Published:Updated:

சரிகமபதநி டைரி - 2016

சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், ப.சரவணகுமார், பா.காளிமுத்து, ப.பிரியங்கா

சரிகமபதநி டைரி - 2016

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன், ப.சரவணகுமார், பா.காளிமுத்து, ப.பிரியங்கா

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2016
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2016
சரிகமபதநி டைரி - 2016

கிருஷ்ண கான சபா

`பசு, சிசு, பாம்பு மூன்றும் இசைக்கு மயங்குபவை' என, ஓலைச்சுவடி காலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதைய நவீன யுகத்தில் அதை ‘பாம்பே ஜெயஸ்ரீயின் இசைக்கு’ எனச் சொல்லிவிடலாம்.வரும்போதே ஒரு பந்து சணல் எடுத்துவந்து, சொக்கவைக்கும் குரலால் பண்டிதர்களையும் பாமரர்களையும் ஒருசேரக் கட்டிப்போட்டுவிடும் ரசவாதம் தெரிந்தவர்.

சரிகமபதநி டைரி - 2016

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரங்கம் பூரணமான நிசப்தத்தில் உறைந்திருக்க, சாவேரியைச் சன்னமாக ஆரம்பித்தார் ஜெயஸ்ரீ. அவசரமற்ற, ஆரவாரம் இல்லாத ஆலாபனை. ஒவ்வொரு ஸ்வரத்திலும் நின்று, நிதானித்து சாவேரியை வளர்த்தார். நடுநடுவே அவர் கொடுக்கும் விநாடி நேர இடைவெளியிலும் சாவேரி ஒலித்தது. திருவையாறு தர்மஸம்வர்த்​தனியைத் துதிக்கும் தியாகராஜரின் ‘பராசக்தி மநுபராத நாபை...' கீர்த்தனையை முழு அர்த்த பாவத்துடன் பாடியது... ‘புராணி தர்மஸம்வர்த்தனி ஸ்ரீ புராதீச்வரி ராஜசேகரி...’ வரிகளை நிரவலுக்கு எடுத்துக்கொண்டு காவேரியில் ஸாரி... சாவேரியில் நீச்சலடித்தது... மிச்ச மீதி கற்பனைகளை ஸ்வரங்களில் நிரப்பியது... எதைச் சொல்ல, எதை விட!

அடுத்து சுருட்டி ராகம். ரொம்ப நாள் ஆச்சு, இந்த ராகத்தை இத்தனை விரிவாகவும் ஜோடனை​யாகவும் பாடக் கேட்டு! மேல் ஸ்தாயியில் இருந்து கீழே ஜெயஸ்ரீ பயணித்தபோது இரண்டு கிலோ வெண்ணெய் தடவிவைத்த சறுக்கு மரத்தில் நழுவி வந்ததுபோல் இருந்தது. ஆங்காங்கே அவர் கொடுத்த அசைவுகளும் வல்லின மெல்லினங்களும் கேட்போரைத் தாலாட்டின.

ராம நாடகத்தில், சீதையைப் பற்றி ராவணனிடம் சூர்ப்பனகை  வர்ணிக்கும்போது, ‘காண வேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன் காலுக்கு நிகரோ பெண்கள்...’ என்று அருணாசலக்கவிராயர் பாடலை நிரவல், ஸ்வரங்களுடன் பாம்பே ஜெயஸ்ரீ சுருட்டியில் பாடி முடித்தபோது... வாவ்!

நாரத கான சபா


பகல் 1:30 மணி கச்சேரிக்கு மினி ஹால் நிரம்பி வழிகிறது என்றால், பாடுபவர் வெற்றிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என அர்த்தம். அன்றைய நாட்களில் பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய், கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த மினி ஹால் நிரம்பி வழியக் கண்டவர்கள்தான்!

சரிகமபதநி டைரி - 2016

நிரம்பிய ஹாலில் சாவேரி வர்ணத்துடன் தொடங்கிய இளம் பாடகர் அஷ்வத் நாராயணனுக்கு கனத்த சாரீரம்தான் என்றாலும், அது காதுகளுக்குள் டிரில்லிங் மெஷினை அனுப்பாத குரல். அதட்டும் அடாணா ராகம்கூட இவர் பாடும்போது அடங்கித்தான் கேட்கிறது.

மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது​போல், கல்யாணி என்றாலே கச்சேரி மேடையில் அனைவருமே குஷியாகிவிடுகிறார்கள். அஷ்வத் பாடிய கல்யாணியில் இலக்கணம் மீறாத, மசாலா கலக்காத சங்கதிகளும் கமகங்களும் கை குலுக்கிச் சென்றன. சியாமா சாஸ்திரியின் ‘பிரான வரலிச்சி ப்ரோ...’ கீர்த்தனையை, பொருள் உணர்ந்து பாடிய அஷ்வத், மென்மேலும் மெருகேறி கோலோச்சப்போவது நிச்சயம்.

வயலின் பி.அனந்த கிருஷ்ணன். பாடகருக்கு வாசிக்கும்போது நல்ல அனுசரணை. இனிமை தரும் வில்வீச்சு. ஆனால், தனியாக வாசிக்கும்​போது, சொந்த சங்கதிகள் நிறைய இணைத்து அழகுபடுத்து​வதாக நினைத்து, கல்யாணிக்கு ஓவர் அரிதாரம் பூசிவிட்டார்.

சரிகமபதநி டைரி - 2016

முத்ரா

ஸ்ரீதியாகராஜரின் 250-ம் ஜெயந்தி கொண்டாடப்பட்டுவரும் இந்த வேளையில், அந்த மகானுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அமைந்துவிட்டது ஓ.எஸ்.தியாகராஜனின் கச்சேரி. இரண்டு சீடர்களைப் பின்பாட்டுக்கு அமர்த்திக்கொண்டு, குருலேக (கௌரிமனோகரி), ஸாதிஞ்செ நெ (ஆரபி), அநுராகமு லேநி (சரஸ்வதி), நிதிசால சுகமா (கல்யாணி), பண்டுரீதி (ஹம்ஸநாதம்) என, குடியரசு தின அணிவகுப்பு மாதிரி தியாகராஜரின் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. முத்தாய்ப்பாக, தியாகராஜரின் எவர்கிரீன் சக்கநி ராஜமார்கமு (கரகரப்ரியா) வடக்கு உஸ்மான் ரோடில் திருவையாறு!

இரண்டாவது வருடமாக, கச்சேரிப் போட்டி நடத்தியிருக்கிறது முத்ரா. வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் பிரிவுகளில் ஆகச்சிறந்த ஒருவரைப் பரிசுக்குத் தேர்வுசெய்கிறார்கள். அதாவது, வருங்கால செம்மங்குடிகள், லால்குடி ஜெயராமன்கள் மற்றும் பாலக்காடு மணி ஐயர்களை அடையாளம் காணும் பயனுள்ள முயற்சி.

ஓ.எஸ்.டி-க்கு வயலின் வாசித்த திருச்சேரி கார்த்திக்கும், மிருதங்கம் சப்போர்ட் கொடுத்த சுநாத கிருஷ்ணா அமயும் போட்டியில் வெற்றி வாகை சூடியவர்கள். மங்களூரைச் சேர்ந்த சுநாத கிருஷ்ணாவின் வாசிப்பில் பெயருக்கேற்ற சுநாதம். முன்னுக்கு வரக்கூடிய விரல்கள்.

சரிகமபதநி டைரி - 2016

இந்த இரண்டு புதுசுகளையும் சீனியர்கள் ஓ.எஸ்.டி-யும், கடம் கார்த்திக்கும் கரம் பிடித்து அழைத்துச் சென்றது ஹைலைட்!

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்

அண்ணன் ஜே.பி.சுருதி சாகர் புல்லாங்குழல் வாசிக்கிறார். தங்கை ஜே.பி.கீர்த்தனா வாய்ப்பாட்டு. இருவரும் இணைந்தே மேடையேறி வருகிறார்கள். நாம் கேட்ட தினம், இவர்களுக்கு கே.பி.நந்தினி (வயலின்), என்.சி.பரத்வாஜ் (மிருதங்கம்) பக்கபலமாக.

சுருதி சாகரின் குழலோசையில் பிசிறு இல்லை. கீர்த்தனாவின் குரலோசையில் பிசகு இல்லை. அந்த மத்தியான வேளையில், ஸ்ரஞ்சனியும் பூர்விகல்யாணியும் காதுகளை மிக ரம்மியாக வருடின... சில சமயங்களில் குரலை, குழல் அமுக்கிவிட்டாலும்!

சரிகமபதநி டைரி - 2016

பாட்டுடன் சேர்ந்திசைக்க புல்லாங்குழல் பக்கத்தில் இருக்க, இன்னோர் இசைக்கருவி வயலின் வடிவில் தேவையா? ராகம், நிரவல், ஸ்வரம் என ஒவ்வொன்றும் மூன்று சுற்று முடிக்கவேண்டிய கட்டாயம். கையில் இருப்பதோ, ஒன்றரை மணி நேரம். கடிகாரமும், யார் எப்படி போனால் என்ன என்று ஓடியவண்ணம் இருக்கிறது. சாகரும் கீர்த்தனாவும் யோசிக்க வேண்டும்.

பார்த்தசாரதி சாமி சபா

கீழே விழுந்தால் துண்டு துண்டாகச் சிதறி கால்கள் குத்தி ரத்த இழப்பு நேரிடும் என்ற பயம், இல்லத்தரசிகளுக்கு உண்டு. அதனாலேயே, வீட்டில் கண்ணாடிப் பொருட்களுக்கு அவரவர் குட் பை சொல்லிவிட்டு, பிளாஸ்டிக், டப்பர் வேர் என உடையாதவற்றை உடன் வைத்துக்கொள்ள ஆரம்பித்து​விட்டார்கள். மிருதங்க வித்வான் உமை​யாள்புரம் சிவராமன் நவீன நந்தி. கண்ணாடியில் 18 கிலோ எடையுடன் மிருதங்கம் தயாரித்து, தன்னுடைய பிறந்த நாளன்று
(டிசம்பர் 17) அதை லய உலகத்துக்குப் பரிசு அளித்தார்.

ஆரம்பத்தில், மண் கொண்டு செய்யப்பட்டு வந்தது மிருதங்கம். பின்னர், பலா, வேப்பம், சந்தனம், கருங்காலி என மர வகைகளுக்கு மாறியது. இன்று வரை மரம்தான். ஆனால் சிவராமன், 47 வருடங்களுக்கு முன்னர் விஞ்ஞானி​களுடன் இணைந்து ஃபைபர் கிளாஸ் மிருதங்கம் தயாரித்தார். கடந்த சில வருடங்களாக மறுபடியும் ஆராய்ச்சியில் இறங்கினார். விஞ்ஞானி டி.ராமசாமியும், செயின்ட் கோபின் (கண்ணாடி) நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் இவருக்கு கை கொடுத்தனர். கிளாஸ் மிருதங்கம் ரெடி!

தயாரித்து முடித்ததும் வெறும் காட்சிப்பொருளாக இன்னொரு கண்ணாடிப் பெட்டிக்குள் மிருதங்கத்தை வைத்து அழகு பார்க்காமல், அறிமுக நாளன்று கண்ணாடி மிருதங்கத்தில் வாசித்தும் காட்டினார் உமையாள்​புரம் சிவராமன். ‘டெமோ’வில் குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா பாடினார். முக்கியமாக, இந்த வகை மிருதங்கத்தில் எதிரொலி கேட்கவில்லை. சுநாதம் துளியும் குறையவில்லை.

விழாவில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மிருதங்க வித்வான்கள் திருச்சி சங்கரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், திருவாரூர் பக்தவத்சலம் மூவரையும் புது மிருதங்கத்தில் வாசித்துப் பார்க்க அழைத்தார் சிவராமன். ராஜா ராவ் மட்டும் மேடையேறி வாசித்தார். அத்துடன் அவர் நிறுத்திக்கொண்டிருக்​கலாம். பேசவும் செய்ததுதான் ஆபத்தில் முடிந்தது. சப்ஜெக்ட் விட்டு வெளியேறி, எதை எதையோ பேசிக்​கொண்டே போனார் ராஜா ராவ். இதுவரை பல மேடைகளில் அவர் கேட்டுவிட்ட, ‘`கச்சேரிகளில் மிருதங்க வித்வான்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்கும்போது மட்டும் ரசிகர்களுக்கு எப்படித்தான் டாய்லெட் போகத் தோணுமோ?” என்ற கேள்வியை அன்றும் கேட்டார். டாய்லெட் என்று இல்லாமல் ராஜா ராவ் பயன்படுத்திய வார்த்தையைக் குறிப்பிட கை கூசுகிறது!

சரிகமபதநி டைரி - 2016

மியூஸிக் அகாடமி

1928-ம் ஆண்டில் பூவுலகில் மீண்டும் ஒரு கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்திருக்கிறது. வயலின் மேஸ்ட்ரோ பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன் பிறந்த வருடம் அது. மாஸ்டர் கிருஷ்ணனாக மேடையில் அறிமுகமாகி, மிஸ்டர் கிருஷ்ணனாக வளர்ந்து, அரியக்குடி உள்ளிட்ட மேதைகள் பலருக்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசித்து, சோலோ மேடைக்குள் புகுந்து கிராண்ட் மாஸ்டர் கலைஞராக உயர்ந்தவர் டி.என்.கிருஷ்ணன். இந்த 88 வயதிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். இஸ்திரி மடிப்பு கலையாத சட்டை அணிகிறார். மேடையில் அமர்ந்து இரண்டரை மணி நேரத்துக்கு இடையூறு எதுவுமின்றி வாசிக்கிறார் Touch wood.

கிறிஸ்துமஸ் நாள் அன்று, காலையில் வலது பக்கம் மகன் ஸ்ரீராம், இடது பக்கம் மகள் விஜியுடன் டி.என்.கிருஷ்ணன் கச்சேரி. வாரிசுகளை வாசிக்கவிட்டு சும்மா மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்காமல், இவரும் உடன் இணைந்து இசைத்தது கண்கொள்ளாக் காட்சி. ஒரு பாடல் வாசித்து முடித்ததும், சுருதி சேர்த்துக் கொள்​வதற்குகூட நேரம் தராமல் உடனடியாக அடுத்ததை வாசிக்க ஆரம்பித்துவிடுகிறார். துடிப்புமிக்கக் கலைஞர்.

மூன்று வயலின்களும் சேரும்போது சிம்பொனி இசை கேட்பது போன்ற பிரமை. அதுவும் தியாகராஜரின் ‘எந்தரோ..’, எந்த வரிசைக்காரர்களையும் வசீகரம் செய்திருக்கும். ராகம், தானம், பல்லவிக்கு தோடியை எடுத்துக்கொண்டது மூவர் குழு. பிரதானமாக டி.என்.கிருஷ்ணன் செய்த தோடி ஆலாபனையில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! ராகமாலிகையில் தானம் செய்தபோது, பிலஹரியும், ரஞ்சனியும், கானடாவும், சஹானாவும் குழைந்தன.

இதே அகாடமி மேடையில் 2017, டிசம்பர் 25-ம் தேதி காலை மறுபடியும் சந்திப்போம் புரொஃபசர் கிருஷ்ணன்!

- டைரி புரளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism