Published:Updated:

ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!

ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!

ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!

ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!

ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!

Published:Updated:
ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!

`இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது’ எனப் பெருமையோடு சொன்னார் மகாத்மா காந்தி. தேசத்தின் நலன் என்பது, மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரத்தைச் சார்ந்தது மட்டும் அல்ல, உள்ளாட்சி அமைப்புகள் பலம் பெற்றால்தான் கிராமங்கள் வளம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலோ, தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்!


அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு தினங்களே ஆகியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அவசரகதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அது, எல்லா தரப்பினரையும் ஆச்சர்யப்படுத்தியது. அறிவிப்பு வெளியான அதே வேகத்தில், ஆளும் கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அந்த ஆச்சர்யத்தை அதிர்ச்சியாக மாற்றியது.

‘உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு, அவசரகதியிலும், தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டவிதிகளைப் பின்பற்றாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறைப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என்று தி.மு.க சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அந்த உத்தரவு, தவறுகளைச் சரிசெய்வதற்குத்தானே தவிர, தேர்தலை முடிந்தவரை இன்னும் தள்ளிப்போடுவதற்கு அல்ல.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளோருக்குக் கவலை தருகிறது. காரணம், ‘உள்ளாட்சித் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படப்போவது இல்லை’ என்ற செய்தியும் இந்த அறிவிப்பில் மறைந்தே இருக்கிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், சிற்றூராட்சிகள் ஆகியவைதான் மக்களின் குடிநீர் தேவை, கழிவுநீர் வசதி, சுகாதார சேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைச் செய்யக்கூடியவை. இந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 1.3 லட்சம் பிரதிநிதிகள்தான், மக்களுக்கும் அரசு இயந்திரத்துக்கும் பாலமாகச் செயல்படக்கூடியவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இத்தனை பிரதிநிதிகள் செய்யவேண்டிய வேலையை, மீண்டும் தனி அதிகாரிகள் வசம் ஒப்படைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ‘இப்போது இருக்கும் சூழல், ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருக்குமா?’ என்ற தயக்கம்தான் இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள மனநிலை எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் குறித்து, பல்வேறுவிதமான விமர்சனங்கள் இருக்கலாம்.  ஆனால், உள்ளாட்சி அமைப்புகள்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ‘அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்படக் கூடாது’ என, மத்திய அரசை நோக்கி உரிமைக்குரல் எழுப்பும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது முரண் அல்லவா?

மக்களின் அன்றாடத் தேவைகளைப் புரிந்துகொண்டு அதிகாரிகளோடு இணைந்து பணியாற்ற, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால்தான், நமது சூழலில் ஓரளவாவது வேலைகள் நடக்கும். இல்லையேல்... அடிப்படைத் தேவைகளுக்கே மனுக்களை எடுத்துக்கொண்டு அரசு அலுவலகங்களில் தினம் தினம் ஏறி இறங்கவேண்டிய அவலநிலைதான் ஏற்படும்.

நடப்பது நல்லாட்சி என்று மக்கள் நம்ப வேண்டுமானால், உள்ளாட்சித் தேர்தல்களை உடனே நடத்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism