பாவுக்கோ, தான் இறந்த பிறகு தலைமாட்டில் நின்று அழ, பெண் பிள்ளைகள் இல்லையே என்ற பெரிய ஏக்கம் எப்போதும் இருக்கிறது.

இதற்குக் காரணம், பெண் என்பவள் எல்லோருக்குமான ஆறுதல்; தள்ளாத வயதில் மடியில் ஏந்திக்கொள்ளும் நம்பிக்கை; பேரன்பின் உயிர் வடிவம். ஆனால், வெறும் அன்பு மட்டுமே அல்ல பெண். அவளே அறிவுச்செல்வமாகவும் இருக்கிறாள்.
 
ஒரு குடும்பத்தை பெண்போல அக்கறையோடு வழிநடத்திச் செல்ல,  திட்டமிட, ஓர் ஆணால் ஒருநாளும் இயலாது. அதே பெண், குடும்பம் என்ற அமைப்பைத் தாண்டி சமூகம் வரைக்கும் பரவி வரும்போது நடக்கிற மாற்றம் மிகப்பெரியது. ஆனால், அப்படி பகுத்தறிவுள்ள பெண்ணாக வளர்வதும் வாழ்வதும் இங்கே எத்தனை பெண்களுக்கு சாத்தியம்? நாம் அம்மாக்களை, அக்காக்களை, மகள்களை, பெண்களை என்னவாக மாற்றிவைத்திருக்கிறோம்?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண்களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக்கழிக்கிற பெண்கள், சாதி, மதம் அடிப்படையிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப்பிடிக்கிறவர்களாக ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத்தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடிபிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த்தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும்.

நம் சமூகத்தில் பாலின அடையாளம் என்பதே அரசியல்வயமானது. ஆண் என்பவன் அதிகாரத்துக்கானவனாகவும், பெண் என்பவள் அடிமைத்தனத்தின் அடையாளமாக வும்தான்  இருக்கிறார்கள். எல்லா தளங்களிலும் தன் அதிகாரத்தை நிறுவ முயல்கிறவனாகவே ஆண் இருக்கிறான். எல்லா மட்டங்களிலும் சரிசமமான வாழ்வு உரிமைக்காகப் போராடுகிறவளாக பெண் இருக்கிறாள். சுயாதீனமாக எந்த வகையிலும் ஒரு பெண், ஆணை முந்திச் சென்றுவிடாமல் இருப்பதை குடும்ப அமைப்பு எப்போதும் உறுதிசெய்கிறது. அப்பாவாக, தகப்பனாக, மகனாக கண்காணிப்பின் பேரால், அன்பின் பேரால், பாதுகாப்பின் பேரால் தொடர்ந்து பெண்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான் ஆண். அவளோ தன் வாழ்நாள் முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு ஆண்களுடைய கட்டுப்பாட்டிலேயே, அவர்களுக்குப் பின்னாலேயே முதுகு வளைய ஓடி ஓடி ஓய்கிறாள்.

நான் பிறந்து வளர்ந்தது சென்னைக்கு மிக அருகில் இருக்கிற ஒரு சிறிய கிராமத்தில். கிராமங்களில் பால் பேதம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த வயதுடைய ஆணும் தன் உடல் அதிகாரத்தை இயல்பாகவே நிறுவுவதைப் பார்க்க முடியும். வெட்டவெளிக் கழிப்பறை தொடங்கி, குளியல், உடை, பொது இடத்தில் அமர்ந்து பேசுவது, இரவில் தெரு முக்குகளை ஆள்வது வரை அவனது அதிகாரத்தைப் பார்க்கலாம். ஆனால், கழிப்பறைக்குப் போவதில்கூட பெண்ணுக்குக் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் என அடக்கப்பட்ட வாழ்க்கை  சிறுவயதில் இருந்தே தொடங்குகிறது. ஆணுக்கான உலகமும் சுதந்திரமும் வயது அதிகமாகும்போது தாராளமாக விரிவடைய விரிவடைய, பெண்ணுக்கோ வயது அதிகமாக ஆக அவளுக்கான சுதந்திரமும் உலகமும் சுருங்கத் தொடங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய விடுமுறை நாட்களில் காலையில் எழுந்து ஊருக்கு வெளியே சுற்றித்திரிந்து விளையாடி, மரத்தடியில் தூங்கி கிரிக்கெட் ஆடி, மகிழ்ந்து ஓய்வோம். ஆனால், என்னோடு படிக்கிற என் தோழிகளுக்கு அப்படி இருக்காது. அவர்கள் அந்த நாளிலும் வீட்டிலேயே இருப்பார்கள். ஏதாவது வேலைகள் செய்து கொண்டிருப்பார்கள். அன்றாடக் கடமைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட விளையாட்டுகளுக்குள்ளே அவர்கள் உலகம் முடிந்துவிடும். பருவ வயதை எட்டுவது இங்கே நம் சமூகத்தில் ஆணுக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் அள்ளித்தருகிறது. தோளுக்கு மேல் வளர்ந்த பையன் தோழனாகிவிட, பருவ வயது பெண்ணோ,  ‘இப்படி உட்காராதே, இந்த உடை அணியாதே, பையன்களுடன் பேசாதே, இந்தப் புத்தகத்தைப் படிக்காதே, இந்தப் படம் பார்க்காதே’ என அநேகக் கட்டுப்பாடுகளை அனுபவித்து, சுதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிற தருணமாக மாறுகிறது.

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரை பெண் குறித்த என்னுடைய நம்பிக்கைகள், பார்வைகள் என அனைத்தும் கல்வியும் ஊடகங்களும் சமூகமும் எனக்குள் புகுத்தியவையாகவே இருந்தன. ஆனால், அந்த எண்ணங்களை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டவர்கள் மூன்று பேர். ஒருவர் அம்பேத்கர், மற்றொருவர் பெரியார், இன்னொருவர் ஃபிராய்ட்.

பெண்ணுக்கான உரிமைகள் குறித்து அம்பேத்கரின் எழுத்துக்களே அறிமுகப்படுத்தின. சாதி அடக்குமுறைகளுக்கு இணையானது ஆணாதிக்கம், அது பெண் உடல் மீது நிகழ்த்தும் அதிகாரம் மோசமானது என்று அவர் எழுத்துக்களே கற்றுத்தந்தன. பெண் என்பவள் சொத்து அல்ல; மானம் அல்ல; கௌரவம் அல்ல; போகப் பொருளும் அல்ல... என்பதை எல்லாம் அம்பேத்கரின் வழியில்தான் கண்டடைகிறேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் பெரியாரின், ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. பதின்பருவப் பையனான எனக்கு பெண்ணியத்தின் வேர்களைப் புரியவைத்தது அந்த நூல்தான். கருப்பை, கற்பு, கன்னித்தன்மை என்பது எல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் விஷக் கிளைகள் என்பதை பெரியாரே எனக்கு உணர்த்தினார். ஃப்ராய்டின் `கனவுகளின் விளக்கம்’ நூல் உடல் குறித்த பார்வையை, நாம் ஏன் மற்றவர்களுடைய உடலை இப்படி எல்லாம் அணுகுகிறோம், பெண்களுடைய உடல் நம் எண்ணங்களில் உருவாக்கும் தாக்கம் குறித்து எல்லாம் புரிதலை உருவாக்கியது. என்னுடைய தொடர்ச்சியான வாசிப்பு, குறிப்பாக நவீன தமிழ் இலக்கிய நூல்கள் பெண்களின் அக உலகைப் புரிந்துகொள்ள உதவியது.

கல்லூரி நாட்களில் எனக்கு திருநங்கைகள் உலகம் குறித்து பெரிய ஆர்வம் இருந்தது. திருநங்கைகளிடம் பேசுவதற்காவே காசு கொடுத்து, அவர்களின் வாழ்க்கை இன்னல்களைக் கேட்டு நீண்ட நேரம் உரையாடி இருக்கிறேன். அவர்களில் பலரும் கதை சொல்ல முடியாமல் கதறி அழுதுவிட்டுச் சென்றவர்கள்தான். அத்தனை போராட்டங்கள் நிறைந்த வாழ்வு அவர்களுடையது. நம்மில் பலர் தன்னுடைய சாதியைக்கூடச் சொல்லப் பயந்துகொண்டு வாழ்கிற சமூகத்தில், தன் உடல் இதுதான் என்று சுதந்திரத்தோடு பேசி வெளியேறுகிற தைரியம் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்குமான சிறப்பு. ஆனால், அவர்களை நாம் மிக எளிதாக நிராகரிக்கிறோம். ஆணோ பெண்ணோ இதில் விதிவிலக்கே அல்ல. இதை நானும் செய்திருக்கிறேன். இதைக் கடக்க எனக்கு உதவியது நான் படித்த இலக்கியங்கள்தான். லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய `நான் வித்யா' அதில் மிகவும் முக்கியமான படைப்பு.

ஆண் அதிகாரத்தை நீண்டகாலமாக ருசித்த உயிர்தானே நானும்.  அதனால்தான் இப்போதும் ஒரு பெண் எனக்கு எதிரே கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமரும்போது உடனே உறங்கிக்கிடக்கிற ஆணாதிக்க மூளை செயல்பட ஆரம்பித்துவிடும். அப்போது எல்லாம் என் தொடர்ச்சியான வாசிப்பே தேவையான புரிதலை உருவாக்கி, அந்தக் கேடான சிந்தனைகளை மட்டுப்படுத்தும். என் அடிப்படையான ஆணாதிக்கக் குணத்தை மீறுவதற்கான பக்குவத்தை இன்னும் நான் அடையவில்லை. அதற்கான மெனக்கெடல் இப்போதும் தொடர்கிறது.

பெண்ணாகப் பிறக்காமல் பெண்ணின் எந்த உணர்வையும் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இருந்தாலும் முடிந்த வரை பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்கிறேன். என் புரிதலின் அடிப்படையில் அதை என் ஒவ்வொரு படைப்புக்கும் கொண்டு செல்கிறேன். என்னுடைய கதைகளில் வருகிற பெண்களை மிகவும் வலிமையோடு  படைக்கவே விரும்புகிறேன்.   இப்போது  எழுதிக்கொண்டிருக்கிற திரைக்கதை வரைக்குமே அப்படிப்பட்ட பெண் கதாபாத்திரங்களையே உருவாக்குகிறேன்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

தமிழ் சினிமா காதலைக் கொண்டாடிய ஒரு காலகட்டத்தில்தான் நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியிருந்தேன். `பூவே உனக்காக', `துள்ளாத மனமும் துள்ளும்', `குஷி', `காதலுக்கு மரியாதை' எனத் தொடர்ந்து காதலைக் கொண்டாடுகிற படங்களாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டம். எல்லோருக்குமே காதலித்துப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கும். காதல் கவிதைகள் எழுதுகிறவன் எங்களிடம் இருந்து மேம்பட்டவனாகப் பார்க்கப்பட்டான். காதல் என்பது நமக்குப் பிடித்தமான ஓர் உறவைத் தேடுகிற ஒன்றாகத்தான் இருந்தது. இப்போது நடப்பதைப்போல காதல் பற்றிய அரசியல் விவாதங்களோ, அது  ஒரு  சமூகக் குற்றமாகப் பார்க்கிற எண்ணங்களோ அப்போது இல்லை. கலப்புத் திருமணங்கள் சிறிய எதிர்ப்புகளோடு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாகவே இருந்தது. ஆனால், இன்றைய நிலைமை அப்படி இல்லை.

இன்று பெண்கள் சுதந்திரமாக நினைத்த கல்வியைக் கற்கிறார்கள். விரும்பிய பணிகளுக்குச் செல்கிறார்கள். தகவல்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி, அவர்கள் விரும்பிய துணையைத் தேர்வுசெய்யும் சுதந்திரத்தை எளிதாக்கி இருக்கிறது. அதனாலேயே முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு, பெண்கள் காதலிக்க ஆரம்பித்திருக் கிறார்கள். அதனாலேயே காதல் திருமணங்கள் முன்பைவிட அதிகமாகவே நடக்கின்றன. இந்தச் சமூக மாற்றத்தை ஆண் மையச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. அதனாலேயே தொடர்ச்சியான அரசியல் குறுக்கீடுகளும் அதிகரிக்கின்றன.

இங்கே காதல் என்பது தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் திட்டமிட்டுப் பரப்பப்படும் உணர்வாகப் பரப்புரை செய்யப்படுகிறது. சாதி வளர்ச்சிக்காக, சாதியப் பகைகளுக்காகக் காதலிக்கிறார்கள் என்ற கருத்து மேடைகளில் சொல்லப்படுகிறது. ஆனால், நிஜத்தில் காதலிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட எந்த நோக்கமும் இருப்பது இல்லை. காதலிப்பவர்களுக்கு இருப்பது சாதாரண மனித உணர்வு மட்டும்தான். ஆனால், மனிதத்தை வளர்க்கக்கூடிய காதலுக்கு அரசியல் சாயம் பூசும்போது, அது மனிதாபிமானத்தை எல்லாம் இழந்து சக உயிரைக் கொல்லக்கூடிய ஒன்றாக மாறிவிடுகிறது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் வெட்டி எறியவும் துணிகிறது. இன்று சமூகத்தில் நடக்கிற ஆணவப்படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கிற அசிங்கமான மனநிலை இதுதான்.

காதலைப் பற்றி பேசும்போது சங்கர் - கௌசல்யாவைப் பற்றி பேசாமல் தவிர்க்க இயலாது. சாதி ஆணவப்படுகொலைக்கு தன் கணவனைப் பலிகொடுத்த அந்தப் பெண் அதற்குப் பிறகு பிறந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. இப்போதும் அரசாங்க வேலையில் தைரியமாகத் தனித்துச் செயல்படுகிறார். காதல் திருமணங்களுக்கு ஆதரவாகவும் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகப் பேசக்கூடிய பெண்ணாகவும் மாறுகிறார். காதல் இதைத்தான் செய்யும். அந்தப் பெண்ணுக்கான வலிமையை காதல் தருகிறது.

ஆண்-பெண் உறவு குறித்து, பெண்களின் உடல் குறித்து எல்லாம் குழந்தைகளிடம் ஆழமான புரிதலை உண்டாக்குவதில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. எந்தப் பத்திரிகையும் தொலைக்காட்சியும் இதில் விதிவிலக்கு அல்ல. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மிக அதிகமாக நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்தான் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகும். கதைகளுக்கு வரைகிற பெண் உடலை எத்தனை மோசமாக இன்றும் வரைகிறார்கள் என்பதை, ஓர் ஓவியனாக நான் அறிவேன். கல்லூரிக் காலத்தில் ஆனந்த விகடனுக்கு மதன்தான் ஆசிரியராக இருந்தார். அவர் எங்கள் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரிடம் `எவ்ளோ பெரிய பத்திரிகை... நீங்களே இப்படிப்பட்ட அட்டைப்படங்களைப் போடலாமா?' எனக் கேட்டேன். அவரால் அன்றைக்கு அங்கே சரியான பதில் சொல்ல முடியவில்லை.

இங்கே ஒரு பெண் குடித்துவிட்டு கலாட்டா செய்வது பரபரப்பான செய்தியாகிறது. ஒரு பெண் இன்னோர் ஆணுடன் தொடர்பில் இருப்பதுவே இங்கே செய்தியாக மாறிவிடுகிறது. இங்கே கலாசாரத்தை மீறுகிற ஒவ்வொரு பெண்ணும், ஊடகங்களின் வழி மீண்டும் மீண்டும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகிறாள். கலாசாரத்தை மீறுகிற பெண் ஒருபோதும் நமக்கான காட்சிப்பொருள் அல்ல என்ற புரிதலை மக்களுக்கு மட்டும் அல்ல, ஊடகங்களுக்கும் அளிக்கவேண்டிய நிர்பந்தம் நமக்கு இருக்கிறது. இதற்குக் காரணம், ஒரு பதின்பருவ இளைஞனான என்னிடம் பெண்ணுடல் குறித்து ஊடகங்கள் உருவாக்கிய தாக்கம் மிகப்பெரியது. பெண் உடல் சார்ந்த என்னுடைய புரிதலை இதில் இருந்து மாற்றிக்கொள்ள நான் பெரிய போராட்டத்தையே நிகழ்த்தவேண்டியதாக இருந்தது; இருக்கிறது.
 
இந்தப் புரிதலோடுதான் என் அளவில் என்  சினிமாக்களில் பெண்களை அணுகுகிறேன். என் படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலிமையுள்ளதாகப் படைக்கிற வேலைகளையும் தொடர்ந்து செய்கிறேன். என் திரைப்படங்களுக்கு என சில விதிகளை எப்போதும் கடைப்பிடிக்கிறேன். திருநங்கைகளைப் பற்றி கேலியாகவோ தவறாகவோ பேசக் கூடாது. மாற்றுத் திறனாளிகளைக் கேலியாகவோ கிண்டலாகவோ பேசிவிடக் கூடாது. கடைசியாக எந்த இடத்திலும் பெண்களைக் கவர்ச்சிக்கான பொருளாகக் காட்டுவது இல்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 17

சினிமாவில் புரட்சிகரமான செயல்களில் ஈடுபடுகிற பெண்களைத்தான் காட்ட விரும்புகிறார்கள். பாலசந்தர் காலம் தொடங்கி இன்று வரை அதுதான் நிலை. ஆனால், பெண் என்பவளின் வாழ்க்கையே புரட்சிகரமானது தானே. தன்னுடைய வாழ்க்கைமுறையில் இயல்பிலேயே முற்போக்கான விஷயங்களைச் செய்கிற பெண்களையே காட்சிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன். அதுதான் சரியான வாழ்வியலை பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்றுத்தரும் என நம்புகிறேன். அதனால்தான் `மெட்ராஸ்' படத்தில் வருகிற மேரியின் கதாபாத்திரத்தை வலிமையான பெண்ணாக உருவாக்கினேன். அன்பு, மேரி இருவருக்குமான உரையாடலில் இருவருக்கான சுதந்திரத்தோடு இருப்பதைக் கவனிக்கலாம். `கபாலி' படத்தில்கூட குமுதவள்ளியை அப்படித்தான் உருவாக்கினேன். ஒரு தலைவனை உருவாக்குகிற, அவருக்கான பாதையை அமைத்துத்தருகிற ஆளுமையுள்ள ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன். இன்றைய பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்களோடு இணைந்து சரிசமமாகச் செயலாற்ற விரும்புகிறார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை.

இது ஆண்வழி சமூகம். இங்கே எல்லாமே ஆண்வழி விளையாட்டுக்கள்தான். ஆண்வழி அரசியல்தான். எல்லாமே ஆண், ஆண், ஆண் மட்டும்தான். இதில் பெண்கள் திடீரென உள்ளே வரும்போதும் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பிக்கும்போதும், கருத்து மோதல்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. ஆனால், பகுத்தறிவுள்ள பெண்கள் உள்ளே வர வர பெரிய மாற்றங்கள் வரத்தான் செய்யும். அதை எதிர்கொள்கிற மனநிலையை ஆண்கள்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஊடகங்களைப்போலவே பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையைத் தீர்மானிப்பதில் சினிமாவுக்கும் மிக அதிகமான பங்கு இருக்கிறது.குறிப்பாக சிறுவர்களுக்கு. அவர்கள் திரையில் காண்கிற நடிகனை, நடிகையை நேரிலும் `அவர்கள் அப்படித்தான்' என நம்புகிறார்கள். பெண் உடல் என்பது வெறும் போகத்துக்கு மட்டுமே உரியது என்ற நம்பிக்கை அங்கு இருந்தே முளைக்கிறது. இந்த எண்ணத்தோடு வளர்கிற ஓர் ஆண், நடிகைகள் மேல் மட்டும் அல்ல சக பெண்களையும் இதே கோணத்தில்தான் எதிர்கொள்கிறான். கணவனை எதிர்த்து அல்லது கணவனைக் கைவிட்டுத் தன்னந்தனியாகப் போராடி, உழைத்து, முன்னேறும் பெண்ணுக்கு எதிராக, எளிதில் பாலியல் ரீதியிலான கதைகளைக் கட்டவிழ்த்துவிட முடிகிறது.
இது சி.இ.ஓ தொடங்கி கட்டடத் தொழிலாளி வரைக்குமே அப்படித்தான். மீண்டும்... மீண்டும்... கற்பு என்பதை பெண்ணை முடக்குவதற்கான ஆயுதமாக மாற்றுகிறான். இப்படிப்பட்ட சமூகத்தை எதிர்கொள்ள பெண்கள் வலிமையோடு இருக்கவேண்டியிருக்கிறது... மனது அளவிலும் உடல் அளவிலும்.

என்னுடைய மகள் மகிழினியைக் குறித்து யோசிக்கும்போது எல்லாம் அவளை விளையாட்டில் ஆர்வமுள்ளவளாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். விளையாட்டுத்தான், உடலை பலமாக்கும்; இந்தச் சமூகத்தை எதிர்த்து நிற்பதற்கான மனவலிமையையும் தரும். விளையாட்டு வீராங்கனைகளிடம் எப்போதுமே ஒரு வீரம் மிளிரும். அவர்களுக்கு ஆண் உலகத் தயக்கங்களோ கூச்சங்களோ இருக்காது. குறிப்பாக உடை தொடர்பான தடைகள். நீச்சல் உடையை அணிந்துகொண்டு பயிற்சிக்குச் செல்கிற ஒரு பெண், தன் உடல் குறித்த தயக்கங்களைத்தான் முதலில் தூக்கி எறியவேண்டியதாக இருக்கும். அது அவளை முற்றிலுமாக ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிப்பதற்கான முதல் படி. அவள் கவலை இன்றி வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்தித்து முன்னோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறாள். தன் உடல் குறித்த அச்சமும் உடல் வலிமையும் உள்ள பெண், எந்த ஆணையும் அச்சமின்றி எதிர்கொள்கிறாள். என் மகள் அத்தகைய ஒருத்தியாக இருக்க வேண்டும் என்பதே என் கனவு.

 மனித உடல் என்பதே அதிகாரம்தான். அதைச் சமநிலைப்படுத்துவதே மனிதம்தான். ‘என் போராட்டம் என்பதே ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கிற மனிதமாண்பை மீட்டெடுப்பதுதான்’ என்றார் அம்பேத்கர். எந்த உறவிலும் மனிதமாண்புதான் இங்கே அடிப்படை. மனிதனை மனிதனாகப் பாவிப்பதுதான் மிக அவசியம். ஆணும் பெண்ணும் திருநங்கைகளும் திருநம்பிகளும் ஒரே மனிதர்கள் என்ற எல்லையை நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும். ஆனால், அது மிகப்பெரிய கனவு. அது மிகத் தொலைவில் இருக்கிற ஓர் இலக்கு. அதற்கான முதல் அடியை எடுத்துவைப்பதே பாதி வெற்றிதான். அங்கு இருந்தே நாம் பால் பேதமற்ற மனிதத்தை உணர்வோம்; மகிழ்வோம்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காதபோது, இப்போது புருஷனுக்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிற சுதந்திரமும் செளகர்யமும்போல பெண்களுக்கும் ஏற்படுமானால், பிறகு இந்த மாதிரியான அனுதாபமும் கவலையும்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட இடமே இருக்காது!

ண்மை என்பது உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் `ஆண்மை' நிற்கும் வரையில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதும் வளர்ந்தே வரும். பெண்களால் `ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி!

ண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும். அது ஒழியாமல் பெண்கள் சம்பளம் கொடுத்து புருஷனை வைத்துக்கொள்வதாக இருந்தாலும், அவர்களால் உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது!

பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும், பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வது எல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறு அல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா?

பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டுவிட்டால் சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பின்னர் தங்கள் கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுக்கவும் அல்லது பெற்றோர்களால் தெரிந்தெடுக்கப்பட்டாலும், கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும்கூடிய தன்மை உண்டாகிவிடும்!

லகில் மனித வர்க்கத்தினருக்குள் இருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழிய வேண்டும்!

பெண்கள், கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு, காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்!

- இந்தப் பகுதியில் உள்ள அனைத்துக் குறிப்புகளும் பெரியார் எழுதிய `பெண் ஏன் அடிமையானாள்’ நூலில் இருந்து...